காலன் வழிபட்ட காலகாலன்!

மிழகத்தில் சைவமும் தமிழும் விளக்கமுற, அரும்பணி ஆற்றிய எண்ணற்ற ஆதீனங்களும் மடங்களும் உள்ளன. அத்தகைய ஆதீனங்களுள் ஒன்று மயிலாடுதுறைக்கு அருகில் தருமபுரம் என்னும் தலத்தில் அமைந்திருக்கும் தருமபுர ஆதீனம். இங்கே மிகவும் புராதனமான அபயாம்பிகை சமேத தருமபுரீஸ்வரர் கோயில் அமைந்திருக் கிறது. இந்தத் தலத்தில்தான் குருஞானசம்பந்தர் ஆதீனம் கண்டார்.
தருமபுர ஆதீன வளாகத்துக்குள் அமைந்திருக்கும் தருமபுரீஸ்வரர் ஆலயம் அகத்தியரால் ஏற்படுத்தப் பட்டு, அவருடைய வழி வந்த முனிவர்களால் வழிபடப் பெற்ற கோயிலாகும். ஆதியில் வில்வ விருட்சங்கள் நிறைந்திருந்ததால் வில்வாரண்யம் என்ற பெயரில் விளங்கிய இந்தத் தலத்தில் உள்ள இறைவனை யமதர்மன் வழிபட்டதால், அவன் பெயரிலேயே தருமபுரம் என்று அழைக்கப் படுகிறது. யமன் வழிபட்டதாகச் சொல்லப்படும் திருத்தலங்களில் தருமபுரமும் ஒன்று.

நாம் முதலில் ஆதீனத்துக்குச் சென்றோம். நாம் சென்றிருந்தபோது குருமகா சந்நிதானம், பூஜைக்குச் செல்ல இருப்பதாகக் கூறினார்கள். ஆதீனத்துக்கு உள்ளேயே அமைந்திருக்கும் சொக்கநாதர் சந்நிதியில், ஸ்படிக லிங்கத்தினால் ஆன சிவமூர்த்தத் துக்கு குருமகாசந்நிதானம் விஸ்தாரமாக பூஜை செய்தார்கள்.
பட்டத்துக்கு வரும் ஆதீனகர்த்தர்கள் வழிவழியாக பூஜித்து வரும் இந்த ஸ்படிக லிங்கம் ஆதீன குருமுதல்வருக்கு மதுரை சொக்கநாதப் பெருமானால் அருளப்பெற்றதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சொக்கநாதர் பூஜை முடிந்ததும், தருமபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, பொதிகைக்குச் செல்லும் வழியில் அகத்தியர் பூஜித்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் அவர் வழி வந்த முனிவர்கள் அங்கேயே அகத்தியராஸ்ரமம் அமைத்து இறைவனை பூஜித்து வந்தனர். ஆதீன குருமுதல்வரான குருஞானசம்பந்தர் அங்கே வந்தபோது, அவருடைய அருள்திறம் கண்டு, ஆசிரமத்தையும், தருமபுரீஸ்வரர் கோயில் உட்பட தாங்கள் வழிபாடு செய்து வந்த மற்ற கோயில்களையும் பரமாரிக்கும் பொறுப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றனர். அங்கேதான் குருஞானசம்பந்தர் ஆதீனம் நிறுவினார்.

ஆலயத்தில் இறைவன் தருமபுரீஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டு அற்புத தரிசனம் தருகிறார். யமனுக்கு அபயம் அருளியதால், அம்பிகை அபயாம்பிகை என்னும் திருப்பெயர் கொண்டு பக்தர்களுக்கு அருள்பொழிகிறாள். உள்பிராகாரத்தில் யமதர்மன் சிவலிங்க பூஜை செய்யும் காட்சியையும் நாம் தரிசிக்கலாம். இங்குள்ள இறைவனை வழிபட்டால், யமபயம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, சனிதசை நடப்பவர்கள் சனிக்கிழமைகளில் இங்கு வந்து வழிபட, சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
கோயிலின் வரலாறு குறித்து குருமகா சந்நிதானம் அவர்களிடம் கேட்டோம்...

‘‘தருமபுரம் வில்வாரண்யம் என்று பிரசித்தி பெற்ற திருத்தலம். திருக்கடவூரில் தான் செய்த தவற்றுக்குப் பிராயச்சித்தம் செய்வதற்காக யமதர்மன் ஈசனை பூஜித்த தலம்.
சூரியனின் புத்திரனான யமனுக்கு காலன், நடுவன், நமன் என்று பல பெயர்கள் உண்டு. அவன் தர்மத்தில் இருந்து சற்றும் தவறாதவன் என்பதால், யமதர்மன் என்று போற்றப்பெறுகிறான். ஆனால், அவனே ஒருமுறை தர்மம் தவறிவிட்டான்.
திருக்கடவூரில் சிவபக்தனான மார்க்கண் டேயனின் உயிரைக் கவர பாசத்தை வீசிய நேரத்தில், அவன் தன் தர்மத்தில் இருந்து தவறிவிட்டான். உரிய காலத்தில் மனித உயிர் களைக் கவர்வதுதான் அவனுடைய தர்மம். அப்படியிருக்க, மார்க்கண்டேயனின் உயிரை உரிய காலத்தில் யமதர்மன் கவர முயன்றது எப்படி தவறாகும் என்ற கேள்வி நமக்குத் தோன்றலாம். அதில் தவறு இல்லைதான். ஆனால், தான் சொல்லிய வார்த்தைகளில் இருந்து அவன் தவறிவிட்டான். அதுதான் யமதர்மன் செய்த தவறு.

அப்படி என்ன சொன்னான் யமதர்மன்?

நக்கீரரின் ‘கயிலை பாதி காளத்தி பாதி’ அந்தாதியில்,

தொழுது, நமனும்தன் தூதுவர்க்குச் சொல்லும்,
வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால், பணிந்தகலப் போமின்கள்
எத்தனையும் சேய்த்தாக என்று

யமன் உயிர்களைக் கவர்வதற்காகத் தன்னுடைய தூதர்களை அனுப்பும்போது, ‘காளத்திநாதனாம் சிவபெருமானின் குற்றமற்ற பக்தர்களைக் கண்டால், அவர்களிடம் இருந்து வெகுதூரத்துக்கு விலகிப் போய் விடுங்கள்’ என்று சொல்வானாம். இதையே அப்பர் சுவாமிகள் தமது காலபாச திருக்குறுந்தொகை பதிகத்தில்,

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்நம தீசன் அடியரை
விடைகொள் ஊர்தியினான் அடியார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே


என்று பாடி இருக்கிறார்.

படையும் பாசமும் பற்றிய யமதூதர்கள், ஈசனின் அடியார்களைக் கண்டால், அவர்களை அணுகாமல் போற்றிப் பணிந்து விலகிச் செல்லுமாறு வலியுறுத்துகிறார்.
சிவனடியார்களைக் கண்டால் அவர்களைப் பணிந்து போற்றி விலகிச் செல்லுமாறு கேட்டுக்கொண்ட யமதர்மன் தான் திருக் கடவூரில் சிறந்த சிவபக்தனான மார்க்கண் டேயனின் உயிரைக் கவர்வதற்காக பாசக் கயிற்றை வீசினான். தான் சொன்ன சொல்லில் இருந்து தவறிவிட்டான். அதுமட்டுமல்ல, யமன் வீசிய பாசக் கயிறு சிவபெருமானின் திருமேனியில் பட்டதும் தவறாகும்.
அந்தத் தவறுகளுக்கு தண்டனையாக ஈசனின் திருவடியால் சம்ஹாரம் செய்யப்பட்டான். ஆனால், யமனை சம்ஹாரம் செய்த திருவடி அம்பிகைக்கு உரிய இடது திருவடியாகும். இதைத்தான் அருணகிரிநாதர்,

‘கூற்று மரித்திடவே உதை பார்வதியார்க்கும்
இனித்த பெணாகிய மான்மகள்’


என்று பாடி இருக்கிறார்.

யமசம்ஹாரம் நிகழ்ந்ததும், பூமிபாரம் அதிகரித்துவிட்டது. பாரம் தாங்கமாட்டாத பூமிதேவி, ஈசனைப் பிரார்த்தித்துக் கொண்டாள். பூமிதேவியின் பிரார்த்தனையை ஏற்று ஈசன் யமனை உயிர்த்தெழச் செய்து அனுக்கிரஹம் செய்தார்.

தனக்கு அனுக்கிரஹம் செய்த ஈசனிடம், ‘‘ஐயனே, தங்கள் அடியவர்களிடம் நெருங்கக் கூடாது என்று சொல்லிய நானே சொன்ன சொல் தவறி பாவம் இழைத்துவிட்டேன். நான் வீசிய பாசக்கயிறும் தங்கள் திருமேனியில் பட்டுவிட்டது. நான் செய்த தவறுகளால் ஏற்பட்ட என்னுடைய பாவம் தீர உரிய பிராயச்சித்தத்தை தாங்கள்தான் அருளவேண்டும்’ என்று பிரார்த்தித்தான்.
ஈசன் யமனிடம் வில்வாரண் யத்துக்குச் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு கூறினார். அதன்படி இத் தலத்துக்கு வந்த யமன் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தான் செய்த தவற்றுக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொண்டான். யமன் சிவலிங்க பூஜை செய்யும் திருவுருவத்தை கோயிலில் தரிசிக்கலாம். இதேபோல் காரைக்கால் அருகில் உள்ள மற்றுமொரு தருமபுரத்தில் அமைந்திருக்கும் யாழ்மூரிநாதரை, தருமபுத்திரர் வழிபட்டார். அந்தக் கோயிலும் ஆதீனத்தின் நிர்வாகத்தில்தான் உள்ளது’’ என்று தெரிவித்தார்.
தருமபுரீஸ்வரர் கோயிலுக்கு மேற்புறத்தில் மற்றுமொரு பிரம்மாண்டமான ஆலயம் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் ஆதீன குருமுதல்வர் தமக்குப் பரிபூரண நிலை கூடிவருவதைத் திருவருளால் உணர்ந்து, ஞானபுரீஸ்வரர் என்னும் திருப்பெயரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, ஜீவசமாதி கூடினார்கள். இந்த ஆலயத்துக்கு ஒரு சோதனை வந்தது.
ஆதீனத்தின் 7-வது ஆதீனகர்த்தராக ல திருவம்பல தேசிகர் இருந்தபோது, தஞ்சையை ஆட்சி செய்து வந்த மன்னன் ஒருவன் வரும் வழியில் ஞானபுரீஸ்வரர் ஆலயத்தின் அர்த்தஜாம பூஜை மணியோசை கேட்டு, இறைவனை வழிபட்டான். உடன் இருந்த சிலர், அரசன் வணங்கியது ஒரு சமாதிக் கோயில் என்றும், அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்ள அரசன் அந்தக் கோயிலை இடிக்கவேண்டும் என்றும் கூறினர். அதைக் கேட்டு அரசனும் ஆட்களை விட்டு கோயிலை இடிக்கச் சொன்னான்.

அதைக் கண்டு பதறிய அடியார்கள், சந்நிதானத்திடம் சென்று முறையிட்டனர்.

ஈசன் பலகீனன் என்றக்கால் ஆலயத்தின்
மோசம் வந்தது என்று மொழியலாம் - ஈசனே
ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவும் தான் ஆனால்
நோக்குவது என் யாம் பிறரை நொந்து


என்று அடியவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது சிவபெருமானும் தம்முடைய கூத்தொலியை அடியவர்கள் கேட்குமாறு செய்தார். அவ்வொலியைக் கேட்ட சந்நிதானம் திருவைந்தெழுத்தை ஜபித்தார்கள்.

மன்னனின் ஆட்கள் கோயில் சுவர்களை இடித்தபோது, கடப்பாரை படும் இடங்களில் எல்லாம் ரத்தம் பெருக்கெடுக்க, மயங்கி விழுந்தனர். மன்னனின் கண்பார்வையும் பறிபோனது. தவற்றுக்கு வருந்திய மன்னன் சந்நிதானத்திடம் சென்று மன்னிப்பு கேட்டான்.
இறைவன் அருள்புரிவான் என்று அருளிய சந்நிதானம், மன்னனை அழைத்துக் கொண்டு ஆலயத்துக்குச் சென்றார். ஆலயத்தில் மயங்கிக் கிடந்தவர்கள் மீது திருநீறு தெளிக்க, அனைவரும் மயக்கம் தெளிந்து எழுந்தனர். மன்னனும் ஒரு கண் பார்வை பெற்றான். இந்த நிகழ்ச்சியின் மூலமாக சந்நியாசம் பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதை உணர்த்தும் விதமாக ‘வருணாச்சிரம சந்திரிகை’ என்னும் நூலையும் இயற்றி அருளினார்கள்.
குருவருளால் ஒரு கண் பார்வை பெற்ற மன்னன், குருமுதல்வரின் கட்டளைப்படி தருமபுரம் அருகில் பந்தல் அமைத்து தங்கி, ஒரு மண்டல காலம் ஈசனை பூஜித்து, மற்றொரு கண்பார்வையும் பெற்றான். மன்னன் பந்தல் அமைத்து தங்கிய இடம் மன்னன்பந்தல் என்ற பெயரில் தருமபுரத்துக்கு அருகில் உள்ளது.

தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் இந்த இரண்டு கோயில்களுடன் மேலும் பல கோயில்களும் அருளொளி பரப்பி நிற்கின்றன.


ஆதீனத்தின் அருளாட்சிக்கு உட்பட்ட திருக்கோயில்கள்:
சிவலோகத்தியாகர்-திருவெண்ணீற்று உமையம்மை, ஆச்சாள்புரம்.
பிரம்மபுரீஸ்வரர்-திரிபுரசுந்தரி, சீர்காழி.
அமிர்தகடேஸ்வரர்-அபிராமி, திருக்கடவூர்.
வீரட்டேஸ்வரர்-ஞானாம்பிகை, திருக்குறுக்கை.
வைத்தியநாதர்-தையல்நாயகி, வைத்தீஸ்வரன்கோயில்.
குமரக்கட்டளை சுப்பிரமணியர், மயிலாடுதுறை.
வதான்யேஸ்வரர்-ஞானாம்பிகை, வள்ளலார்கோயில், மயிலாடுதுறை.
சக்திபுரீஸ்வரர்-ஆனந்தவல்லி, கருங்குயில்நாதன்பேட்டை.
கம்பகரேஸ்வரர்-அறம்வளர்த்த நாயகி, திருபுவனம்.
சொன்னவாறறிவார்-அரும்பன்னவனமுலையாள், குத்தாலம்.
சுந்தரேஸ்வரர்-ஞானாம்பிகை, மணக்குடி.
ஐயாறப்பர்-அறம்வளர்த்த நாயகி, திருவையாறு.
விசுவநாதர்-விசாலாட்சி, மயிலாடுதுறை.
செஞ்சடையப்பர்-பெரியநாயகி, திருப்பனந்தாள்.
யாழ்மூரிநாதர்-மதுரமின்னம்மை, தருமபுரம் (காரைக்கால் அருகில்)
துறைகாட்டும் வள்ளல்-காம்பனதோளியம்மை, விளநகர்.
வீரட்டேஸ்வரர்-இளங்கொம்பணையாள், திருப்பறியலூர்.
குற்றம்பொறுத்தநாதர்-கோல்வளைநாயகி, தலைஞாயிறு.
இலக்குமிபுரீஸ்வரர்-உலகநாயகி, திருநின்றியூர்.
சுயம்புநாதர்-பவானியம்மை, பேரளம்.
உச்சிநாதர்-அஞ்சனாட்சி, திருக்கற்குடி.
இராஜன்கட்டளை-திருவாரூர்.
மௌனமடம், திருச்சி.
பிச்சைக்கட்டளை-திருவிடைமருதூர்.
பிரம்மபுரீஸ்வரர்-வண்டமர்பூங்குழலாள், திருக்கோளிலி.
முல்லைவனநாதர்-அணிகொண்ட கோதையம்மை, திருமுல்லைவாசல்.

குருமுதல்வர் குருஞான சம்பந்தர்

ஆலயங்களில் வழிபாடுகள் முறைப்படி நடைபெறவும், சைவமும் தமிழும் தழைத்தோங்கவும் அயராது பாடுபட்டு வரும் தருமபுர ஆதீனத்தின் குரு முதல்வர் குருஞானசம்பந்தரின் அருள்வரலாறு...
வில்லிபுத்தூரில் சுப்பிரமணிய பிள்ளை-மீனாட்சி அம்மை ஆகியோர் தங்களின் தவப் பயனாகத் தோன்றிய குழந்தைக்கு ஞானசம்பந்தர் என்று பெயரிட்டு அருமை பெருமையாக வளர்த்து வந்தனர். ஒருநாள் அவர்கள் மதுரை சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சி அம்பிகையையும் தரிசிக்க பிள்ளையுடன் வந்தனர். அவர்கள் ஊருக்குத் திரும்பியபோது, ஞானசம்பந்தர் அவர்களுடன் செல்லாமல் கோயிலிலேயே தங்கிவிட்டார்.
நாளும் மீனாட்சி அம்பிகையையும் சோமசுந்தரக் கடவுளையும் வழிபட்டு வந்தார். தினமும் பொற்றாமரைக் குளத்தில் சிவனடியார்கள் சிவபூஜை செய்வதைக் கண்டு, தமக்கும் ஒரு சிவலிங்க மூர்த்தம் கிடைத்தால் அவர்களைப் போல் தாமும் சிவபூஜை செய்யலாமே என்று விரும்பினார். அன்றைய இரவில் அவருடைய கனவில் தோன்றிய ஈசன், பொற்றாமரைக் குளத்தின் ஈசான்ய மூலையில் உள்ள கங்கா தீர்த்தத்துக்குள் யாம் இருக்கிறோம். எடுத்து பூஜிப்பாயாக’’ என்றார்.

மறுநாள் காலையில் ஞானசம்பந்தரும் அப்படியே பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி சிவலிங்க மூர்த்தம் கிடைக்கப் பெற்றார். ஆனால், முறைப்படி உபதேசம் பெற்றுத்தானே சிவபூஜை செய்யவேண்டும்? தக்க குருநாதருக்காகக் காத்திருந்தார். ஈசனே திருவாரூரில் உள்ள கமலை ஞானப்பிரகாசரிடம் தீட்சை பெறுமாறு அனுப்பி வைத்தார். அதேபோல் கமலை ஞானப்பிரகாசரின் கனவிலும் ஐயன் தோன்றி, ஞானசம்பந்தருக்கு தீட்சை வழங்குமாறு உத்தரவு கொடுத்தார்.

திருவாரூர் சென்ற ஞானசம்பந்தர் கமலை ஞானப்பிரகாசரிடம் சீடனாகச் சேர்ந்தார்.

கமலை ஞானப்பிரகாசர் தினமும் ஆரூரர் ஆலயத்துக்குச் சென்று அர்த்தஜாம பூஜையை தரிசித்த பிறகே வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் அப்படி அர்த்தஜாம பூஜையை தரிசித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது, அவருக்கு தீப்பந்தம் ஏந்தி வழிகாட்ட பணியாள் இல்லாத காரணத்தால், ஞானசம்பந்தப் பெருமானே அவருக்கு தீப்பந்தம் ஏந்தி வழிகாட்டி வந்தார். வீட்டை அடைந்ததும் கமலை ஞானப்பிரகாசர் ஏதோ நினைவில், ‘அப்படியே நில்’ என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

இரவு மழை கொட்டியது. ஆனாலும், ஞானசம் பந்தர் ஏந்தி இருந்த தீப்பந்தம் அணையவே இல்லை. விடிந்ததும் இந்த அற்புதத்தைக் கண்ட ஞானப்பிரகாசரின் மனைவி, நடந்த அதிசயத்தை கணவரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தருக்கு இறைவனின் அருள் பூரணமாக இருப்பதை உணர்ந்துகொண்ட கமலை ஞானப்பிரகாசர் அவருக்கு ஆசி கூறி, சைவமும் தமிழும் தழைக்க அரும்பணி ஆற்றுமாறு கூறி விடை கொடுத்தார்.

குருநாதரைப் பிரிய மனம் இல்லாமல் தருமபுரத்துக்கு வந்த குருஞானசம்பந்தர், தருமபுர ஆதீனம் நிறுவி சமயப் பணியும் தமிழ்ப்பணியும் வழிவழி தொடரச் செய்தார். திருஞானசம்பந்தருக்கு உமையன்னை ஞானப்பால் புகட்டியதுபோல், குருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமானை தரிசிக்கச் சென்றபோது, உணவும் உறக்கமும் துறந்து பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தபோது, தம் அன்பரின் பசி போக்கிட சிவகாமி அம்மைக்கு இறைவன் குறிப்பால் உணர்த்தினார். சிவகாமி அம்மையும் தமக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு இருந்த பால் பாயசம், திருவமுது, கங்கை நீரையும் எடுத்து வந்து குருஞானசம்பந்தருக்கு அளித்து அருளினார். இவருடைய காலத்தில் எங்கும் அன்பும் அமைதியும் நிலவியது.

திருமாங்கல்யம்!
மங்கலப் பெண்கள் அணிந்து கொள்ளும் திருத்தாலி செளபாக்ய லட்சுமியின் வடிவமாகும். இதனால் தாலிக்குத் திருமாங்கல்யம் என்ற பெயர் உண்டாயிற்று. தாலியில் மகாலட்சுமியின் உருவம் அமைந்த பொட்டையும் சேர்த்துக் கொள்வர். இதற்கு மகாலட்சுமி பொட்டு என்று பெயர்.

Comments