கேள்வி நேரம்

நவகிரக சன்னிதியை எத்தனை முறை வலம் வரவேண்டும்? இடமிருந்து வலம் வருவது சரியா?


பொதுவாக, தெவங்களை வலம் வரும்போது, இடமிருந்து வலம்தான் வர வேண்டும். அதாவது, பிரதட்சிணமாகத்தான் வர வேண்டும். அப்பிரதட்சிணமாக வரக் கூடாது. பிரதட்சிணமாக வரும்போது, குறைந்தது மூன்று பிரதட்சிணமாவது வர வேண்டும். ஒரு பிரதட்சிணம், இரண்டு பிரதட்சிணம் என்பது கூடாது. சாஸ்திரங்களில் எங்கேனும் சில இடங்களில் சொல்லப்பட்டிருக்கும், வேத விகிதமாக எங்கே சொல்லப்பட்டிருக்கிறதோ அங்கேதான் ஒரு பிரதட்சிணம் என்பது. மற்ற எந்த இடத்திலும் குறைந்தது, மூன்று பிரதட்சிணமாவது செய்ய வேண்டும்.
நான்கு பிரதட்சிணம் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்ற புருஷார்த்தத்தைக் குறிப்பது. எனவே, நான்கு செய்யலாம். பஞ்ச என்ற ஐந்து பிரதட்சிணம் என்பது பஞ்ச பிராணனைக் குறிப்பது. அதன் பின் 6, 7, 8, 9 என்று பிரதட்சிணங்கள் பிரிக்கப் பட்டிருக்கிறது. அதற்கும் மேல் என்றால், 12, 16, 24, 32 என்ற எண்ணிக்கையில் செய்யலாம்.
நவகிரகங்களை 3, 7 அல்லது 9 என்று பிரதட்சிணம் செய்ய வேண்டும். சப்த ஆவரணம் என்று சொல்வோம். நம் பாவங்கள் ஏழு அடுக்குகளில் படிந்திருக்குமாம். அதனால்தான் ஏழேழு ஜன்மம் என்று கூட சொல்வோம் அல்லவா? ஏழு ஆவரணங்களை குறிப்பதன்படி ஏழு பிரதட்சிணம் செய்யலாம். நவகிரகங்களைக் குறிக்கக்கூடியது ஒன்பது. எனவே, ஒன்பது செய்யலாம். இப்படி, 3, 7, 9 என்ற எண்ணிக் கையில் பிரதட்சிணம் வரலாம்.

வாகன வசதியில்லாத நாட்களில் பாதயாத்திரை சென்று திருத்தலங்களை தரிசித்தார்கள். இப்போது பாதயாத்திரை அவசியமா?


அவசியம்தான். சாஸ்திரங்களில் பொதுவாக, எந்த ஒரு செய்யலுமே தியானத்துக்காகத்தான் என்று சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு, நாம் பழனிக்கு போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கே சென்னையில் இருந்து விமானத்தில் மதுரைக்குப் போய், அங்கிருந்து ரயிலில் திண்டுக்கல் போய் அங்கிருந்து டாக்ஸி வைத்துக் கொண்டு பழனிக்குப் போய் சொகுசாக வரலாம்.
அப்படி இல்லாதபடி, பாதயாத்திரையாகப் போகும்போது, குறைந்தது 15 நாள் செல்லும்போது பகவானின் நினைவு மீண்டும் மீண்டும் வரும். அரை நாளில் சென்று வரும்போது பகவானின் நினைவு கொஞ்சமும் வராது. பொதுவாக, ஆன்மிக சாதனை என்றால், சரீரத்தின் மீது அபிமானம் குறைய வேண்டும். நம் அகங்காரம் மமகாரம் குறைய வேண்டும். அந்தப் பற்று குறைய வேண்டும் என்றால், நம் சரீரத்தை நாம் தண்டித்துக் கொள்ள வேண்டும். அது, சாஸ்திர ரீதியாகக் கொடுக்கும் தண்டனையாக இருக்க வேண்டும். அதாவது, தரையில் படுத்துக் கொள்ளுதல், உபவாசம் இருத்தல், பாதயாத்திரை செய்தல் என  சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதாக அது இருக்க வேண்டும்.
அவ்வாறு விதிக்கப்படாமல் நாம் ஒரு காரியத்தைச் செய்தால் அதற்குப் பலன்கிடையாது. பாதயாத்திரை செய்வதன் மூலம், சரீரத்தின் பற்றும் குறையும், பகவானின் ஸ்மரணையும் கூடும். இன்னும் சொல்லப்போனால், உடல் நன்கு வலிவுடன் இருக்கும். வருஷத்துக்கு இருமுறை பாதயாத்திரை போவதன் மூலம், நம் உடல் வலிவு பெற்றுத் திகழும். இதனால், புண்ணியத்துக்குப் புண்ணியம்; சரீரத்துக்கு பயிற்சிக்குப் பயிற்சி. ஆகவே, பாதயாத்திரை இந்தக் காலத்திலும் தேவைதான்.

பெற்றவர்களைப் பேணாத பிள்ளைகள் குறித்து சாஸ்திரம் என்ன சொல்கிறது?


சாஸ்திரங்களில், ‘த்ரிபி: புத்ரஸ்ய புத்ரதா’ என்று, மூன்று செயல்களையும் செய்பவன் யோக்யமான புத்திரனாகிறான் என்று விதிக்கப்பட்டுள்ளது. இம் மூன்று செயல்களையும் செய்தால்தான் அவனை மகன் என்று சாஸ்திரம் சொல்கிறது. ‘ஜீவிதோ வாக்யகரணாத்’ தாய் தந்தையர் உயிருடன் இருக்கும் போது, அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்.
‘ப்ரத்யப்தம் பூரி போஜனாத்’ ஆப்தீகத்தை சிரத்தையோடு சாஸ்த்ரங்களில் கூறியதுபோல் ஆச்ரயித்து, அந்த நேரத்தில் மற்றவர்களுக்கு போஜனம் ஏற்பாடு செய்தல். அவர்கள் இறந்த பிறகு, இறந்த திதியில் வருஷா வருஷம் ச்ராத்தம் செய்ய வேண்டும். ‘கயாயாம் பிண்டதானச் ச’ தன் வாழ்நாளில் ஒரு முறையாவது கயையில் சென்று பித்ருக்களை உத்தேசித்து பிண்ட தானம் செய்தல். இந்த மூன்றையும் செய்தால்தான் அவர்களை மகன், மகள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
அதுவும் முக்கியமாக, தா தந்தையர் உயிருடன் இருக்கும் காலத்தில், அவர்களை கவனிக்காமல், தியாகம் செய்து, உதாசீனம் செய்து, கைவிட்ட குழந்தைகளுக்கு பிராயச்சித்தமே கிடையாது.

ஆண்டிக் கோல முருகனை தரிசிப்பதும் படத்தை வீட்டில் வைத்துக் கொள்வதும் நல்லதல்ல என்கிறார்களே...!


இப்படியெல்லாம் சில மூட எண்ணங்களை சிலர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதேபோல் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படம் வீட்டில் வைத்திருந்தால், எல்லாம் ஊதிப் போய் விடும் என்றும் சிலர் சொல்வார்கள். இதுபோன்ற கருத்துகளை எல்லாம் யார் கிளப்பிவிடுகிறார்களோ தெரியாது. பொதுவாக ஆண்டிக் கோல முருகனை வீட்டில் வைத்து வழிபடுவது மிகவும் விசேஷம்.
‘கல்பத்ருமம் ப்ரணமதாம் கமலாருணாபம்ந
ஸ்கந்தம் புஜத்வய மனாமய மேகவக்த்ரம்ந
காத்யாயனீ ப்ரியசுதம் கடிபத்த வாமம்ந
கௌபீன தண்ட தரதக்ஷிண ஹஸ்தமீடேநந’
என்று ஆண்டிக்கோல ஸ்ரீ பழனி ஆண்டவரின் தியான சுலோகம் சொல்லும். அப்படிச் சொல்லும் போது, கல்பத்ருமம் என்றே சொல்லப்படுகிறது. கேட்கும் வரங்களை எல்லாம் கொடுக்கக்கூடியதான கல்பக விருட்சமாக முருகனை வர்ணிக்கிறது இந்த தியான சுலோகம். கௌபீனம் கட்டிக்கொண்டு, தண்டம் ஏந்திக் காட்சி தரும் முருகனை, ‘கௌபீன தண்ட தர தட்சிண ஹஸ்த மீடே’ என்று சொல்கிறது. அதனால், புல்லாங்குழல் வைத்துள்ள கிருஷ்ணனையோ, ஆண்டிக் கோலத்தில் உள்ள முருகனையோ நன்றாக வழிபடலாம். படங்களை வீட்டில் மாட்டிக் கொள்ளலாம். வீட்டில் வைத்துப் பூஜையும் செய்யலாம். எந்தத் தவறும் இல்லை.

 

Comments