பிரகலாதனின் கவலை!

நல்லவற்றைக்கூட சொல்லிக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள் பாருங்கள்! இது எங்காவது ஒரு பாகவதனுக்கு ஒத்து வருமா! ஹிரண்யன் கேட்டான், யாரோ உன் மனத்தில் உள்ளிருந்து கொண்டு என் பெயரை சொல்லவிடாமல் வேறு யார் பெயரையோ சொல்லும்படி தூண்டுவதுபோல் தெரிகிறது. அவன் யார் என்று எனக்குக் காட்டிக் கொடுத்துவிடு பிரஹ்லாதா. அப்புறம் அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்.
குழந்தைக்கு சிரிப்பு வந்துவிட்டது. உன்னை இந்தக் கேள்வி கேட்கச் சொல்லி எவன் தூண்டினானோ, அவனே தான் தன் திருநாமத்தைச் சொல்லச் சொல்லி என்னைத் தூண்டியவன்" என்றான். உன்னைத் தூண்டுபவன் ஒருவனாகவும், என்னைத் தூண்டுபவன் வேறு ஒருவனாகவும் இருக்க முடியுமா என்ன? எல்லோருக்கும் சாஸ்வதம் பகவான் ஒருவன்தானே? அவனே எல்லோருக்கும் உரியவன். அவனைத் தவிர இந்த உலகம் யாரால் நடத்தப்படுகிறது தகப்பனே?" என்றான்.
விஷ்ணு விஷ்ணு என்று சொல்கிறாயே. அந்த விஷ்ணு எப்படி இருப்பார் என்று கொஞ்சம் சொல்லு" என்று கேட்டான் ஹிரண்யன். இவ்வளவு நேரம் ஆனந்தமாக விவரித்துக் கொண்டு வந்து பிரஹ்லாதனுக்கு வருத்தம் வந்துவிட்டது. ஐயோ நான் எதை வைத்துக்கொண்டு அவனை விளக்கப்போகிறேன் என்று எனக்குப் புரியவில்லையே. ஒரு சப்தத்தை வைத்துக் கொண்டு விஷ்ணுவை விளக்கலாம் என்று பார்த்தால், மற்ற சப்தங்கள் எல்லாம் கோபித்துக் கொள்கின்றன. ஏன்? என்னை வைத்துச் சொல்லக்கூடாதா" என்று அவை கேட்கின்றன. இன்னொன்றைத் தொடப்போனால் அதைத்தவிர மற்றதெல்லாம் கோபித்துக் கொள்கின்றன. அதே போல் மற்றொன்றைத் தொடப்போனால் அதைத் தவிர மற்றதெல்லாம் கோபித்துக் கொள்கின்றன" என்று தவிக்கிறான் பிரகலாதன்.
ராமாயணத்தில் ஒரு காட்சி. ஹனுமன் சீதையைத் தேடிக் கொண்டு அசோக வனத்துக்குப் போய்ச் சேர்ந்தான். சீதை முன்னால் நின்றான். நான்தான் ராமனுக்கு தூதனாக வந்தேன் என்று சொன்னான். ராம தூதோஹம்" என்று சொல்லி மோதிரத்தை சீதையின் கையில் கொடுத்தான். சீதைக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. ‘என் ராமன் எப்படி இருப்பான் என்று உன்னாலே விளக்க முடியுமா?’ என்று கேட்டாள்.
படியெடுத்துரைத்துக் காட்டும்படிக் கல்ல அவன் படிவம். சீதையே நீ கேள்வி கேட்டுவிட்டாய். எந்த சப்தத்தை வைத்து என் ராமனின் உருவத்தை நான் விளக்குவேன்? படியெடுத்துரைத்துக் காட்டும்- அதாவது ஒரு வடிவத்தை எடுத்துக் காட்டி, தாமரையைப் போன்ற கண்கள் என்று சொன்னால், ஊரில் இருக்கும் மற்ற எல்லா புஷ்பங்களும் என்னுடன் சண்டைக்கு வருகின்றன. ஏன்? என்னைப்போல இருக்காதா ராமருடைய கண்கள்? என்னை உதாரணமாக சொல்லக் கூடாதா?" என்று கேட்கின்றன. பகவானுடைய தோள்கள் பெருத்த உலக்கையைப் போல இருக்கின்றன என்று சொன்னால் மலை சண்டைக்கு வருகிறது. ஏன் என்னைப் போல இல்லையா ராமருடைய தோள்கள்" என்று கேட்கின்றன. எதை நான் உதாரணமாகச் சொன்னாலும் மற்றது கோபித்துக் கொள்கிறது. எந்த சப்தத்தையும் கொண்டு பகவான் இது போல் இருப்பான் என்று உரைக்க முடியாது. ‘ந சப்தகோசரம் யஸ்ய’ - ஒரு சப்தத்தாலே அவனை உரைக்க முடியாது.
நம்மாழ்வார் அழகாக அவருடைய பாசுரத்தில் குறிப்பிட்டார்: ‘புகழுநல் ஒருவன் என்கோ, பொருவில் சீர் பூமி என்கோ’ என்றார். அவனை பூமி என்று சொல்வதா், ஆகாசம் என்று சொல்வதா அக்னி என்று சொல்வதா, அல்லது நீர் என்று சொல்வதா, எதைச் சொன்னாலும் அது அவனைத்தான் குறிக்கப் போகிறதே தவிர மற்றவர்களைக் குறிக்கப் போவதில்லை. அவ்வளவு பெருமைகள் அவருக்கு இருக்கின்றபடியால் - வாசாம் அகோசரம், அதாவது வாக்குக்கு எட்டாதவன்.
அதைத்தான் குழந்தை சொன்னான்: நான் எதை வைத்து விளக்கப் போகிறேன் விஷ்ணு யார் என்பதை?"
ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு ஒரு சின்ன குண்டூசி விழுந்துவிட்டது. குண்டூசியைக் காணோம் என்று சொன்னார் தொலைத்தவர். உடனே, என் கண்ணில் அது தென்பட்டுவிட்டது. இதோ இருக்கிறது என்று எடுத்துக் கொடுக்கிறேன். கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு யானை வந்து நிற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். யானையைக் காணோமே காணோமே என்று தொலைத்தவன் தேடுவானா? குண்டூசியைத் தொலைத்துவிட்டுத் தேடுவதில் நியாயம் இருக்கிறது. யானையைத் தொலைத்துவிட்டுத் தேடுவது நியாயமா? யானையைத் தேடி எடுத்துக் கொடுக்க வேண்டியது அவசியமா?
உலகத்தில் விஷ்ணு யார் என்று விளக்க முடியுமா? அப்படிக் கேட்ட உன்னை நொந்து கொள்வதா? என்னை நொந்து கொள்வதா? அறிந்த விஷயத்தைப் பற்றிச் சொல் என்றால், என்னால் ஒருநாளும் முடியாது.
எதைப் பற்றிச் சொன்னாலும் பேசியிருப்பேன். விஷ்ணு யார் என்று கேட்டு விவரிக்கச் சொன்னால், தலையில் இடித்துக் கொள்வது தவிர, வேறு என்ன செய்ய முடியும்?" என்று நொந்து கொண்டானாம் பிரகலாதன்.

Comments