கல்வி கலைகளில் சிறக்க...

ல்வியில் அதிக நாட்டம், பேச்சுத்திறன், சொல்வன்மை ஆகிய திறன்களையும், கலைத்துறையில் ஈடுபாடு போன்ற வித்தியாசமான சக்தியையும் உங்கள் குழந்தைகள் பெற வேண்டுமானால், ஸ்ரீராஜமாதங்கி தேவியை மனமுருகி வழிபடவேண்டும். எல்.கே.ஜி குழந்தைகள் முதல் பிஹெச்.டி மாணவர்கள் வரை கல்வியில் சிறப்புற, இந்த அம்பிகையைக் குறித்த வழிபாடு மிகுந்த பலன் தரும்.
பாடச்சுமை, படிப்பை மூளையில் ஏற்றிக்கொள்ள முடியாத சூழ்நிலை, தொலைக்காட்சி அலைவரிசைகளில் காட்டப்படும் தொல்லைக் காட்சிகளின் மனஇறுக்கம் தரும் வசனங்களைக் கேட்டுக் கேட்டுப் பிள்ளைகள் தற்காலிக நகைச்சுவையில் சிரித்தாலும்... சிந்திக்கவும் மனத்தில் பதிய வைக்கவும் செய்யும் சக்தி கொண்ட செல்கள் செயலிழக்கும் நிலைதான் அதிகம்! வருங்கால சந்ததியினருக்கு, அறிவுரை கூறும் அறிவியல் பற்றிக் கவலை இல்லை; சூட்சும ஆலோசனையும், வழியும் கூறும் ஆன்மிகத்தை நாடும்போதும் ஆழ் மனத்தில் சந்தேகம் துளிர்விடுகிறது.
இந்த அவல நிலை நீங்கி சிந்தனை செழிப்புறவும், கல்வியில் மேன்மையுறவும், தசமகாவித்யையில் ஒன்பதாவது சக்தியாக விளங்கும் அன்னை ஸ்ரீராஜ மாதங்கியை வழிபடுவது விசேஷம்.
உலகம் தோன்றிய காலத்தில் முதலில் எழுந்த ஓசைக்கு 'ஓம்’ என்று பெயர். இந்த ஒலியிலிருந்துதான் வேதங்கள் யாவும் தோன்றின. மந்திரங்கள் அனைத்துக்கும் ஓங்கார ஒலியே பிரதானமாகக் கருதப் படுகிறது. இந்த முதல் ஒலிதான் நித்தியவாக்கு என, என்றும் அழியாத மொழியாகச் சொல்லப்பட்டு வருகிறது. நான்கு நிலைகள் கொண்ட இந்த வாக்குதான் மனிதர்கள் பேசுகிற மொழி. மற்ற மூன்று நிலைகளும் நரம்பு மண்டலத்தினுள் மறைந்து கிடப்பதாக தந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மூலாதாரச் சக்கரத்தில் உருவாவது பராவாக்கு, வயிற்றுப் பகுதியில் விரிவடைவது பசயந்தி வாக்கு, இடைப்பகுதிக்கு மேல் உருவாகி நிற்பது மத்யமா வாக்கு, வெளியில் உருப்பெற்று வருகிறபோது வைகரீ வாக்கு என்றும் பெயர் பெறுகின்றன. இவற்றுக்கு நாயகியான 'வாக் தேவதை’, ஸ்ரீராஜசியாமளா என்ற திருநாமத்தோடும் இருக்கிறாள். இந்த தேவிதான் தசமகாவித்யையில் ஒன்பதாவது சக்தியாக ஸ்ரீராஜ மாதங்கி என்று அனைவராலும் போற்றப்படுகிறாள்.
ஒரு முறை பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மதேவன் சிவபெருமானை யானை வடிவம் (மதங்கம்) எடுத்து வழிபட்டார். அந்த நேரத்தில் பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றியவர் மதங்க முனிவர்.
இந்த முனிவர், திருவெண்காடு அருகில் உள்ள ஸ்வேதவனம் என்ற மலர் வனத்துக்கு வந்து தவம் இயற்றியபோது திருவெண்காடு இறைவனின் காட்சி கிடைத்தது. 'என்ன வரம் வேண்டும்?’ என இறைவன் கேட்டபோது, ''அந்த ஆதிபராசக்தியே என் மகளாகப் பிறந்திட வேண்டும்'' என்று வேண்டினாராம் மதங்கர். இறைவனும் அப்படியே வரம் தந்தார்.
பின்னர், சிவனாரின் ஆசியோடு அவர் அருளிய பஞ்ச தசாட்சரி மந்திரத்தை ஒரு சோலையில் அமர்ந்து ஜெபம் செய்தார் மதங்கர். அங்கே, முனிவருக்குக் காட்சி தந்த பார்வதிதேவி, ''அடியவள் சித்ஸ்வரூபிணி. நான் தங்களுக்கு மகளாக அவதரிக்க இயலாது. எனது உபதேவதையான மந்திரிணி சக்தியே உமக்கு மகவாய் பிறப்பாள்'' என்றாள். இப்படியாக மதங்க முனிவருக்கு மகளாக அவதரித்தவளே மாதங்கி ஆனாள்.
ராஜமாதங்கி என்ற திருநாமத்துடன் ஒரு ஆடி மாத வெள்ளிக் கிழமை அதிகாலை நேரத்தில், மதங்க புட்கரணியில் மலர்ந்த நீலோத்பல மலரில், மரகதப் பசுமை நிறத்துடன்... கரங்களில் வீணை, கிளியோடு மைவிழியளாகப் பெண் குழந்தையாகக் காட்சி தந்தாள். இந்த சக்தியை மகளாக எடுத்து வளர்த்து வந்தார் முனிவர். அவளுக்கு ஏழு வயது கடந்தபோது, ஒரு சித்திரை மாதம்- சுக்லபட்ச சப்தமி திதியில் பரமேஸ்வரனைத் திருமணம் செய்து கொண்டாள். இந்நாள்தான் இறைவனை மாதங்கி மணம் புரிந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த தேவி, எல்லா சக்திகளும் கொண்ட அன்னை ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மந்திரியாக விளங்கி பணிகளைக் கவனித்து வருவதாலும், ராஜ வம்சத்தவர்களுக்குச் சமமான அதிகாரம் பதவி ஆகியவை இவளுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாலும் ஸ்ரீராஜ மாதங்கி என்று அழைக்கப்படுகிறாள். லலிதா சகஸ்ர நாமத்தில் 'கதம்ப வன வாசின்யை நம:’ என்ற நாமாவளியின் கருத்துப்படி, கதம்ப வனத்தில் மாதங்கி வாசம் செய்வதால் இவளை வழிபடுபவர்கள் கதம்ப வனத்தை அழித்தல் கூடாது.
உடல் உள்ளத் தூய்மையோடு வீட்டில் வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நாளில் இந்த அம்பிகையை பூஜை செய்பவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி, கலைகளின் வழி அதிகமான பொருள் ஈட்டல், நாட்டியம்- சங்கீதத் துறையில் பட்டம் பதவிகள் ஆகிய பலன்கள் யாவும் ஸித்திக்கும்.
அம்பிகையின் வழிபாட்டைத் தெரிந்துகொள்ளுமுன் அறிவில் சிறக்கவைக்கும் ஜாதக நிலைகள் குறித்து அறிவோம். இதுகுறித்து, பிருஹத் ஸம்ஹிதையின் சில முக்கிய குறிப்புகள் விளக்குகின்றன.
* ஒரு குழந்தையின் பேச்சுத்திறனை மூன்றாம் இடம் குறிப்பிடுகிறது. உயர் படிப்பில் ஆர்வம், கலைத்திறனை ஐந்தாம் இடம் சொல்லும், வளரும் குழந்தையின் தனித்திறமையையும் அதிக ஆற்றலையும் பத்தாம் இடம் வெளிப்படுத்தும்.
* ஒன்பதாம் இடத்தில் புதன் அமர்ந்தால் ஜாதகருக்குக் கல்வி மேன்மையும் பக்தியும் அறிவாற்றலும் பளிச்சிடும்.
* பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்தால் தெய்வ பக்தியுடன் சிறந்த கல்வி அறிவு, பேசும் திறமை வெளிப்படும். ஆனால், அதிக பேச்சால் சில தடைகளையும் சந்திக்க நேரிடலாம்.
* சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகருக்கு இனிமையான பேச்சுத்திறமை, பொது இடங்களில் பேசி நல்ல பெயர் வாங்குதல் போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
* சுக்கிரன் 10-ல் அமர்ந்திருக்க கல்வி அறிவில் பாதி நாட்டமும், படித்துக் கொண்டிருக்கும்போதே போட்டி, கவிதை எழுதுதல் - என்ற வெளிவிழாக்களில் புத்தி சென்றிட பரிசு, பாராட்டுதல்கள் கிடைக்கத் தொடங்கும்.
* ஐந்தாமிடத்தில் சனி அமர்கிற காலத்தில் புத்தி மந்தத்தை ஏற்படுத்துவார். அதே சனிபகவான் 10-ல் அமர்ந்து விட்டால் ஜாதகருக்கு சாஸ்திர ஞானம் வந்துவிடும். சிறந்த கல்விமானாக, உபதேசம் செய்பவராக, மன தைரியத்துடன் கல்வித்துறை, கலைத்துறைகளில் சாதித்துக் கொண்டிருப்பார்.
* வாக்கு ஸ்தானமாகிய 2ல் ராகு அமர்ந்தால் கல்வியில் தேர்ச்சி பெற்று அரசுப் பணி ஏற்று உயர்ந்த அஸ்தஸ்தோடு மேலும் உயர் படிப்பையும் தொடர்வார்.
* லாபஸ்தானமாகிய 11-ல் கேது அமர்ந்திருக்கும்போது ஜாதகர் பெரும் யோகப் பலன்களைப் பெற்று கல்வியில் மேன்மை பெற்று சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தைப் பெற்று வாழ்வார்.
* ஒருவர் ஜாதகத்தில் கேது 5ல் அமர்ந்து புதன் 9ல் இருந்தால் அவருக்கு புத்திக் கூர்மை, சாதிக்கும் ஆற்றல் பளிச்சிடும.

ராஜமாதங்கி வழிபாடு...
இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாதங்கி யந்திர வரைவை ஒரு மணைப் பலகையில் கோலமாகப் போட்டு, அதில் தீபம் ஏற்றி வைத்து முதலில் வித்யா கணபதியை வணங்க வேண்டும். அடுத்து தியானம் கூறுகையில் நீலநிற மலர் எடுத்துக் கொண்டு.
சியாமாங்கீம் சசிசேகராம் திரிநயனாம்
ரத்ன சிம் ஹாஸன ஸ்திதாம்
வேதைர்ப்பாஹு தண்டை: அஸி
கேடக பாசாங்குச தராம்
- என்று தீபத்துக்கு அருகில் சமர்ப்பிக்கவும். பின்னர் மணைப்பலகை ஒன்றில் அமர்ந்து,

'ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் மாதங்க்யை பட் ஸ்வாஹா’ எனும் ராஜமாதங்கியின் மூலமந்திரத்தை 108 தடவை ஜெபிக்க வேண்டும். பிறகு, அவல் பாயசம் வைத்து நிவேதனம் செய்து, அதை சிறு குழந்தைகள் ஐந்து பேருக்குக் கொடுத்து, நாமும் ஞானப் பிரசாதமாக எடுத்துக்கொள்ளலாம். கீழ்க்காணும் பாடலைப் பாடியும் வழிபடுவது விசேஷம்.
ஞானமும் திருவும் கொடுக்கும் ஞாலத்தின் புகழ்தேவி
நானிலம் போற்றும் சொற்பாவை அடியற்றின்
வேறெதும் வேண்டுவதுண்டோ இம்மாநிலத்திலே
கூறும் மொழிகாக்கும் குணசுந்தரீ மாதங்கீ!

Comments