நவகிரகம் இல்லாத கோயில்!

நவகிரகம் இல்லாத கோயில்!




இறைவனின் திருவிளையாடல்களான ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய மூன்றும் நடைபெற்ற ஸ்தலம் திருக்கடையூர். அவை:
* பூமி பாரத்தைக் குறைக்க, பூமாதேவிக்காக எமனை மீண்டும் உயிர்ப்பித்தது.
* மார்க்கண்டேயருக்காக எமனைக் கொன்றது.
* மார்க்கண்டேயரை என்றும் வாழும் சிரஞ்சீவி ஆக்கியது.
இந்தத் தலத்தில் நவகிரகம் கிடையாது.


பிரார்த்தனை நிறைவேற...
தும்கூர் ஆஞ்சநேயரை தரிசிக்கச் சென்றபோது, அங்கே உள்ள குருக்கள் சொன்ன செய்தி இது:
‘என்ன பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்றாலும், செவ்வாய்க்கிழமை 5 வாழைப்பழம் வைத்து, ஹனுமனை 5 முறை சுற்றி வலம் வர வேண்டும். அர்ச்சனையும் செய்யலாம். 5 வாரத்துக்குள் வேண்டுதல் நிறை வேறிவிடும்.’


வெப்சைட்டில் தோத்திரங்கள்:
www.prapatti.com எனும் ஸ்ரீ வைஷ்ணவ வெப்சைட், எல்லா ஆழ்வார் பாசுரங்கள் மற்றும் ஏராளமான ஸ்லோக ஸ்தோத்திரங்கள் நிறைந்தது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தேவநாகரியில் நமக்கு வேண்டியபடி பிரின்ட் எடுக்கவும், ஒலி வடிவாகவும் உள்ளது. நாம் வேண்டியன பெற்று, பாடி கேட்டு பகிர்ந்து மகிழ்வுறலாம்.


மனக்கவலை தீர:
பொருந்திர முப்புரை செப்புரை
செய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல்
மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய
அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என்
சென்னியதே.
இந்தப் பாடலை தினமும் சொல்லி வந்தால் மனக்கவலை தீரும்.


மகிழ்ச்சி பொங்கும்


வேங்கடாசலபதியின் நட்சத்திரம் திருவோணம். இதன் அதிபதி சந்திரன். திருவோண நட்சத்திரத்தன்று காலையில் நீராடி, எதுவும் சாப்பிடாமல் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். பிறகு மதியம் ஏழை ஒருவருக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பு. இரவில் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். இப்படி தொடர்ந்து விரதம் இருந்து வந்தால், வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உறவும், சுற்றமும் பகை நீங்கி, நட்பு மலரும்.




திருச்சி சமயபுரத்திலிருந்து 55 கி.மீ. தூரத்தில் உள்ளது ‘திருப்பட்டூர்’ எனும் கிராமம். இங்கு கோயில் கொண்டுள்ள தெய்வம் பிரம்மபுரீசுவரர். இங்கு முக்கிய அபிஷேகப் பொருள் கற்கண்டு. வெண்ணிற கற்கண்டால் பிரம்மாவை அலங்கரித்திருப்பார்கள். அருகில் சரஸ்வதிக்கு தனிக்கோயில் உள்ளது. புதிதாக கதை, கட்டுரை எழுதும் நூலாசிரியர்கள், திரைப்படத் துறைக்கு கதை, வசனம் எழுதுவோரும் பிரம்மனுக்கு எதிரே அமர்ந்து எழுதத் தொடங்குகிறார்கள். படைப்புக் கடவுள் பிரம்மாவுக்கு முன், புதிய படைப்பாளிகள் திருப்பட்டூரில் உருவாகிறார்கள்.
பகவானின் கருணையைப் பெற...
குளத்தில் மீன்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், ஒர் இரையைப் போட்டதும் நாலா பக்கங்களிலிருந்தும் அதனிடம் ஓடி வருகின்றன. அது போல நம் மனத் தடாகத்தில் பக்தி சிரத்தையைப் போட்டோமானால், பகவான் அதைத் தேடி ஓடிவருவார்.
- ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர்.
கெட்டுப்போன அறுவர்கள்:
தொட்டுக் கெட்டவன் - பஸ்மாசுரன்
சொல்லிக்கெட்டவன் - விஸ்வாமித்திரன்
கொடுத்துக் கெட்டவன் - கர்ணன்
தொடாமல் கெட்டவன் - இராவணன்
சொல்லாமல் கெட்டவன் - அரிச்சந்திரன்
கொடுக்காமல் கெட்டவன் - துரியோதனன்




கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கிருஷ்ண விக்ரகம்,ஸ்ரீமத்வாச்சாரியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தக் கிருஷ்ணன் கோயிலில் ஸ்வாமி சன்னிதியில் ஸ்ரீமத்வரால் ஏற்றப்பட்ட ஒரு விளக்கு இன்றும் அணையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சகோதர ஒற்றுமை தழைக்க:


ராமர் பட்டாபிஷேக படத்தை பூஜையறையில் வைத்து, புனர்பூச நட்சத்திரம் அல்லது சனிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி 108 முறை ‘ராம்’ என்றோ ‘ஸ்ரீராமஜயம்’ என்றோ ஜபியுங்கள். அருகிலுள்ள ராமர் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி மூன்று முறை சன்னிதியை வலம் வர வேண்டும். இப்படிச் செய்தால், சகோதர உறவு சுமுகமாகவும், இணக்கமாகவும் அமையும்.
பெண்ணாக மாறிய சனி!
பெண்ணை மிதிக்கும் கோலத்தில் காட்சி தரும் இந்த ஹனுமனை குஜராத் மாநிலம் பரோடா அருகில், டகோரில் உள்ள ஜ்யோதிர் மடத்தில் காணலாம். என்ன காரணம்? சனீஸ்வரன் தன்னுடைய கடமையைச் செய்ய அனுமதிக்குமாறு ஹனுமனிடம் கேட்டான்.
சரி என்று ஒப்புக்கொண்ட ஹனுமன்,
சனீஸ்வரன் தம் தலையில் இருக்க அனுமதித்தார். பிறகு, சேது அணை கட்ட பெரும்பாறைகளை தம் தலையில் சுமக்க ஆரம்பித்தார். அந்த சுமையைத் தாங்க முடியாமல், தன்னை விடுவிக்குமாறு சனீஸ்வரன் கெஞ்சினார். ஹனுமன் விடவில்லை. அதனால், பெண்ணாக மாறினால் - நைஷ்டிக பிரம்மச்சாரியான ஹனுமன் தம்மை விட்டுவிடுவான் என்று இப்படி மாறினாராம் சனீஸ்வரன்.
குஜராத் பகுதியில் இந்தக் கோலத்தை அதிகம் காணமுடிகிறது.
ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஹனுமனுக்கும் உள்ள ஒற்றுமை

* இருவருமே தூது போனார்கள். தூது பலிக்காமல் மாபெரும் யுத்தம் நடந்தது.
* இருவருமே விஸ்வரூபம் எடுத்தார்கள்.
* இருவருமே மலையைத் தூக்கினார்கள்: கோவர்த்தனம், சஞ்சீவி.
* இருவருக்குமே வெண்ணெய் பிடிக்கும்.
* இருவருமே பாரிஜாத மரத்தினடியில் இருப்பார்கள். ‘ச்யாயாம் பாரிஜாதஸ்ய ஹேம சிம்மாஸனோ பரி’ - ஸகஸ்ரநாமத்தில் வரும் வரிகள். ஹனுமன் பாரிஜாத மரத்தினடியில் ராமத்யானம் செய்து கொண்டிருப்பார்.
* இருவருமே தானாக கட்டுண்டார்கள். கண்ணன் - யசோதைக்காக, உரலில் கட்டுண்டார். ஹனுமன் பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டார்.
* பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தார் கிருஷ்ணர். கொடியில் இருந்து ஜெயிக்க வைத்தார் ஹனுமன்.

Comments