பத்துவகை பூஜைகள்!


உடுப்பியில் கிருஷ்ணருக்கு நிர்மால்ய விஸர்ஜன பூஜை, உஷத்கால பூஜை, அக்ஷய பாத்திரப் பூஜை, பஞ்சாமிர்த பூஜை, உத்வார்த்த தன பூஜை, கலச பூஜை, தீர்த்த பூஜை, அலங்கார பூஜை, அவசர பூஜை, மஹா பூஜை ஆகிய பூஜைகள் நடத்தப்படுகின்றன.
ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி என்னும் புகழ் பெற்ற கிருஷ்ணர் கோயிலில் ஏழு வயது பாலகன் போலக் காட்சி தருகிறார் கண்ணன். இங்கே அதிகாலை ஐந்து மணிக்கு மங்களா, காலை ஏழரை மணிக்கு சிருங்காரா, எட்டரை மணிக்கு இடையர் போன்று க்வால், பத்தரை மணிக்கு ராஜ்போக், பிற்பகல் நான்கரை மணிக்கு உத்தாபன், மாலை ஐந்து மணிக்கு போக், ஆறு மணிக்கு ஆரத்தி, ஏழு மணிக்கு சொபனம் சயனம் செய்தல் என்று எல்லா காலங்களிலும் வழிபாடு உண்டு.
தினமுமே எட்டு வகை இனிப்புகள் படைப்பது வழக்கம். தீபாவளியன்று மட்டும் ஐம்பத்தெட்டு வகை இனிப்புகள் நிவேதனம் செய்யப்படும்.
பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்ரீ பாகவத புராணத்தின் பத்தாவது ஸ்காந்தம், ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு மற்றும் லீலைகளை விரிவாக எடுத்துக் கூறுகிறது.
கால் கட்டுக் கிருஷ்ணர்!
உடுப்பி கோயில் கருவறையில் தாய்க்கு உலகைக் காட்டிய மாயக்கண்ணன் குழந்தை வடிவத்தில் எழுந்தருளியிருக்கிறார். ஒரு கையில் மத்தும், இன்னொரு கையில் கயிறுமாய் உண்ட திருக்கோலத்தில் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் கண்ணபிரான் காட்சியளிக்கிறார். இப்படிக் களங்கமற்ற குழந்தையாகக் கண்ணனை இந்தத் திருத்தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.
நட்புக்கு ஒரு நந்தகுமாரன்!
கிருஷ்ணனின் பிறந்த நாளன்று அவன் நண்பனான குசேலன்தான் பெற்ற இருபத்தியேழு குழந்தைகளுடன் கோகுலத்தை அடைந்தான். நண்பன் வந்த செய்தி கேட்டு ஓடி வந்து வரவேற்றான் கண்ணன். நண்பனை சிம்மாசனத்தில் அமரவைத்து நலம் விசாரித்தான். தன் வறுமையைக் கண்ணனிடம் கூறிய குசேலனிடம், என்ன கொண்டு வந்தாய்?" என்று அந்தப்பரந்தாமன் கேட்க, பழைய துணியில் முடிந்து வைத்திருந்த அவலை எடுத்துத் தந்தான் குசேலன். அதை மகிழ்வோடு உண்டான் கிருஷ்ணன். கண்ணன் அவல் தின்னும்போதே குசேலன் குபேர சம்பத்துப் பெற்று விட்டான். ஆகவே அன்று அவல் படைப்போருக்கும் திருமகள் கடாட்சம் கிட்டும் என்பது ஐதிகம்.
பஞ்ச கிருஷ்ண தலங்கள்!
திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கண்ணன் கவித்தலம்; திருக்கோவிலூர் ஆகிய ஐந்தும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
கிருஷ்ணனின் வேறு பெயர்கள்!
ஹிருஷிகேசன் - இந்திரியங்களுக்கு ஈசன்
அச்சுதன் - தன் நிலையிலிருந்து வழுவாதவன்
கிருஷ்ணன் - கறுப்பு நிறமானவன், அழுக்கைப் போக்குபவன், அடியார்படும் துயரம் துடைப்பவன்
கேசவன் - அழகிய முடியுடையவன்
கோவிந்தன் - ஜீவர்களை அறிபவன், பசுக்களைக் காப்பவன்
மதுசூதனன் - மது என்ற அசுரனை அழித்தவன்
ஜனார்த்தனன்-மக்களால் துதிக்கப்படுபவன்
மாதவன் - திருமகளுக்குத் தலைவன்
வார்ஷ்ஸோயன் - வ்ருஷ்ணி குலத்தில் பிறந்தவன்
அரிசுதன் - எதிரிகளை அழிப்பவன்
கேசிநிஷீதனன் - கேசின் என்ற அசுரனை அழித்தவன்
வாசுதேவன் - வசுதேவர் மைந்தன்
புருஷோத்தமன் - புருஷர்களுள் உத்தமமானவன்
பகவான் - சற்குண சம்பன்னன்
யோகேஸ்வரன் - யோகத்துக்குத் தலைவன்
விஷ்ணு - எங்கும் வியாபகமாக இருப்பவன்
ஜகந்நிவாசன் - உலகுக்கு இருப்பிடமானவன்
யாதவன் - யதுகுலத்தில் தோன்றியவன்


ஒரே ஆண்டில் மூன்று புத்தாண்டு
ஒரே ஆண்டில் மூன்று முறை வருடப் பிறப்பைக் கொண்டாடும் வழக்கம் அஸ்ஸாமியர்களிடம் உள்ளது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து ‘பிகு’ என்ற பெயரில் புது வருடத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். தமிழகத்து தாரை, தப்பட்டை, கேரளத்து செண்டை இசைக் கருவிகளுடன் மிக உல்லாசமாக இந்த ‘ரங்கோலி பிகு’ வை கொண்டாடுகிறார்கள். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று மரங்களும், பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களும், கனி வகைகளுமாக கண்களுக்கு அஸ்ஸாம் முழுக்க எழிலாகக் காட்சி அளிக்கும்.
அஸ்ஸாமியப் பெண்கள் துணி நெய்வதில்
கைதேர்ந்தவர்கள். ஆதலால் தங்கள் வீடுகளிலேயே பாவு போட்டு வண்ண வண்ணத் துண்டுகளை நெய்து தங்களுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் ‘ரங்கோலி பிகு’வின்போது அன்பளிப்பாகக் கொடுத்து மகிழ்கிறார்கள்.
செப்டெம்பர் - அக்டோபர் மாதங்களில் ‘கங்காலி பிகு’ என்ற பெயரில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. காடுகளிலும், வயல்வெளிகளிலும் வேலைக்குப் போயிருக்கும் கணவன் நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என்ற வேண்டுதல் முன்னிறுத்தப்படுகிறது. அன்று பெண்கள் வீட்டில் புதிதாகத்
துளசிச் செடிகள் நட்டு, புத்தம் புது அகல் விளக்குகள் ஏற்றி பொங்கலிட்டுப் பூஜை செய்கிறார்கள். கிட்டத்தட்ட நம் ஊர் துளசி பூஜை போன்றதுதான் என்றாலும் கூடுதலாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். அதேநேரம் வயல்களில் ஆண்கள் தீ மூட்டி அக்னி தேவனுக்குப் பொங்க லிட்டு, ‘எங்களின் குறையை நீக்கி நிறைவைத் தா’ என்று ஆடிப்பாடி நடவை ஆரம்பிப்பார்கள்.
ஜனவரி மாதத்தில் புது வருடம் ‘போகாலி பிகு’ என்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தங்கள் வயல்களிலிருந்து வண்டி வண்டியாக புது நெல் அறுவடையாகி வீடு வந்து சேர்ந்து விட்ட மகிழ்ச்சியில் கொண்டாடப்படும் இத்திருவிழா, நம் பொங்கல் திருவிழா போலவே முக்கியமான தாகக் கருதப்படுகிறது. விதவிதமாக இனிப்புப் பண்டங்கள் தயாரித்து அனைவருக்கும் வழங்கி பத்து நாட்களுக்குக் குறையாமல் தடபுடலாக விருந்துண்டு மகிழ்கிறார்கள்.

Comments