நான் சத்தியபோத ஞானசொரூபமானவன்

ஸ்ரீசங்கர ஜெகத்குரு மேற்கு திக்கில் பயணம் செய்தபோது, ஸ்ரீவல்லி எனும் கிராமத்தில், பிரபாகர் எனும் அந்தணர், சங்கரரின் வரவை அறிந்து, தன் 13 வயது புத்திரனை அழைத்துக்கொண்டு போய், அவனை நமஸ்காரம் செய்ய வைத்து, தானும் நமஸ்கரித்து, சின்ன வயது முதல் பேச்சு வராதவனாய், எதிலும் நாட்டம் இல்லாதவனாய், விருப்பு- வெறுப்பு இல்லாதவனாய், எதிலும் பக்குவம் இல்லாதவனாய் இருக்கின்றவனுடைய நிலைமையைச் சொல்ல...
ஸ்ரீசங்கரபகவத்பாதாள் அந்த பாலகனை அணைத்துக்கொண்டார். ''குழந்தாய், நீ யார், யாருடைய மைந்தன் நீ, எங்கே சென்று கொண்டிருக்கிறாய், உன் பெயர் என்ன, நீ எங்கிருந்து வந்திருக்கிறாய் என்று மிகக் கூர்மையான பெரிய கேள்விகளைக் கேட்டார்.
அவரிடம் அந்த பாலகன், தன் நிலைமையைப் பற்றிச் சொல்வதற்காக வாய் திறந்து சொன்ன ஸ்லோகங்களே, 'அத்தாமலக ஸ்தோத்திரம்’. வடமொழியில் அமைக்கப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார், பகவான் ஸ்ரீரமணர்.
நான் மனிதன் அல்ல. தேவனோ, யட்சனோ, அந்தணனோ, அரசனோ, மனிதனோ அல்ல; நான் பிரம்மச்சாரியும் அல்ல; கிரகஸ்தனும் அல்ல; பால பிராயனும் அல்ல; கிழவனுமல்ல; ஒட்டுமொத்த சந்நியாசியும் அல்ல; யார் ஒருவனும் நான் அல்லேன்; நான் சத்தியபோத ஞானசொரூபமானவன். இதுவல்ல இதுவல்ல என்று சொல்லி, தான் ஆன்மா என்பதை மிக அழகாக, அந்த குழந்தை ஸ்லோகங்களாகப் பேசினான்.
மண்ணாலான பல பானைகளில் உள்ள நீரில், பல பிரதிபிம்பங்களாக சூரியன் காணப்பட்டாலும், எல்லாம் ஒரே சூரியன்தான். அதுபோல, பல சரீரங்களில் உள்ள பல்வேறு ஜீவர்களாக பிரகாசித்தபோதிலும், அவை அனைத்தும் ஒரே விஷயம்தான். இப்படிப்பட்ட ஒருவனாக, எவன் சுடர் விட்டு பிரகாசிக்கின்ற ஆன்மாவாக இருக்கின்றானோ, அந்த ஆன்மா நான். நான் இன்னது; அவர் இன்னது; இவள் இன்னது; அது இன்னது என்று பிரிவு என்பது மிக அபத்தம். ஒன்றே, பல விஷயங்களாக இந்த உலகம் முழுவதும், இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதுவே வெவ்வேறுவித ரூபமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ரூபமாக நான் இருக்கிறேன் என்பதை ஒருவன் புரிந்துகொண்டால், அவன் மற்றவரை எப்படி அணுகுவான்? அவருக்கும், மற்றவருக்கும் என்ன வேற்றுமை? எல்லா வேற்றுமைகளையும் உடைத்து எறிந்துவிட்டு, எல்லாமுமாக ஒருவன் பிரகாசிக்க முடியும் என்றால், அந்த ஆன்மா நான்... என்று மிக அழகாக, ஒரு கடினமான விஷயத்தை எளிதாக ஸ்ரீரமண மகரிஷி சொல்லித் தருகிறார்.

'மேலே இருக்கின்ற சந்திரன், காற்றில் அசையும் அலைகளால் ஆடுவது கண்டால், சந்திரன் ஆடுவது போல இருக்கும். ஆனால், சந்திரனா ஆடுகிறான்? இல்லை; இது கண் கொண்ட மயக்கம். இதே மயக்கம்தான் புத்திக்கு இருக்கிறது. புத்தி, எதிரே இருப்பவர் அந்நியர் என்று நினைத்துக்கொள்கிறது. புத்தி, எதிரே இருப்பவர் வேறு மதத்தவர், வேறு இனத்தவர், வேறு குலத்தவர் என்று நினைத்திருக்கிறது. உயர்வு என்றும், தாழ்வு என்றும் பிரித்துக் கொள்கிறது. இது புத்தியினுடைய ஆட்டம். மாயையான பார்வை. ஆனால், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கின்ற அந்த விஷயம் பேதமற்றது. அதுதான் உன்னிலும் சகல இடத்திலும் பரவியிருக்கிறது. இதைத் தெரிந்து கொண்ட ஆன்மா நான்.’
பையன் சொன்ன ஸ்லோகங் களைப் பார்த்து, தந்தை பிரமித்து, புதல்வனை வெளிக் கொண்டு வந்த குருவை நோக்கிக் கைகூப்பி நிற்க, ''இவனை மகனாக நீங்கள் அடைந்தது பாக்கியம். இவனால் உங்களுக்கு எந்தப் பிரயோஜ னமும் இல்லை; இவன் என்னோடு இருக்கட்டும்’ என்று அவனை அழைத்துக் கொண்டு போய்விட்டார். பகவத்பாதாளுடைய சீடர்கள், 'குழந்தை ஏன் இப்படி இருந்தது? ஏன் இப்படி ஆயிற்று?’ என்று கேட்க, ''இந்தக் குழந்தையினுடைய தாய் கங்கையில் குளிக்கப் போகும்போது, ஒரு சாதுவின் இடத்திலே, இந்தக் குழந்தையைக் கொஞ்சம் நேரம் பார்த்துக்கொள்ளும்படி, ஒப்படைத்துவிட்டுப் போனாள். அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த குழந்தை கால் இடறி, கங்கையில் விழுந்து, மரணமடைந்து விட்டது. குழந்தையை வாரி எடுத்த சாது, என்ன செய்வது, பெற்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று கலங்கினார். பெற்றவள் அழக்கூடாது என்று தீர்மானித்து, தன் உடம்பைவிட்டு, இந்த குழந்தைக்குள் புகுந்துகொண்டார். அந்தச் சாதுவே, இந்தக் குழந்தை'' என்று பகவத்பாதாள் சொன்னார்.
இந்த விஷயத்தை பகவான் ஸ்ரீரமண மகரிஷி மிக நுணுக்கமாக மொழிபெயர்த்தார்.
கோமணதாரியாக, மலை மேலே இருக்கின்ற ஒரு குகையில், குறைந்த சௌகரியங்களோடு வாழ்ந்து வருகின்ற பகவான் ஸ்ரீரமண மகரிஷி, மிகத் தெளிவு மிக்க தத்துவப் பாடல்களுக்கு எளிமையாக விளக்கம் சொல்லி, தன்னிடம் விளக்கம் கேட்டு வருகின்ற, யோக்கியதை உடைய நபர்களுக்குத் தெளிவாக்கவும் செய்தார்.
யாரோ கொடுக்கின்ற உணவை உண்டு. வாழ்கின்ற பகவான் பிச்சைக்காரரா அல்லது செல்வந்தரா? மிகப்பெரிய செல்வம் அவரிடம் இருந்தது. அதனால், அதை நாடி எண்ணற்ற மக்கள் வறியவர்கள் போல... ஏன், பணக்காரர் களும் கைகூப்பி, வறியவர்கள் போல அவரை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர். பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் இந்த மொழி பெயர்ப்புகள் பழந்தமிழில் ஆனவை. படிக்க கடினமானவை. ஆனாலும், பதம் பிரித்துப் படித்துவிட்டால், உள்ளுக்குள் பதிந்துவிட்டால் மிகப் பெரிய வெளிச்சத்தை அது நமக்கு காட்டும். ஸ்ரீரமண மகரிஷி என்ன சொல்கிறார் என்று தெரியாமல், அவருடைய வாழ்க்கையைப் படிப்பதில் லாபமில்லை.
ஞானிகளுக்குத் தேவையென்று எதுவும் இருக்காது. ஆனால், தேவை வரின், அவர்கள் எந்த முயற்சியும் செய்யாமல், வெகு எளிதாக அவர்கள் தேடிய பொருள் அவர்களை நோக்கி வரும். பகவான் ஸ்ரீரமணர், திடகாத்திரமான சரீரம் உள்ளவர் அல்ல; சரிவர உணவு எடுத்துக்கொள்ளாததாலும், எடுத்துக் கொள்ளும் உணவைப் பற்றி நாட்டம் ஏதும் இல்லாததாலும், வெகு நேரம் அசையாது உள்ளுக்குள் ஆழ்ந்து உட்கார்ந்திருப்பதாலும், அவருக்கு மலச்சிக்கல் ஏற்படுவதுண்டு.
உடம்பு சூட்டால் இருமலும் ஏற்படும். மேலும், பாறை சூழ்ந்த இடத்தில் இருப்பதால், உடல் வெப்பம் எப்போதும் அதிகரித்தே இருக்கும். இதனால், கடுக்காயை பகவான் வாயில் அடக்கிக்கொள்வது வழக்கம். ஊற வைத்து மெள்ளத் தின்றுவிடுவதும் உண்டு. கடுக்காய் நல்ல மலமிளக்கி. இருமலையும் கண்டிக்கும். உடல் சூட்டைத் தணிக்கவல்லது. விருபாக்ஷி குகையிலிருந்த கடுக்காய் தீர்ந்து விட்டது. பகவானைக் கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொள்ளும் பழனிச்சாமி, திருவண்ணா மலையில் வசிக்கும் சேக்ஷய்யரிடம், பகவானுக்கு கடுக்காய் வேண்டுமென்று சொன்னார். பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் சேக்ஷய்யர். எதனாலேயோ அதை விட்டுவிட்டார்.
பகவானுக்கு இது மட்டுமல்லாது எக்ஸிமா, ஆஸ்துமா, இடையறாத தலையாட்டம் என்பது போன்ற தொந்தரவுகளும் இருந்தன. சில நாட்களில், பல் வலியும் அவ்வப்போது வந்து போனது. ''மதிய உணவுக்கு சத்திரத்துக்குப் போகும்போது, சேக்ஷய்யரிடம் கடுக்காயை நினைவுபடுத்து'' என்று பகவான், பழனிச்சாமி யிடம் சொன்னார். மலையிலிருந்து பழனிச்சாமி  கீழே இறங்கிப் போவதற்கு முன்பாக, ஆதிமூலம் என்ற அன்பர் வந்தார். சத்திரத்துக்கு அருகே இருக்கும் கிராமத்திலிருந்து அவர் அடிக்கடி திருவண்ணாமலை வந்து போவார். அப்படி, திருவண்ணாமலை வந்து சாமி தரிசனம் செய்கிற போது, விருபாக்ஷி குகைக்கு வந்து, பகவான் ரமண மகரிஷியையும் நமஸ்கரித்துவிட்டு போவார். தன்னுடைய நண்பர் களுடன் அப்படி அன்று வந்திருந்து, பகவான் எதிரில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டுப் போகும்போது, பழனிச்சாமியிடம், ''உங்களுக்கு கடுக்காய் வேண்டுமா'' என்று கேட்டார்.
மெள்ளத் திகைத்த பழனிச் சாமி, ''ஆமாம்'' என்று கூற, ஒரு பை நிறைய கடுக்காய் கொண்டு வந்து, வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். பழனிச்சாமி தேவையான கடுக்காய்களை வைத்துக் கொண்டு, மற்றவற்றை ஆதி மூலத்திடமே கொடுத்துவிட்டார்.
''கடுக்காய் எப்படி கிடைத்தது?''
''கீழே சிதறிக் கிடந்தது சாமி, முன்னே போன மாட்டு வண்டி யிலிருந்து மூட்டை பிரிந்து, கடுக்காய் கீழே கொட்டி இருக்கும். கீழே சிதறிக் கிடைந்தவற்றை நானும் நண்பர்களும் பொறுக்கி, ஒரு பையில் போட்டுக்கொண்டு வந்தோம். இங்கு வந்ததும், உங்களுக்கு கடுக்காய் தேவைப்படும் என்று தோன்றியது அதனால்தான் அப்படி கேட்டேன் என்றார்.'' பகவானுக் குத் தேவையான அந்தப் பொருளை கொடுத்தது யார்? ஆதிமூலமா, மூட்டை அவிழ்ந்து விழ வண்டி ஓட்டிக்கொண்டு போனவனா, அல்லது வேறு யாராவதா? இது கடவுளுடைய அனுக்கிரகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஞானியர்கள் நமக்கு நல்வழி காட்டி உதவி செய்ய, கடவுள், ஞானியருக்கு உதவி செய்கிறார். திருவண்ணா மலையில் வாழும் சேக்ஷய்யர் மட்டும் அல்லாது, சேக்ஷய்யருடைய சகோதரரும் பகவான் மீது அன்பு கொண்டவர். மலையிலிருந்த பகவான், திடீரென்று பழனிச்சாமியிடம் ''சாப்பிட கொஞ்சம் உலர்ந்த திராட்சை இருக்கிறதா?'' என்று கேட்க, பழனிச்சாமி ''இல்லை'' என்று சொன்னார்.  
சென்னையில் இருக்கும் சேக்ஷய்யருடைய சகோதரர், வழக்கமாக உலர்ந்த திராட்சை கொண்டு வந்து கொடுப்பார். எப்போதும் அவருக்குக் கொஞ்சம் ஈரம் கனிந்த மூன்றாம் தரமான திராட்சைதான் கிடைக்கும். அன்று கடைகள் எல்லாம் மூடிவிட்ட படியால், எல்லா இடங்களிலும் தேடி, ஒரு கடை திறந்து இருக்க, அவர் போனதும், அந்தக் கடைக்காரன், ''நல்ல உலர்ந்த திராட்சை இருக்கிறது, வாங்கிக் கொள்கிறீர்களா?'' என்று தானாகக் கேட்டான். சந்தோஷத் துடன், ஒரு வீசை உலர்ந்த திராட்சை வாங்கிக்கொண்டு, விருபாக்ஷி குகைக்கு வந்தார். பகவான் விரும்பிக் கேட்ட அன்றே, உலர்ந்த திராட்சை விருபாக்ஷி குகைக்கு வந்துவிட்டது.
பல் வலி தொந்தரவு செய்தது. என்ன செய்வது? புகையிலை இருந்தால், அங்கு அழுத்தினால் கிருமிகள் செத்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால், யாரிடமும் புகையிலை இல்லை. பகவானை வந்து தரிசித்த ஓர் அன்பரிடம், மூக்குப் பொடி இருந்தது. அந்தப் பொடியை எடுத்து, பல்லில் வைத்து அழுத்த, பல் வலி நின்றது. ஆனால், சொத்தை பெரிதானது. அந்த சொத்தையை எடுக்க, சென்னையிலிருந்து ஒரு பல் டாக்டர் வந்து, 300 ரூபாய் வாங்கிக் கொண்டு, பல்லைப் பிடுங்கிவிட்டுப் போனார். எல்லோருக்கும் வருவது போல பிரச்னைகள் பகவான் ஸ்ரீரமண மகரிஷிக்கும் வந்தன. ஆனால், பிரச்னைகள் வந்த சுவடு காணாமல், யாராலோ தீர்த்துவைக்கப்பட்டது போல மறைந்து போயின.
மனிதர்கள் எல்லோருக்கும் உள்ளது போல ஞானிகளுக்கும் வலியும் பசியும் இருக்கின்றன. பின், எந்த வகையில் ஞானி உயர்த்தி? கேள்வி கேட்பவர் உண்டு. வலியும் பசியும் சரீரம் சம்பந்தப்பட்டது. ஞானியிடமும் அவஸ்தை உண்டு. ஆனால் புலம்புவதில்லை. நாலாபுறமும் அவர்கள் முறையிடுவது இல்லை. உள்ளதை ஏற்பது என்பது சாதாரணவர்களால் இயலாது; அது ஞானியின் இயல்பு.
-






Comments