கண்ணொளி தந்த கந்தபிரான்!

அரசர் ஒருவர் நல்லவிதமாகத்தான் ஆட்சிசெலுத்தி வந்தார். திடீரென்று அவர் நாட்டில், அராஜகங்கள் அரங்கேறத் தொடங்கின. ஒருவைக்கோல் போர் தீப்பற்றி எரியும். அதை அணைக்க முயலும்போது, அடுத்த தெருவில் தீப்பிடிக்கும். அனைவரும் மும்முரமாக அதை அணைத்துவிட்டுத் திரும்பினால், வீதியில் அனைவர் வீடுகளும் திறந்திருக்கும். உள்ளே போய்ப் பார்த்தால், பெட்டிகள் திறந்திருக்க, பழங்கலயங்கள் உடைந்திருக்கும். அவற்றில் இருந்த பொன்னும் மணியும் பறி போயிருக்கும். வழி தெரியாமல் கதறினர் மக்கள். அரசர் சற்று ஆராந்தார். திடீர் திடீரென நடப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து, தானே நடவடிக்கையில் இறங்கினார்.
வீரமும் தைரியமும் கொண்ட சிலரைப் பொது மக்களில் இருந்தே திரட்டி, மட்டமானவர்களை மடக்கி, கள்ளர்களை அடக்கினார். அறச்சாலைகளையும் கலாசாலைகளையும் எழுப்பினார். பஜனைக் கூடங்கள் எழுந்தன. அமைதி திரும்பி, ஆனந்தம் பரவியது.
அரசர் மூச்சுவிட மறந்தாலும் மறப்பார்; முருகனை மறக்க மாட்டார். அவரைக் காணவில்லையென்றால், அலை தவழும் கடலோரம் குடிகொண்ட செந்திலாண்டவர் சன்னிதியில் பார்க்கலாம். சொல்லப் போனால், வாழ்வதே வதனாரம்பத் தீர்த்தத்தில் நீரா டத்தான்; வள்ளி மணவாளனை வழிபடத்தான் என்ற எண்ணம், அரசரின் ரத்தத்திலேயே ஊறிப் போயிருந்தது. விளைவு?
ஏராளமான நகைகளை, செந்திலாண்டவரை அலங்கரிப்பதற்காக அளித்தார். அவை இன்றும் உள்ளன. அது மட்டுமல்லாமல், ஆறு குதிரைகளை விசேஷமாக வளர்த்துப் பராமரித்து வந்தார்.
அதே காலத்தில், வைதிக சீலம் தவறாத கனிந்த மனம்கொண்ட காசிபர் என்ற அந்தணர் செந்தூர் எல்லையில் நுழைந்தார். கந்தக் கடவுளே! கண் பார்வை இரண்டும் பறிபோ விட்டன. இளமையில் நன்றாக வாழ்ந்த காலத்தில் உன் சன்னிதிக்கு வர வில்லை. அப்பா! பன்னிருகை வேலவா! மருத்துவர்களும் கைவிட்ட என்னைக் கைவிடலாமா நீ? பூத கணங்களும் நவவீரர்களும் சூழ, நீ நடமாடிய இத் தலத்து மணலில் விழுந்து புரண்டாலாவது, என் வினைகள் தீராதா என்பதற்காகவே வந்தேன்" எனப் புலம்பியபடியே கீழே விழுந்தார்; புரண்டார். செந்தூரிலேயே தங்கத் தீர்மானித்தார்.
அதிகாலையில் எழுவதும் அடியார்கள் உதவியுடன் நீராடுவதும், திருநீறு அணிந்துகொண்டு சன்னிதியில் நின்று, இமவான் பேரா! இரு விழிகளிலும் பார்வையைத் தந்தருளயா " என்று கண்ணீர் சிந்தி வேண்டுவதுமாகக் காசிபரின் காலம் கழிந்து கொண்டிருந்தது.
ஒருநாள், காசிபரின் கண்ணீருக்குக் கந்தக்கடவுள் பதில் அளித்தார். அழுது தொழுதுவிட்டு எழுந்த காசிபர், முருகா! பார்வையைத் தா! அல்லது உன் திருவடிகளில் சேர்த்துக்கொள்!" என்று கைகளால் கண்களை மூடியபடி புலம்பினார். ஒருசில விநாடிகளில் கைகளை எடுத்ததும், அனைவரும் ஆச்சரியப் படும்படியாகக் காசிபருக்கு ஒரு கண்ணில் பார்வை ‘பளிச்’சென்று தெரிந்தது. நிலைமறந்த காசிபர், செந்தூர் முருகனுக்கு" என்று கத்தினார். ஹரோ ஹரா!" என்று அங்கிருந்த அனைவரும் கூவினார்கள்.
காசிபரோ, பார்வதியாள் பாலா! மற்றொரு பார்வையையும் தந்தருளயா!" எனக் கூவினார். அன்றிலிருந்து காசிபரின் பிரார்த்தனையும் பக்தியும் மேலும் ஆழ மாகி அதிகமாயின. உண்ணும் நேரம் உறங்கும் நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம் சரவணபவன் சன்னிதியே கதியெனக் கிடந்தார். அதுவும் பலனளித்தது.
ஒருநாள், உச்சிக்காலப் பூஜை நடந்து கொண்டிருந்தது. மணிகள், ‘கணகண’வென ஒலிக்க, முரசங்கள் முழங்கின. ஹரோ ஹரா!" என அன்பர்கள் கூவ, காசிபர் பிரார்த்தனையில் தீவிரமாக இருந்தார்.அப்போது அங்கிருந்த பக்தர் ஒருவர் படபடத்தார்.பொன் நிறமான அவர் மேனியில் திருநீறு ஜொலிக்க, மார்பில்ருத்ராக்ஷம் உருண்டது. தெய்வ ஆவேசத்தால் ஆடினார் அவர். ‘உர்ம்... உர்ம்..’ என அவர் எழுப்பிய ஒலி கேட்டு, அனைவரும் அவர் பக்கம் திரும்பினார்கள்.
ஆவேசம் வந்த அன்பர், காசிபா! மற்றொரு கண்ணும் பார்வை பெற வேண்டுமானால், புறத்தில் வழிபாடு செய்வதோடு, அகத்திலும் அழுத்தமாக வழிபாடு செய்யும் அந்த அரசனைப் போப்பார்" என்று உருமிவிட்டுச் சாந்தார். அனைவரும் வியக்க காசிபரோ, அரசனைப் போய் இந்தப்பாதி அந்தகன் எப்படிப் பார்க்க முடியும்? விடுவார்களா?" என விம்மினார்.
அதேசமயத்தில், அரசர் வருகிறார்! விலகி நில்லுங்கள்! விலகி நில்லுங்கள்" என ஆரவாரம் கேட்க, அரசர் ஆலயத்துக்கு வந்தார். காசிபரோ, கந்தா! காவலனை எப்படிக் காண்பது என்று நான் எண்ணுகையில், எதிரே நிறுத்திவிட்டாயே" எனக் கைகளைக் கூப்பினார்.
அரசரோ, வழிபாட்டை முடித்துவிட்டு தங்கு மிடத்தை அடைந்தார். அவரிடம் காசிபர் பற்றிய தகவல் கூறப்பட்டது. அப்படியா? அழையுங்கள் அவரை" என அரசர் சொல்ல, அவர் முன்னால் காசிபர் நிறுத்தப்பட்டார். அவரிடம், ஆறுமுகன் அருள்! அடியேனிடம் ஒன்றுமில்லை. பரமன் நாளை அருள்பாலிப்பார்" என்று கூறிவிட்டு, காசிபரின் உணவுக்கும் ஏற்பாடு செய்தார்.
ஆனால், அரசர் ஏதும் உண்ணவில்லை. இரவு முழுதும் விழித்திருந்து, விரதமிருந்து ஆறெழுத்து மந்திரத்தை உளத்தில் உருவேற்றிக் கொண்டிருந்தார். பொழுது விடிந்ததும் நீராடி, அனுஷ்டானங்களை முடித்து, முருகா! கட்டளைப்படிக் காசிபர் கண்திறக்கவில்லையென்றால், செந்தூரன் வாக்கு சீர் கெட்டுப்போனது என்ற பழி, என்னால் விளையக் கூடாது. நான் உயிர் துறப்பேன்" என்று வாளோடு சபதம் செய்து புறப்பட்டார்.
ஆலயத்தில் பெருங்கூட்டம் கூடியிருக்க, அரசரும் காசிபரும் சன்னிதியிலிருந்தார்கள். கைகளைக் கூப்பித் தொழுத அரசர், செந்தூர்ப்பெருமானே! அந்தணர்க்குப் பார்வையளி! உன் திருவருள் முன்னிற்கட்டும்" என்று வேண்டியபடியே காசிபரின் கண்ணைத்தன் வலது கையால் பொத்தினார். சுற்றியிருந்தவர்கள் பரபரத்தார்கள்.
ஓங்காரப்பொருளே! ஒளிப்பிழம்பை உதவு" என்றபடியே கைகளை எடுத்தார் அரசர். கத்தினார் காசிபர்; பார்வை தெரிகிறது! பார்வை தெரிகிறது" என்று. அரசர் உட்பட அனைவரும் அலைகடலோன் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள்.
மன்னர் எழுந்ததும்,மன்னா! உங்கள் பக்தியே பக்தி. அதனால்தானே பரமன் உங்கள் பெயரைச் சொல்லி, உங்களால்தான் இவருக்கு (காசிபருக்கு)ப் பார்வைவரும் என்று சொல்லியிருக்கிறார்" என்றார்கள் மக்கள்.
அரசரோ, தலையைப் பக்கவாட்டில் ஆட்டி மறுத்தார். நான் யார்? நாம் அனைவருமே இந்தச் செந்தூரான் கைக்கருவிகள். நம்மை வைத்துச் செயல் புரிவது இந்தப் பரம்பொருளல்லவா?" என்று கூறி, மகேஸ்வர பூஜை செய்தார். (அடியார்களை ஆண்டவ னாகவே கருதி அவர்களை அமரவைத்துப் பூசித்து, அவர்களுக்கு உணவிடுவதே மகேஸ்வர பூஜை).
அதன்பின், காசிபருக்கு மங்கைநல்லாள் ஒருவளை மணமுடித்து, ஏராளமாகப் பொன்னும் பொருளும் தந்து அனுப்பினார் அரசர். அந்த அரசர் பெயர், ஜகவீர பாண்டியன். அவருடைய பிள்ளைதான் வீர பாண்டிய கட்டபொம்மன்.

Comments