Adi Sankara - Prasannotra ratna maalika

சம்ஸ்கிருத மொழியிலே ‘ப்ரசனோத்ர ரத்ன மாலிகா’ என்பதன் பொருள், ‘வினா விடைகளாம் ரத்தினக் கற்கள் பதித்த மாலை’ என்பது ஆகும். பகவான் ஸ்ரீ ஆதி சங்கரர் படைத்த இவ்வரிய நூல், சுமார் 181 வினாக்களையும் அதற்கான நேரடியான விடைகளையும் தருகின்றது. இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு, அறவழிப்பாதையில் நடக்க விழையும் ஒவ்வொருவருக்கும், சரியான வழிகாட்டும் கையேடாக இந்நூல் இருக்கிறது. இந்நூலின் அழகு, இதன் எளிமை! வினாக்கள் எல்லாம் நம் மனதில் பொதுவாக விளைபவை. அவைக்கான விடைகள், சுற்றி வளைக்காமல், சட்டெனப் புரியச் செய்பவை. இப்பாடல்களில் குழப்பமான தத்துவங்களோ, கடினமான வார்த்தைப் பயனோ இல்லை.

நன்முனைப்பால் ஆங்கிலத்திலும் தமிழிலும் செய்த இம்மொழிபெயர்ப்பு, நாம் படித்துணர உதவும் ஒரு முயற்சி எனப் பணிகிறேன்.

மீ. ராஜகோபாலன்

யாரே தீரன்
இம்மை மறுமை இனிமை விதைத்த
தன்மை தரவி னாவிடை பதித்த
நுண்மணி மாலை நூற்றுவன் கழுத்து
உண்மை நற்சொல் உடையவன் கருத்து! ||1||

(1) நம்பி ஏற்பவை?  நற்குரு வார்த்தை!
(2) நலிய விலக்குதல்?  நச்சாம் துற்செயல்!
(3) நற்குரு என்பார்? நந்நெறி உணர்வார்,
    நலமுறச் சீடர் பலமுனை விழைவார்! ||2||

(4) அறிந்தான் உணர்ந்து ஆயும் முதற்பணி?
   அறுத்திடப் பிறவி பெருக்கிடும் திண்மை!
(5) விடுதலை மரத்தின் வித்தெது? உண்மை
   வித்தை பயின்று விதிப்படி நடத்தல்! ||3||

(6) துணியும் பாதை? தர்மப் பாதை,
புனிதர், ஞானியர் போற்றிய சாலை!
(7) புனிதர் யாரே? பொன்மனச் செம்மல்!
(8) ஞானியர் என்பவர்? மேநிலை அறிந்து
பகுத்தறிவாலே தொகுத்துணர்வாளர்!
(9) நச்சு விடமெது? நற்குரு வார்த்தை
துச்சம் என்றே தூர விலகுதல்! ||4||

(10) வாழ்க்கைப் பாடம் வழங்கிடும் உண்மை?
நீர்த்தட மாயது மாறிடும் தன்மை!
(11) வாழ்வின் நோக்கம் எதுவெனக் கொள்தல்?
பிறருக் குதவிப் பிழையற ஒழுகல்! ||5||

(12) மதுபோ தையென மனமேன் ஆடும்?
மண்பெண் பொன்மதி மயக்கம் ஆகும்!
(13) மனதைத் திருப்பும் மாயக் கள்வன்?
மண்பொருள் ஆசை மலர்க்கொடி ஆகும்!
(14) கொடியின் குணமெது? குறையாத் தாகம்!
(15) கூறுயார் எதிரி? குறையாம் சோம்பல்,
வேராய் ஆசை விலக்கா மயக்கம்! ||6||

(16) மருள்தரும் மாயம்? மரணம் தருணம்!
(17) இருள்விழிக் குருடர்? இயல்பறி யாமல்
ஆசைத்தீயில் அறிவைத் தீய்த்தோர்!
(18) தீரன் எவரே? தினவுடன் மாந்தர்
கூர்விழி ஆசைக் குறி தவிர்த்தவரே! ||7||

(19) செவிகள் கேட்டுச் சிறப்புறல் எதனால்?
சீருப தேசச் செம்மொழி அதனால்!
(20) புவியில் மதிப்பு பூப்பதன் காரணம்?
பொறையும் இரவாப் பொற்குணம் ஆரணம்! ||8||

(21) புரிதெற் கரிதெது? பூத்தகல் மாயை,
கவர்ந்தே கவிழ்க்கும் காந்தக் கன்னிகை!
(22) புத்தி சாலியார்? பொறிபுலன் வென்றோன்!
(23) துயரம் என்பது? குறை பரிமாறல்,
எதிலும் குற்றம் எனத் தடுமாறல்!
(24) மற்றோர் விழியில் மதிப்பேன் குறையும்?
அற்றவ னாகி அல்லரை இரைஞ்சல்! ||9||

(25) நேரிய வாழ்வெது? சீரியர் யாரும்
காறி யிகழாக் கண்ணியப் பயணம்!
(26) சோம்பல் என்பது? செயலறு மெத்தனம்!
(27) விழிப்புணர் வாளன் யாரென விளம்பு?
சலிப்படை யாமல் சரிஎது தவறென
சலித்தறிந் ததன்படி வழிப்படும் வீரன்!
(28) உறங்குவன் யாரே? உண்மை அறியான்,
இறந்துழல்ப் பாதை இறுக்கிப் பிடித்தவன்! ||10||

(29) தாமரை யிலைமேல் தங்கா நீரெவை?
சூடிய இளமை, சொத்து, ஆயுள்!
(30) ஆயன துயர்த்தீ அவித்திடும் குளிர்மதி?
அறிவுரை தருநல் லாசான் உறவு! ||11||

(31) நரகம் எது?நிலை அடிமைப் படுதளை!
(32) நற்சுகம் என்பது? பற்றறுசெயல், கற்றறுமுதிர்ச்சி!
(33) உண்மை என்பது? உயிர்களுக் குள்ளே
அன்மை, தொலைவு அற்றே இருப்பது!
(34) உயிர்த்தவர் விருப்பம்? ஊறிலா வாழ்க்கை,
வருத்தப் படுத்தா வாழ்க்கைப் பயணம்! ||12||

(35) இழப்புணர் வென்பது எழுவது எதனால்?
எதிர்பார்த் திருந்தே எரியும் மனத்தால்!
(36) இன்பம் நிலைப்பட இருப்பது எப்படி?
இனியோர் உறவால் இணைவது அப்படி!
(37) துயரம் களையும் துணைவன் யாரே?
தனையுணர்ந் தாவையும் தந்திடும் தியாகி! ||13||

(38) இறத்தல் என்பது எது?அது மடமை,
இருத்தல் ஒன்றே என்றறி யாமை!
(39) தரத்தில் பரிசெது? தக்கோர் தருணம்
தகையத் தருவது! (40) துயர்நிலை என்ன?
விடமுடி யாத விருப்பம், வினையின்
கடனது ஆகிய கர்மப் பற்று! ||14||

(41) நல்விருப்பம் எவை? நல்லறி வாண்மை,
நந்நலம், உதவும் நற்பெரும் கருணை!
(42) அல்லன விலக்கல்? அற்பரின் உறவு,
அந்நியன் மனைநிதி, ஆசைப் பெருநோய்! ||15||

(43) மனதினில் மாறா நினைவெது ஏற்க?
மாறிடும் வாழ்வுதற் காலிகம் நோற்க!
(44) தினசரிக் கடனாய்த் தீர்ப்பது எதனை?
உபசரித் துதவல், உயரியர் நட்பு! ||16||

(45) நெறியும் முறையும் நியமம் தந்தும்
சரிவர தருமம் சாரா தார்யார்?
மடையன், ஐயம் உடையன், கோழை,
மனதால் நன்றி மறந்தார் தேறார்! ||17||

(46) சிறந்தவன் யாரே? சீர்வழி நடப்பவன்!
(47) சிறுமையன் எவனே? சீர்மை இழப்பவன்!
(48) பரந்துல காள முடிந்தவன் எவனே?
பவித்திரன் உண்மை பயத்தவன் சாந்தன்! ||18||

(49) தேவரும் விருப்பித் துதிப்பது எவரை?
யாவரும் சுகப்பட உழைப்பவர் அவரை!
(50) பக்குவம் அடைந்தார் பயப்படல் எதனிடம்?
திக்குறும் காடெனும் தீவலைப் பிறவி! ||19||

(51) யாவரும் மதித்து யாரிடம் பணிவார்?
வாய்மையும் பணிவும் வாய்த்தவர் கால்கள்!
(52) எதனில் உறுதி ஏற்படல் சிறப்பு?
இம்மை மறுமை இனித்தருள் தருமம்! ||20||

(53) இருகண் இருந்தும் குருடன் எவனே?
அறிந்தும் தீமை அகட்டிச் செய்பவன்!
(54) செவிகள் இருந்தும் செவிடன் எவனே?
சீரிய குருவுரை சேரா திருப்பவன்!

(55) மூடன் எவனே? முறையும், இடமும்
முற்றும் பொருந்தா சொற்கள் உரைப்பவன்! ||21||

(56) நற்பரி சென்ன? நலமுனை யாளர்
நாடா மல்தரும் நன்மை வெகுமதி!
(57) நலமுனை வார்யார்? நச்சாம் தீவழி
நழுவா வண்ணம் நம்மைக் காப்பவர்!
(58) வனப்புடை நகைஎது? வடிவிலா நற்குணம்!
(59) வாக்கினில் இனிப்பது? வாய்மை நேர்மை! ||22||

(60) சுகமெது மின்னல் சுடராய் வீழ்வது?
சுற்றம் தீயோர், சூழ்புலன் ஆசை!
(61) கலியிதில் உறுதி கலங்கார் எவரே?
களங்கா வினையிற் கதித்தவர் அவரே! ||23||

(62) சிந்தா மணியெனச் சிந்தை விருப்பம்
தந்தா ளும்பொருள் தரணியில் என்ன?
நந்தா விளக்கவை நான்கென மூதோர்
நவிலும் சாரம் நல்லவை சொல்வேன்! ||24||

நற்சொல் சுற்றிய நலந்தரும் பரிசு,
நல்லடக் கத்தால் நயமிகு ஞானம்,
கருணை போர்த்திய கவின்மிகு வீரம்,
கைமனம் அகலச் செய்யறச் செல்வம்! ||25||

(63) பரிதா பமெது? கருமித் தனமது,
இருந்தும் இல்லார்க் கில்லை என்பது!
(64) செல்வந் தர்களின் சிறப்புப் பொருளெது?
சேர்த்தவை பிறரைச் சேரக் கொடுப்பது!
(65) அறிவோர் மதித்து அணுகுவர் யாரிடம்?
அடக்கமும் நல்ல அன்புடை யாரிடம்! ||26||

(66) சேறிடை வளர்நற் செந்தா மரையை
பூவிதழ் பரவப் புதுமணம் கமழத்
தூண்டிய கதிர்போல் தோன்றுவர் யாரே?
தூயவன் ஆணவத் தூரகழ்ந் தாள்பவன்,
குலநலன் ஒருவன் பொதுநலன் அவனே!
(67) சுற்றம் சூழ்நிலை சுகத்தால் நாடு
மற்றும் வையம் மாற்றுவன் எவனே?
வாய்மையும் அன்பும் வழிமுறை நேர்மையும்
தூய்மையும் கொண்ட துல்லியன் அவனே! ||27||

(68) கற்றோர் விருப்பம்? கறைபடாக் காவியம்,
காரிகை யாகிய கவின்மொழி இனிமை!
(69) வீழ்தலை எவனே விலக்குவன்? சான்றோர்
விதிப்படி ஆசை விருத்தி கரைத்தவன்! ||28||

(70) செந்தா மரையாள் செல்வியின் உறைவிடம்?
செயல்முனை தர்மம் சேர்ந்தவர் அவரிடம்!
(71) அந்தோ! செல்வம் அகல்வது எவரிடம்?
அறிஞரை, குருவை, ஆண்டவன், முனிவரை
மதியா தவனும் மயங்கிச் சோம்பலில்
பதிவான் செல்வம் பறந்தே போகும்! ||29||

(72) தங்கி வாழத் தகுந்த இடமெது?
தக்கோர் வாழிடம், தர்மம் வளரிடம்!
(73) தவிர்க்கும் இடமெது? தக்கார் கூட்டம்,
தாளா ஆசைத் தகையாள் வாரிடம்! ||30||

(74) அல்லல் நீக்கும் அருந்துணை? அன்பு
அகலா மனைவி, அருகாச் செல்வம்!
(75) எண்ணத் தகாது இழிந்த பரிதாபம்?
இருந்தும் கொடுக்கா ஈனனின் ஊனம்! ||31||

(76) கோரம் எது? கொடியர் பொருளுறச்
சோரம் போவது, சுயமதிப் பழிவது!
(77) ராமனாய் வீரன்யார்? மேவும் ஆசைத்
தூரினை தீய்த்து வேரினைப் பேர்த்தவன்! ||32||

(78) இரவு பகலாய் எண்ணுவ தென்ன?
இறையடி, தவிர இனாசை அல்ல!
(79) விழியுடன் குருடாய் விளங்குவன் எவனே?
வேதப் பொருளை விலக்குவன் அவனே! ||33||

(80) முடவன் யாரே? முதியன் பயணி
திடவய தழித்த தீர்த்த யாத்திரி!
(81) புனிதத் தலமெது? போரிடும் மனது
சீருடன் தெளியச் சிறக்கும் இடமது! ||34||

(82) எதனை எப்போதும் எண்ணத்தில் ஏற்றுவது?
ஹரிநாமம் இறைநாம அடையாளம் போற்றுவது!
(83) எப்பேச்சு சான்றோர்க்கு எப்போதும் கூடாது?
தப்போதும் பொய்கடிய தடிவார்த்தை கூடாது! ||35||

(84) ஈட்டச் சிறந்தது? கல்வி, அறப்பொருள்
இருநலம் புகழொடு இறைநல் ணர்வு!
(85) ஈட்டிய தழிப்பது? இழிபே ராசை!
(86) எதிரி யாயெது? இன்னாப் பற்று! ||36||

(87) எக்கூட்டம் எப்போதும் ஏற்பதற்கு ஆகாது?
நற்குரவர் நல்லறிஞர் இல்லைஎனில் ஆகாது!
(88) எச்சரிக்கை தீவிரமாய் எதிலிருக்க வேண்டும்?
நச்சுடையார் ஆளுமையை நாம்தவிர்க்க வேண்டும்! ||37||

(89) உயிரினும் பெரிதெது? உயர்வான குலமானம்!
(90) எவற்றில் பொறுப்பு எப்போதும் ஒருவனுக்கு?
குலப்பெருமை, குடிநலம், கொண்டதுணை மற்றும்
நலத்தரும வழியின் நற்பண்புப் பொதுஅறிவு! ||38||

(91) கல்பலதா மரம்போல கனியுமிட மெங்கே?
கலையாத உயர்ஞானக் கல்விதரும் அங்கே!
(92) ஈமக்கடன் தீர்க்குமரம் இதுகாட்டும் உண்மை?
இருக்கையிலே கொடுஎன்ற இறுதியது நன்மை! ||39||

(93) யார்க்கும் நல்லாயுதம்? ஏற்குமுன் ஆயறிவு!
(94) யார்க்கும் நல்லன்னை? பாற்தரும் பசுஅன்னை!
(95) தற்காப்பு அணிகலன்? தர்மவழிப் படுதளம்!
(96) நிற்கா வீழ்ச்சிஏன்? நீங்காத சோம்பல்! ||40||

(97) விஷமான தென்ன? விபரீத எண்ணம்!
(98) விபரீத எண்ணத்து விதையாவ தென்ன?
பற்றாலே செய்கின்ற பலவான வினைகள்!
(99) பயமிலாப் பெருவீரம் பயக்கின்ற தாது?
பற்றற்ற செயலாலே பயமென்ப தேது!
(100) பயத்திற்கு எதுவோ பலமான மூலம்?
பவஆசைப் பொருளாசைப் பற்றாழி ஆழம்! ||41||

(101) மேலான நற்குணம்? மெய்யாக மெய்யடியில்
மெய்ப்பிணை அற்புதம்!
 (102) கேடான தீக்குணம்?
கேடெந்த உயிர்க்கும் கெடுவிக்கும் தீக்குணம்!
(103) இறையன்புக் குரியவன்? சினமிலான் பிறருள்
சினம் இருத்தும் செயல் இலான்! ||42||

(104) பெருவலிமை தருவதெது? குறிதவறா உழைப்பு!
(105) குறிதவறா மனதிற்கு? குருஅருளில் படிப்பு!
(106) பெருமனதின் தெளிவிற்கு? பெரியோர் மரியாதை!
(107) பெரியோர்கள் அடையாளம்? பேராண்மை அறப்பாதை! ||43||

(108) சாவினும் பெரியவலி சான்றோற்கு ஏது?
சரிகின்ற தன்மானச் சாவுஅது தீது!
(109) பூவுலகில் ஆனந்தம் பூத்தவர்கள் யாவர்?
போகாத செல்வநிதி சேர்த்தவரே ஆவர்!
(110) செல்வநிதி யாது?
விருப்பத்தை நிறைவேற்ற விளைவதுவே செல்வம்!
நிறைவாலே ஆசைத்தீ நிறுத்தியவர் செல்வர்! ||44||

(111) நற்சுகத்தின் வித்துஎது? நல்வினையே சொத்து!
(112) நட்டமெனும் துயருக்கு? துட்டவினை வித்து!
(113) அகலாத நிதியத்தை அடைய வழிஎன்ன?
அனுதினமும் சங்கரனின் அடிபணிதல் உண்மை! ||45||

(114) முன்னேற்றம் மேன்மேலும் யாருக்கு மட்டும்?
முழுதறிந்தும் பணிவோர்க்கு முயலாமல் கிட்டும்!
(115) தன்னாலே பின்னாலே தளர்வாரே யாவர்?
தருக்காலே பருத்தோரே செருக்காலே சாய்வர்!
(116) நம்பிக்கை எப்போதும் நயக்காது எவரில்?
நாள்தோறும் பொய்கூறி நலிவோரின் பெயரில்! ||46||

(117) ஆகாத பொய்மைக்குப் பாவமெதில் இல்லை?
அறத்திற்கு வேறுவழி அல்லவெனில் இல்லை!
(118) அறமென்ற தர்மத்தின் அரும்பொருளே யாது?
அடையாளம் பெரியோரின் அறிவாலே தேடு! ||47||

(119) சாதுவெனும் எளியற்கு சக்திஎது சொல்க?
சத்தியம், அவருடைய சாந்த குணநன்மை!
(120) சாதுஎவர்? நிறைவுமன மீதுமிக வானர்!
(121) விதியாவ தென்ன? வினையின் விளைபலனே!
(122) நல்விதியன் என்றெவரை நாமறியக் கூடும்?
நன்மதிப்பால் நல்லோரின் நட்பதனால் ஆகும்! ||48||

(123) இல்லத்தான் நட்பு இனியதுணை யாது?
உள்ளத்தால் ஒத்து உடன்வாழுகிற மனைவி!
(124) இல்லத்தான் யாரே? இட்டஅறம் செய்வான்!
(125) இட்டஅறம் என்ன? இவையோ மறைவாக்கு!
அன்புஅற வுடமை ஆசாரம் குடியோம்பல்
என்றுபல வாக ஏற்கும் நந்நோக்கு! ||49||

(126) இட்டஅறத் தால் எவரேபயன் பெறுவர்?
ஒட்டும் உள்ளத்தால் உவந்து செய்வோரே!
(127) அறவோன் யாரே? அருமறையில் முறையோனே!
(128) இருந்தும் இறந்தார் யார்? ஈதெதன
அறிந்தும் அறம் அறுத்தார் இறந்தாரே! ||50||

(129) செல்வந்தன் யார்? சீலனவன் துறவி
இல்லா ஆசையினால் எல்லாமும் உடையன்!
(130) மரியாதைக் குரியான்? மாசிலாச் சான்றோன்!
(131) சேவிக்கத் தக்கோர்? தியாகத்தால் மேலோர்!
(132) கொடையில் நிறைவார்? கொள்வார் தேவை
கொண்டு குறித்துக் கொடுத்துச் சிறப்பார்! ||51||

(133) உலகோர் பெருநலம்? உடல்மன வளநலம்!
(134) பயனோர் யாவர்? பழுதற உழைப்போர்!
(135) பாவம் அற்றோர்? பரம்பொருள் நோற்றோர்!
(136) பரிபூ ரணர்யார்? பசியிலாச் சான்றோர் (52||

(137) கடினக் காரியம்? கடுமனம் ஒடுக்கல்!
(138) கற்பவன் இலக்கணம்? கசடற மனதில்
புலன்பொறி ஆசைப் புழுதியை ஒழித்து
நலந்தரு உணமை நயக்கத் துணிதல்! ||53||

(139) ஒப்பறு தெய்வம்? ஒன்றிய மனத்தின்
உள்ளே ஒளிரும் உயரிய ஆன்மா!
(140) உலகாள் தெய்வம்? ஒளியால் அருளும்
சூரியன் எனும்வடி வாகிய சக்தி!
(141) செழுவுல காக்கும் சீரிய சக்தி?
மழைதரும் நந்நீர் மன்னுயிர் அமிர்தம்! ||54||

(142) புகழ்பெறு நாயகன்?
புகலடை வோரின் துணைவன் தலைவன்!
(143) அடைக்கலம் தந்து அச்சம் அறுப்பவன்?
விடைதரும் வள்ளல் விமலன் நற்குரு!
(144) உலகுக் கெல்லாம் ஓர்குரு எவரே?
நிமலன் சங்கரன் நித்தியன் சம்பு!
(145) யாரிடம் உண்மைப் பேரருள் தேடல்?
நேரிய சிவனாய் நினைத்தருட் குருவின்
கூறிய வாக்கின் குறிப்புணர் வதுவே! ||55||

(146) முக்தி எங்ஙனம்? முகுந்தன் வந்தனம்!
(147) முகுந்தன் யாரே? மும்மல மாயை
அவித்தை அழிக்கும் ஆன்ம விளக்கு!
(148) அவித்தை என்பது? ஆன்மக் கதிரொளி
அடைக்கும் முகிலாய் மறைக்கும் மடமை! ||56||

(149) துயர்ச்சிறை விடுதலை எவரில் கிடைக்கும்?
சினத்தளை அவிழ்த்தவர் இடத்தில் பிறக்கும்!
(150) மகிழ்வெது? திருப்தியில் மனநிறை வாதல்!
(151) மன்னவர் யாரே? மகிழ்வுடன் பணியும்
மக்களைப் பெற்றார், மதிப்பால் உற்றார்!
(152) நாயாய்க் கடையோர்? நலிந்து இரந்து
தீயார் இடத்தில் தீம்பொருள் பெற்றார்! ||57||

(153) மாயையின் தலைவன்? மகேசன், பிரம்மம்!
(154) மதியால் உணரா மாயையின் பங்கு?
மாற்றம், தோற்றம், மறைத்தல் மயக்கம்!
(155) வியக்கும் கனவை விளைக்கும் மூலம்?
விழிப்புல கத்து வினையின் சாரம்!
(156) பிறழா உண்மை பெருமெய் எதுவோ?
பிரம்மம் சத்தியம் பிறழா நித்தியம்! ||58||

(157) மித்யா எதுவோ? பொய்யாப் பொய்மை,
மெய்யறி வாலே மெய்ப்பட ஆன்மா
அவ்வொளி யாலே அகண்டிருள் பேதம்
சட்டென மறையும் சடுதியில் தடங்கள்
சற்று மிலாமல் முற்றும் அழியும்!
(158) பொய் எது?அது முயலின் கொம்பு!
(159) பொய்யிது என்றோ பொய்யிலை என்றோ
எய்திட முடியா எழும்நிலை என்ன?
மாயை என்பது! மதியால் அரியது!
காலா தேசக் கட்டினைக் கட்டி
பொய்யாப் பொய்தரும் போர்வை,
மெய்யாய்த் தெரியும் மேகத் திரைவலை!
(160) கல்பிதம் என்னும் கட்டுவிதம் எது?
ஒன்றில் பலதை ஒட்டிக் காட்டி
நின்று நிலைக்கும் நிறைவை மறைப்பது! ||59||

(161) மெய்யில் மெய்எது? ஈறிலா ஒன்று!
(162) பலவெனும் தோற்றப் பழுதின் மூலம்?
பகுத்தறி யாதது, பழம்பொருள் அநாதி!
(163) உடலை சீவன் உடையெனத் தரிப்பது?
ஊறிய முன்வினை உணர்த்திடும் வெப்பம்
காரியம் ஆற்றிக் காயம் என்றானது!
(164) உடலை சீவன் உடைக்கா திருப்பது?
ஊறிய முன்வினை உடல்வலி கொடுத்து
மாறிட வைக்கும் மரணப் பொறுப்பு!  ||60||

(165) பிரம்மம் துதிக்கும் பெருவழி என்ன?
பேரருட் சிவமாய், பெரு மந்திரமாம்
காயத் திரிதீ கதிர்ஒளி வேண்டல்!
(166) காயத் திரிதீ கதிர் இவைஎல்லாம்
ஆயத் தெளியும் அருநிலை என்ன?
யாதும் ஒன்றே! யாவையும் பிரம்மம்!
சாதனை செய்யச் சால்மறை காட்டும்
வழிகள் இதனால் வழிபடல் நன்று,
எளிதுறும் ஓர்நாள் எல்லாம் ஒன்று!  ||61||

(168) முதியவ ராக மதிப்பது எவரை?
முறையாய்த் தந்தை முன்னோர் அவரை!
(169) புனிதம் கலந்த புண்ணியன் எவரே?
பூரணன் தனியறி புண்ணியன் நற்குரு!  ||62||

 (170) குடியைக் குலத்தைக் குலைப்பது என்ன?
குணமுடை யாரைக் கொன்று குவித்தல்!
(171) பொய்யா மொழியால் புகழ்பெறல் யாரே?
வாய்மை மொழியர், வகையில் மௌனியர்,
பொறுமை காப்பவர் புகழ் பெறுவாரே! ||63||

(172) பிறப்பின் காரணம்? பிறபொருள் ஆசை!
(173) மறுவுடல் போன்றது? மகன்மகள் பிறப்பு!
(174) மறுத்தல் இலாதது? மரணம்! அதனால்
(175) மதித்தே இருப்பது? புண்ணியர் பூமி! ||64||

(176) உணவுப் பரிசின் உரிமை எவர்க்கு?
உண்மைப் பசியால் உழல்வர் தமக்கு!
(177) இறையாய்த் துதித்து இணங்கத் தக்கவர்?
பிரம்மம் உணர்ந்த பேரவ தாரம்!
(178) பிரம்மம் யாது? பேரருள் அதுவே
அரியும் அரனும் ஆரா திப்பது! ||65||

(179) பக்தி தரும் பரிசு என்ன?
பவபய மில்லாப் பெருநிலை விடுதலை!
(180) விடுதலை எதுவோ? அவித்தையின் அழிவு!
(181) வேத வித்தும் விளைவும் எதனால்?
ஓம்எனும் பிரணவம் பிரம்மம் அதனால்! ||66||


வினாவிடை யாக வினையாவும் மாளத்
தராதன தந்த ப்ரசனோத்ர ரத்ன
மஹாமணி மாலை சதாஅணிவன் தீரன்
மஹான் மெய்வாக்கு மகிழுமலங் காரன்! ||67||







Comments