கவலை தீர்ப்பார் கருட பகவான்!

வனிலே கருடன் பறந்து வருவதைப் பார்த்தால், நம் கரங்களிரண்டையும் கன்னங்களில் மாறி மாறி ஒற்றி வழிபடுவது நம் இயல்பு. கிருத யுகத்தில் கொடுங்கோலனாக ஆட்சி செய்த ஹிரண்ய கசிபுவை வதம் செய்து, தன் பக்தன் பிரகலாதனைக் காக்க
நரசிம்ம அவதாரம் கொள்கிறார் பெருமாள். அப்போது, கருடன் மேல் எழுந்தருளி வராமல், தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக வெளிப்படுகிறார்.
கருடன், பெருமாளிடம் தமக்கும் நரசிம்ம அவதாரக் காட்சியினைக் காட்டி அருள வேண்டுகிறார். அதற்கு பெருமாள், அகோபிலம் சென்று தவமியற்றும்படி கருடனைப் பணிக்கிறார். அதன்படி கருடன் தவமியற்ற, மலைக்குகையில் உக்கிர நரசிம்மராகக் காட்சியளிக்கிறார் பெருமாள். அதனாலேயே கருடன், கருடாழ்வார் என்றும் போற்றப்படுகிறார். இவருக்கு ‘பெரிய திருவடி’ என்கிற மற்றொரு திருநாமமும் உண்டு.
கருடன் என்ற சொல், செம்மண் நிற இறக்கை களைக் கொண்டு, உடலின் நடுப்பகுதியை வெண்ணிற மாக உடைய செம்பருந்து என்கிற பறவையைக் குறிக்கும். இப்பறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இது வானத்தில் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக எண்ணப்படுகிறது. திருக்கோயில் குடமுழுக்கு, வேள்வி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நிகழும்போது கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவது, மிகவும் நல்ல சகுனம் என நம்பப் படுகிறது. ஆண்டுதோறும் சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்துக்காக, கேரள மாநிலம், பந்தளம் அரண் மனையிலிருந்து திருவாபரணப் பெட்டிகள் எடுத்துச் செல்லும்போது, கூடவே கருடன் வட்டமிட்டபடி தொடர்ந்து பறந்து வருவதைத் தற்போதும் காணலாம்.
ஸ்ரீரங்கம் கோயிலில் செப்புச் சிலையாக மிக உயர மான கருடாழ்வார் தனிச்சன்னிதி கொண்டுள்ளார். இதுபோன்றதொரு பெரிய வடிவிலான கருடாழ்வார் வைணவக் கோயில்களில் வேறெங்கும் இல்லை. சென்னை, சௌகார்பேட்டை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில், பெண் வடிவில் கருடன் அருள்பாலிக்கிறார். திருவள்ளூர் மாவட்டம், கோயில் பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாளின் எதிரே அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் வீற்றிருக்கிறார் கருடன். இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின் பக்கம் அமைந்துள்ளார்.
நாகை மாவட்டம், தேரழுந்தூர் தேவாதிராஜன் கோயிலில் மூலவர் தேவராஜன் கருட விமானத்தின் கீழிருந்தவாறு அருள்பாலிக்கிறார். இந்த கருட விமானம் தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்குக் கருடனால் வழங்கப்பட்டதாகும். கர்நாடக மாநிலம், மைசூர் அருகே மேல்கோட்டை என்ற திருநாராயண புரத்தில் உள்ள பெருமாளுக்கு அணிவிக்கப்படும் வைரமுடி கருடனால் வழங்கப்பட்டது. கும்பகோணம், நாச்சியார்கோயில் திருத்தலத்தில் சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் தனி சன்னிதி கொண்டுள்ள கல் கருட பகவான் உலகப் புகழ் பெற்றவர்.
இவர் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடனை போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முகத்தோற்றத்துடன் பெருமாளின் எதிரே நின்ற திருக்கோலமாகக் காட்சியளிக்கிறார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தன் உடலில் அஷ்ட நாகங்கள் எனப்படும் எட்டு பாம்பு களை அணிகலனாக அணிந்திருப்பார். பெருமாளை சுமந்து வரும்போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, மற்றொரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இருபெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம்
நீட்டியவாறு இருப்பார்.
கருட வாகனத்தில் பெருமாளை
சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. பெருமாள் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடை பெறுகிறதரத சப்தமியன்று திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்ஸவ கருட சேவை புகழ் பெற்றதாகும். ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேர், தைத் தேர், பங்குனித் தேர் உற்ஸவங் களின்போது நம்பெருமாள் கருட
சேவை நடைபெறுகிறது. அதிலும் ஸ்ரீரங்கத்தில் மாசி கருடன் மிகவும் பிரசித்தம்.
புதுச்சேரி வரதராஜப் பெருமாள்
கோயில் கருட சேவை, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கருட சேவை, திருநாங்கூர் பதினோரு கருட சேவை, கும்பகோணம் 12 கருட சேவை, கூழமந்தல் திருத்தலத்தில் வைகாசி மாதம் நடைபெறும் 15 கருட சேவை, தஞ்சை மாமணிக் கோயில் 23 கருட சேவை போன்றவை
சிறப்பு வாய்ந்தவை.
நாச்சியார்கோயில் சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் கல் கருட பகவான் தனி சன்னிதி கொண்டிருக்கிறார். கருவறையில் சீனிவாசப் பெருமாள் வாசுதேவனாக திருமணக் கோலத்தில் வஞ்சுளவல்லித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். இங்கு தாயாருக்குத் தான் முக்கியத்துவம். பெருமாளைவிட தாயார் சற்று முன்னே எழுந்தருளியிருப்பதைக் காணலாம். இங்கு சகல மரியாதைகளும் முதலில் தாயாருக்குத்தான். பெருமாளும் நாச்சியாரும் ஒரே சன்னிதியில் எழுந்தருளியிருப்பது மற்றொரு சிறப்பு.
கருவறையில் பெருமாள் - நாச்சியாரோடு, பிரம்மா, ப்ரத்யும்னன், பலராமன், அனிருத்தன், புருஷோத்தமன் என ஐவரும் உடனிருந்து அருள்பாலிக்கின்றனர். பெருமாள், வஞ்சுளவல்லித் தாயார் திருக்கல்யாணத்துக்குப் பெரிதும் துணை நின்றவர் கருடாழ் வார். பெருமாள் கிழக்கு நோக்கி வீற்றிருக்க, தனி சன்னிதியில் தெற்கு நோக்கியபடி கருட பகவான் வீற்றிருக்கிறார்.
பொதுவாக, கருடன் மீது எட்டு நாகங்கள் ஆபரணங்களாகப் பொருந்தியிருக்கும். நாச்சியார் கோயில் கல் கருடன் மீது ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாகப் பொருந்தியுள்ளன. ஆதிசேஷனை கங்கணமாகவும், வாசுகியை முப்புரி நூலாகவும், தட்சகனை கச்சையாகவும், கார்கோடனை மாலையாகவும், பத்மனை வலது காதணியாகவும், சங்கல்பனை கிரீடமாகவும், குளிகனை வலது கை வளையமாகவும், அனந்தனை வாளாகவும் கொண்டு, அந்த வாளினை அலங்கரிக்கும் ஒன்பதாவது நாகத்தினையும் பொருத்திக்கொண்டு காட்சியருளிகிறார் கருட பகவான்.
நாச்சியார் கோயில் கருட சேவை மிக விசேஷம். ஆண்டாளின் தகப்பனார் பெரியாழ்வார் இவரது சொரூபமே. இவருக்குரிய கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகு முதலியவற்றை வாழை இலையில் வைத்து கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர் எல்லா வகை சுகங்களையும் அடைவர். ஆடி மாத சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் கருட பகவான் தரிசனம் காண்பதால் நன்மக்கட்பேறு கிட்டும். தடைபட்ட திருமணம் நிக ழும். கருடனின் ஜன்ம நட்சத்திரமான சுவாதி நட் சத்திரத்தன்று இவரை அர்ச்சிப்பது மிகச் சிறந்த பலன் களைத் தரும். ஏழு வியாழக்கிழமைகள் தொடர்ந்து கருட பகவானை அர்ச்சனை செய்து பிரசாதம் பெறு வதால் பறவை தோஷம், நாக தோஷம், நவக்கிரக
தோஷம் போன்றவை விலகும். கல்லால் ஆன கருட பகவான் உலகில் வேறெங்கும் இல்லை. தினசரி ஆறு கால பூஜை, வியாழக்கிழமை முக்கிய பூஜை நாள்.
கருட பகவான் திருவீதியுலா வருவது, வருடத்தில் இரண்டு முறை. மார்கழி வைகுண்ட ஏகாதசிக்கு நான்கு நாட்கள் முன்பு ஒரு முறை. பங்குனி மாதம் பௌர்ணமிக்கு ஐந்து நாட்கள் முன்பு ஒரு முறை. இந்த ஆண்டு பங்குனி மாதம் மார்ச் 18 அன்று, அதாவது 18.03.2016 வெள்ளிக்கிழமை மாலை சுமார் ஆறரை மணிக்கு கருட பகவானின் திருவீதியுலா!
தனி சன்னிதிக்குள் வீற்றிருக்கும் இந்த கருட பகவான், சன்னிதியில் எடை குறைவாகத்தான் இருக்கிறார். கருவறையிலிருந்து நான்கு பேர் கருடனைத் தூக்கி வர, சன்னிதி கடக்கும்போது எட்டு பேர் தூக்க நேர்ந்துவிடும். காரணம், சன்னிதி கடந்து வெளிவரும் கருட பகவான் கடந்து வர வர, நேரம் ஆக ஆக எடை கூடிப் போகிறார். எட்டு பேர் தூக்கி வரும் கருட பகவான், திருவெண்நாழி மண்டபத்தில் பதினாறு நபர்களைத் தூக்கவைத்து விடுகிறார்.
திருக்கோயிலின் உள்ளேயே ராமர் சன்னிதி அடையும்போது, அங்கிருந்து சுமக்க முப்பத்தியிரண்டு நபர்கள். முத்து வழி மண்டபம் வந்து அங்கிருந்து சன்னிதி வீதியில் சப்பரத்தில் எழுந்தருளச் செய்திடகருட பகவானைச் சுமக்க அறுபத்தி நான்கு நபர்கள், சப்பரத்தில் எழுந்தருளியிருக்கும் கருட பகவானை, பயபக்தியுடன் வடம் பிடித்து இழுத்துச் செல்ல, நூற்றியிருபத்தெட்டு நபர்கள். மாலை ஆறரை மணிக்கு சன்னிதி விட்டுக்கிளம்பும் கருட பகவான், திருமஞ்சன வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக திருவீதியுலா பவனி வந்து சன்னிதி வந்து சேர அதிகாலை நான்கு மணியாகிவிடும்.
சப்பரத்திலிருந்து கருட பகவான் சன்னிதி வந்து
சேரவும், திரும்பவும் இறங்குமுகமாக 128 பேரிலிருந்து 64 பேர், 64 பேரிலிருந்து 32 பேர், 32 பேரிலிருந்து 16 பேர், அடுத்து 8 பேர், அடுத்து நான்கு பேர் எனச் சுமந்து வர, திருக்கோயிலில் தனி சன்னிதி வந்தடை வார், நம் கவலைகள் அனைத்தையும் போக்கும் கருட பகவான்! " என்கிறார் கோபிநாத பட்டாச்சார்யார்

Comments