ஒளி வெள்ளமாய் வந்த ஓங்காரப் பொருள்!

ஏழிசையாய் இசைப்பயனாய்’ எனத் திருமுறைகள் கூறும். ‘‘நன்னா ச்ருதி சுத்தமா மனசு உருகிப் பாடிட்டாப் போதும்; தபஸ்ஸெல்லாம் கூடப் பண்ண வேண்டாம். ஸ்வாமியோட அனுக்ரஹம் பரிபூரணமாக் கெடச்சுடும்’’ என்பார் காஞ்சி ஸ்ரீமஹா ஸ்வாமிகள்.
ப்படிப்பட்ட, இசைத் தொண்டினைச் செய்து வந்தார் ஒருவர். அதிகாலையில் எழுவது; நீராடுவது; தமிழில் நீந்தி அதை மாந்திய காரணத்தால், தாமே செய்யுள்கள் எழுதி, அவற்றை இறை சன்னிதியில் மனமுருகிப் பாடுவது எனத் திருத்தொண்டு செய்து வந்தார்.
சொல்லமைதியும் பொரு ளாழமும் கொண்ட அவரது பாடல்களைக்கேட்டு, மன மகிழ்ந்த மக்கள், ‘ஆஹா... இவர் பெரீய கவிராஜர்! தமிழ்க்கடவுள் தண்டபாணி இவர் நாவில் குடி கொண்டிருக்கிறான்’ என்று புகழ்ந்தார்கள்.
அதன் காரணமாக, அந்தத் தூயவரின் இயற்பெயர் மறைந்து, ‘பெரிய கவிராஜர்’ என்ற பெயரே நிலைத்து விட்டது. பழனி கோயிலில் பரமனைப் பாடும் பணியை மனப்பூர்வமாகச் செது வந்தார் பெரிய கவிராஜர்.
அவருடைய மனைவியோ அன்பு, அறிவு, அடக்கம், ஈகை, இரக்கம், இன்சொல் முதலான நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தாள். இல்லறம் இனிமையாக நடந்து கொண்டிருந்தது. என்ன இருந்து என்ன செய்ய? கவிராஜர் தம்பதிகளுக்கு, மகவில்லாக்குறை மனங்களை வாட்டியது.
சஷ்டி விரதம் இருந்து சண்முகனை வழிபட்டால், சந்ததி காக்க மகவொன்று வாக்கும் எனும் அழுத்தமான உறுதியோடு விரதம் இருந்தார்கள்.
சக்தி தீர்த்தம், சண்முக தீர்த்தம், தேனு தீர்த்தம் ஆகியவைகளில்
நீராடினார்கள். வெட்சி, கடம்பு, கழுநீர் முதலான மலர்களை வகை வகையாக மாலைகளாகத் தொடுத்து, அபிஷேகத் துக்குப்பால் அளித்து, ‘பால தண்டாயுதபாணி! எங்கள் வாழ்வு தண்டமாகாத படி, பால கனைத் தந்தருள்’ எனக் கைகள் குவித்து, மனங்களைத்திறந்து வேண்டினர்.
நினைத்ததை அளிக்கும் நிமலன் அருளால், கவிராஜர் தம்பதியர்க்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. நன்னேரத்தில் பிறந்த குழந்தைக்கு, பழனியாண்டவர் அருளால் பிறந்த குழந்தைக்கு, ‘பாலசுப்பிரமணியன்’ எனப் பெயரிட்டார்கள்.
மழலைமொழி பேசி மாதா - பிதாக்களை மயக்கிய பால சுப்பிரமணியன், வளர வளரப் பெற்றோர்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்கள். அக்கடலில் மிதந்த அவர்களைப் பேரலை ஒன்று அப்படியே தூக்கி, எதிர்க்கரையில் வீசியது. ஆம்! மகிழ்ச்சிக் கட லில் மிதந்தவர்கள், அதன் எதிர்க்கரையான துயரக் கடலில் விழுந்தார்கள்.
காரணம்? தவமிருந்து பெற்ற குழந்தையின் பார்வை மெள்ளக் குறையத் தொடங்கியது. கூடவே, காதுகளும் சக்தியை இழக்கத் தொடங்கின. மொத்தத்தில் ஒளியும் ஒலியும் மறைந்து போயின. உலக வாழ்க்கை என்னும் உயர்ந்த மாளிகைக்கான இரு பெரும் வாசல்கள் அடைபட்டுப் போயின.
கவிராஜர் கலங்கினார். ‘கொடுத்தவனிடமே போக் கேட்பதுதான் முறை’ என்று தீர்மானித்த கவி ராஜர், மனைவியையும் மகனையும் கூட்டிக் கொண்டு, பழனியாண்டவர் திருவடிகளில் போ விழுந்தார்.
‘எங்கும் கண்ணுடையா! காணாயோ
இவன்நிலையே?
எங்கும் செவியுடையா! கேளாயோ
இவன் குறையே?
கண்ணுதலோன்கண்ணுதித்த
கண்மணியே எங்கள் மகன்
கண்ணுறவே தண் கருணைக்
காட்டுவதுன் கடனாமே’
என்று பாடி முறையிட்டு வேண்டினார். கந்தக் கடவுளே! எம்மகனுக்குக் கண்ணையும் காதையும் தந்தாலொழிய, யாம் மீளமாட்டோம்" என்று அங்கேயே விரதமிருந்தார்கள்.
நாட்கள் சில கடந்தன. ஒருநாள், மூவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நெற்றி நிறைய விபூதி, காவியாடை, கரத்தில் தண்டம் ஆகியவற்றோடு முதியவர் ஒருவர், மென்மையாக நடந்து வந்தார். அவரைச்
சுற்றி ஓர் ஒளி வெள்ளம் இருந்தது. அவர் நடக்கும் போது, அந்த ஒளியும் அவ ரைச் சுற்றிச் சூழ்ந்து படர்ந்து பரவியது.
ஒளி வெள்ளத்தில் வந்த ஓங்காரப் பொருளைக் கண்ட குழந்தை, அசைந்து எழுந்து இரு கரங்களையும் கூப்பி வணங்கியது. வந்த முதியவர், விபூதியை அள்ளிக் குழந்தையின் உடம்பு முழுதும் பலமுறை தடவி, அதன் கையில் கடம்ப மலர் ஒன்றைத் தந்து, குழந்தே! இதைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, காதில் வைத்துக்கொள்! கலக்கம் வேண்டாம். உன் துயரெல் லாம் இன்றோடு தீர்ந்தது" என்று கூறி மறைந்தார்.
அதேபோல, கவிராஜருக்கும் அவர் மனைவிக்கும் கனவில் அருளி மறைந்தார் முதியவர்.
கனவு கலைந்த கவிராஜரும் மனைவியும் விழித்தனர். மூவர் கைகளிலும் ஒவ்வொரு கடம்ப மலர் இருந்தது. வந்து அருள்புரிந்தது வள்ளிமணாளன் என்பதை உணர்ந்த கவிராஜரும் அவர் மனைவியும் தங்கள் கைகளில் இருந்த மலர்களைக் குழந்தையின் கைகளில் கொடுத்து, அப்பா! பாலசுப்பிரமணியா! இம்மூன்று மலர்களையும் கண்களில் ஒற்றிக்கொள்! ஒன்றைத் தலையில் சூட்டிக்கொள்! மீதியைக் காதுகளில் ஒவ்வொன்றாக வைத்துக்கொள்" என்றார்கள். குழந்தை பாலசுப்பிரமணியமும் அவ்வாறே செய்தது.
அதே விநாடியில், குழந்தையின் கண்களும் காதுகளும் திறந்தன. ஆம்! குழந்தை பார்வை பெற்றது; அதற்குக் காதுகளும் கேட்கத் தொடங்கின. முன்னவனே முன்னின்றால், முடியாத செயல் உளதோ?
அப்புறமென்ன? ஆறுமுக வள்ளலை அகம் குளிரத்துதித்து வணங்கிவிட்டு மனைவி - மகனுடன் திரும்பினார் கவிராஜர். பாலசுப்பிரமணியன் கல்வி கற்கத் தொடங்கினார். சம்ஸ்க்ருதமும் சங்கத்தமிழும் அவர் வசப்பட்டன. கல்வி, கேள்விகளில் தலை
சிறந்து விளங்கினார்.
அதன்பின், அப்போது திருவாவடுதுறை ஸ்ரீசுப்பிர மணிய தேசிகர் அவர்கள், முருகப்பெருமான் அருள் படி பாலசுப்பிரமணியனுக்கு, சிவஞான போதத்தை ஊட்டினார். அன்றுமுதல், நம் பாலசுப்பிரமணியத்துக்கு சமய அனுபவத் தெளிவும், நூல் இயற்றும் ஆற்றலும் ஓங்கின.
அதனால், அக்கதீபிகை, சைவ சித்தாந்த தரிசனம், மாயாவாத சகசிர தூஷணி, குகோத்கர்ஷம், கூவிளநீப மகாத்மியம் முதலான நூல்களை இயற்றினார். தஞ்சை மன்னரின் அரசவையில், நவராத்திரி காலத்தில் புலவர்கள் பலரை வென்றதன் காரணமாக, மன்னரே இவருக்குக் ‘கவிராஜர்’ எனப் பட்டமளித்து மரியாதை செய்தார்.
அப்போது, சேர நாட்டில் வடமொழி வல்லுனர் ஒருவர், சிவ தூஷணம் செய்ய, அவரை வென்ற பால சுப்பிரமணியக் கவிராஜர், ‘திராவிட வேத நிர்ணயம்’ என்ற நூல் இயற்றினார். சேர மன்னரின் வேண்டு கோளுக்கிணங்கி, மூன்றே நாட்களில் ‘பழனி தல புராண’த்தை இயற்றி அரங்கேற்றினார்.
அந்நூலுக்கு, நா.கதிரைவேற்பிள்ளை அபூர்வமான உரை செய்திருக்கிறார். பழனி தலபுராணத்தில், ‘ஒண்மீக் குடுமியழகும்’ எனத் தெளிவாகவே கூறியிருக்கிறார் கவிராஜர். ஆமாம்! நம்மில் பலர் நினைப் பதைப்போலப் பழனியாண்டவர், மொட்டையடித் துக் கொண்ட திருக்கோலத்தில் இல்லை.
அபிஷேகத்தின்போது அமைதியாக அருகிருந்து பார்த்தால், அழகான நெளிநெளியான கூந்தலைத் தரிசிக்கலாம். ஆகையால், பழனியாண்டவர் படத்தை, வீட்டில் வைத்தால், குடும்பம் மொட்டையாகி விடும் என்ற எண்ணத்தை விட்டு, பழனியாண்டவரைப் பணிவோம்! பாவங்கள் மறைந்துபோம்.

Comments