மகான் பூஜ்ய ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்

குரு மகான், சித்த யோகி, சித்தன், சித்தர், சித்துக்கள், சுவாமிகள், த்ரைலிங்கர், நேபாள், பரமஹம்ச யோகானந்தர், பிரம்ம ஞானி, பிராம்லி, மகா சுவாமிகள், மகா யோகி, மகான்கள்©, மஹா அவதார் பாபாஜி. பாபா, யுக்தேஸ்வர், லஹரி பாபா, லஹரி மஹாசாயர், வாரணாசி
சித்தர்கள், யோகிகள், ஞானிகள் போன்றோர் வாழ்ந்த பெருமை மிக்க இந்து ஞான மரபில் சதா பிரம்ம நிலையிலேயே இருந்து, அந்த இறைநிலையோடு ஒன்றி வாழ்க்கை நடத்தியவர்கள் பிரம்ம ஞானிகள் என அழைக்கப்பட்டனர். சுகப் பிரம்ம மகரிஷி, ஜனக மகரிஷி போன்ற அந்த அவதூத ஞானிகளின் வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்.
சுவாமிகள் ஒரு மாபெரும் அவதார புருடர். ஆனால் ஒன்றுமே அறியாத பித்தர் போன்று காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பார். அவரது முதுகில் மூன்று லிங்க வடிவிலான குழிகள் காணப்பட்டதால் பக்தர்கள் அவரை த்ரைலிங்க சுவாமிகள் என அழைத்தனர். குள்ளமான உருவம். நீண்ட கைகள். உருண்டையான முகம். பெரிய வயிறு என்று சுவாமிகளின் தோற்றம் மிக வித்தியாசமானதாக இருக்கும். சுவாமிகள் யாருடனும் எதுவும் பேச மாட்டார். உணவு உண்பது என்பது எப்போதாவது ஒருமுறைதான். பல நாட்கள் பட்டினியாக இருப்பார். சமயங்களில் அன்பர்கள் கொண்டு வரும் தயிர்ப்பானைகளை சளைக்காமல் குடம் குடமாகக் குடிப்பார். மணிகர்ணிகா படித்துறையில் உச்சி வெயிலில் சுடும் பாறை மீது அமர்ந்திருப்பார். அவதூதர் என்பதால் உடலில் ஒட்டுத் துணி இருக்காது. அதைப் பற்றி எந்த வித அக்கறையுமின்றி கடும் வெயிலில் அமர்ந்திருப்பார். தான், தனது, தன்னுடைய உடல் என்ற உணர்வுகள் அற்றவராக அவர் இருந்தார். சமயங்களில் கடும் குளிரில் தண்ணீருக்குள் இறங்குவார். உள்ளேயே மூச்சடக்கி அமர்ந்திருப்பார். இல்லாவிட்டால் தண்ணீரின் மீது சப்பணமிட்டு அமர்ந்து கொண்டோ அல்லது தண்ணீரில் படுத்த வாக்கில் மிதந்து கொண்டோ இருப்பார். சில சமயம் உச்சி வெயிலில் அவதூதராய் காசி மாநகரத்துத் தெருக்களைச் சுற்றி வந்து கொண்டிருப்பார். காலத்தை, இயற்கை விதிகளை வென்ற மகாபுருடராக இம்மகான் விளங்கி வந்தார்.
இறையனுபூதி பெற்ற இம்மகானை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தரிசனம் செய்திருக்கிறார். காசி, பிருந்தாவனம் போன்ற பல புண்ணிய தலங்களுக்கு யாத்திரையை மேற்கொண்ட ராமகிருஷ்ணர், காசியில் ஒரு மடத்தில் தங்கியிருந்த த்ரைலிங்க சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். காசியில் ராமகிருஷ்ணர் தரிசித்த ஞானிகளில் மகான் த்ரைலிங்க சுவாமிகள் ஒருவரே பிரம்ம ஞானியாக விளங்கியவர். இதனை சுவாமி விவேகானந்தரிடம், ’ஒரு மிகப் பெரிய மகானைச் சந்தித்தேன்’ என்று சொல்லி விளக்கிக் கூறியிருக்கிறார் பரமஹம்சர். பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தரும் மகான் த்ரைலிங்க சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். மஹா அவதார் பாபாஜியின் நேர் சீடரான மகான் ஸ்ரீ ஸ்ரீ லாஹரி மஹா சாயர், த்ரைலிங்க சுவாமிகளின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவராவார்.
லாஹரி மஹா சாயர் (1828-1895), ராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886), விவேகானந்தர் (1863-1902) என பல காலகட்டத்தைச் சேர்ந்தவர்களும் சுவாமிகளை தரிசித்துச் சென்றிருக்கின்றனர். பரமஹம்ச யோகானந்தர் தனது ’ஒரு யோகியின் சுயசரிதம்’ நூலில் த்ரைலிங்க சுவாமிகள் கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மிகச் சிறந்த தவயோகியாகத் திகழ்ந்த இம்மகான் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
அவதூதர் என்பதால் எப்போதும் சுவாமிகள் நிர்வாணமாகவே இருப்பார். ஆனால் சுவாமிகள் இவ்வாறு நிர்வாணமாகச் சுற்றி வருவது காவல்துறையினருக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் அவர்கள் சுவாமிகளைப் பிடித்து சிறையில் அடைத்துப் பூட்டி விட்டனர். ஆனால் சற்று நேரத்தில் சுவாமிகள் வழக்கம் போல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தார்.
பூட்டிய கதவு பூட்டியபடி இருக்க, சுவாமிகள் எவ்வாறு வெளியேறினார் என்பது தெரியாமல் காவலர்கள் திகைத்தனர். அதனால் சீற்றமுற்ற அவர்கள், மீண்டும் சுவாமிகளைப் பிடித்து வந்து கதவை பலமாகப் பூட்டி, காவலுக்கு என்று தனி ஆளையும் நியமித்தனர். ஆனால் சுவாமிகளோ சற்று நேரத்தில் சிறையிலிருந்து மாயமாய் மறைந்து, அதன் மாடிப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தார். இதனால் சலிப்புற்ற காவலர்கள் சுவாமிகளைச் சிறையில் அடைப்பதை நிறுத்தினர். சுவாமிகளும் காசி மாநகரத்தின் தெருக்களில் வழக்கம் போலச் சுற்றி வர ஆரம்பித்தார்.
******
காசியில் பிராம்லி என்ற வெள்ளைக்காரர் அப்போது சப்கலெக்டராக இருந்தார். ஆடையின்றி அவதூத கோலத்தில் காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த சுவாமிகளைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் பொங்கியது. தன்னிடமிருந்த சவுக்கால் சுவாமிகளை அடித்தார். ஆனால் அந்த அடி சுவாமிகளின் மேல் விழவில்லை. மாறாக அவர் மனைவி மீது விழுந்து அவர் வலி தாளாமல் அலறினார். அதனால் சுவாமிகளை ஒரு மாயாவி என்று நினைத்த பிராம்லி, தன் வீட்டிற்கு அவரை இழுத்துச் செல்லுமாறு தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் வீட்டிலும் உறவினர்கள் அனைவரது உடலில் இருந்தும் சாட்டையடி பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அது கண்டு மிகவும் சீற்றமுற்ற பிராம்லி துரை ‘இந்த மாயாவியை இருட்டறையில் அடையுங்கள்’ என்று தனது சேவகர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, அந்த அறையைப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக் கொண்டார். பணி நிமித்தமாக மீண்டும் வெளியே புறப்பட்டுச் சென்றார்.
சற்று நேரத்தில் அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. சுவாமிகள் வழக்கம் போல் அவதூதராய் அவர் முன்னால் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட அருகிலுள்ளோரிடம் சுவாமிகளைப் பற்றி விசாரித்தார் கலெக்டர். அப்போது தான் மகானின் மகிமை பற்றி அவருக்குத் தெரிய வந்தது. சுவாமிகளைப் பணிந்து வணங்கிய பிராம்லி, தான் செய்த அவச்செயலுக்காக தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். சுவாமிகளும் அவரை மன்னித்தார். தனது அஞ்ஞானம் நீங்கிய அன்றைய தினத்தன்று வருடம் தோறும் சுவாமிகளுக்கு ஆராதனை நடத்திக் கொண்டாட ஒரு கட்டளையையும் பிராம்லி ஏற்படுத்தினார். அது ‘பிராம்லி கட்டளை’ என்ற பெயரில் இன்றறளவும் காசியில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
வெகுகாலம் வாழ்ந்து காசியில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இம்மகான் பின் நேபாளத்தில் பசுபதிநாத் அருகில் ஜீவசமாதி அடைந்தார்.
மகான்களின் பெருமை பேசவும் இனிதே!
 



Comments