கர்ணனின் கொடை உள்ளம்!

கர்ணனின் கொடை உள்ளத்தைச் சொதிக்க விரும்பிய பரமாத்மா கண்ணபிரான், அவனுடைய அரண்மனைக்குச் சென்றார். அந்நேரம், கர்ணன் அழகிய பொற்கிண்ணம் ஒன்றில் எண்ணெய் வைத்துத் தேத்துக் கொண்டிருந்தான். கண்ண பரமாத்மாவைக் கண்டகர்ணன், அவரை வணங்கி, வரவேற்று உயரிய ஆசனமொன்றில் அமரவைத்தான். தம்மைக் காண வந்ததன் நோக்கம்யாது என கர்ணன் வினவ, மாயக்கண்ணனோ அவனைச் சொதிக்க வந்ததை மறைத்து மழுப்பினான். பிறகு, கர்ணனிடம், இந்தப் பொற்கிண்ணம் கலைநயத் தோடு மிகவும் அழகாக இருக்கிறதே. இதை எனக்குத் தானமாகக் கொடுத்து விடேன்" என்று கேட்டார் கண்ணபிரான்.
உடனே கர்ணன், சற்றும் யோசியாமல் தமது இடது கையால் அந்தப் பொற்கிண்ணத்தை எடுத்துக் கண்ணபிரானிடம் கொடுத்தான். கர்ணன் இடது கையால் தானம் கொடுத்தது, கண்ணபிரானுக்கு ஒரு மாதிரியான அசூயையை உண்டுபண்ணியது. கர்ணா, இவ்வளவு பெரிய கொடையாளி நீ. தானத்தை இடதுகையால் கொடுக்கக்கூடாது என் பதை அறிய மாட்டாயா?" என்றார்.
பரம்பொருளின் சொரூபமே, தாங்கள் என்னிடம் யாசகம் கேட்டதே எனது பாக்கியம். வலது கை முழுக்க எண்ணெய் படிந்துள்ளது. நான் எழுந்து போய் கையைக் கழுவி விட்டு வந்து கொடுக்கும் இடைப்பட்ட நேரத்தில் உங்களின் மனமோ அல்லது எனது மனமோ மாறி எனது கொடையை தடுத்துவிடக் கூடாது எனும் நோக்கில் தான் நீங்கள் கேட்டவுடன் இடது கையால் உடனே அதைக் கொடுத்து விட்டேன். தவறென்றால் என்னை மன்னித்து விடுங்கள்" என்றான். கர்ணனின் கொடையை எண்ணி வியந்தார் ஸ்ரீ கண்ண பரமாத்மா.


சஞ்சலமில்லா வாழ்வு!


ஏகநாதர் பொறுமையின் சிகரமாக வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றிக் கேள்வியுற்ற ஒருவர் அவரைத் தரிசித்து, சுவாமி, நாங்கள் தினசரி வாழ்வில் ஏகப்பட்ட பிரச்னைகளைச் சந்தித்து, அவற்றால் அலைக்கழிக்கப்படுகிறோம். ஆனால், தாங்களோ எந்த சஞ்சலமும் இன்றி வாழ்க்கையை அமைதியாக வாழ்கிறீர்கள். தங்களைப் போல நாங்களும் அமைதியான வாழ்க்கையை வாழ்வது சாத்தியமா? அதற்கு வழி இருந்தால் கூறுங்களேன்" என்றார்.
அதைக்கேட்ட ஏகநாதர் சற்று நேரம் யோசித்து விட்டு, அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். உனக்கு ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இன்னும் எட்டு நாட்களில் நீ இறந்து போகப்போகிறா" என்றார்.
ஏகநாதர் சொன்னது அவரைத் திடுக்கிட வைத்தது. மேற்கொண்டு ஏதும் பேசாமல் அங்கிருந்து விடை பெற்றுச் சென்ற அவரின் உள்ளம் முழுவதும், இன்னும் எட்டு நாட்களில் தாம் இறந்து விடப்போகிறோம் என்ற எண்ணமே நிறைந்திருந்தது. வீட்டுக்குச் சென்ற அவர் தமது மனைவியை அழைத்து, அன்புக்குரியவளே, இன்னும் எட்டு தினங்களில் என் வாழ்க்கை முடிந்து விடப்போகிறது. என்னோடு வாழ்ந்த இத்தனை காலங்களில் உன்னை எத்தனை விதங்களில் துன்புறுத்தியிருப்பேன். என் தவறுகளை மன்னித்து விடு" என்று கேட்டுக்கொண்டார்.
தமது குழந்தைகளை அன்புடன் தழுவிக் கொண்டு, என் செல்வங்களே, எத்தனையோ முறை உங்களைக் கோபித்துக் கொண்டிருக்கிறேன், அடித்திருக்கிறேன். அதற்காக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று கதறினார். அதேபோல், அக்கம் பக்கம் இருப்பவர்களிடமும், உறவினர்களிடமும் தமது தவறான செயல்களுக்காக மன்னிப்பு கோரினார்.
எட்டாவது நாள் வந்தது. ஏகநாதர் அந்த நபரின் வீட்டுக்குச் சென்றார். ஏகநாதரைக் கண்டதும் அவரது கால்களில் விழுந்து, சுவாமி எனக்கு மரண காலம் நெருங்கி விட்டதா?" எனக் கேட்டார்.
அதைப் பற்றிய உண்மை அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். எனக்குத் தெரியாது. அது சரி, கடந்த எட்டு நாட்களையும் நீ எப்படிக் கழித்தா?" என்று கேட்டார் ஏகநாதர்.
அதற்கு அவர், சுவாமி இந்த எட்டு நாட்களும் மரணம்தான் என் கண்முன்னே நின்றது. இந்த மன நிலையில் நான் யாரைத் திட்டுவது, யாரிடம் சண்டை போடுவது. அதற்கெல்லாம் எனக்கு ஏது நேரம், கடந்த எட்டு நாட்களாக நான் ஏற்கெனவே கோபித்துக் கொண்ட அத்தனை பேரிடமும் என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தேன்" என்று கூறினார்.
அதைக் கேட்ட ஏகநாதர், அன்பரே இன்னும் எட்டு தினங்களில் மரணம் நிகழப்போகிறது என்பதால்தான் நீங்கள் நல்ல மனிதர் என்று மற்றவர் போற்றும்படியும், மற்றவர்களுக்குப் பயன்படும் விதத்திலும் வாழ்ந்திருக்கிறீர்கள். அதையே சற்று மாற்றி, எட்டு வருடத்தில் அல்லது எண்பது மாதங்களில் அல்லது என்றோ ஒருநாள் இந்த வாழ்க்கை முடியப்போகிறது என்று தினமும் நினைவில்
வைத்துக் கொண்டால் இந்த சந்தோஷ வாழ்க்கையை உங்களால் நித்தமும் வாழ முடியும். இதை உணர்த்தவே அப்படி உங்களிடம் நான் சொன்னேன்.
அதுமட்டுமின்றி, நான் எப்படி சஞ்சலமின்றி வாழ்கிறேன் என்றும் கேட்டீர்கள். இந்த உலகில் இன்னும் எத்தனை காலம் வாழப்போகிறோம் என்று எண்ணி, அழியும் இந்த வாழ்க்கையில் பற்று வைக்காமல், அழியாத பரம்பொருளாகிய அந்த ஆண்டவன் மீது பற்றுவைத்திருப்பதாலும், சதா
சர்வகாலமும் மரணத்தையே நினைவில் பதித்து வாழ்வதாலேயும் தான் என்னைப் போன்றவர்களால் அமைதியாக வாழ முடிகிறது" என்று கூறினார். அதைக் கேட்ட அவரின் மனம் தெளிவுற்றது.


பலனில் உரிமை வேண்டாம்!

ஒரு சமயம், ஆற்றின் கரையோரம் இரண்டு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆற்றில் இரண்டு இளம் பெண்கள் மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட இளைஞர்கள் ஆற்றில் குதித்து இரு பெண்களையும் காப்பாற்றினர். அப்பெண்கள் அந்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இளைஞர்களில் ஒருவன், தான் காப்பாற்றிய பெண்ணிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் படி வேண்டினான். அவன், இந்த உலகமே உண்மை என்று கருதுபவன். மற்றொருவனோ, இறைவன் மட் டுமே உண்மை என்று கருதுபவன். அவன் தம்மைவிட மூத்த பெண்களைத் தாயாகவும், சமவயதுடையோரை சகோதரியாகவும், சிறுமிகளைத் தமது புதல்வியாகவும் பாவிப்பவன். அந்த இளைஞன் அப்பெண்ணிடம், சகோதரி, ஒரு நல்ல செயலைச் செய்ய இறைவன் எனக்கு வாப்பளித்தார். நான் எனது கடமையைச் செய்தேன்" என்று தெரிவித்தான்.
புறத்தளவில் இரு இளைஞர்களும் உயிரைக் காப்பாற்றுவது என்ற ஒரே செயலைச் செய்தாலும் மனத் தளவில் இருவரும் வேறுபட்டனர். அதன் காரண மாகப் பலனும் மாறுபட்டதாகவே அமைந்தது. பலனை எதிர்பார்த்துச் செய்யும் எச்செயலும் பந்தத்துக்கு வழிவகுக்கும். தம்மை இறைவனின் கருவியாகப் பாவித்துச் செயல்புரிவதும், அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பிப்பதும் ஆன்ம விடுதலைக்கு வழிவகுக்கும்.
இதைத்தான் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா கீதையில், ‘கர்மம் செய்வதற்கு மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு. கர்மத்தின் பலனில் ஒருபோதும் உரிமை பாராட்டாதே’என்று கூறி அருளினார்.
அழகு என்பது...
இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான ஏரி ஒன்றில் அமையப்பெற்ற படகு வீடு ஒன்றில், ரவீந்திர நாத்தாகூர் அன்றைய பௌர்ணமி இரவைக் கழித்தார். அப்போது அவர், ‘அழகியல் தத்துவம்’குறித்தகிரோஸ் என்ற அறிஞர் எழுதிய நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். புத்தகத்தைப் படித்ததில், ‘அழகு என்பது மனதில் உள்ளதா? வெளியில் உள்ளதா? பார்ப்பவர்களின் கண்களில் உள்ளதா?’ என்ற குழப்பம் தாகூருக்கு ஏற்பட்டது. எந்த முடிவுக்கும் வர இயலாமல் புத்தகத்தை மூடிவிட்டு அறையின் விளக்கை அணைத்துவிட்டு உறங்கச்
சென்றார்.விளக்கை அணைத்ததும் அறையில் இருள்தானே சூழவேண்டும். மாறாக, அந்தப் படகு வீட்டின் அறை முழுதும் முன்பை விட அதிகப் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது. காரணம், அறையின் ஜன்னல்கள் வழியாக, பௌர்ணமி நிலவு தன் ஒளிக்கிரணங்களைச் செலுத்திக் கொண்டிருந்தது.
தாகூர் அறையை விட்டு வெளியே வந்தார். நிச்சலனமாக அந்த ஏரியின் அழகை, பௌர்ணமி நிலவு தமது வெளிச்சக் கதிர்களால் மேலும் அழகு படுத்திக் கொண்டிருந்தது. பேரமைதியான அழகு நிலவில் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அமைதி, நிலவில் மட்டுமல்ல, தாகூரின் உள்ளத்திலும்தான் குடிகொண்டது. இந்த அற்புத அழகைத்தான் அந்தப் புத்தகத்தில் தேடிக் கொண்டிருந்தார் தாகூர்.
இந்த இனிய அனுபவத்தை, என்னைச் சுற்றிலும் அழகு விரிந்திருந்தது. ஆனால், சிறிய விளக்கு அந்த அழகைக் காணவிடாமல் மறைத்துக் கொண்டிருந்தது. செயற்கை விளக்கின் வெளிச்சத்தினால் இயற்கை நிலவின் ஒளி உள்ளே நுழைய முடிய வில்லை" என்று தமக்கே உரிய கவிநயத்துடன் எழுதினார் தாகூர். அதுபோல், செயற்கை விளக்கு எனும் அகங்காரம், நமது மனதினுள் புகுந்து இயற்கை வெளிச்சம் எனும் இறைபக்தியை உள்ளே வர விடாமல் தடுத்து விடுகிறது. ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றை விட்டு, உலகைக் காணுங்கள். உங்கள் பார்வைக்கு இந்த உலகே அழகாகத் தோன்றும்.

 

Comments