வரம் தந்த அழகு!

மயிலின் தோகையழகும், அது தன் தோகையை விரித்தாடும் அழகும் நம் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. பாம்புக்கு அதுவும் ஒரு எதிரி. காக்கைக்கு அன்னம் அளிப்பது என்பது காலங்காலமாக இருந்து வரும் வழக்கம்.
புராணங்களில் அன்னப்பறவை வர்ணிக்கப்படுகிறது. அதன் அழகும், அறிவும் போற்றப்படுகின்றன. நளன், தமயந்தி இவர்களைச் சேர்த்து வைப்பதில் அன்னப் பறவையின் பங்கு பிரசித்தமானது. ஓணான் சாதாரண ஜந்துதான். அது சூழ்நிலைக் கேற்றவாறு நிறம் மாறுவதற்கும் சாதாரணமாகத் தோன்றுகையில் தங்க நிறத்தலையும் அதேபோன்ற உடலும் கொண்டதாகத் தென்படும்.

ஸ்ரீவால்மீகி ராமாயணம் உத்தரகாண்டத்தில் இவற்றைப் பற்றியும், இந்தப் பிராணிகளுக்கு எவ்வாறு தனித்தன்மை வாத்தது என்பது குறித்தும் விளக்கம் சொல்லப்படுகிறது.
மருத்தன் என்ற அரசன் உசிர பீஜம் என்ற இடத்தில் ஒரு யாகம் செய்துவந்தார். அதற்குத் தேவர்களும் வந்திருந்து உதவினர். தேவகுரு பிருகஸ்பதியின் சகோதரர் சம்வர்த்தர்தான் யாகத்தைச் செவ்வனே நடத்த உதவினார்.
அப்போது, ராவணன் அங்கே வந்தான். அவனுடைய அபரிமிதமான பலத்தாலும், பிரம்மாவினால் கொடுக்கப்பட்ட வரங்களினாலும், அவனைக் கண்டு பயந்த தேவர்கள், தங்கள் சொந்த உருவத்தை மறைத்துக்கொண்டு பறவைகள், மிருகங்கள் போன்ற உருவத்தை எடுத்துக் கொண்டனர்.
இந்திரன் மயிலாகவும், எமன் காகமாகவும், குபேரன் ஓணானாகவும், வருணன் அன்னமாகவும் மாறினார்கள். இதே போல, மற்ற தேவர்களும் வெவ்வேறு உருவங்களை எடுத்துக்கொண்டார்கள். அப்போதுதான், ராவணன் ஒரு அசுத்தமான நாயைப் போல அந்த யக்ஞ வாடி கைக்குள் நுழைந்தான்.
அரசன் மருத்தனிடம் ராவணன் சென்று, அவரைத் தன்னுடன் போர் செய்ய அழைத்தான். இல்லையெனில் தன்னிடம் தோற்றுவிட்டதாக ஒப்புக் கொள்ளச் சொன்னான். மருத்தன் அவனை யார் என்று கேட்டார்.
அதைக்கேட்ட ராவணன் ஒரு அலட்சியச் சிரிப்பு சிரித்தான். பிறகு சொன்னான்: எனக்கு உன் அறியாமையைக் கண்டு வியப்பாக இருக்கிறது. அரசே, நான் குபேரனின் ஒன்றுவிட்ட சகோதரன் என்று யாவரும் அறிவார்களே. அவனை வென்று நான் இந்தப் புஷ்பக விமானத்தைக் கைப்பற்றி இருக்கிறேன்."
அரசன் சொன்னார், அப்பனே! உன் னுடைய மூத்த சகோதரனையே போரில் வென்றவனா நீ? இம்மூன்று உலகங்களிலும் உன்னைப் போன்ற வீரனைக் காண்பது அரிது! என்ன விதமான தவம் செய்து, என்னென்ன வரங்களைப் பெற்றா? இதுவரை நான் உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. ஏகொடு மதியானே! கொஞ்சம் பொறு, நீ உயிருடன் திரும்பப் போவதில்லை. எனது கூர்மையான அம்புகளால் உன்னை யம லோகத்துக்கு அனுப்புகிறேன்."
மிகுந்த கோபத்துடன் வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு, ராவணனை எதிர்க்கக் கிளம்பினார் மருத்தன். சம்வர்த்தர் உடனே அரசனைப் பார்த்துச் சொன்னார்: அரசே! எனது அறிவுரையைக் கேட்பாயாக. போர் புரிவது நல்லதல்ல. மகேஸ்வரனைக் குறித்துச் செய்யப்படும் இந்த யாகத்தை அரை குறையாகவிட்டால், உனது வம்சமே அழிந்துவிடும். யாக தீட்சை எடுத்துக் கொண்டவர் போர் புரிவது தகாது. அதே மாதிரி கோபம் கொள்வதும் தகாது. போர் என்றால் வெற்றியடையவதும் நிச்சயமல்ல. தவிரவும் ராவணனைப் போரில் வெல்வதென்பது மிகவும் சிரமமான காரியம்."
மருத்தன் அந்த அறிவுரையை ஏற்றுக் கொண்டு, வில், அம்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, யாகம் செய்வதில் முனைந்தார். இதைக்கண்ட ராவணனின் மந்திரி சுகன் என்பவன், ராவணன் ஜெயித்தான்" என்ற குதூகலத்துடன் சொல்லிக்கொண்டு சென்றான். ராவணனும் அவ்விடத்தை விட்டு அகன்றான்.
அவன் சென்ற பிறகு, இந்திராதி தேவர்கள் தங்கள் சுய உருவத்தை அடைந்தார்கள். அப்போது இந்திரன் மயிலைப் பார்த்து, உனக்குப் பாம்புகளால் பயம் ஏற்படாது. உனது நீல நிறமான தோகையில் எனது ஆயிரம் கண்கள் போன்றதொரு தோற்றம் ஏற்படும். எனக்கு உன்னிடம் ஏற்பட்டுள்ள பிரியத்தின் காரணமாக மழை பொழியும்போது, நீ உன் தோகையை விரித்து அழகாக ஆடுவாய்" என்று வரம் கொடுத்தார். இந்த வரத்தைப் பெற்ற மயில் கூட்டங்கள் மகிழ்ச்சியுடன் திரும்பின.
உட்கார்ந்திருந்த காக்கத்தைப் பார்த்து எமதருமன், ஏ! காகமே! நான் உன்னிடம் மிகவும் திருப்தியுடையவனாக இருக்கிறேன். பிற உயிர்களைப் பாதிக்கும் நோய்கள் உன்னை வருத்தாது. இதில் சந்தேகம் இல்லை. உன்னை மக்களும் கொல்லமாட்டார்கள். அந்தப் பயம் உனக்கு வேண்டாம். பித்ரு லோகத்தில் உள்ள பித்ருக்கள் - நீ மாந்தர்களால் அளிக்கப்படும் உணவைச் சாப்பிட்டால் - அவர்களும் பசிப்பிணி நீங்கியவர்களாக ஆவார்கள்" என்று சொன்னார்.
(ப்ராக்வம்சம் என்பது யாகம் செய்யும் கர்த்தாவும் அவர் மனைவியும் தங்கும் இடம். இது யக்ஞ வாடிகைக்குக் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டிருக்கும்.)
தனது பங்குக்கு வருண பகவான் அன்னபட்சியைப் பார்த்து, உன் மீது அளவு கடந்த அன்புடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. பூரண சந்திரனையொத் ததாக உனது மேனி விளங்கும். உன்னைக் காணும் மக்கள் மனத்தில் மகிழ்ச்சி பொங்கும். நல்ல வெண்மையான நுரையைப்போல் விளங்கும் தனித்தன்மையுடைய பறவையாக விளங்குவாய். எனது சரீரமான நீருடன் உனக்குச் சேர்க்கை ஏற்பட்டால், உனது மகிழ்ச்சி ஈடு இணையற்றதாகும். அப்போது உன்னைப் பார்ப்பதே ஒரு தனி ஆனந்தத்தை அளிக்கும். இதுவே, எனது திருப்தியை வெளிப்படுத்தும் வரம் உனக்கு" என்றார்.
(இந்த வரம் கிடைப்பதற்கு முன்பு அன்ன பட்சிகள் வெள்ளை நிறமாக இல்லை. அவற்றின் இறக்கைகளின் நுனி கருமையாகவும், அவற்றின் மார்புப் புறம் கருமை கலந்த பழுப்பு நிறமாகவும் இருந்தது).
ஒரு பாறையின் மேல் ஓய்வாக உட்கார்ந்திருந்த ஓணானைப் பார்த்து குபேரன், உன்னிடம் எனக்குத் திருப்தி உண்டாயிற்று. நீ பொன் நிறமாக இருப்பாயென்று வரம் தருகிறேன்.உன் தலைப்பாகம் அழியாத பொன் வண்ணமாக இருக்கும். எனது மகிழ்ச்சியால் உனது கருமை நிறம் மாறிப் பொன் வண்ணம் பெறுவாய்" என்று அருளினார்.
இவ்வாறு இவற்றுக்கு வரம் அருளிய தேவர்கள், அரசன் நடத்திய யாகத்தைச் செவ்வனே பூர்த்தி செய்தவர்களாக இந்திரனுடன் தேவலோகம் திரும்பினர்.
(வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம் 18ஆம் சர்க்கம்).

Comments