பாதியில் நிற்கலாமா பரமன் கோயில் திருப்பணி..?

யிலை நாயகராம் ஐயன் சிவபெருமான் காணும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதை நமக்கெல்லாம் உணர்த்துவதுபோல்,
எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் - எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன் விளையாட்டே
என்று திருமூலர் பாடி இருக்கிறார்.


நம்மையெல்லாம் நன்றாகப் படைத்து, நாளும் நலமுடன் வாழ்ந்திடச் செய்வது எங்கெங்கும் நீக்கமற நிறைந்து திருநடனம் புரியும் சிவபெருமா னின் கருணைத் திறம்தான்.

ஐயனின் கருணைத் திறத்தினைப் போற்றுவது போல், எண்ணற்ற ஆலயங்களை நிர்மாணித்து, அங்கே ஐயனுக்கு நித்திய பூஜைகள் சிறப்புற நடைபெறவும் செய்தனர் நம் முன்னோர்கள்.
எண்ணற்ற ஆலயங்களை நம் முன்னோர்கள் நிர்மாணித்து இருந்தாலும், அடுத்தடுத்து வந்த தலைமுறையினரின் கவனக் குறைவால் பல ஆலயங்கள் இன்று சிதிலமடைந்து திருப்பணிக்குக் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுவிட்டது.

அப்படி சிதிலமடைந்த ஒரு சிவாலயம்தான் விழுப்புரம் மாவட்டம் சு.கள்ளிப்பாடி என்ற ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு மாதுபூதீஸ் வரர் திருக்கோயில்.

திருச்சி மாவட்டம் காவிரிக் கரையில், பிரசித்தி பெற்ற திருத்தலங்களான திருச்சி ஸ்ரீமாத்ரு பூதேஸ்வரர் கோயில்,  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்கா ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோயில் ஆகியன அமைந்திருப்பதுபோலவே, விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் சு.கள்ளிப்பாடியில் ஸ்ரீமாதுபூதீஸ்வரர் கோயில், ஆதி திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில், ஜம்பை ஸ்ரீஜம்புலிங்கேஸ்வரர் கோயில் அருகருகில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக பிற்காலச் சோழர்களால் கற்றளியாகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் ஸ்ரீமாதுபூதீஸ்வரர் ஆலயத்தை தரிசிக்கச் சென்ற நம் மனதில் ஓர் ஆறுதல் ஏற்பட்டது. காரணம் அங்கே திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதற்கான சில அறிகுறிகள் தெரிந்ததுதான்.

ஆனால், திருப்பணி விவரங்கள் குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, ஆறுதல் மறைந்து பெரும் சோகத்தில் மனம் பதறியது. காரணம், போதிய நிதி வசதி இல்லாமல் திருப்பணிகள் பாதியில் நின்றுவிட்டதுதான்.

ஆலயத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அன்பர் ஏ.ராமலிங்கஜோதி என்பவரிடம் பேசினோம்.

‘‘இந்தக் கோயில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் முழுக்க கற்கோயிலா கட்டினதா சொல்றாங்க. காலப்போக்கில கோயில் முழுக்கவே சிதிலமடைஞ்சிருச்சு. சுமார் 70 வருஷத்துக்கு முன்னாடி கும்பாபிஷேகம் நடந்தது. இப்ப சுமார் 30 வருஷத்துக்கு மேல் கோயில் கவனிப்பார் இல்லாமல் போயிடுச்சு.

எப்படியாவது கோயிலைப் புதுப்பிச்சு கும்பாபிஷேகம் நடத்தணும்னு ஊர்மக்களோட சேர்ந்து முடிவு செஞ்சு, 26.1.15 அன்று திருப்பணிகளைத் தொடங்கினோம் இரண்டு வாரங்களுக்குப் பிறகு திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம் வந்து பார்த்துவிட்டு ஆசி வழங்கிச் சென்றார். திருப்பணிகளும் ஓரளவுக்கு வேகமா நடந்தது.

ஆனால், நாங்க எதிர்பார்த்த அளவுக்கு பண வசதி கிடைக்காததால, இப்ப திருப்பணி பாதியிலயே நிக்குது. போதுமான அளவு பணம் கிடைச்சு திருப்பணிகள் முடிஞ்சு சீக்கிரமே கும்பாபிஷேகம் நடக்கணும்னுதான் ஊர் மக்களோட எதிர்பார்ப்பு.

இப்போதைக்கு ஒருகால பூஜையும், பிரதோஷம் போன்ற விசேஷங்களையும் எங்களால முடிஞ்ச அளவு செஞ்சிக்கிட்டு வர்றோம்’’ என்றார்.

‘‘இந்தக் கோயிலில் பரிகார பூஜைகள் எதுவும் நடைபெறுகிறதா?’’ என்று அருகில் இருந்த கார்த்திகேயன் என்பவரிடம் கேட்டோம்.

‘‘தொடர்ந்து அஞ்சு பௌர்ணமிக்கு இங்கு வந்து ஸ்ரீமாதுபூதீஸ்வரருக்கும், சுகுந்த கூந்தலாம்பிகை எனும் மணக்குழலி  அம்பிகைக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால், வேலை இல்லாதவர்க்கு வேலை கிடைக்கும்னு பெரியவங்க நம்பிக்கையோட சொல்றாங்க. அதேபோல சுவாமி சந்நிதிக்கு நேரா இருக்கற நவகிரக சந்நிதியில சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி, அர்ச்சனை செஞ்சு வழிபட்டா  பெரிய கஷ்டமா இருந்தாலும்  தீரும்னு பக்தர்கள் நம்பிக்கையோட சொல்றாங்க’’ என்றார்.

பண வசதி இல்லையென்பதற்காக பரமன் கோயில் திருப்பணி பாதியில் நிற்கலாமா?

நாளும் பொழுதும் நமக்கெல்லாம் அருள்வதற் காகவே கோயில் கொண்ட ஐயன் ஸ்ரீமாதுபூதீஸ்வரர் திருக்கோயில் திருப்பணிக்கு நாம் நம்மால் இயன்ற அளவு பொருளுதவி செய்தால், விரைவிலேயே திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெறும். நித்திய பூஜைகளும் விசேஷங்களும் விமர்சையாக நடைபெறுவதுடன், வழிபடும் பக்தர்களின் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.

அந்த வகையில், திருப்பணிக்கு உதவிய புண்ணி யத்துடன், ஆலயத்துக்கு வந்து வழிபட்டு வேண்டுதல் கள் நிறைவேறி மகிழ்ச்சியுடன் செல்லப்போகும் கணக்கற்ற பக்தர்களின் மறைமுகமான வாழ்த்துகளும், ‘கற்றார் இடும்பை களைவானும்; அடியார்கட்கு ஆரமுதமு’மான ஐயன் ஸ்ரீமாதுபூதீஸ்வரரின் பேரருளும் நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும் என்பது உறுதி.


எங்கே இருக்கிறது... எப்படிச் செல்வது..?

திருக்கோவிலூர் - மணலூர்பேட்டை சாலையில் திருக்கோவிலூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. திருக்கோவிலூரில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு.

Comments