திருநெல்வேலி

பொன் திணிந்த பொருநை நதியில் அமைந்த பெரிய நகரம் திருநெல்வேலி. வேதபட்டர் என்பவர் இறைவனுக்கு திருவமுது செய்வதற்காக நெல்லைக் காய வைத்திருந்தார். அவர் நீராடச் சென்றபோது பெருமழை பெய்தது. வேதபட்டரின் பக்தியை உலகத்தவர்க்கு உணர்த்தும் வகையில், அவர் நெல்லைக் காய வைத்துச் சென்ற பகுதியில் மட்டும் மழைநீர் படாமல் வேலி அமைத்துக் காப்பாற்றியதால், இவ்வூர் சிவனாருக்கு நெல்லையப்பர் என்றும், இந்த ஊருக்கு திருநெல்வேலி என்றும் பெயர் வந்தது.

* ஒருகாலத்தில் மூங்கில் வனமாக இருந்த காரணத்தால் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்ற பெயரும் உண்டு. மட்டுமின்றி, நெல்லூர், வேணுவனம், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், தாருகா வனம், பிரம்மவிருந்தபுரம் ஆகிய பெயர்களும் இந்த ஊருக்கு உண்டு. கல்வெட்டு குறிப்பு ஒன்று, ‘கீழ் வேம்பு நாட்டுக் குலசேகரச் சதுர்வேதி மங்கலம்’ என்று இவ்வூரைக் குறிப்பிடுகிறது.

* ‘ 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ என திருஞானசம்பந்தரும், ‘தண்பொருநைப் புனல்நாடு’ என சேக்கிழார் பிரானும் இந்த ஊரைப் போற்றிப் புகழ்கிறார்கள். கவிச்சக்ரவர்த்தி கம்பரோ,  ‘பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி’ என்று, இவ்வூரின் நடுவே பாயும் தாமிரபரணியை சிறப்பிக்கிறார்.

ஏறக்குறைய பாண்டியரின் இரண்டாம் தலைநகரம் என்ற அளவில் சிறப்புற்றிருந்தது திருநெல்வேலி என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வீழ்த்திய பிறகு பாண்டிய நாடு சோழர்களின் வசமானது. 13-வது நூற்றாண்டு வரை சோழரின் ஆட்சியிலிருந்த திருநெல்வேலி, பிறகு பிற்கால பாண்டியரின் வசம் வந்தது.

 பொருநை என்னும் தாமிரபரணி நதியாலும், அதன் கரையில், சிந்துபூந்துறை, கொக்கு உறைகுளம் என்று அருந்தமிழ்ப் பெயர்களை ஏற்றுத் திகழும் இடங்களாலும் சிறப்புற்ற நெல்லைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்.

தாமிரபரணி ஆற்றின் வட கரையிலும் தென் கரையிலும் அமைந்த திருநெல்வேலி- பாளையங்கோட்டை என்னும் இரட்டை நகரங்களில், திருநெல்வேலியின் நடுநாயகமாக விளங்குகிறது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்.

பதினான்கு ஏக்கர் நிலப் பரப்பில், இரட்டைக் கோயில் அமைப்பில் இருக்கிறது காந்திமதியம்மன் - நெல்லையப்பர் திருக்கோயில். அம்பாள் சந்நிதி ஒரு தனிக் கோயில் என்று சொல்கிற அளவுக்குப் பெரியதாக, நெல்லையப்பர் சந்நிதிக்குத் தெற்குப் பக்கத்தில் அமைந்திருக்கிறது. இரண்டு சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை. சுவாமிக்கு நான்கு ராஜ கோபுரங்களும் அம்மனுக்கு ஒரு ராஜ கோபுரமும் உள்ளன. இரண்டு சந்நிதிகளையும் இணைக்கும் நீளமான மண்டபம், சங்கிலி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

‘நிறை கொண்ட சிந்தையன்’ என்றும் ‘நெல்வேலி கொண்ட நெடுமாறன்’ என்றும் சுந்தரரால் குறிக்கப்படும் நின்றசீர் நெடுமாறன் எனும் பாண்டிய மன்னனால், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்யப்பட்டு, இந்தக் கோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே கூட, இந்தக் கோயில் பிரபல மாக விளங்கியதை, திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களால் தெரிந்து கொள்கிறோம்.

வேணுவன புராணமும், திருநெல்வேலி தலபுராணமும் திருக்கோயில் சிறப்பை அற்புதமாக விவரிக்கின்றன. இந்த வனத்தின் வழியாக ராமக்கோன் என்பவர் அரண்மனைக்கு பால் கொண்டு செல்லும்போது, பாறை ஒன்று இடற மொத்த பாலும் கொட்டிவிட்டது. தொடர்ந்து சிலநாட்கள் இப்படியே நடக்கவே ஒருநாள் கோபத்துடன் ராமக்கோன் அந்தப் பாறையை வெட்ட, அதில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. தகவல் அறிந்த மன்னர் நேரில் வந்து பார்த்தபோது சிவபெருமான் அவருக்கு லிங்கவடிவில் காட்சி தந்ததாகக் கூறுகிறது தலவரலாறு. 
* நெல்லையப்பர் கோயிலுக்குள் பொற்றாமரைக் குளமும், நடுவில் நீராழி மண்டபமும் உள்ளது. இக்கோயிலில் 96 தூண்கள் உடைய ஊஞ்சல் மண்டபம், மகாமண்டபம், நவகிரக மண்டபம், சோமவார மண்டபம், சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் ஆகிய மண்டபங்களில் அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

நாட்டிலேயே மூன்றாவது பெரிய திருத்தேர் நெல்லையப்பர் திருத்தேர். அரியநாத முதலியாரால் ஏற்படுத்தப்பட்ட ரதவீதிகளில் 1505-ல்  முதல்முறையாக தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது.
 இக்கோயிலில்  உள்ள பொள்ளாப் பிள்ளையார் சந்நிதியும் குறிப்பிடத்தக்கது. இதனை மலைமண்டலத்தைச் சார்ந்த முந்திக் கோட்டு வீரம் அழகிய பாண்டிய தேவன் உருவாக்கினார் என்று கல்வெட்டில் எழுதப் பெற்றுள்ளது. பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் நாற்பத்தொரு நாட்கள் விரதம் இருந்து பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை பிறந்ததும் பிள்ளையாரின் சந்நிதிக்கு குழந்தையை எடுத்து வந்து, ஜன்னல் போல் உள்ள பகுதியில் குழந்தையை உட்புறமாகத் தந்து, வெளிப்புறமாக வாங்கும் வழக்கம் உள்ளது. இதன் காரணமாக பிள்ளையாருக்கு ‘பிள்ளைத்தூண்டு விநாயகர்’ என்றும் ஒரு பெயர் உண்டு.

நெல்லை மக்கள் அம்பாள் ‘காந்திமதியை’ அம்மை என்றும், ‘நெல்லையப்பரை’ அம்மையப்பர் என்றும் அழைக்கின்றனர். அம்மையப்பரைத் தரிசித்த பின்  ‘குறுக்குத்துறை’யில்  சுப்பிரமணிய சாமியைத் தரிசிக்கலாம். இந்த ‘குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி’ கோயில் அடிக்கடி பெருகி வரும் தாமிரபரணி வெள்ளத்தில் மூழ்கி விடுவது வாடிக்கையான ஒன்று.

திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவில், வடக்கு புறவழிச் சாலையில் தாமிரபரணி கரையோரம் அமைந்திருக்கிறது மணிமூர்த்தீஸ்வரம். இங்கு விநாயகப் பெருமானுக்கான தனிக்கோயில் எழிலார்ந்த தோற்றத்துடன் அமைந்திருக்கிறது. மிகுந்த வரப்பிரசாதியான உச்சிஷ்ட விநாயகரை சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் சூரியன் தன் கிரணங்களால் வழிபடும் அதிசயம் நிகழும் திருக்கோயில். மணிமூர்த்தீஸ்வரத்தில் அமைந்திருக்கும் இந்த விநாயகரை மூர்த்தி விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் என்றழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆறு இவ்விரு நகரங்களுக்கிடையே ஓடுகின்றது. திருநெல்வேலி ஆற்றின் மேற்குப் பகுதியிலும், பாளையங்கோட்டை கிழக்குப் பகுதியிலும் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றில் படகுத் துறைகள் இருந்தன. இந்தப் படகுத்துறைகளையே தோணித்துறை என்பார்கள். இப்போது கூட பாளையங்கோட்டை அருகில் தாமிரபரணிக் கரையில் ஒரு ஊருக்கு ‘தோணித்துறை’ என்று பெயர். ஆனால் ஊரின் பெயரில்தான் தோணி இருக்கிறதே தவிர தாமிரபரணியில்  தோணிகளைக் காணமுடியவில்லை. இப்போது அம்பாசமுத்திரம் அருகே உள்ள புலவன்பட்டி கிராமத்தில் மட்டும் படகு சவாரி நடக்கிறது.

1844-ம் ஆண்டில் திருநெல்வேலி- பாளையங்கோட்டையை இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கர்னல் ஹார்ஸ்லேவினால் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இன்று அதன்பெயர் ‘சுலோச்சன முதலியார் பாலம்’ என்பதாகும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், பாளையங் கோட்டைச் சிறையில்தான் சிறை வைக்கப் பட்டனர். திருநெல்வேலி மண்ணில் கால் வைத்ததுமே, புலித்தேவர், வீரன் அழகுமுத்துக்கோன், வாஞ்சிநாதன், வீர பாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், வ.வே.சு ஐயர், சுப்பிரமணிய பாரதியார் என்று பலரும் நெஞ்சக் கோயிலில் எழுந்தருள்வார்கள்.

இவ்வூர் மட்டுமல்ல சுற்றுப்புற ஊர்களும் இறை சாந்நித்தியமும் நிறைந்து திகழ்கின்றன. திருநெல்வேலியில் உள்ள அத்ரிமலையில்  அத்ரி பரமேஸ்வர ஆலயம் உள்ளது.  இந்த ஆலயத்தில் உள்ள ருத்ர விநாயகர் சந்நிதிக்குப் பின்புறம் ‘அம்ருத வர்ஷிணி’ மரம் ஒன்று உள்ளது. சித்திரை மாதம் முழுவதும் இம்மரத்தின் எல்லாக் கிளைகளிலிருந்தும் பன்னீர் துளிகள் போல நீர்தெளிக்கிறது. இக்கோயிலில் மேற்கு நோக்கியே ஆரத்தி காட்டுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவதிருப்பதிகளான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, தொலைவில்லி மங்கலம் (இங்கு இரண்டு திருப்பதிகள்), பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்களுக்கும், நவ கயிலாய தலங்களான பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, இராஜபதி, சேர்ந்த பூமங்கலம் ஆகிய தலங்களுக்கும் செல்லும் பக்தர்கள், திருநெல்வேலியையே மையமாகக் கொள்வார்கள். மட்டுமின்றி திருச்செந்தூர், நம்பிமலை, திருக்குற்றாலம், பண் பொழில், தோரணமலை, சொரிமுத்து அய்யனார் கோயில் போன்ற ஆன்மிகத் தலங்கள் பலவற்றுக் கும் மைய கேந்திரமாகத் திகழ்கிறது நெல்லை.

அம்பாசமுத்திரம் அருகே உள்ளது ஊர்காடு.இந்த ஊரில் கோட்டியப்பர் என்ற சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் உள்ளே ஊர்காடு ஜமீன் ராஜா சேதுராயரின் சிலை  சுவாமியைப் பார்த்து வணங்கியபடி உள்ளது. ஆனால் கை உடைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக ஒரு கதையைச் சொல்கிறார்கள். சிவன் மீது பற்றுகொண்ட இந்த ராஜா, உயிருடன்  இருந்தபோதே சிவனை வணங்குவது போல் சிலை வடித்து வைத்துவிட்டார். இந்நிலையில் வயதானதும் நோய்வாய்ப்பட்டார். ஆனாலும் உயிர் பிரியாமல் மரண அவஸ்தை பட்டுக்கொண்டு இருந்தார். ராஜாவின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர், ‘சிவபெருமானை வணங்கும் நிலையில் ராஜாவின் சிலை இருப்பதால்தான் உயிர் பிரியாமல் இருக்கிறது. சிலையின் கையை உடைத்துவிட்டால் உயிர் பிரிந்துவிடும்’ என்று கூறினார். அப்படியே கையை உடைத்ததும் ராஜாவின் உயிர் அமைதியாகப் பிரிந்ததாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில் எனும் ஊர். இத்தலத்தில் இறைவன் சங்கரலிங்க சுவாமி. இறைவி கோமதியம்மன் என்ற ஆவுடையம்மன். இக்கோயில் கி.பி. 1022-ஆம் ஆண்டு  உக்கிரப் பாண்டியனால் கட்டப்பட்டது. இங்கு ‘ஆடித்தபசு’ விழா மிகப்பிரசித்தி பெற்றது.

Comments