What is the use of rituals? Are they really needed? What benefits do they provide? As always, Sri Periyava answers this with immense clarity. Ram Ram

நான் சொல்கிற கர்மாநுஷ்டானங்கள், பூஜை முதலியனவெல்லாம் ‘வெறும்’ சடங்குதானே என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆத்மாநுபவம் என்பது உள்விஷயம். சடங்குகளோ வெளிக்காரியங்கள். இவை எப்படி ஆத்மாநுபவத்திற்கு உதவும் என்பது அவர்களுடைய சந்தேகம்.
உண்மையில் ஆத்மாநுபவம் பெற்றுவிட்டால் சடங்கே தேவையில்லைதான். ஆனால் உண்மையான ஆத்மாநுபவம் நமக்கு வந்துவிட்டதா, அதற்கு நாம் பக்குவப்பட்டு விட்டோமா என்று அந்தரங்க சுத்தமாகப் பார்த்துக்கொண்டால், நாம் அதற்கு எவ்வளவோ தூரத்தில் நிற்கிறோம் என்று தெரியும். எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து, எத்தனையோ கர்மாக்களைச் செய்து, அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமான ஆத்மானந்தத்தை மூடிக்கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்தும் ஸத் வாசனைகளைப் பெருக்கிக் கொண்டும்தான் பழைய துஷ்கர்மங்களையும் துர்வாஸனைகளையும் போக்கிக்கொள்ள வேண்டும். பிறகு கர்மா தானே நின்றுபோகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் ‘வெறும்’ சடங்கு என்று சொல்கிற கர்மங்கள், பூஜை எல்லாம் நமக்கு ரொம்பவும் அவசியமானவையே.
எனவே, சாமானிய மக்கள் சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எல்லாச் சடங்குகளையும் வழுவற அநுஷ்டிப்பதே முறை. இவற்றால் என்ன பயன் என்பவர்களுக்கு நிதரிசனமாகச் சில பலன்களைக் காட்டலாம். இன்னின்ன கர்மங்களை இப்படியிப்படித் தவறின்றிச் செய்ய வேண்டும் என்று ஒருவன் கூர்ந்த கவனத்துடன் செய்கிறபோது, அவன் மனஸில் ஐகாக்கிரியம் (ஒருமுகப்படுதல்) ஏற்படுகிறது. பிறகு ஆத்ம தியானம் செய்வதற்கு இவ்வாறு மனம் ஒருமைப்படுவது அத்தியாவசியமாகும். அதோடு சாஸ்திரம் கூறுவதுபோலத்தான் இருக்க வேண்டும் என்று அவன் உறுதியாக இருப்பதால், ஓர் ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கு (Discipline) உட்படுகிறான். இதைச் சாப்பிடக்கூடாது, இந்தப் போக்கிய வஸ்துக்களை அநுபவிக்கக்கூடாது என்றெல்லாம் சாஸ்திரப் பிரகாரம் நடப்பது வைராக்கியத்துக்குப் பெருத்த சகாயம் செய்கிறது. எத்தனை சிரமங்கள் இருந்தாலும், குற்றம் குறை இன்றி சாஸ்திரப்படி சடங்குகளைச் செய்யும் போது, சங்கல்ப பலமும் (Will-power) உண்டாகிறது. சொந்த அபிப்பிராயமில்லாமல் சாஸ்திரம் சொல்வதே வழி என்று இருப்பதால், அடக்கம், எளிமை எல்லாம் உண்டாகின்றன.
ஆக, ‘வெறும்’ சடங்கு என்று சொல்லப்படுவதைத் தவறாமல் அநுஷ்டிப்பதால் சித்த ஐகாக்கிரியம் (மன ஒருமைப்பாடு) , கட்டுப்பாடு, வைராக்கியம், சங்கல்ப பலம், அடக்கம் இத்தனை நல்ல விஷயங்கள் உண்டாகின்றன. மொத்தத்தில் ஒழுக்கத்துக்கு (Morality) வழி உண்டாகிறது. நன்னடத்தையும் ஒழுக்கமும் இல்லாமல் ஆத்ம விசாரமும், ஆத்மாநுபவமும் உண்டாகவே முடியாது.
புத்தர் வைதிகச் சடங்குகளை விதிக்கவில்லை. ஆனால் அவரும் ஒழுக்கத்தை — சீலத்தை — மிகவும் வற்புறுத்தினார். நேரு பஞ்சசீலம் பஞ்சசீலம் என்று சொல்லி வந்தாரே, அந்த சீலம் பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியம். வைதிகச் சடங்குகள் இல்லாமலே புத்தர் சீலத்தை மட்டும் வற்புறுத்தினார். பூர்வ மீமாம்சகர்களோ, வைதிக கர்மாக்களே போதும், ஈஸ்வரனைப் பற்றிக்கூடக் கவலைப்பட வேண்டாம் என்றார்கள். ஆனால் நம்முடைய ஸநாதன தர்மத்தில் சடங்குகள் (கர்மங்கள் அவற்றின் மூலம், சீலம், அதோடு ஈசுவர பக்தி, பிற்பாடு ஆத்மஞானம் என்கிற ரீதியில் எல்லாம் இணைத்துத் தரப்படுகிறது. வெறுமே சீலம் வராது. பால் வேண்டும் என்றால் பசுவை வைத்துப் போஷிக்க வேண்டும். பசுவை வைத்துப் போஷித்தால் பால் கிடைப்பது மட்டுமின்றிச் சாணமும்தான் கிடைக்கும்; வைக்கோல் கூளமும்தான் சேரும். அப்படியே கர்மப் பசுவை வளர்த்தால்தான் சீலம் என்கிற பால் வரும். அதோடு, சாணம் கூளம்போல், விரும்பத்தகாதவை என்று சிலருக்குத் தோன்றுகிற சில விளைவுகளும் உண்டாகலாம். சாணத்தையும் கூளத்தையும் சுத்தப்படுத்திவிட்டு பசுவைப் போஷித்து வருவதே புத்திசாலித்தனம். சடங்குகளின் உண்மைப் பயனை இவ்விதமே பெறவேண்டும்.
உண்மையான ஆத்ம தியானத்துக்குச் சடங்கு வேண்டாம் என்பதுபோல், ஈசுவரன் என்ற மூர்த்தியும் வேண்டாம்தான். ஆனால் அது உயர் நிலையில்தான். ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று இருக்க முடியாது. முதலில் ஈசுவரன் மிகவும் தேவை. அதற்கு எத்தனையோ காரணங்கள். குறிப்பாக ஒன்றைச் சொல்கிறேன். நன்மை எல்லாம் நிறைந்த மூர்த்தியாக நமக்கு ஓர் உத்தம உதாரணம் தேவைப்படுகிறது. தொன்றுதொட்டு ஈசுவரனை இப்படிப்பட்ட அனந்த கல்யாண குணமூர்த்தியாகத்தானே பாவித்து வந்திருக்கிறோம்! ‘ஈசுவரன்’ என்றவுடன் அவரிடம் கெட்ட குணம் ஏதுமே இருக்காது என்று தானே நமக்குத் நிச்சயமாகத் தோன்றுகிறது? அழகு, கருணை, சக்தி, ஞானம் எல்லாவற்றிலும் பூரணமாக ஒன்று உண்டு என்றால் அது ஈசுவரன் என்ற கருத்துதான். மனோதத்துவப்படி நாம் எதை நினைத்துக் கொண்டேயிருக்கிறோமோ, அதுவே ஆகிறோம். ஈசுவரனின் கல்யாண குணங்களையே எண்ணுவதால் நம்மிடமுள்ள தோஷங்கள் நீங்கி நாமும் நல்லவர்களாகிறோம்.
எனவே சடங்கு, பூஜை இவற்றால் உண்டாகிற மற்ற பலன்களோடு, அவை நம்மை நல்லவர்களாக்க மிகுந்த உதவி புரிகின்றன; காரியமற்ற தியான யோகத்தில், ஞான விசாரத்தில் நம்மைச் சேர்க்க நிரம்ப உபகாரம் செய்கின்றன.

Comments