உன்னோடு உண்டு பூசல்!

சமயம் வளர்த்த மகளிரில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் இடம் தனித்தன்மை வாய்ந்தது. பெரியாழ்வாருக்கு திருமால் அளித்த பெருநிதியம் ஆண்டாள், அன்பால் ஆண்டவனையே ஆட்கொண்டவள். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் மட்டுமே ‘சங்கு’ எனப்படும் பாஞ்சஜன்யத் தைப் பாடி இருக்கிறாள்.
பாஞ்சஜன்யம் வித்தைக்கு இருப்பிடம். அதை ஊதிய பின்னரே, கண்ணன் கீதோபதேசம் செய்தான். உலகில் ஞானம் பெருகச் செய்ய எண்ணிய எம் பெருமான், முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வாராக சங்கைப் படைத்தான்.
பெரியவாச்சான்பிள்ளை கூறுகிறார்: சுதர்ஸன சக்கரம் விரோதிகளை அழிக்க, அவ்வப்போது பெருமாளின் கையை விட்டு நீங்கும். ஆனால், சங்கு எம்பெருமானோடு எப்போதும் இணைபிரியாமல் அவனது கையிலேயே இருக்குமாம்."
‘ஹஸ்தத்ந:’ என்று பாஞ்சஜன்யத் தின் புகழைப்பாடுவர். பெருமாளின் கையை விட்டு நீங்காமலே, தன் ஒலியால் எதிரிகளை நடுங்கச் செய்து வீழ்த்து பவன். துருவனுக்கு தன் சங்கால் அவனது கன்னத்தைத் தடவி ஞானம் புகட்டினார் பெருமாள்.
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சங்கைப் பற்றிப் பாடுகிறாள். வெண்சங்கே! கண்ணபிரானு டைய பவளம் போன்ற திருவாயில் பச்சைக் கற்பூர மணம் வீசுமா? தாமரை மலர் மணம் வீசுமா? இனிப் பாக இருக்குமா? கடலில் பிறந்து, ‘பஞ்சசனன்’ என்ற அசுரன் உடலில் வளர்ந்தாலும், பிறந்து வளர்ந்த இடத்தை விட்டுவிட்டு எம்பெருமானுடைய கைத்தல மாகிய உயர்ந்த இடத்தில் இருக்கிறாய்! சரத்காலத்து பூரண சந்திரன் போல் ஒளி வீசுகிறாய். இடைவிடாமல் கண்ணன் திருக்கையில் இருந்துகொண்டு, அவன் காதில் ரகசியம் பேசுவதுபோல் காணப்படுகிறாய். கடலில் வாழ்வாரை உலகோர் மதிப்பதில்லை. பாக்கியசாலியான நீயோ, கண்ணபிரான் வாயமுதத்தைப் பல காலமாகப் பருகி வருகிறாய்.
பெரிய தீர்த்தமாகிய, தாமரைக் கண்ணனுடைய திருவாய் தீர்த் தத்தில் படிந்து நீராடுகிறாய். செவ்வரியோடிய கண்களையும், கறுத்த திருமேனியும் உடைய கண்ணபிரானுடைய கைத்தலத்தில் கண் வளருகிறாய். அந்தக் காட்சி, அப்போது மலர்ந்த செந்தாமரை மேல் அமர்ந்து அன்னம் தேனைப் பருகுவது போல் தோன்றுகிறது.
வலம்புரியே! நீ உண்பது உலகளந்தான் வாயமுதம். உறங்குவது அப்பெருமானின் திருக்கையில். பெண் குலத்தோர் உன் மேல் குற்றம் கூறத்தக்க அநியாயமான செயலைச் செய்கிறாய். நீ பெரிய செல்வந்தன். கண்ண பிரானுடைய பதினாறு ஆயிரம் தேவியர் அவனுடைய வாயமுதம் பெற விரும்புவர். நீ ஒருவனே உண்டால், உன்னோடு பூசல் செய்யாமல் இருப்பார்களா?"
எம்பெருமானுடன் சங்கையும் பேருறவு உடைய தாகப் பாடினாள் ஆண்டாள். இதனை ஓதுபவரும் சங்கு போல், எம்பெருமானின் அடியாராகும் பேறு பெறுவர்.

Comments