பொதுமை நாயகன் வல்லப கணபதி

கடல் கடந்து தமிழ் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் விதமாக, நியூயார்க் நகரின் ஃப்ளஷிங் பகுதியில் உள்ளது ஸ்ரீ மகா வல்லப கணபதி ஆலயம். வட அமெரிக்க இந்து ஆலய சமூக அமைப்பின் மேற்பார்வையில் பராமரிக்கப்படும் இக்கோயிலின் உள்ளே இருக்கும்போது தமிழக கோயிலில் இருப்பதைப் போன்றே உணர்வு எழுகிறது.
ஏழு கலசங்கள் கொண்ட ராஜகோபுரம், சிற்பவேலைப்பாடுகளுடன் வரவேற்கிறது. வாயிலிலிருந்து உள்ளே செல்லும் மண்டபத்தின் இருபுறமுள்ள பதினாறு கற்தூண்களில் ஷோடஸ விநாயகரின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கொடி மரம், ஐந்து படிகளைக் கடந்து சென்றால் கருவறையில் நடுநாயகமாய் வீற்றிருந்து ஸ்ரீமகா கணபதி, வலம்புரி விநாயகராக அருள்பாலிக்கிறார். பட்டுப் பீதாம்பரம், மலர் மாலை, வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு வலது தந்தம் முறிந்த நிலையில் தும்பிக்கையை வலப்புறம் சுருட்டி இப் பெருமான் காட்சியளிக்கிறார். பளபளக்கும் பளிங்குத் தரை. எங்கும் எதிலும் தூய்மை.
கூடத்தைச் சுற்றி ஈசன்-பார்வதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசர், ராமர், சுதர்சன நரசிம்மர், ஸ்வர்ண பைரவர், முருகன், சத்யநாராயணர், ஐயப்பன், ராகவேந்திரர், கோடியர் மாதா என ஏறக்குறைய முப்பது சன்னிதிகள் அமைந்துள்ளன. 2010ம் ஆண்டு ராஜகோபுரம் நிர்மாணிக் கப்பட்டு குடமுழுக்கு நடந்தபோது, ஸ்ரீவேங்கடாசலபதி, மஹாலக்ஷ்மி, அனுமன், நாகேந்திர ஸ்வாமி, நவக் கிரஹ சன்னிதிகள் புதிதாக அமைக்கப் பட்டுள்ளன.
பதினொரு டாலர் மதிப்புள்ள த்ரி சதி நாம அர்ச்சனைத் தட்டில் தேங்காய், இரு ஆப்பிள்கள், உலர்ந்த திராட்சைப் பொட்டலம் இருக்கும். தேங்காயை நாம்தான் அதற்குரிய இடத்தில் உடைத்துத் தர வேண்டும். கருவறையில் உடைப்பதில்லை. கற்பூரம் ஏற்றப்படு வதில்லை. அகல் விளக்கில் நெய் தீபம் மட்டுமே காட்டப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் குருக்கள் அன்றாட பூஜைகளைப் பின்பற்றுகின்றனர்.
நாங்கள் சென்றிருந்த சமயம் வேங் கடேஸ்வர பிரம்மோற்ஸவத்தின் கடைசி நாள் விழாவான ரதோற்ஸவம் நடைபெற்றது. அன்பர்கள் வடம் பிடித்து இழுக்க, வெள்ளி ரதத்தில் உற்ஸவர் கோலாகலமாக நகர்வலம் வந்தது கண்கொள்ளக் காட்சி! விழா நாட்களில் கோவிந்தன் வெவ்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.
பல்வேறு விஷயங்களில் இவ்வாலயம் தனிச்சிறப்புற்று விளங்குகிறது. சிவாலயத்துக்கு ரிஷபம், வைணவ விண்ணகரத்துக்குச் சங்கு, சக்கரம், கருடக் கொடிகள் இருப்பதுபோல, வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாத ஒரு தனிச் சின்னம், இலச்சினை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமை, பரந்த மனப்பாங்கு, சகிப்புத் தன்மை, அனைத்துச் சமயங்களையும் சமமாக பாவிக்கும் விதமாக மத்தியில் குத்துவிளக்கு, அதைச் சுற்றிலும் ஓம், கன்ஃபூஷியஸின் குறியீடு, சிலுவை, யூதர்களின் மேகன் டேவிட், ஜீவன் முக்தியைக் குறிக்கும் சமணர்களின் சின்னம் பொருந்திய முத்திரை அமைக்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர்கள் பெறும் தட்சணை, அன்பர்களின்
வீடுகளில் விசேஷ பூஜை செய்விக்கத் தரப்படும் சம்பாவணை, அன்பளிப்பு மற்றும் ஏனையக் கட்டணங்கள் அனைத்தும் காசோலையாகப் பெறப்பட்டு தேவஸ்தானத்தில் அளிக்கப்படுகிறது. இத்தொகை மாதந்தோறும் அனைத்து அர்ச்சகர்களுக்கும் வேறுபாடின்றி சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆலயத்தில் விற்கப்படும் நன்கொடைச் சான்றுப் பத்திரங்கள் மற்றொரு வித்தியாசமான முயற்சி. நம் வீட்டு நிகழ்ச்சிகளில் இதைப்பிறருக்கு அன்பளிப்பாகத் தந்தால், அந்த அன்பர்களும் ஆலயக் கைங்கர்யங்களில் பங் கெடுத்து தெய்வ அருள் பெற வாய்ப்பளிக்கலாம்.
உடல் நலிவுற்றோரும், மூத்தோர்களும் வழிபட ஏதுவாக சக்கர நாற்காலி வசதியும், சாய்தள மேடையும் உள்ளது. இக்கோயிலுக்கென ஓர் இசைக்குழு உள்ளது. இதில் பெரியோர், சிறார்கள் என சுமார் நூறு அங்கத் தினர்கள் உள்ளனர். பண்டிகை நாட்களில் நடைபெறும் இக்குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஆலய பாடசாலையில் இயல், இசை, நாடகக் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்துக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள். தென்னிந்திய மொழிகள், இந்தி முதலியவை கற்பிக்கப்படுகின்றன. பகவத்கீதை, நாலாயிர திவ்யப் பிரபந்தம், வேதம் பயில்விக்கும் வகுப்புகளில்
வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கிறார்கள்.
கோயிலில் அனைத்துப் பண்டிகைகளும் அனு
சரிக்கப்படுகின்றன. முதல் மற்றும் மூன்றாவது செவ் வாய்க்கிழமை காலை சுந்தர காண்டம் பாராயணம், அனுமன் சஹஸ்ரநாமம், மூன்றாம் சனிக்கிழமை சத்சங்கம், பௌர்ணமி அன்று சத்யநாராயணர் பூஜை ஆகியவை நடைபெறுகின்றன.
அமைவிடம்: 45 57,Bowne Street, Queens Borough, Flushing, NY. 11355
தகவலுக்கு: + 1718 460 8484
மசூலிப்பட்டினத்தில் பாண்டுரங்கன்!
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிப் பட்டினத்தில் உள்ளது பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டல் திருக்கோயில். மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்கே ராதா, ருக்மிணி, சத்ய பாமா ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. பௌர்ணமி தோறும் சுவாமிக்கு விசேஷ பூஜைகள் உண்டு. கார்த்திகை பௌர்ணமி மிக விசேஷம். ஆஷாட சுக்ல ஏகாதசி சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தனியாரால் நிர்வகிக்கப்படும் கோயில் இது. இதன் சிறப்பம்சம், பண்டரிபுரம் கோயிலைப் போன்றே அமைக்கப்பட்டுள்ள கருவறையும் பாண்டுரங்கனின் திருமேனியும்தான்!

Comments