பகுசாராஜி மாதா!

குஜராத் மாநிலத்தில் பகுசாராஜி பாலா, அம்பாஜி அம்பிகா மற்றும் பவாகாத் காலிகா என மூன்று சக்தி பீடங்கள் உள்ளன. இவற்றில் பகுசாராஜி பாலா மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளே குஜராத்தில் வசிக்கும் பெருவாரியான மக்களின் குலதெய்வமாக வணங்கப் படுகிறாள். குஜராத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஓர் நகரம் பகுசாராஜி. இந்த நகரத்தின் மையப் பகுதியில் அருள்பாலிக்கிறாள் பகுசாராஜி மாதா.
சரண் பாபல்டான் டேத்தாவின் மகள் ஒரு நாள் தன் சகோதரிகளுடன் வண்டியில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாள். அவர்களை பாபியா என்ற கொள்ளை, கொலைக்காரன் வழி மறித்தான்! சரண் இன மக்கள், தாங்கள் யாரிடமாவது சிக்கி; இனி தப்ப இயலாது என்ற நிலை வரும்போது; எதிரியால் தீங்கு வரும் முன் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்வார்கள்! அவர்கள் இன மக்களின் ரத்தம் பூமியில் சிந்துவது பெரும்பாவமாகக் கருதப்பட்ட காலம் அது.
இதனால் அந்தச் சகோதரிகள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டார்கள். ஆனால், இறக்கும்முன் சரண்பாபல்டான்டேத்தாவின் மகள், அந்தக் கொள்ளைக் காரனிடம், நீ ஆண்மையற்றவனாகப் போகக் கடவாய்" என சபித்தாள். அதனால், கொள்ளைக்காரன் பாபியா ஆண்மையை இழந்தான். தனக்கு சாபம் கொடுத்தது பெண் அல்ல; தெய்வம் என்பதை உணர்ந்தான். அந்த இனத்தில் திருமணமாகாதவர்கள் பலாத்காரமாக இறந்தால் தெய்வமாக வணங்கப்படுவர். அப்பெண்ணும் தெய்வமானாள்.
பாபியா, பெண்ணாக ஆடை உடுத்தி, பெண்ணாகவே வாழ்ந்தான்! இது, அவனுடைய ஹிஜிரா இன மக்களை அடியோடு மாற்றியது. அவர்கள் ஹிம்சைக்கு எதிராக வாழத் தொடங்கினர். எந்த ஒரு ஜீவராசிக்கும் தீங்கு செய்யக் கூடாது. செய்தால் பகுசாராஜி மாதா தம்மை தண்டித்து விடுவாள் என நம்பினர். அதன்படியே இன்றுவரை வாழ்கின்றனர்.
வடநாட்டில் திரிபுரசுந்தரி என்ற பெயருக்குத் தனிப் புகழ் உண்டு. அதனால் இப்பெண் தெய்வமும் ‘பால திரி புரசுந்தரி’ மாதா என அழைக்கப்பட்டாள்.
இத்தலமும் அம்பாளின் ஒரு சக்தி பீடமாகும். அன்னை சக்தியின்கைகள் விழுந்த இடம்! இதனால் அம்பாளை இங்கு பகவதி எனவும் அழைக்கின்றனர். கோயிலில் ஸ்ரீ கபினஷ், நீலகாந்த் மகாதேவ், சகரியமகாதேவ், ஹனுமன் உட்பட பல தெய்வங்களும் உள்ளன!
கருவறையில் அம்மன் வலக்காலை இடது காலின் மீது போட்டபடி, சேவல் மீது அமர்ந்துள்ளாள். மேல் இரு கரங்கள் கத்தியும் வேதங்களும் தாங்க, கீழ் இருகரங்களில் ஒன்று அபய ஹஸ்தமாகவும், மற்றதில் சூலமும் தாங்கி காட்சியளிக்கிறாள்.
மகப்பேறு இல்லாதவர்கள், குறைபாடு கொண்ட குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்கள் குறை தீர இந்த அம்பாளிடம் வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறப் பெற்றவர்கள் குழந்தைக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். இங்குள்ள மானச ரோவர் ஏரிக்கரையில் இந்தவைபவம் கண் கொள்ளாக் காட்சியாகும். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் குழந்தையாக இருந்தபோது அவருக்கு இங்கு மொட்டை போட்டதாக உள்ளூரில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இக்கோயிலை பல்வேறு காலகட்டங்களில் பலர் புனரமைத்துள்ளனர்.
கேட்டவர்களுக்கு கேட்டதைத் தரும் பகுசாராஜி அம்மனின் லீலைகளுக்கும் குறைவில்லை.
இப்பகுதியை ஒரு சமயம் தந்தாஜன் என்ற அரக்கன் ஆண்டு வந்தான். அவன் மக்களை, குறிப்பாகப் பெண்களைத் துன்புறுத்தி வந்தான். மாதாஜி பெண் குழந்தை வடிவில் தோன்றி அவனைக் கொன்றாள்!
மற்றொரு சமயம், இப்பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவர்கள் உணவு தயாரித்து அம்பாளுக்கு படைக்க விரும்பினர். அப்போது அங்கு படையுடன் வந்த அரசன், இந்த உணவைக் கொண்டு எனக்கும் என் படைக்கும் உங்கள் மாதா உணவளிப்பாளா?" என கேலியாகக் கேட்டான். உடனே அச்சிறுவர்கள் மாதாவிடம் வேண்டி அன்னத்தைக் கொடுக்க, அது கடைசி படை வீரன் வரைக்கும் வர, அதிசயித்துப்போன அரசன் மாதாவின் பெருமையைக் கண்டு வியந்து காணிக்கைகள் பலவற்றைக் கொடுத்துச் சென்றானாம்!
அதேபோல், வாய் பேச முடியாத வல்லபவ் பட் என்ற 13 வயது இளைஞனை அம்பாள் தன் சக்தியால் பாடல்களை பாடவைத்து, பேச வைத்தாளாம்.
நவராத்திரி விழா இங்கு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்களும் அம்பாள் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறாள். அச்சமயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர்.
அமைவிடம்: அகமதாபாத்திலிருந்து 110 கி.மீ. தொலைவிலும் மகேகானாவிலிருந்து மேற்கே 35 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது.

Comments