கண்ணுக்கு இனியான்

ராவண வதம் முடித்து சீதையுடன் அயோத்தி திரும்பும் வழியில், வனத்தில் சில மஹரிஷிகளுடன் தங்கினார் ராமபிரான். பின்னர், அயோத்திக்குப் புறப் பட்ட ஸ்ரீராமபிரானை இன்னும் சிறிது காலம், தங் களுடன் தங்கியிருக்குமாறு மஹரிஷிகள் வற்புறுத்தினர். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் தாம் அயோத்தி செல்ல வேண்டும் என்பதால், தம் கையாலேயே ஓர் அழகிய ஸ்ரீராம விக்ரஹத்தை வடிவமைத்து, அதை அக்குடிலின் வாசலில் வைத்து விட்டு அயோத்திக்குப் புறப்பட்டார் ஸ்ரீராமர்.
அந்த அழகிய விக்ரஹத்தைப் பார்த்த மகரிஷிகள், தங்கள் இதயத்தைப் பறிகொடுத்து மதி மயங்கினர். அழகு என்றால் அப்படியோர் அழகு. மகரிஷிகளால் பூஜிக்கப்பட்ட இந்த ஸ்ரீராமர் விக்ரஹம், காலப்போக் கில் திருக்கண்ணபுரம் மக்களிடம் வந்து சேர்ந்தது. அவர்களும் அதை பூஜித்து வந்தனர். ஒருமுறை அயல் நாட்டவர்களின் படையெடுப்பினால் இந்தச்சிலைக்கு ஆபத்து வரும் எனக் கருதிய திருக்கண்ண புரத்து மக்கள், அந்த ராமர் விக்ரஹத்தை ஓர் அரச மரத்தடியில் புதைத்து வைத்து, அத்துடன் அதை மறந்தும் போயினர்.
சரபோஜி மஹாராஜா அப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த போது, அவர் கனவில், ராம பிரான் தோன்றி, விக்ரஹங்கள் அரச மரத்தடியில் புதையுண்டு கிடப்பதையும், அவற்றை வெளிக் கொணர்ந்து பூஜிக்கும் படியும் சோல்லி மறைந்து போனார்.
தமக்கு வந்த கனவுப்படி, சர போஜி மஹாராஜா அந்தக் குறிப்பிட்ட அரச மரத்தடியில் மண்ணைத் தோண்டி, ஸ்ரீராமபிரான், லக்ஷ்மண, சீதை, ஹனுமார் விக்ரஹகங்களை வெளியில் எடுத்தார். அதைத் தமது அரண்மனைக்குக் கொண்டுபோக முயன்றபோது, அவ்வூர் மக்கள் அந்த அழகிய ஸ்ரீராமர் சிலையைக் கொடுக்க மறுத்துப் போராடினர். கடைசியாக, ஸ்ரீராமர் சிலையை மட்டும் கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டுப்பெற்று எடுத்து வந்தார் மன்னர். வரும் வழியில் இரவுப் பொழுதை ‘வடுவூர்’ கிராமத்தில் தங்கிக் கழித்தார். இங்கும் மன்னருக்கு சோதனை. வடுவூர் மக்கள் அந்த ஸ்ரீராமர் சிலையை வடுவூரி லேயே பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று போராடினர். வேறு வழியின்றி அந்தராமர் சிலையை வடுவூரிலேயே வைத்துவிட்டுக் கிளம்பினார் மன்னர்.
வடுவூரில் ஏற்கெனவே இருந்த ஸ்ரீருக்மிணி - சத்யபாபா சமேத கோபாலன் ஆலயத்தில் ஸ்ரீராமரை உற்ஸவ மூர்த்தியாக வைத்து வழிபட்டனர். கோபாலன் என்ற மூலவரே ஸ்ரீராமபிரானாக இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, லக்ஷ்மணன், சீதை, ஹனுமன் உற்ஸவ மூர்த்திகளை வடுவூர் மக்கள் செய்து வைத்தனர். ஆனால், லக்ஷ்மணன் மட்டும் ஒரு பெண் சிலை வடிவமாக மாறிவிட்டார். இதைக் கண்டு அதிர்ந்த மக்கள், அதனை ‘சுந்தரி அம்மன்’ என்ற பெயரில் பிரதிஷ்டை செய்து, தனி ஆலயம் அமைத்து வழிபடுகின்றனர். பின்னர் வேறு ஒரு லக்ஷ்மணன் சிலை செய்து வைத்தனர்.
பகவான் தம் கரத்தாலேயே வடித்து வைக்கப்பட்ட இந்த விக்ரஹத்துக்கு ஓர் அலாதியான சக்தி இருக்கிறது. இந்த கோதண்டராமரின் புன்னகை ததும்பும் நளினமான முகத்தையும், திவ்ய மங்கள மேனியையும் காணக் கண்கோடி வேண்டும். ‘கண்டோம்... கண்டோம்.. கண்ணுக்கு இனியானைக் கண்டோம்’ என்றபடி, இங்கு வரும் பக்தர்கள் இந்த ஸ்ரீராமனை விட்டு அகல மனமின்றி, அங்கிருந்து செல்கின்றனர்.
இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் முடிய ஒரு வருட காலமும் புனர்வசு,
ரோகிணி, திருவோண நட்சத்திர நாட்களில் ஸ்வாமிக்கு திருமஞ்சனம், அலங்கார ஆராதனை களுடன் திருவீதிப் புறப்பாடும் நடைபெறும். வைகாசியில் வசந்த உற்ஸவம், கார்த்திகையில் பவித்ர உற்ஸவம், பகல்பத்து உற்ஸவ சாற்றுமுறை, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தை மாத தெப்போற்ஸவம், பங்குனி உற்ஸவ திருக்கல்யாணம் போன்றவை தவறாது நடைபெறுகிறது.
சித்திரை 1 முதல் 10 வரை பிரம்மோத்ஸவம்.
இந்த 10 நாட்களும் ஸ்ரீராமநவமி பெருந்திருவிழா
நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீராமபிரான், சீதை, லக்ஷ் மணர், ஹனுமார் சகிதம் தேரில் உலா வருகிறார்.
ஆலயத்துள் நுழைந்ததும் முன் மண்டபத்தில் லக்ஷ்மி நரசிம்மர் சன்னிதி. கோட்டைக் கதவு வாசலைக் கடந்ததும் கொடி மரம். அதைக் கடந்து போனால் ஹயக்கிரீவர் சன்னிதி. அடுத்து, ஸ்ரீராம பிரான் உற்ஸவ மூர்த்தியுடன் கூடிய கருவறை.
தன்னை நாடி வருபவர்க்கு கேட்ட வரத்தை அள்ளித் தருகிறார் ஸ்ரீராமர். திருமண வரம் கேட்டு பெற்றவர்கள், திருமணம் நிச்சயமானதும் இக்கோயிலுக்கு வந்து திருமணத்தை நடத்திக் கொள்கினறனர்.
செல்லும் வழி: தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் மன்னார்குடிக்கு 13 கி.மீ முன்பு அமைந்துள்ளது கோயில்.
தொடர்புக்கு: 04367 - 267110
முக்திக்கு வழி?
வேதங்களைப் படிப்பதால் ஒருவன் முக்தி அடைய முடியுமா?" என்று ஒருமுறை பகவான் ரமண மகரிஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பகவான் ரமண மகரிஷி இப்படி பதில் அளித்தார், கானல் நீர் தாகத்தைத் தணிக்கவும், ஓவியத்தில் வரைந்த நெருப்பு சோறு சமைக்கவும் உதவுமானால், நூல் பொருள் அறிவினால் முக்தி பெறவும் முடியும்." தகவல்: பாலு, சென்னை

Comments