ஹரிஹரேஸ்வரர்

கர்நாடக மாநிலம், காந்தி நகர் பகுதியில் அமைந்துள்ளது ஹரிஹரேஸ்வரர் திருக்கோயில். கருவறையில் மூலவர், அரியும் ஹரனும் பாதாதி கேசமாக முறையே வலப்புறம் சிவனும், இடப்புறம் மகாவிஷ்ணுவுமாக இணைந்த திருக்கோலத்தில் காட்சி தருகின்றனர். கோயிலுக்கு
ராஜகோபுரம், மதில் சுவர்கள் இல்லை. குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால், எந்நேரமும் மனித நடமாட்டம் இருந்துகொண்டே உள்ளது.
குகாசுரன் என்ற அரக்கன் பிரம்மாவை நோக்கித் தவமிருந்து, சிவபெருமானாலோ, மகாவிஷ்ணு வாலோ தமக்கு மரணம் நேரக் கூடாது எனும்
நூதன வரத்தைப் பெற்றிருந்தான். இதனால், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும், பொது மக்களுக்கும் பெரும் இடையூறு விளைவித்து வந்தான். அரக்கனது கொடுமை அதிகரிக்கவே பிரம்மதேவன்,
சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் இணைந்த ஒரு அவதாரத்தை உருவாக்கி, துங்கபத்ராவும் ஹரித்ரா நதியும் இணையுமிடத்தில் குகாசுரனை சம்ஹரிக்க வைத்தார்.
அரிஹரனாகத் தோன்றி அரக்கனை சம்ஹரித்த இப்பெருமானை, ‘ஹரிஹரேஸ்வரர்’ எனும் திருநாமம் கொண்டு பக்தர்கள் அழைக்கலாயினர். இந்த இடத் திலேயே பிற்காலத்தில் ஒரு கோயில் எழுந்தது. கி.பி.1220களில் இப்பகுதியை ஆண்ட வீர நரசிம்ஹா-ஐஐ என்ற மன்னனின் சேனாதிபதியான பொலாவா என்பவன் இக்கோயிலை முதலில் எழுப்பியதாக தல வரலாறு. அடுத்து, 1268ல் மற்றொரு சேனாதிபதி சோமா என்பவன் இக்கோயிலை புனர்நிர்மாணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
துவஜஸ்தம்பத்தைக் கடந்தால் எண்கோண வடிவில் ஓர் அலங்கார மண்டபம். அதன் உள்ளே முன் மண்டபம், நவரங்க மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் பெருமான் நின்ற திருக்கோலத்தில் நான்கு கரம் கொண்டு, அவற்றில் சிவபெருமானுக்குரிய ஆயுதத்தையும், மகாவிஷ்ணுவுக்குரிய ஆயுதத்தையும் தாங்கி, நம்மையே உற்று நோக்கும் கோலத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. சிவ பாகத்தின் கீழே பார்வதியும், விஷ்ணு பாகத்தின் கீழே லட்சுமியும் பிற்காலத்தில் இணைக்கப்பட்டிருக்கலாம் எனும் வகையில் கருவறை அமைந்துள்ளது. வெளி மண்டபத்தில் அன்னை சக்தி, மகிஷாசுரமர்த்தினி
யாகக் காட்சி தருகிறாள். இக்கோயிலுக்கு வெளியே வித்தியாசமான தீபஸ்தம்பங்களைக் காண முடிகிறது.
கருவறையைச் சுற்றி மொத்தம் 48 தூண்கள். அனைத்தும் ஹொய்சால பாணியில் பளபளவென கடைந்து எடுத்தாற்போல் அமைந்துள்ளன. தூண்களைத் தாங்கும் அடிப்பகுதியின் வெளிப்புறத்தில் கண்களைக் கவரும் சிறிய அழகுச் சிற்பங்களைக் காண முடிகிறது. நவரங்க மண்டபம் மற்றும் கரு வறை மண்டபத்துக்கு வெளியே நாட்டியக் கலையின் சிறப்பை விளக்கும் மகளிரின் அழகிய காட்சி. ஆனால், இவை முழுமையில்லாமல் காணப்படுகின்றன. மேற்சுவரிலும் ஏராளமான வேலைப்பாடுகள்.
ஹொய்சாலக் கட்டடக் கலை பாணியில், எழில் மிகு சிற்பங்களைக் கொண்டு விளங்கும் இக்கோயில் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று தான்!
செல்லும் வழி: பெங்களூரிலிருந்து 275 கி.மீ.,
ஹுப்ளியிலிருந்து 131 கி.மீ. ரயில், பேருந்து வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 5 மணி முதல் இரவு 8 வரை.
தகவலுக்கு: 094223837967/09271127737
தாமிரபரணியின் ஐம்பெருந்துறைகள்
திருநெல்வேலி மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியாக விளங்கும் தாமிரபரணிக்குப் பல்வேறு பெயர்களில்
பல்வேறு துறைகள் இருப்பினும், திருநெல்வேலியைச் சுற்றி ஐந்து துறைகள் உள்ளன. அவை: சிந்து பூந்துறை, சடாயு துறை, குட்டத்துறை, கருப்பந்துறை, குறுக்குத் துறை.
சிந்துபூந்துறை: நெல்லை நகரின் நடுநாயகமாக அமைந் துள்ள சிந்துபூந்துறையில் புகழ்பெற்ற கைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இலக்கியத்தில், ‘தேன் சிந்து பூந்துறை’ என்று வழங்கப்படும் இவ்வூர், தாமிரபரணிக்கரை நகரமாக இருப்பதால் எல்லா காலங்களிலும் செழிப்பாக இருக்கிறது.
சடாயுதுறை: ராம காவியத்தில் சீதா பிராட்டியை ராவணன் கடத்திச் செல்லும்போது, சடாயு என்னும் பறவைகளின் அரசன் சீதையை மீட்க முயன்று, ராவணனால் தாக்கப்பட்டு விழுந்த இடம், சடாயுதுறை என வழங்கப்பட்டு, தற்போது வெள்ளக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
குட்டத்துறை: திருநெல்வேலி, வண்ணார்பேட்டையில், பொங்கி வரும் பொருநை ஆற்றின் கரையே குட்டத் துறை. ஆலன் என்ற ஆங்கிலேய துரை குட்ட நோயால் (பெரு நோய்)அவதிப்பட்டு பேராத்துச் செல்வி அம்மன் அருளால், குணம் அடைந்து குட்ட நோய்க்கு தீர்வு கண்ட இடமாதலால், இத்துறைக்குக் குட்டத் துறை எனப் பெயர்.
கருப்பந்துறை: மேலப்பாளையத்துக்கும், திருநெல்வேலி நகரத்துக்கும் இடைப்பட்ட பகுதி கருப்பந்துறை. இதன் அருகில் உள்ள விளாகம் எனும் இடத்தில் பழைமை வாய்ந்த ஒரு சிவன் கோயில் உள்ளது. இப்பகுதி சற்று ஆழமான, மணற்பாங்கான பகுதியாக விளங்குகிறது.
குறுக்குத்துறை: திருவாவடுதுறை ஆதீனத்துக்குட் பட்ட, ‘திருவுருமாமலை’ என்று வழங்கப்படும் குறுக்குத் துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. காந்தியடிகள், வ.உ.சி., சுவாமி விவேகானந்தர் ஆகியோ ரின் உருவச் சிலைகள், தெய்வச் சிலைகளோடு அழகு செய்யும் வகையில் இங்கே அமைந்துள்ளன.
‘பொருநை’என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆற்றின் பல்வேறு துறைகள் அந்தந்தப் பகுதிகளை அழகு செய்வதோடு, பெருவாரியான இடங்களை தெய்வீக மணம் கமழும், திருக்கோயில்களுடன் இணைந்து சிறப் பாக அமைகின்றன.

Comments