முருகா... முருகா!

நாமக்கல் மாவட்டம் பேரக்குறிச்சி முருகன் கோயிலில், வேடவன் தோற்றத்தில் அருள்கிறார் முருகப்பெருமான். அருண கிரியாரால் பாடல் பெற்ற தலம். இங்கே, அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யும்போது, முருகப்பெருமானின் விக்கிரஹத் திருமேனியில் இருந்து வியர்வை பெருகும் அற்புதம் நடக்கிறது!
கோவை - புஞ்சைபுளியம் பட்டியில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது ஓதிமலை. இங்கே அருள்பாலிக்கும் முருகப் பெருமான் ஐந்து திருமுகங்கள், எட்டுத் திருக்கரங்களுடன் விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார். இங்கே, வெள்ளை நிற மண்ணையே பிரசாதமாகத் தருகிறார்கள்.

இலங்கை மட்டக்களப்பு மாகாணத்தில் அமைந்துள்ளது உகந்தை மலை. இங்கு கோயில் கொண்டிருக்கும் முருகனுக்கு, மயில் வாகனத்துக்கு பதிலாக மூஞ்சுறு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு நகருக்கு அருகில் உள்ளது சென்னிமலை. இங்கே, இரண்டு சிரங்களுடன் காட்சி தரும் முருகப்பெருமானுக்கு அக்னி ஜாதன் என்று திருப்பெயர். அதேபோல், ஈரோடு மாவட்டம் காசிப்பாளையத்தில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான், மூன்று தலைகள், ஆறு திருக்கரங்களுடன் தரிசனம் தருகிறார். பத்து தலைகளுடன் காட்சி தரும் முருகனை குற்றாலத்தில் அருகில் உள்ள இலஞ்சி எனும் தலத்தில் தரிசிக்கலாம்.

யாக்ஞவல்கியரால் அருளப்பட்ட யாக்ஞவல்கிய ஸ்மிருதி எனும் ஞானநூலில், முருகப்பெருமானின் பெயர், திலக ஸ்வாமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சேவற்கொடியுடன் முருகப்பெருமான் காட்சி தருவதை பல தலங்களில் தரிசித்திருக்கிறோம். ஆனால், பல்லடம் அருகில் உள்ள தென்சேரி மலைப்பாளையத்தில் உள்ள வேலாயுத ஸ்வாமி கோயிலில், சேவற்கொடிக்கு பதிலாக சேவலையே கையில் கொண்டு வித்தியாசமாகக் காட்சி தருகிறார்.

Comments