முருகப் பெருமானின் வாகனம் மயில் என்பது நமக்குத் தெரியும். சூரசம்ஹாரத்தின் போது மரமாக நின்ற சூரனை சக்தி வேல் கொண்டு முருகப் பெருமான் பிளந்தபோது வெளிப்பட்ட மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் மாறிய புராணமும் நமக்குத் தெரியும்.
அப்படியென்றால், அதற்கு முன்பு முருகனுக்கு வாகனம் இல்லையா? முருகன் ஞானப்பழம் பெறுவதற்காக மயில் மீது ஏறி உலகத்தை வலம் வந்ததாகப் புராணங்கள் சொல்கின்றனவே. எனில், அந்த மயில் என்ன ஆயிற்று?
அழகே வடிவானவன் என்பதனால்தான் முருகன் அழகிய மயிலைத் தன் வாகனமாகக் கொண்டான். அந்த அழகு மயிலுக்கு முருகன் ஒரு சாபமும் கொடுத்தார். அந்தச் சாபம், மயிலை மலையாக மாற்றியது!
அப்படி மலையாக மாறிய மயில், முருகனின் திருவருளை வேண்டி தவம் செய்தது. மயில் போன்ற வடிவில் அமைந்திருக்கும் அந்த மலை அமைந்த தலம் குன்றக்குடி!
கயிலையம்பதியில் சதாசர்வகாலமும் மோனத் தில் மூழ்கித் திளைக்கும் ஞானமூர்த்தியாம் ஈசன் தமது சக்தியை இரு பகுதிகளாக்கி, ஒரு பாகத்தை போக சக்தியாகவும், மற்றொரு பாகத்தை முருகக் கடவுளாகவும் மாற்றினார்.
ஞான சக்தியை முருகனின் இதயத்தில் பதித்து, இச்சா சக்தியையும், கிரியா சக்தியையும் தந்தார். அழகன் முருகனுக்கு ஞானசக்திதரன், குகன், விசாகன் என்றெல்லாம் திருப்பெயர்கள் சூட்டி, அவனுக்கு கயிலையின் இடப்பாகத்தில் ஆலயம் அமைத்துத் தந்து, அங்கிருந்தபடி ஐந்தொழில் களையும் செய்துவரும்படி பணித்தார். மேலும், முருகனுக்கு வாகனமாக அழகிய மயிலை அளித்த ஈசன், அவனுக்குத் துணையாக அஷ்ட வித்தியேஸ் வரர்களையும் அனுப்பிவைத்தார்.
இந்த நிலையில், ஆலம் உண்ட அண்ணலைத் தரிசிக்க கயிலைக்கு வந்த பிரம்மாதி தேவர்கள் முருகப்பெருமானையும் வணங்கிப் பணிந்தனர். அப்போது அங்கு உலவிக்கொண்டிருந்த அழகிய மயிலைக் கண்டவர்கள், அதன்மீது அனுதாபம் கொண்டார்கள். காரணம்..?
சூரன் தன் தம்பியருடன் காஞ்சிபுரத்தில் தவ நிலை மேற்கொண்டிருந்தான். முருகப் பெருமானின் வாகனமாக மாறும் பேற்றினை அடைய வேண்டும் என்பதே அவர்களது தவத் தின் நோக்கம். அவர்களது தவம் நிறைவடைந்து, தவப் பயனும் கிடைத்துவிட்டால், ஏற்கெனவே முருக வாகனமாகத் திகழும் மயிலின் நிலை என்னாவது? இதை எண்ணியே பிரம்மாதி தேவர்கள் மயிலின் மீது அனுதாபம் கொண்டார் கள். அத்துடன், “உன் இறைவனின் வாகனமாக மாறவேண்டி சூரன் தனது தம்பியருடன் காஞ்சி புரத்தில் கடும்தவம் மேற்கொண்டிருக்கிறான்” என்ற விஷயத்தையும் மயிலிடம் கூறிச் சென்று விட்டார்கள்.
தேவர்கள் கூறியது கேட்டு மிகவும் வருந்திய மயில், தனது மனவருத்தத்தைப் போக்கிட முருகப்பெருமானைத் தியானித்தது. மயிலின் பிரார்த்தனைக்கு இரங்கிய முருகப் பெருமான், மயிலின் மனவருத்தத்தைப் போக்கிடும் விதத்தில் சூரனையும் அவன் சகோதரர்களையும் கணங்களாக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார்.
சூரனும் அவனுடைய சகோதரர்களும், முருகப் பெருமானின் வாகனமாக மாறும் பேற்றினைத் தாங்கள் அடையவிடாமல் மயில் மூலம் தடுத்து விட்ட தேவர்கள் மீது சினம் மிகக் கொண்டனர். அவர்களைப் பழிதீர்க்கும் நாளை எதிர்நோக்கி நின்றனர். அந்த நாளும் வந்தது.
அதைக் கேட்ட மயில் சிறிதும் ஆலோசிக்காமல் கோபம்கொண்டு கருடனையும், அன்னத்தையும் விழுங்கி விட்டது. முருகப் பெருமானை வழிபட்டுத் திரும்பிய திருமாலும், நான்முகனும் தங்கள் வாகனங்களைக் காணாது முருகப்பெருமானிடம் முறையிட்டனர். நடந்ததை உணர்ந்த முருகப் பெருமான் மயில் விழுங்கிய கருடனையும், அன்னத்தையும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். முருகனின் உத்தரவு கேட்டு கருடனையும், அன்னத்தையும் விடுவித்தது மயில். திருமாலும், நான்முகனும் திரும்பிச் சென்றனர்.
அவர்களுக்கு இன்னல் விளைவித்ததன் காரணமாக மயிலின் மீது சினம் கொண்ட முருகப் பெருமான் மயிலை மலையாகும்படி சபித்தார். `ஆலோசிக்காமல் அவசரப்பட்டுவிட்டோமே' என்று வருந்திய மயில், பெருமானிடம் சாப விமோசனம் கேட்டது. தவறை உணர்ந்து வருந்திய மயிலிடம் பரிவுகொண்ட முருகப்பெருமான், “நீ பாண்டிய நாட்டில் திருப்பத்தூருக்குக் கிழக்கே உள்ள அரசவனத்துக்கு (குன்றக்குடி) போய் மலையாக இரு. அங்கு நான் வந்து உனக்குச் சாப விமோசனம் தருகிறேன்” என்று அருளினார்.
அதன்படியே, குன்றக்குடிக்கு வந்துசேர்ந்த மயில், முருகப்பெருமானை நோக்கும் விதத்தில் வடக்கே முகமும், தெற்கே தோகையுமாகவுள்ள மலையின் வடிவம் கொண்டு, தவத்தினைத் தொடங்கித் தொடர்ந்தது.
மயிலுக்கு இந்நிலை உருவாகக் காரணம் சூரன் சகோதரர்களே என்பதால், அவர்களை அசுரர்கள் ஆகும்படிச் சபித்தார் முருகன். அசுரர்களான அவர்கள் தேவர்க்கும், முனிவர்க்கும் இன்னல் விளைவித்து, இறுமாப்புடன் திரிந்தனர். ஈசனின் திருவுளப்படி முருகப்பெருமான், ஆறு திருமுகங் களோடு எழுந்தருளி அசுரர்களை அழித்தார். சூரனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி வாகனமாகவும், கொடியாகவும் கொண்டார்.
அதே நேரத்தில் - ஈசனால் தமக்கு அளிக்கப் பட்டு, தற்போது தமது சாபத்தால் மலைவடிவம் கொண்டு தவநிலையில் இருக்கும் மயிலுக்கும் அருள்புரியச் சித்தம் கொண்டார் முருகன். எனவே, குன்றக்குடிக்கு எழுந்தருளி, மலை வடிவில் இருந்த மயிலை இரு பகுதிகளாக மாற்றி, ஒன்றுக்கு சாரூப்ய பதவி அளித்தவர், மற்றொரு பாகத்தைத் தொடர்ந்து மலையாகவே இருக்குமாறு கூறினார். சாபம் நீங்கப் பெற்ற மயில், `முருகப் பெருமான் தொடர்ந்து அந்த மலையின் மீது எழுந்தருளி, அண்டி வந்து வணங்குபவர்க்கு வேண்டிய வரம் அருளவேண்டும்' என்று வரம் கேட்டது. அதன்படி, முருகப்பெருமான் வள்ளி - தேவசேனா சமேதராக குன்றக்குடி மலையின் மீது கோயில்கொண்டார்.
காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் காரைக்குடியில் இருந்து மேற்கே எட்டு கி.மீ தொலைவில் உள்ளது குன்றக்குடி. ஊரின் நடுவே உயர்ந்து நிற்கும் மலையின் மேல், தெற்கு நோக்கி அமைந்திருக்கும் ராஜகோபுரம் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. இந்தத் திருக்கோயில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று கீழ்க்கோயில். இங்கு தேனாற்று நாதரும், அழகம்மையும் கிழக்கு நோக்கி அருள் புரிகின்றனர். மலைக்கோயிலில் முருகன் அருள்கிறான்.
மலையடிவாரத்தில் அருள்தரு சண்முகநாதப் பெருமான் சந்நிதிக்கு நேர்கிழக்கில் `சந்நிதி விநாயகர்’ கோயில் அமைந்திருக்கிறது. இந்த விநாயகர் ஆலயத்துக்குக் கிழக்கே அடுத்தடுத்து ஒற்றைக்கால் மண்டபமும், சண்முக தீர்த்தம் என்ற அழகிய திருக்குளமும் அமைந்திருக்கிறது.
சந்நிதி விநாயகரைத் தரிசித்துவிட்டு, திருக் கோயில் முகப்பு அலங்கார வாயிலின் வழியாக மலைக்கோயிலுக்குச் செல்கிறோம். வாயிலின் உள்ளே சென்றதும், மலையடிவாரத்தில் வடமேற்கு மூலையில் தோகையடி விநாயகர் சந்நிதியைத் தரிசிக்கலாம். அடுத்து மலையின் நுழைவாயிலில் கார்த்திகைப் பிள்ளையார் மண்டபம் இருக்கிறது. இங்கு கார்த்திகைப் பிள்ளையார் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். இன்னும் மேலே செல்லுகையில் அடுத்தடுத்து தனி மண்டபம் ஒன்றும், தண்ணீர் மண்டபமும் அமைந்துள்ளன. அவற்றைத் தாண்டிச் சென்றால், அதற்கும் மேல் இடும்பன் கோயில் உள்ளது. அதன் மேற்கில் வல்லப கணபதி வீற்றிருக்கிறார். அவரைத் தரிசித்துவிட்டு, அடுத்துள்ள மண்டபத்தைச் சேரும்போது, 149 படிகளைக் கடந்து மலையின் மேல் சமதளத்துக்கு வந்துவிடலாம். மலைக்கோயில் பிராகாரத்திலும் ஒரு பிள்ளையாரைத் தரிசிக்கலாம், அவருக்கு சொர்ணகணபதி என்று திருப்பெயர்.
எழில் சிற்பம்
மலைக்கோயில் கருவறையில், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன், அன்புடன் இறங்கி வந்து பக்தர்களை அரவணைக்கும் பாவனையில், அழகு மயில்மீது ஒய்யாரமாக அமர்ந்து, கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறான் முருகப்பெரு மான். ஆறுமுகன் அமர்ந்திருக்கும் மயில் வடக்குப் பார்த்திருக்கிறது. ஆறுமுகப் பெருமானின் வலமும் இடமுமாக முறையே தனித்தனி மயில் வாகனங்களில் வள்ளியும், தெய்வானையும் அருள்கின்றனர். இதுபோன்ற தரிசனம் காண்பதற்கரியது என்கிறார்கள். முருகனின் மயில் வாகனமும், திருவாசியும், மூலமூர்த்தமும் ஒரே சிலையாக எழிலுடன் வடிக்கப் பெற்றிருக்கிறது.
முருகனருள் பெற்ற பெரிய மருது
மருதுபாண்டிய சகோதரர்கள் சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்த காலம் அது. ஒருமுறை பெரிய மருதுபாண்டியருக்கு ராஜப் பிளவை நோய் ஏற்பட்டு கடுமையாக வாட்டியது. முதியவர் ஒருவரது ஆலோசனைப்படி, முருகபக்தரான காடன் செட்டியாரை அழைத்துவந்து, குன்றக்குடி முருகனை வேண்டி திருநீறு வழங்கச் செய்தனர்.
அன்று இரவு, பாலசந்நியாசி ஒருவர் மயில் தோகையுடன் வந்து, தம் பிளவையைப் பிதுக்கி, முழுக்க அகற்றி வாழை இலையில் வைத்துவிட்டு, பிளவையில் திருநீறு வைத்ததுபோல் கனவு கண்டார். திடுக்கிட்டு விழித்துக்கொண்ட அவர், அச்செயல்கள் யாவும் அப்படியே நனவாக நடந்திருப்பதையும், வலியின் கொடுமை முழுக்க அகன்றுவிட்டதையும் உணர்ந்து மகிழ்ந்தார்.
சில நாட்களில் பூரணநலம் பெற்றுவிட்ட மருது பாண்டியர், காடன் செட்டியாரை அழைத்துக் கொண்டு தமது பரிவாரங்களுடன் குன்றக்குடிக்கு வந்து சண்முகநாதனை வணங்கி வழிபட்டதுடன், பல திருப்பணிகளையும் செய்வித்தார்.
சிதம்பரம் அருகேயுள்ள கீழ்ப்பரப்பை என்னும் ஊரைச் சேர்ந்த சுந்தரவேலு முதலியார் என்பவரின் மகன் செந்தில்வேலு பிறவி ஊமை யாக இருந்தான். 1973-ல் ஏழு வயது ஆகியும் அவனுக்குப் பேசும் சக்தி இல்லாதது கண்டு மனம் வருந்திய சிறுவனின் தந்தையும், தாய் நீலாயதாட்சி அம்மாளும்... அவன் பிறந்த நட்சத்திரம் ரோகிணி என்பதால், மாதம்தோறும் அந்த நட்சத்திரத்தில் குன்றக்குடி சண்முகநாதனை வழிபாடு செய்வதாக நேர்த்திக்கடன் வைத்திருந்தனர்.
சிறுவன் செந்தில்வேலின் தாத்தா சொக்கலிங்க முதலியார் சிறுவனை அழைத்துக்கொண்டு 11 முறை தொடர்ந்து குன்றக்குடி வந்து சண்முகநாதப் பெருமானை வழிபட்டுத் திரும்பினார். 12-வது முறை ரோகிணி நட்சத்திரத்தன்று குன்றக்குடி வந்து அருள்தரு சண்முகநாதப் பெருமானை நெஞ்சுருக வழிபட்டார். பேரனைப் பார்த்து “ஓம் முருகா!” என்று சொல்லுமாறு கூறினார். சிறுவன் தன் தாத்தாவின் உதட்டசைவையே கூர்ந்து நோக்கிய வண்ணம் இருந்தான். அதே வேளையில் சந்நிதியில் திரை விலகி, சண்முகநாதப் பெருமானின் அருள்முகம், தீப ஆராதனையில் பிரகாசித்தது. அவ்வளவில் சிறுவன் செந்தில்வேல் வாயிலிருந்து “ஓம் முருகா” என்னும் மந்திர ஒலி மெதுவாக, இனிமையாக ஒலித்தது. அதிலிருந்து அவன் நன்கு பேசத் தொடங்கிவிட்டான்.
இன்றைக்கும் தொடர்கின்றன... குன்றக்குடி குமரனின் அருளாடலும் அற்புதங்களும்!
பக்தர்கள் கவனத்துக்கு...
தலத்தின் பெயர்: குன்றக்குடி (மயூர நகரம், அரசவனம், கண்ணபுரம், மயில்மலை என்ற பெயர்களும் உண்டு).
மூர்த்தம்: அருள்தரு சண்முகப் பெருமான்.
உற்சவ மூர்த்தம்: அருள்தரு ஆறுமுக நயினார்.
தீர்த்தம்: சரவணப் பொய்கை: பாண்டவர் தீர்த்தம்; தேனாறு,
வழிபட்டோர்: கண்ணபெருமான், அகத்தியர், வசிஷ்டர், விசுவாமித்திரர், நான்முகன், கருடன், இந்திரன், பாண்டவர்கள், இடும்பன் என்னும் அசுரன்.
பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்: குமார தந்திர முறைப்படி நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. தை உத்திரட்டாதி தொடங்கி பத்து நாள் பிரம்மோற்சவம்; ஐப்பசி மாதம் கந்த சஷ்டி; வைகாசி விசாகம்; ஆவணி மூலம்; ஆடிக்கிருத்திகை திருப்படி பூஜை மற்றும் பல திருவிழாக்களும், பூஜைகளும் நடைபெறு கின்றன.
தங்கும் வசதி: காரைக்குடிக்குச் சென்று விட்டால் தங்குவதற்கு வசதிகள் உண்டு. அங்கிருந்து குன்றக்குடிக்குச் செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
எப்படிச் செல்வது?: காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில், காரைக்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.
Comments
Post a Comment