அரங்கனை மார்பில் தாங்கிய பிள்ளை லோகாச்சாரியார்

றைவனுக்குச் சேவை செய்வது ஒன்றையே தன் வாழ்க்கையாகக் கொண்டு, அவரது திருவடியை அடையும் பேறு பெற்றவர்கள் பலர்! அந்த வரிசையில், அரங்கனின் விக்கிரஹத்தைக் காக்க தன்னையே அர்ப்பணித்து, அவரது பேரருளைப் பெற்று பரமபதம் அடைந்த மகான், பிள்ளை லோகாச்சாரியார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் உறையும் பெருமாளின் ஆலயத்துக்கு சோதனை உண்டான போது, தன் வயதையும் பொருட்படுத்தாமல் இறைவனின் விக்கிரஹத்தைக் காத்து அவரருள் பெற்றவர்.

அவரின் சேவையை ஏற்று திருவரங்கன் சில காலம் தங்கியிருந்து, தன் அருளை வியாபிக்கச் செய்துவிட்டுப் போன தலம் கொடிக்குளம். மதுரை யானைமலை ஒத்தக்கடைக்கு அருகில் உள்ளது இந்தத் தலம்.
14-ம் நூற்றாண்டின் தொடக்கம், தமிழகத் திருக்கோயில்களுக்குப் பெரும் சோதனையான காலகட்டம். அந்நியர்கள் பலர் தமிழகத் திருக்கோயில்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தினர். அவர்களிடம் இருந்து ஆலயங்களையும், இறை விக்கிரஹங்களையும் காக்க, இறைத் தொண்டர்கள் பலரும் தங்களை முழுமூச்சாக ஈடுபடுத்திக் கொண்டனர். அதுபோன்ற ஒரு சோதனை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்துக்கும் ஏற்பட்டது.

கி.பி.1323-ல் பெரும் படையெடுப்பு நிகழ்ந் தது. அப்போது, அந்நியர்களிடம் இருந்து திருக் கோயிலைக் காக்க முன்வந்த அடியார்களில் குறிப்பிடத்தக்கவர் பிள்ளை லோகாச்சாரியார். அப்போது அவருக்கு வயது 118. தள்ளாத வயதிலும், அரங்கனின் விக்கிரஹத்தைக் காக்க உறுதி பூண்டார். உடனடியாக மூலவர் சந்நிதியில், ஸ்வாமிக்கு முன்பாக ஒரு மதிலை எழுப்பினார். அங்கிருந்த உற்ஸவ மூர்த்தியான அழகிய மணவாளனை, ஸ்ரீதேவி-பூதேவி தாயார் விக்கிரஹங்களோடு சேர்த்து எடுத்துக் கொண்டார்.  தன்னுடன் சில அடியார்களையும் அழைத்துக் கொண்டு தென்திசை நோக்கிக் கிளம்பினார்.
அவர்கள், மூடு பல்லக்கு ஒன்றில் ஸ்வாமியை வைத்துக்கொண்டு பல சிரமங்களுக்கு இடையில் மதுரையை அடைந்தனர்.  நகருக்குள் செல்லுமுன், ஆனைமலை பகுதிக்கு வந்தவர்கள், குடைவறை மூர்த்தியாக நரசிம்மர் அருள்பாலிக்கும் இந்த இடம் தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதினர். குடைவரைக் கோயிலுக்குப் பின்புறம் வனமாக இருந்த இடத்தை அடைந்தனர்.  அங்கே அவர்களுக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது!
கானகத்தின் மத்தியில், தனி மூர்த்தியாக சந்நிதி கொண்டிருந்தார் அருள்மிகு வேதநாராயணர். அரங்கனின் அருளால் அவர் எழுந்தருளியிருக்கும் இடத்துக்கே வந்துவிட்டதை எண்ணி மனம் மகிழ்ந்தனர். அங்கிருந்த குகையில் அழகிய மணவாளனை வைத்து ஆராதித் தனர். சில நாட்களுக்குப் பின்னர், அந்நியர்களின் படை மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்த தகவல் கிடைத்தது.

உடனே, அழகிய மணவாளர் விக்கிரஹத்தை எடுத்துக் கொண்டு மலை உச்சிக்குச் சென்று மறைந்துகொண்டார். அந்நியர்கள் அந்த இடத்தைக் கடந்துசென்ற பிறகு,  பாறையில் வளர்ந்திருந்த கொடிகளைப் பற்றிக்கொண்டு கீழே இறங்கினார். அப்போது, தவறிக் கீழே விழுந்தார். அந்த தருணத்திலும் விக்கிரஹத்துக்கு ஏதும் பின்னம் நேர்ந்துவிடக்கூடாது என்று, அழகிய மணவாளரை மார்போடு அணைத்துக்கொண்டு, தன் முதுகில் அடிபடும்படியாகக் கீழே விழுந்தார். அதாவது, அரங்கன் தன் அடியவரின் மார்பில் குடிகொண்டார்.

கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த பிள்ளை லோகாச் சாரியார், அன்றிலிருந்து மூன்றாம் நாள் பரமபதம் அடைந்தார். அதற்கு முன்னதாக, பாதுகாப்பான தருணம் வரும் வரையில் காத்திருந்து, அதன் பிறகு ஸ்வாமியை திருவரங்கத்தில் சேர்க்கும் படி சீடர்களைப் பணித்தார்.

மஹானை அங்கேயே ஐக்கியப்படுத்திய சீடர்கள், அவர் சொன்னபடி அந்த இடத்திலேயே சில காலம் தங்கியிருந்தனர். படையெடுப்பு முடிந்த சில ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்வாமியை திருவரங்கத்தில் சேர்த்தனர்.

அளவில் சிறிய கிராமமான கொடிக்குளத்தில், சுற்றிலும் பசுமையான செடிகொடிகள் சூழ அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். அளவில் சிறிது என்றாலும் சாந்நித்தியத்துக்குச் சற்றும் குறைவில்லை. அழகிய மணவாளரை வைத்திருந்த குகையில், ஸ்வாமியின் பாதம் பதித்த பீடம் மட்டும் இருக்கிறது. அதனையே ஸ்வாமியாக பாவித்து பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். பிள்ளை லோகாச்சாரியாருக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. அவரது அவதார தினமான, ஐப்பசி மாதம் திருவோணத்தன்று விசேஷ பூஜைகள் நடைபெறும்.

ஸ்ரீஹயக்ரீவருக்கும் இங்கே தனிச்சந்நிதி இருக்கிறது. இவர்தான் இங்கு ஆதியில் வந்த தெய்வம். ஆம்! பிரம்மாவிடம் இருந்து படைப்பு ரகசியத்தை எடுத்துச் சென்ற மது, கைடபர் எனும் அசுரர்களிடம் இருந்து அவற்றை மீட்ட திருமால், அவற்றை உடனடியாகப் பிரம்மனிடம் கொடுக்கவில்லை; கவனக்குறைவாக இருந்த பிரம்மனுக்குப் பாடம் புகட்ட நினைத்தார்.

தனது தவற்றை உணர்ந்த பிரம்மன், பூலோகத்தில் புண்ணி யம் மிகுந்த இந்தத் தலத்துக்கு வந்து தவமியற்றினார்.
அவருக்கு இரங்கிய பெருமாள், பிரம்மனுக்குப் படைப்பு ரகசியங்களைக் கொடுத்ததோடு, தானே அவருக்கு குருவாக இருந்து வேதத்தையும் உபதேசித்தார். இவரே இத்தலத்தில் ‘ஹயக்ரீவ’ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

குரு தரிசனம் பெற்ற பிரம்மா, சுய தரிசனம் கிடைக்க வேண்டும் என வேண்ட, சங்கு- சக்ரதாரியாகக் காட்சி அளித்தார் மகாவிஷ்ணு. வேதங்களை உபதேசித்ததால் ‘வேதநாராயணர்’ என்ற திருநாம மும் பெற்றார். அவரது சந்நிதிக்கு உள்ளேயே, அவரை வணங்கியபடி பிரம்மா வீற்றிருக் கிறார். அர்ச்சாவதார (மனித) வடிவில் இங்கே தவமிருந்ததன் அடிப்படையில், ஒற்றைத் தலையுடன் காட்சியளிக்கிறார். வேறெங்கும் காணமுடியாத பிரம்மனின் அபூர்வமான திருக் கோலம் இது.

ஹயக்ரீவர் மற்றும் வேத நாராயணரிடம் வேண்டிக்கொள்ள கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை. குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற, சரிவரப் படிக்காத பிள்ளைகள் அந்தக் குறையில் இருந்து நிவர்த்தி பெற இங்கே வேண்டிக் கொள்கிறார்கள்.
கோயிலுக்கு அருகிலேயே பிரம்ம தீர்த்தம் இருக்கிறது; பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் இது. அதன் புனிதம் கருதி, எவரும் இதில் நீராடுவதோ, கை-கால் அலம்புவதோ கிடையாது. இங்கு வருபவர்கள், இந்தத் தீர்த்தத்தைப் பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர். தீராத தோல் வியாதி, நாட்பட்ட காயங் களால் வருந்துவோர், இந்தத் தீர்த்தத்தை எடுத்துச் சென்று, நீரில் கலந்து குளிக்கின்றனர். இவ்வாறு செய்வதால், விரைவில் நோய் குணமாவதாக நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கும்.
எங்கிருக்கிறது ஆலயம்?

மதுரை- திருச்சி நெடுஞ் சாலையில் மதுரையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து பிரியும் சாலையில் சுமார் ஒரு கி.மீ. பயணித்தால் ஆனைமலையை அடைந்து, அங்கிருந்து கொடிக்குளம் கிராமத்திலுள்ள இக்கோயிலுக் குச் செல்லலாம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து மினி பஸ் வசதி உண்டு.

இக்கோயில் சிறிய கிராமத்தில் இருப்பதால், காலையில் 10 மணியளவில் நடை திறந்து பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் அடைத்துவிடுவார்கள். ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலில் பூஜைகள் செய்யும் அர்ச்சகரே இங்கே வந்து பூஜைகளைச் செய்கிறார். இந்த கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், முன்னதாகத் தகவல் தெரி வித்துவிட்டுச் செல்வது நல்லது. தொடர்புக்கு: 98420 24866.


3 தத்துவம்!

முருகனின் வேலாயுதத் தில் மூன்று அடுக்குகள்: இச்சா, ஞான, கிரியா சக்திகளாகவும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களாகவும் ரிக், யஜூர், ஸாமம் என்ற மூன்று வேதங்களாகவும், ஜீவ, ஈச்வர, பிரம்மம் என்ற மூன்று தத்துவங்களாகவும், கார்க பத்தியம், தட்சிணாக்கினி, ஆகவனீயம் என்று மூன்று அக்னிகளாகவும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற முப்பெருந்தெய்வங்களாகவும் விளங்குகின்றன

Comments