சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகிட...

தினெட்டு சித்தர்களில் திருமூலரும் ஒருவர். தவத்தால் ஞானம் பெற்ற சித்தர்கள் மவுனம் ஆகி விடுவார்கள். ஆனால் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் உயர் நோக்கில், தான் பெற்ற ஞானத்தை நமக்கு அளித்து மகிழ்ந்தார் திருமூலர். ‘தன்னை நன்றாகத் தமிழ் செய்ய என்னை நன்றாக இறைவன் படைத்தான்’ என்று தன் வாழ்வின் நோக்கத்தை அறிவித்தார்.


முழுமுதற்கடவுள் சிவபெருமான். இவரிடம் சிவஞான உபதேசம் பெற் றவர் நந்திபெருமான். இவரிடம் உபதேசம் பெற்றவர் சுந்தரநாதர். இவர் தான் அறிந்தது போக மேலும் எண்வகை சித்திகளையும், யோகங் களையும் கற்கும் பொருட்டு, தமிழகத்தின் பொதிகை மலையில் வாழ்ந்த அகத்தியரைத் தரிசிக்க வந்தார். அந்த பயணத்தில் திருக்கேதாரம், நேபாளம், காசி, சைலம், திருக்காளத்தி, திரு ஆலங்காடு, திருவதிகை, காஞ்சிபுரம் ஆகிய தலங்களைத் தரிசித்து சிதம்பரத்துக்கு வந்தார். அங்கே அம்பலவாணரின் அருள்பெற்றார். இவரது வரலாற்றை 28 பாடல்களில் பெரிய புராணத்தில் அழகாகப் பாடியுள்ளார் சேக்கிழார்.


.
காக்கும் மந்திரம்!வாயும், மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல்தாரமும் ஆமே

- திருமந்திரம் 1178


பொருள்: சீவர்களின் பிராணவாயு, மனம் இரண்டாலும் அறிய முடியாதவள். தவத்தாலும், தியானத்தாலும் மனோன் மணியை எளிதில் அறிய முடியாதவள். பேயையும், பூதகணங்களையும் தமக்கு ஏவலர்களாகப் பெற்றவள். பெண் தெய்வமாகவே விளங்குபவள். ஆராய்ச்சி யாலும், அறிவாலும் அறிய இயலாத சக்தி இவள். சிவனுக்குத் தாயாகவும், மகளாகவும், மனைவியாகவும் இருந்து காத்து வருகிறாள்.

திருமந்திரத்தின் நான்காம் தந்திரத்தில் வரும் பாடல் இது.  நான்காம் தந்திரம், சிந்தி ஆகமத்தின் தமிழாக்கம் ஆகும். இது சக்தியின் சிறப்பையும், சாக்த தத்துவத்தையும் விளக்குகிறது. திருமூலர் எழுதிய ஒன்பது தந்திரங்களில் நான்காம் தந்திரமாகிய இதில்தான் மிக அதிகமாக 535 பாடல்கள் உள்ளன.

இவ்வுலகையும், பிரபஞ்சத்தையும் படைத்து, காத்து, அழிப்பவள் இதே சக்தி. பிரம்மாவின் படைப்புக்கு, சரஸ்வதி நாவில் நின்று அறிவு தருகிறாள். திருமாலின் காக்கும் திறனுக்கு, திருமகள் மார்பில் அமர்ந்து செல்வம் தருகிறாள். சிவனின் அழிப்புக்கு, உடலில் பராசக்தி பாதியாக நின்று வலிமை தருகிறாள். அவளே, சிவபெருமானுக்குத் தாயும், மனைவியும், மகளுமாக இருந்து காக்கின்றாள் என்கிறார் திருமூலர். அவரது வாக்கை அபிராமிப் பட்டரும் பின்பற்றி பாடியுள்ளார்
‘தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும்
    ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை
    இறைவியும் ஆம்

(அபிராமி அந்தாதி 44)


இங்ஙனம் பரமனுக்கே காப்பாகத் திகழும் ஆதிசக்தி, நமக்கும் காப்பாகத் திகழ்வாள். உடல் நோய்கள் தீரவும், வலிமை கூடவும் துர்கை வழிபாடு பலன் தரும். சிக்கல் தீரவும், வறுமை போகவும் மகாலட்சுமி விரதம் கைகொடுக்கும், தேர்வில் வெல்லவும், வேலைவாய்ப்பு கூடவும் கலைமகள் வழிபாடு வழிகாட்டும். இந்த முப்பெருந் தேவியரையும் நவராத்திரி காலத்தில் மட்டுமல்ல, அனுதினமும் பெண்கள் வழிபட வேண்டும். அப்படி வழிபடும்போது மேற்கண்ட பாடலைப்பாடி வழிபட, சக்தியின் பேரருள் நிச்சயம் வாய்க்கும்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே திருமந்திரம்’ சுருக்கம் சதாசிவன் வடமொழியில் 28 ஆகமங்களை உபதேசித்தார். அதில் முக்கியமான 9 ஆகமங்களைத் திருமூலர் ‘தன் தவ ஆற்றலால் உணர்ந்து தமிழில் 3000 பாடல்களாகப் பாடினார். பத்தாம் திருமுறையாக இது போற்றப்படுகிறது. 3000 ஆண்டுக்கு முன் இது எழுதப்பட்டாலும், கி.பி. 600-ல் தமிழில் எழுந்த முதல் சைவத் தமிழ் நூலாகப் போற்றப்படுகிறது.
‘சக்கரவர்த்தி தவராச யோகி எனும் மிக்க திருமூலன் அருள் மேவும் நாள் எந்நாளோ?” என்று தாயுமானவர் போற்றியுள்ளார்.

Comments