தூளி கட்டி வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் நிச்சயம்!

லைப்பகுதிக் கோயில்களுக்குச்  சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தாலே உடலும் மனமும் உற்சாகம் கொள்ளும், மன நிம்மதி  கிடைக்கும் என்பார்கள், நம் முன்னோர்கள். இத்தகைய தனித்துவ அம்சம் கொண்ட மலைப்பகுதிக் கோயில்தான் தேவதானம்பேட்டையில்  அருளாட்சி புரியும் வனதுர்கை அம்மன் கோயில்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது, தேவதானம்பேட்டை. இங்கிருந்து நடைப்பயணமாக மலையேறினால், சுமார் 6 கி.மீ. தூரத்தில் வன துர்கையைத் தரிசிக்கலாம். அப்படியொரு திருத்தலத்துக்குப் பயணப்பட்டோம்.

பாதையின் தொடக்கத்தில் படிகள் இருந்தாலும்,  தூரம் செல்லச் செல்ல கற்களும் பாறைகளுமாகவே இருப்பது கால்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது.  அடிவாரத்தில் இருந்து மலை மீது செல்வதற்குச் சுமார் 2 மணி நேரம் ஆகும் என்பதால், பாட்டிலில் குடிநீர் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். ஒற்றையடிப் பாதையாக மலைகளைக் கடக்கநேரிட்டது. கோயிலைச் சென்றடைய வழியெங்கும் பாறைகள் மீது அம்புக் குறியிட்டுள்ளனர்.

மலையின் மேலே செல்லச்செல்ல குளிர்ந்த காற்று வீசியது மனதை லேசாக்கியது. கோயிலை நெருங்கியவுடன் வீசும் விபூதி வாசனை நம்மை பக்தி மணம் கமழச்செய்கிறது. மூச்சிரைக்க மலையேறினாலும், மேலே சென்று அம்மனின் திருமுகத்தைப் பார்த்ததும்  நாம் கடந்து வந்த தூரமோ, நமது களைப்போ நமக்குப் பெரிதாகத் தெரியவில்லை என்பது நிஜம். இங்கு வரும் பக்தர்களும், சில வெளிநாட்டவர்களும் இங்கேயே சில மணி  நேரம் தங்கி அம்மனைத் தரிசித்து  மூலிகைக் காற்றைச் சுவாசித்துச் செல்கின்றனர்.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் காட்டுப்பேட்டை எனும் இப்பகுதியில் சிவபக்தர்களான  தம்பதியர், குழந்தைவரம் வேண்டிப் பிரார்த்தனை செய்துவந்தனர். அப்போது, இவ்வூரின் குளப் பகுதியில் கேட்பாரற்று ஒரு பெண் குழந்தை அழுதுகொண்டு இருக்கவே, அந்தத் தம்பதி, அது தங்களுக்கு இறைவன் கொடுத்த குழந்தையெனக் கருதி, எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்தனர். பின்னர், அக்குழந்தை கன்னிப்பெண்ணாக வளர்ந்தாள்.

ஒருநாள், வீட்டின் தேவைக்காக அந்தப் பெண் நீர் எடுத்துவர, குளக்கரைக்குச் சென்றாள். அப்போது சிவபெருமான் மானுட ரூபத்தில் குளக்கரையில் தோன்றி, அக்கன்னிப்பெண்ணின் தெய்வாம்சத்தை அவளுக்கு உணர்த்தினார். அதனைக் கண்ட, அப்பகுதியைச் சார்ந்தவர்கள் வயது வந்த ஓர் ஆணுடன், கன்னிப்பெண் நெடுநேரம் பேசுகிறாள் எனத் தவறாகச் செய்தி பரப்பினர்.

இதனால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் வளர்ப்புத் தாய், தந்தையர் தங்கள் பெண்ணைக் கோபத்துடன் கண்டித்து, பெண்ணின் கற்பின் மீது சந்தேகம் கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர் .

இதனால் பொங்கியெழுந்த அந்தப் பெண் ‘நான் உத்தமி என்பது உண்மை யானால், இங்குள்ள பச்சைமரங்கள் எரிந்து சாம்பலாகட்டும்’ என்று சாபம் விடுத்தாள். அடுத்த நொடியே அருகில் இருந்த பச்சைமரங்கள் பற்றி எரிந்தன. அங்கிருந்து சினத்துடன் கிளம்பிய  அந்தப் பெண் அருகிலிருந்த மலைப்பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இதனை, மலையடிவாரத்தில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தவர்கள், அந்தப் பெண்ணின் வளர்ப்புப் பெற்றோரிடம் தெரிவித்தனர். உடனே தன் மகளைக் காண அவர்கள் மலைநோக்கிச் சென்றார்கள். அவர்களின் வருகையறிந்த அந்தப் பெண் தாய்,தந்தையரின் கண்முன் கல்லாக மாறி நின்றாள். அதன்பின், மலை உச்சிக்குச் சென்று தஞ்சம் அடைந்த அப்பெண்ணுக்குச் சித்தர்களும் தேவர்களும் வழிபாடுகள் நடத்தத் தொடங்கினர்.

இத்தகைய கற்புக்கரசியான பெண் தெய்வத்தை, இப்பகுதியில் உள்ள மக்கள்  ‘வனதுர்கை’  எனத் திருநாமம் சூட்டி வழிபட்டு வருகின்றனர்.


தேவதானம்பேட்டை உருவான கதை:

அந்தப் பெண் தஞ்சமடைந்த பகுதிக்குத் தெற்குப் புறமாக இருந்த மலை ஒன்றில்  இருக்கும் கோட்டையை  ‘துருவ அரக்கன்’ என்பவன் ஆண்டு வந்தான். பெண்களைத் துன்புறுத்துவதும், தேவர்களைச் சிறைப் பிடித்துக் கொடுமைப்படுத்துவதுமாக இருந்தான். இதனால் பாதிக்கப்பட்ட தேவர்கள், துருவ அரக்கனை அழிக்க, இம்மலையில் வீற்றிருந்த துர்கையை வழிபட்டார்கள். அதனைக் கண்ட துருவ அரக்கன், “இந்தக் கல்லைக் கும்பிடுவது ஏன்? அதற்குப் பதிலாக என்னைக் கும்பிடுங்கள்” என்று தேவர்களைத் துன்புறுத்தினான்.ஆத்திரமடைந்த தேவர்கள், “இந்தக் கல்லை இங்கிருந்து நீ எடுத்துவிட்டால், நாங்கள் அனைவரும் உன்னையே கும்பிடுகிறோம்” என்றனர். உடனே துருவ அரக்கன் துர்கை சிலையை பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அவனால் முடியவில்லை. பின்னர், அம்மன் தோன்றி, விஸ்வரூபம் எடுத்துத் துருவனை அழித்தாள்.

இப்படி துர்கை, துருவஅரக்கனிடம் இருந்து  தேவர்களைக் காப்பாற்றி, இந்த மலையைத் தேவர்களுக்கு தானம் செய்தமையால் இவ்வூர் ‘தேவதானம்பேட்டை’ என்று அழைக்கப்படுகிறதாம்.

நிறைவேறும் பிரார்த்தனைகள்:

குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் தூளி கட்டியும், திருமண வரம் வேண்டும் கன்னிப்பெண்கள் இங்குள்ள சூலத்தில் மஞ்சள்கயிறு கட்டியும் வேண்டினால் பிரார்த்தனை உடனே நிறைவேறுகிறது என்கின்றனர் பக்தர்கள். வீடு கட்ட வேண்டி வரும் பக்தர்கள், இங்குள்ள சிறிய கற்களை அடுக்கி வைத்தால், ஒரு மாத காலத்துக்குள் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகள் அமைவதாக நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

அம்மன் தலையில் பூ சுற்றப்பட்டு, அதன் மீது  எலுமிச்சம்பழம் வைத்துப் பிரார்த்திக் கும்போது, பழம் வலதுபுறம் இறங்கினால், நினைத்து வந்த செயல் உடனே நடக்குமாம். அதுவே இடதுபுறம் இறங்கினால், தாமதமாக நடைபெறும் என்கிறார்கள்.

மேலும், இங்கே ராகுகால சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகின்றன.

விழாக்கள்:

சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் அம்மனுக்கு அக்னி கரகம் எடுப்பது, அம்மன் ஊஞ்சல் ஆட்டம் நடத்தி, அம்மனின் கதையை நாடகமாக்குவது எனக் களைகட்டுகிறது திருவிழா.

ஆடி மாதங்களில் கலசங்களில் சுனை நீரை எடுத்து வந்து, ‘தர்ப்பக்கயிறு’ என்னும் யாகம் நடத்தி, பின்னர் கலச தீர்த்தத்தால்  அம்மனுக்கு அபிஷேகிக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தைப் பிரசாதமாகப் பெற்று வீட்டில் தெளித்தால், துன்பங்கள் நீங்கும் என்பது  நம்பிக்கை.

மார்கழி மாதத்தில் அம்மனுக்கு வேண்டிக்கொண்டு மாலைகள் அணிந்து விரதமிருந்து, 16 நாட்கள் கழித்து, இருமுடி சுமந்து தேவதானம்பேட்டையிலிருந்து புறப்பட்டு  கணக்கன்குப்பம், கெங்கவரம், பழவலம், ராமராஜன்பேட்டை, பாக்கம், மாடுவெட்டி யம்மாள், சோகுப்பம் வழியாக மூன்றாவது நாள் மலையேறி விரதம் முடிக்கிறார்கள்.

இத்தகைய திருத்தலத்துக்கு நாமும் ஒருமுறை ஆன்மிக யாத்திரை சென்று, நம் உடலையும் மனதையும் மீட்டெடுப்போமா?

Comments