கண்களின் குறை தீர்க்கும் காரணவரதராஜர்!

ல்லா காரியங்களுக்கும் தானே காரணனாகத் திகழும் ஸ்ரீமந் நாராயணன், ‘காரணம்’ என்ற சொல்லையே திருப்பெயராகக் கொண்டு அருள்கிறார் ஒரு திருத்தலத்தில்! கோவை மாவட்டம், சூலூர் வட்டத்தில், உடுமலை-பல்லடம் பாதையில் அமைந்துள்ளது, செஞ்சேரிப்புத்தூர் எனும் கிராமம். இங்குதான் சுயம்புவாகத் தோன்றி அருள்மிகு காரண வரதராஜ பெருமாள் எனும் திருப்பெயரை ஏற்று அருள் செய்கிறார்!

இந்த கிராமம் இப்போது  அமைந்துள்ள பகுதி, ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு வனப் பகுதியாக இருந்ததாம். அப்போது, அருகில் இருக்கும் ‘ரங்க சமுத்திரம்’ என்ற கிராமத்தைச் சார்ந்த சிறுவன் ஒருவன், ஊர்ப்பெரியவர் ஒருவருக் குச் சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக, இந்த இடத்துக்கு அழைத்துவருவது வழக்கம். அந்த பசுக்கூட்டத்தில் ஒன்று  மட்டும், மந்தையில்
இருந்து பிரிந்து சென்று வனத்தில் இருந்த ஒரு புற்றின் மீது பாலைச் சொரிந்து விட்டு வரும்.

இதையறியாத ஊர்ப்பெரியவர், தனது மாடுகளில் ஒன்றுமட்டும் மாலையில் பால் தருவதில்லையே ஏன் என்று சிறுவனிடம் விளக்கம் கேட்டார். அவனுக்கும் விஷயம் தெரியாததால், மெளனத்தையே பதிலாகத் தந்தான். அதனால், நடந்ததை அறிய முற்பட்ட ஊர்ப் பெரியவர், ஒருநாள் சிறுவனையும் பசுக்கூட்டத்தையும் பின்தொடர்ந்து சென்று, நடந்ததை அறிந்தார். உடனே, ஊருக்குள் சென்று மற்றவர்களிடமும் விஷயத்தைச் சொல்லி அழைத்துவந்தார். அனை வருமாகச் சேர்ந்து புற்றை அகற்ற முயன்றனர். அப்போது புற்றில் மறவர் கொடி ஒன்று தென்பட்டது. அதன்மீது  கடப்பாரை பட்டதும் ரத்தம் பீறிட்டது. எனவே, அனைவரும் பயந்துபோனார்கள்; முயற்சியைக் கைவிட்டு வீடுதிரும்பினர். பின்னர் ஒருநாள், பெரியவரின் கனவில் பெருமாள் தோன்றி, தான் புற்றுக்குள் குடிகொண்டுள்ளதாகவும், புற்றில் தோன்றிய காரணத்தால், தன்னை ‘காரண வரதராஜ பெருமாள்’ என்று அழைக்க வேண்டுமென்றும், அங்கே தனக்கொரு ஆலயம் அமைக்க வேண்டுமென்றும் அருள்பாலித்து மறைந்தார். பெரியவரும் ஊராரிடம் கனவை விவரிக்க, விரைவில் புற்று இருந்த இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது.

புற்றில் பெருமாள் தோன்றியதால் அந்த இடத்துக்கும் ‘புத்தூர்’ என பெயர் ஏற்பட, ஊர் மக்களும் கோயிலுக்கு அருகில் வீடுகளை அமைத்து, வாழ்க்கையைத் துவங்கியதாக தலபுராணம் சொல்கிறது. சித்திரை முதல் நாள் கனகாபிஷேகம், ஆனியில் சுதர்ஸன ஜயந்தி, ஆவணியில் கோகுலாஷ்டமி - உறியடித் திருவிழா, கார்த்திகை ஜோதி, மார்கழி பஜனை, வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கவாசல் திறப்பு, தை பொங்கல், பங்குனி உத்திரம் என்று திருவிழாக்கள் நிறைந்த இவ்வாலயத்தில், புரட்டாசி மாதம் ஐந்து சனிக் கிழமைகளும் வெகு விசேஷம்!

இந்த தினங்களில் அபிஷேகம், அன்னதானம் என்று களை கட்டுகிறது பெருமாள் ஆலயம். இந்த ஊர் மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்து மக்களும், புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலில் பெருந்திரளாகக் கூடுகின்றனர். இப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக மட்டுமின்றி, கண்ணை காக்கும் தெய்வமாகவும் திகழ்கிறார், அருள்மிகு காரண வரதராஜ பெருமாள். ஆம்! கண்ணில் கட்டி, கண் கோளாறு உள்ளவர்கள் இரண்டு மாதத்துக்கு கோயிலிலேயே தங்கி பெருமாளுக்குத் தினமும் தீர்த்தம் விட்டு வழிபாடு செய்து வந்தால் கண் குறைபாடுகள் நீங்கும் என்பது ஐதீகம்.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தைப் பேறு கிடைக்காதவர்களும் இங்கு வந்து வேண்டி இறை அருள் பெறுகின்றனர். புரட்டாசி மாத சிறப்பு பூஜைகளிலோ புரட்டாசி கடைசி  சனிக்கிழமையிலோ தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். மேலும்,  தாங்கள் துவங்கும் காரியம் நிறைவேறுமா நிறைவேறாதா என்பதை அறிந்துகொள்ள, பெருமாளின் சந்நிதிக்கு வந்து பூக்கட்டிப் போட்டு பார்க்கிறார்கள், பக்தர்கள். இறைவனின் திருவுளம் எப்படியோ அதன்படி செயல் பட்டால் வெற்றி நிச்சயம் என்பது இங்குள்ள பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், கிரீடத்தில் மணி துலங்க, சுமார் ஏழரை அடி உயரத்துடன் அருளும் ஆஞ்சநேயர், இத்தலத்தின் சிறப்பம்சம்!

வரும் புரட்டாசி புண் ணிய மாதத்தில், ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் நீங்களும் இவ்வூருக்குச் சென்று காரண வரதராஜரைத் தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்விலும் நற்காரியங்கள் யாவும் இனிதே நிகழ்ந்தேறும்.

Comments