பஞ்ச துர்கா பரமேஸ்வரி!

கர்நாடக மாநிலம், முல்கிக்கு அருகில் உள்ளது பாப்பநாடு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில். முஸ்லிம்களும் கருவறை வரை வந்து அம்பாளை வழிபட்டு, பிரசாதம் பெற்றுச் செல்வது இக்கோயிலின் தனிச் சிறப்பு. தவிர, இங்கு மலர் வியாபாரம் செய்பவர்கள் கிறிஸ்துவர்கள். இவர்கள் கோயிலுக்குக் கொடுத்தது போக, மீதி மலர்களைத்தான் வெளியூர்களுக்கு அனுப்புகின்றனர் என்பது விசே௸ம்.
தற்போதுள்ள கோயில், கேரளாவைச் சேர்ந்த பாப்பாபியரி என்ற முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரால் கட்டப்பட்டது. இன்றும் இக்கோயில் தேர், இவரது வம்சத்தைச் சேர்ந்தவர்களின் முதல் மரியாதையைப் பெற்ற பிறகுதான் புறப்படுகிறது.
ஒரு காலத்தில், ‘சொனிதபுரா’ என அழைக்கப்பட்ட இப்பகுதியை திரிகாசுரன் என்ற அரக்கன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அவன் நிறைய வரங்களைப் பெற்றிருந்தான். ஒருகட்டத்தில் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி, பிரம்மா, விஷ்ணுவிடமிருந்து அவர்களது ஆயுதங்களைப் பறித்து வந்து, மனைவியிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொன்னான்.
சக்தியின் வடிவமான துர்கை, அரக்கனை வதைத்து ஆயுதங்களை பிரம்மா, விஷ்ணுவிடம் ஒப்படைப்ப தாக விஷ்ணுவுக்கு வாக்களித்தாள். அதன்படி, குலிகா என்ற பெயருடன், ஏழு பெண்களாக தன்னை மாற்றிக் கொண்டு பூலோகத்துக்கு வந்தாள். இதில் ஒரு பெண் பகவதி துர்கை. தன்னை ஒரு வயதான பெண்ணாக மாற்றிக் கொண்டு நேரடியாக அசுரனிடம் வந்தாள். ‘தனக்குப்
பசிக்கிறது; உணவு வேண்டும்’ எனக் கேட்க, அசுரன் அவ ளிடம், தன் மனைவியிடம் கேட் கும்படி கூறினான். அப்பெண் அசுரனின் மனைவியிடம் வந்து, உணவுக்குப் பதில் ஆயுதங்களைக்
கேட்க, அரக்கனின் மனைவி அவற்றைத் தர மறுத்தாள்.
உடனே, அந்த வயதான பெண் அரக்கனிடம் அவனது மனைவி உணவு தர மறுப்பதாகக் கூற, திகைத்த அரக்கன், ஒருவனை அனுப்பி அப்பெண்
கேட்பதைக் கொடுக்கக் கூறும்படி கூறினான். அரக்கன் கூறியதும் மனைவியும் மறுபேச்சு பேசாமல் பிரம்மா, விஷ்ணுவின் ஆயுதங்களை அப்பெண்ணிடம் கொடுத் தாள். அதோடு, அதை அரக்கனிடம் சொல்லும்படியும் கூறி அனுப்பினாள்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரக்கன், அவர்களைத் துரத்தி வந்தான். முதலில் குலிகா அவனை எதிர்த்தாள். அடுத்து ஏழு பெண்களும் எதிர்த்தனர். ஒருகட்டத்தில் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் அரக்கன் ஓடினான். உடனே, ஏழு பெண்களும் துர்கையாக ஒரே வடிவெடுத்து, ஆக்ரோஷத்துடன் அரக்கனை வதைத்தாள் துர்கா பரமேஸ் வரி. பிறகு, சாந்தம் அடைந்து பாப்பநாட்டிலேயே நிரந்தரமாய்க் குடிகொண்டு விட்டாள் என்பது வரலாறு. துர்கா பரமேஸ்வரியின் அருளைக் கண்ட அப்பகுதி மக்கள், துர்கைக்குக் கோயில் எழுப்பி வழி பட்டனர். பிரபலமாகத் திகழ்ந்த அக்கோயில், கால ஓட்டத்தில் மங்கிப் போனது.
கேரளாவிலிருந்து பாப்பாபியரி என்ற முஸ்லிம் வியாபாரி, படகில் வியாபாரப் பொருட்களுடன் காசர் கோட்டிலிருந்து வந்து கொண்டிருந்தார். நந்தினியும், சாம்பவி நதியும் சங்கமிக்கும் இடம் அருகே வந்த போது, அந்தப் படகு எதன் மீதோ மோதியது. திடுக்கிட்ட பாப்பாபியரி அப்பகுதி நீர் முழுவதும் சிவப்பாக, ரத்தமயமாக காட்சியளித்ததைக் கண்டு மூர்ச்சையடைந்தார். பாப்பாபியாரியின் கனவில் துர்கை ப்ரச்னமாகி, ‘படகு இடித்த இடத்தில் ஐந்து லிங்கங்கள் உள்ளன. அவற்றை வெளியே எடுத்து தமது கோயிலில், தமக்குப் பின்னால் பிரதிஷ்டை செய்து, கோயிலைப் புதுப்பித்துக் கட்டுமாறு’ உத்தரவிட்டாள்.
கனவு முதலில் அதிர்ச்சியைத் தந்தாலும், பாப்பா பியரி அடுத்த நாள், உள்ளூர் ஆட்களின் உதவியுடன் படகு இடித்த இடத்தைச் சொதித்து, அங்கிருந்த ஐந்து லிங்கங்களை வெளியே எடுத்து துர்கா பரமேஸ்வரிக் குப் பின்னால் பிரதிஷ்டை செய்தார். அதோடு, தமது செலவில் கோயிலையும் கட்டினார். பின்னாட்களில் தனது குடும்பத்தையும் கோயில் அருகே கொண்டு வந்து, நிரந்தரமாகத் தங்கி விட்டார். மதங்களிடையே சுமூக உறவை பலப்படுத்திய துர்கா பரமேஸ்வரி இதனால் மேலும் பிரபலமானாள்.
ஏப்ரலில் நடக்கும் திருவிழாவும், நவராத்திரியின் போது நடக்கும் பத்து நாள் விழாவும் இங்கு மிகவும் பிரசித்தம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும்
சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. இதில் சர்வ மதத்தினரும் கலந்துகொண்டு உணவருந்துவது கண் கொள்ளாக் காட்சி. துளுவ மக்களின் கண்கண்ட தெய்வம் துர்கா பரமேஸ்வரி. இங்கு யக்ஷ கானம் நாற்பது வருடங்களாக நடைபெற்று வருகிறது.
கோயில் வாசலில் ஒரு மியூசிகல் டிரம் கட்டப்பட் டுள்ளது. பொறுப்பு வராத இளைஞர்கள் இந்த டிரம்மை அடித்து அம்மனிடம் வேண்டிக்கொள்ள நிச்சயம் அவர்கள் பொறுப்புமிக்க இளைஞராக மாறி விடுவார்களாம்! அம்மனுக்கு தினமும் சண்டி ஹோமம், மாலையில் சிறப்பு பூஜைகளும் உண்டு. இப்பகுதியில் வசிக்கும் ஜைனர்களும் துர்கா பரமேஸ்வரியை தரிசிக்கின்றனர்.
ஐந்து நிலைகளைக் கொண்ட தென்னிந்திய பாணி கோபுரம். அதனைத் தாங்கிப்பிடித்து உள் நோக்கிச் சென்று இருபுறமும் விரியும் மண்டபம். கருவறையில் நுழையும்போதே துர்கையின் சக்தியையும், செல்வாக்கையும் உணரலாம். அம்மனைச் சுற்றி வீட்டு நிலைக்கதவு போல் அமைத்து வெள்ளிக்கவசம் சாத்தியுள்ளனர். மேனி முழுவதும் ஜொலிக்கும் நகைகள், பூமாலை அலங்காரம் என அம்மன் ஜொலிக்கிறாள். கோயில் கருவறை கேரளக் கட்டடக்கலை பாணியைப் பின்பற்றியுள்ளது. துர்கா பரமேஸ்வரியின் பின்னால் உள்ள லிங்கங்களும் அம்மனின் வடிவமாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவை, மூல துர்கை, அக்னி துர்கை, ஜ்வாலா துர்கை, வன துர்கை மற்றும் அகரா துர்கை என அழைக்கப்படுகிறாள்.
இக்கோயிலைச் சார்ந்து ஆறு தேர்கள் உண்டு. அவற்றில் ஒன்று மிகப் பெரியது. மற்றவை குட்டித் தேர்கள். துர்கையின் முகத்தில் அலாதி சந்தோஷத்தை தரிசிக்கலாம். அசப்பில் கொல்லூர் மூகாம்பிகையை தரிசிப்பது போன்ற ஒரு திருப்தி!
தரிசன நேரம்: காலை 5.30 முதல் 2.00 மணி வரை. மாலை 4 முதல் 9 மணி வரை. வெள்ளிக்கிழமை மற்றும் நவராத்திரி பத்து நாட்களிலும் கோயில் மூடப்படுவதில்லை.
எப்படிச் செல்வது: மங்களூரிலிருந்து உடுப்பி செல்லும் வழியில் 30 கி.மீ., முல்கியிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
தொடர்புக்கு: 0824-229 0585

Comments