பூதம் சூழ பொலிய வருபவர்!

நமது பழைமையான வழிபாடுகளில் ஒன்று பூத வழிபாடு. அனைத்துத் தெய்வங்களோடும் துணைத் தெய்வங்களாக பூதர்கள் இடம் பெற்றுள்ளனர். ‘பூத’என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி என்று பொருள். ‘பூதி’ என்பதற்கு செல்வம் என்று பொருள். பூதர்கள் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்தவர்களாகவும், ஆடல், பாடல்களில் விருப்பமுள்ளவர்களாகவும், இசைக்கருவிகளை இசைப்பதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு, பூதர்கள் அவரை விட்டுப் பிரியாது இருக்கின்றனர். சிவபெருமான், ‘பூதபதி’ என்றும் ‘பூத நாயகன்’என்றும் அழைக்கப்படுகிறார்.
தமிழ் வேதமான தேவாரத்தில் அனேக இடங்களில் பூதங்கள் பாட, புறங்காட்டிடை ஆடும் பிரானாகச் சிவ பெருமான் போற்றப்படுகின்றார். சிவபெருமானின் மகேசுவர வடிவங்களில் சிவபெருமானுக்குக் குடை பிடிப்பவர்களாகவும், பிட்சாடனர் வடிவில் அவருக்கு முன்பு பிட்சா பாத்திரத்தை ஏந்திச் செல்பவர்களாகவும், விபூதி மடலை ஏந்திச் செல்பவர்களாகவும், சிவபெரு மான் அளிக்கும் செல்வத்தை எடுத்துச் சென்று பக்தர்களுக்குத் தருபவர்களாகவும் பூதர்கள் சித்திரிக்கப் பட்டுள்ளனர். சிவாலயங்களில் பூதனின் வடிவைப் பெரிய வாகனமாக அமைத்து, அந்த வாகனத்தில் சிவ பெருமானை அமர்த்தி திருவீதியுலா நடத்துகின்றனர். அந்த வாகனத்துக்கு ‘பூத வாகனம்’என்று பெயர்.
சில தலங்களில் நான்கு கரங்களுடனும், சில தலங்களில் இரண்டு கரங்களுடனும் காட்சியளிக்கின்றார் பூதர். முழந்தாளை மடித்து ஊன்றி, மண்டியிட்டு அமர்ந்துள்ளார். முன் கரங்களை நீட்டித் தோள் மீது அமர்ந்திருக்கும் பெருமானின் திருவடிகளைத் தாங்கும் நிலையில் உள்ளார். பின்னிரண்டு கரங்களில் கத்தியும் கேடயமும் உள்ளன. தலையில் விரிந்த ஜடா மண்டலமும், அகன்ற கண்களும், கத்தையான மீசையும், இதழ் ஓரத்தில் துருத்திக் கொண்டிருக்கும் வளைந்த கோரைப் பற்களுடன் கூடிய தடித்த உதடுகளும், விடைத்த மூக்கும் கொண்ட திருமுகமும், திரண்டு செழுமையான அங்கங்களையும் கொண்டவராக, காண்பதற்கு அச்சமூட்டுபவராகக் காட்சியளிக்கிறார் பூதர்.
பூதருக்கு இணையாகப் பூதகி வாகனமும் இருக்கிறது. அகன்ற முகமும், விரிந்த கரிய விழிகளும், ஜடாமண்டலமும், திண்மையாகத் திரண்ட தேகம் கொண்டவளாக பூதகி அமையப்பெற்றிருக்கிறாள். சிவபெருமானைத் தாங்கி வரும் பூதனுக்கு மகாகாயன் என்றும், அம்பிகையைத் தாங்கி வரும் பூதகிக்கு பிரம்மதேஹினி என்றும் பெயர். ‘சிவபெருமான் பூதங்கள் சூழப் பொலிய வருவார்’ எனக் குறிப்பிடுகிறது தேவாரம்.
மதுரை மீனாக்ஷியம்மை சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள பூத வாகனம் தனிச் சிறப்பு வாந்தது. பல தன்னிகரில்லாச் சிறப்புகளையும், அழகிய சிற்பங்களையும் கொண்டது மதுரை திருக்கோயில். சுமார் முப்பத்து மூவாயிரம் சிற்பங்கள் இத்திருக்கோயிலுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றன. இறைவன் சுந்தரேஸ்வரர், சொமசுந்தர், சொக்கலிங்கநாதர்,
சொக்கேசர், ஆலவா அண்ணல், சொக்கநாதர். இறைவி மீனாக்ஷி, அங்கயற்கண்ணி, தடாதகை பிராட்டி. சிவத் தலங்களில் முக்கியமானவற்றில் மதுரையும் ஒன்று. இருப்பினும், இத்தலத்தில் மீனாக்ஷி அம்மனை வணங்கிய பின்னரே சுந்தரேஸ்வரரை வணங்கி வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
சிவபெருமான் நடனமாடிய தாகச் சொல்லப்படும் ஐந்து தலங்களில் மதுரையம்பதியும் ஒன்று. ஐம்பெரும் சபைகளில் இது வெள்ளி சபை எனப் போற்றப்படுகிறது. இதர நான்கு தலங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு மட்டுமே வலது காலைத் தூக்கி நடனமாடுகிறார். சிவபெருமானின் அறுபத்துநான்கு திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடைபெற்றதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன. அந்த அறுபத்துநான்கு திருவிளையாடல்களும் சுவாமி சன்னிதி பிராகாரங்களில்
சிற்பக் காட்சிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நவக்கிரகங்களில் புதன்காரகனாகக் கருதப்படு
பவர் சுந்தரேஸ்வரர். அதனால் புதனுக்குரிய பரிகாரங்களை, பிரார்த்தனைகளை இக்கோயிலில் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. மீனாக்ஷியம்மன் கோயிலுக்குள் நாற்புறமும் அமைந்திருப்பது ஆடி வீதி. கோயிலுக்கு வெளியே சித்திரை வீதிகள். அதனையடுத்து, ஆவணி வீதிகள். அதனையடுத்து, மாசி வீதிகள். இவைகளையடுத்து வெளிவீதிகள். தமிழ் மாதங்களின் பெயர்கள் வீதிகளுக்கு ஏன் வைக்கப்பட்டிருக்கின்றன? மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள், அந்தந்த மாதங்களின் பெயரிலான வீதிகளில்தான் நடை பெற்றிருக்கின்றன.
மதுரையம்பதியில் நான்கு மாதங்கள் அம்பாள் ஆட்சி. எட்டு மாதங்கள் சுவாமி ஆட்சி. அதாவது
சித்திரைலிருந்து ஆடி மாதம் வரை மீனாக்ஷியும், ஆவணி மாதத்திலிருந்து பங்குனி வரை சுந்தரேஸ்வர ரும் செங்கோல் தாங்கி ஆட்சி புரிகின்றனர். பன்னி ரெண்டு மாதங்களிலும் இக்கோயிலில் உற்ஸவங்கள் உண்டு. தை, மாசி, சித்திரை, ஆவணி என நான்கு மாத உற்ஸவங்களிலும் சுந்தரேஸ்வரர் - மீனாக்ஷி பூத வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். குறிப்பிட்ட நான்கு மாதங்களிலும் உற்ஸவத்தின் இரண்டாம் நாள் பூத வாகனத்தில் சுவாமி வீதியுலா. தை மற்றும் மாசி மாதத்தில் நான்கு
சித்திரை வீதிகளிலும், சித்திரை மாதத்தில் நான்கு மாசி வீதிகளிலும், ஆவணி மாதத்தில் நான்கு ஆவணி மூல வீதிகளிலும் பூத வாகனத்தில் சுவாமியும் அம் பாளும் வீதியுலா வந்து சேவை சாதிக்கின்றனர்.
‘மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமானடிகளே’
எனக் குறிப்பிடுகிறது சுந்தரர் தேவாரம். பூத வாகனத்தில் பவனி வரும் சிவபெருமானைத் தரிசிப் பதன் பயனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வலிமையான தேகம் உண்டாகும். எப்போதும் வற்றாத செல்வம் உண்டாகும்" என்கிறார் மதுரை அருள்மிகு மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இரண்டாவது நிர்வாகம் ஆனந்த் பட்டர் என்கிற கற்பூர பட்டர்

Comments