மந்திர வலிமை செந்தமிழுக்குண்டு!

அப்பாவுடன் கோயில் குளத்துக்குச் செல்லும் குழந்தைக்குப்
பசிக்குமே என்று பால் கொடுக்காது அனுப்பினாள் தாய்; தப்பா! இல்லையே! அதனால்தானே ஞானாம்பிகை, திரிபுரசுந்தரியின் ஞானப்பால் குழந்தைக்குக் கிடைத்தது! அந்த அம்பிகையும் அப்பனான பரமேஸ்வரன் சொல்லிய பின்தானே பால் தந்தாள்! அது தவறா? இல்லை! அம்மையும் அப்பனும் போட்டி போட்டுக்கொண்டு அருள் செய்தனர்! யார் அந்தப் புண்ணியக்கன்று? திருஞான சம்பந்தர்தான்!
‘வேத நெறி தழைத் தோங்க, மிகு சைவத்துறை விளங்க
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்தழுத’
அந்தக் குழந்தைதான் ஆளுடைப்பிள்ளை, புகலி வேந்தர், ஞானத்தமிழ் ஆகரர், நற்றமிழ்வல்ல ஞான சம்பந்தன். புகலியர்கோன், நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானப்பிள்ளை, சிறிய பெருந்தகை, சுட்டிக் காட்டிய பெருந்தகை என்றெல்லாம் சைவம் போற்றும் திருஞானசம்பந்தர்.
ஊழிப் பிரளயத்தில் தோணியாக மிதந்த தோணி புரம், புகலி, செண்பை, பிரமபுரம் என்றெல்லாம் புகழ் பெற்ற சீர்காழியில் கௌண்டின்ய கோத்திரத்து அந்தணர் சிவபாத இருதயர் - பகவதியார் திருமகனாக வந்தவதரித்த ஞானக்குழந்தை. முதல் மூன்று திருமுறைகள் தந்தார்.
பால்... யார் கொடுத்தார்?
குழந்தை கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்
களால் பிசைந்து, வண்ணமலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப ‘அம்மே! அப்பா!’ என்றழ, கருணா சமுத்ரமான திரிநேத்ரன், திரிபுரசுந்தரி, உன் ஞான அமிர்தத்தைப் பொன் வள்ளத்தில் எடுத்தூட்டு" எனப் பரிவுடன் புகல, கௌரி, பாலமுது தர, வாய் விட்டுச் சிரித்தது புகலிக் குழந்தை.


யார் கொடுத்த பாலடிசில் நீ உண்டது?" எனச் சினம் கொண்டு தந்தை வினவ, தோடுடைய செய்வியன்" என்று தோணி
புரத்து அம்மையப்பனைச் சுட்டிக் காட்டிய குழந்தைக்கு வயது மூன்று! காயத்ரி தொடங் குவது ஆகிய ஓம்+த் (தத்ஸ) இரண்டையும் இணைத்துத் ‘தோ’என்று பாடத் தொடங்கினாரோ? உவமையிலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞானம் உணர்ந்த சிவஞானசம்பந்தர் சைவ பானுவாக வந்து விட்டார்.


திருக்கோலக்கா சென்று கை தட்டிப் பாடிய இக்குழந்தையின் மென் விரல்கள் சிவக்குமே எனப் பொன்தாளம் தந்தார் தாளபுரீசுவரர். பொன்னாலான தாளம் ஓசை எழுப்புமா? வெண் கலமானால் ஓசை கிடைக்கும். குழந்தை தட்டிப்பார்த்தது. கை கொட்டிச் சிரித்தாள் கயிலை மலையான் மனையாள். சுவாமி, நீங்கள் சொல்லி நான் பால் தந்தது எனக்கு ஒரு குறையானது. இப்போது நீர் தந்த தங்கத் தாளத்தில் நான் ஓசை தந்து பிள்ளையை மகிழ்விக்கிறேன்" என்று ஓசை தந்ததால், ‘ஓசை கொடுத்த நாயகி’‘த்வனிப்ரதாயினி’என்று புகழ் கொண்டாள்.


‘மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்டவுருவமென்கொலோ!’- தேவாரம்
பாடலும் தாளமும் இணைந்தன. இந்தத் திருக்கோலக்கா அம்பாளை
வேண்டினால் பேசாத பிள்ளை பேசும். குரல் வளம் கிடைக்கும்.
விஷம் இறங்கியது:


புண்ணியக் கன்றான ஞானசம்பந்தர் சமுதாய உணர்வு மிக்கவர். சமயம் என்பது சமுதாயத்துக்காகத் தானே! திருமருகலுக்கு ஞானக் குழந்தை சென்று திருமடத்தில் தங்கியிருந்தார். வைப்பூர்  கோதாமன் என்ற செட்டியாருக்கு ஏழு பெண்கள். அவரது மனைவிக்கு ஒரே தம்பி. ஒவ்வொரு பெண் பெரியவளானதும், மைத் துனனே! உனக்கே என் மகள்" என்று சொல்லி விட்டு அதிகப் பணம், பரிசம் தந்த வேறு வேறு மாப்பிள்ளைகளுக்கு ஆறு பெண்களையும் மணம் முடித்து விட்டார். ஏழாவது பெண் இதை வெறுத்து மாமனுடன் திருமருகல் சிவபெருமான் சன்னிதியில் மணம் முடிக்க முடிவு செய்தாள். அன்றைய பண்பாடு, திருமணத்தின் முன் ஆணும் பெண்ணும் சேர்ந்து தங்க மாட்டார்கள். ஆண் அடியார்கள் தங்கும் திருமடத் தில் மாமன் தங்கியிருந்தான். பெண்ணடியார்களுடன் மங்கை நல்லாள் தங்கியிருந்தாள்.


சொதனை நச்சரவம் வடிவில் வந்தது. மணமகனாக வேண்டிய மாமனைப் பாம்பு தீண்டிவிட்டது. உறக்கம் மீளா நித்திரையாகி விட்டது. மணமகளாக அலங்கரித்து வெளியில் வந்த சிவநேசச்செல்வி செய்தியறிந்து துடித்தாள். என்ன சொல்லி அழ! பாம்புகூட அவனைத் தீண்டி விட்டது. எனக்கோ அவனைத் தொடவும் உரிமையில்லை. மணமாகியிருந்தால் மணவாளன் என்று தொட்டு அழுவேன்!" என்று கதறினாள்.


‘வாள் அரவு தீண்டவும் தான் தீண்டகில்லாள்’ என்ற சேக்கிழாரின் அடி நமது பண்பாட்டின் உச்சம்! செய்தியறிந்த ஞானசம்பந்தப்பெருமான், மருகலானை நோக்கி மனமுருகப் பாடினார்.
‘சடையாய் எனுமால், சரண்நீ யெனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உன் மெலிவே!’
‘பலரும் பரவப்படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன்றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்து
அலரும் படுமோ அடியாளிவளே!’
‘இறைவா! குவளை மலர் பூத்த தடாகம் நிறைந்தது திருமருகல். குவளை கண் போன்றது. இத்தனைக் கண் மலர்ந்தும் உன் கண்மலர் இவளை நோக்காதது ஏன்? அரவாபரணன் நீ! உன் ஆபரணம் இவளுக்கு ஆபரணம் ஏறாமல் தடுத்ததேன்! (தாலி அணிய விடாமல் தடுத்தது ஏன்?) இவள் அவருக்கு (வம்பு) ஆளாகலாமா? ஊரும், உறவும் வம்பு பேசுமே!’ மனிதாபிமானத்தோடு பக்தி கலந்துருகிப் பாடப் பாட, மாமன் விஷம் நீங்கிப் பிழைத்தெழுந்தான். குளத்தில் மூழ்கி வரச் சொல்லி, சம்பந்தப்பெருமானே இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார். ‘மந்திர வலிமை செந்தமிழுக்குண்டு.’விஷம் இறங்கியது. சைவத்தின் புகழும் சம்பந்தரின் பெருமையும் ஓங்கின.
அன்பும் தொண்டும்:
வயலின் இருபுறமும் கதிர்கள் சாய்ந்து, அறுவடைக்குத் தயாராக இருந்தன. கண்டார் சேக்கிழார்.


‘பக்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாமன்பர்
தத்தமுள் கூடினார்கள் தலையினால்ன் வணங்குமாப் போல்’இருந்ததாகப் பாடினார். பக்தர் பணிவுடையவர். நான் அடியேன் (தாசன்) என்றால், அவர்,‘நான் தாசானு தாசன்’(அடியார்க்கடியேன்) என்பார். ஞானக் குழந்தை, ஏறி வந்த பல்லக்கை அருளே வடிவான, தெய்வீகப் பழமான நாவுக்கரசர் பெருமான் சுமந்து வந்தாராம்? ‘அவர் எங்கு இருக்கிறார்?’என ஆளுடைப் பிள்ளை வினவ, ‘அடியேன்’ என்று கீழேயிருந்து ஆளுடை அரசின் குரல் வந்ததாம். கீழே குதித்து,‘அப்பரே’எனப் பிள்ளை உருக.‘அன்புக் குழந்தாய்!’என அரசு தழுவ, இரு பெருங்கடல் சங்கமித்தது கண்டு, ‘அரஹர மகா தேவா!’என்று பக்தர் கூட்டம் அலை ஓசை எழுப்பியதாம். அகக் கண்ணிலே திருப்பூந்துருத்திக் காட்சியைக் கண்டு பரவசப்படுங்கள்! ‘ஓம் நமசிவாய!’என ஊன் உருக, உளம் உருக, உயிர் உருகப் போற்றுக.

Comments