சிறுவனுக்கு தலைசாய்த்த சிவம்!

அடி-முடி காண முடியாதபடி பெரும் ஜோதிப் பிழம்பாக நின்ற சிவப் பரம்பொருளின் திருமுடியை, தான் கண்டுவிட்டதாகப் பொய்  உரைத்தான் பிரம்மதேவன். அதற்குச் சாட்சியாக தாழம் பூவையும் துணைக்குச் சேர்த்துக்கொண்டான். அவன் செய்கையைக் கண்டு சினந்தது சிவம். ‘இனி, பூவுலகில் உனக்குக் கோயில்களோ ஆராதனைகளோ கிடையாது’ என பிரம்மனைச் சபித்தது. மேலும், பொய்யுரைத்ததால், தேவ உருவில் திகழும் தகுதியை பிரம்மன் இழந்துவிட்டதாகக் கூறி, பூமியில் மனிதனாகப் பிறக்கும்படியும் ஆணையிட்டது.

அவ்வண்ணமே பிரம்மன் பூமியில் பிறந்ததும், தன் தவற்றை உணர்ந்து, சிவனருளால் விமோசனம் பெற்றதுமான புண்ணிய க்ஷேத்திரம்தான் திருவிரிஞ்சிபுரம். பிரம்மதேவனுக்கு மட்டுமா? இன்றைக்கும், செய்த தவறுணர்ந்து அதற்குப் பிராயச்சித்தம் தேடி தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவரது பாவங்களையும் போக்கி, சிவனருளைப் பெற்றுத் தரும் ஞானபூமியாகத் திகழ்கிறது இந்தத் தலம். கெளரியும், விஷ்ணு முதலானவர்களும் இங்கு வந்து வழிபட்டு அருள் பெற்றிருக்கிறார்கள் என்கின்றன புராணங்கள்.

இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர்  வீதியழகு, வேதாரண்யம் விளக்கழகு என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? அந்த வரிசையில், மதிலழகுக்குச் சொந்தமானது இந்தத் தலம். ‘விரிஞ்சிபுரம் மதிலழகு’ என்று போற்றுவார்கள்!

சரி, பிரம்மன் பிறந்த ஊர் என்று படித்தோம் அல்லவா? அதற்குப் பிறகு என்ன நடந்தது? அவர் சிவனருள் பெற்ற திருக்கதைதான் என்ன? முழுமையாக அறிந்துகொள்வோமா?
விரிஞ்சிபுரம் அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரருக்கு பூஜை செய்யும் சிவநாதன் என்பவருக்கு மகனாக சிவசர்மன் எனும் பெயருடன் பிறந்தார் பிரம்மன். சிவசர்மன் சிறு வயதாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார்.
சிவசர்மனுக்கு உபநயனமும், சிவதீட்சையும் செய்துவைத்து, கோயிலில் அவன் பாகபடி பூஜை செய்வதற்கு உதவும்படி தனது தாயாதிகளை வேண்டினாள் அவனுடைய அன்னை. அதற்கு அவர்கள் செவிமடுக்கவில்லை. கோயிலில் பூஜிக்கும் அவன் உரிமையையும் காணியாட்சியையும் (கோயிலில் பூஜிப்பதற்காக வழங்கப்படும் போக உரிமைகள்) அபகரிக்க எண்ணினார்கள் அவர்கள்.

ஒருநாள் சிவசர்மனை வழி மறித்து, ‘‘நாளை உன் பூஜை முறை வருவதால், உனது உரிமைத் தொழிலைச் செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். இந்தத் தகவலை அன்னையிடம் தெரிவித்
தான் சிவசர்மன். உபநயனமோ சிவ தீட்சையோ செய்துகொள்ளாமல், கடமையை நிறைவேற்றுவது எங்ஙனம் என்று இருவரும்கலங்கினர்.  திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை? ஆகவே, இருவரும் சேர்ந்து மார்க்கபந்தீஸ்வரரைச் சரணடைந்து கண்ணீர் மல்க முறையிட்டுவிட்டு வீடு திரும்பினர். அன்று இரவில் கனவில் தோன்றிய சிவனார், ‘‘நாளைக் காலையில் பிரம்ம தீர்த்தத்தில் உன் மகனை மங்கல நீராட்டு’’ என்று ஆணையிட்டார். அன்று சனிக்கிழமை. மறுநாள், கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு. அன்று அதிகாலையிலேயே மகனை அழைத்துக்கொண்டு தீர்த்தக்கரையை அடைந்தாள் அன்னை. அந்நேரம் கிழவர் ஒருவரும் அங்கு வந்தார். அவர், பாலகனைத் திருக்குளத்தில் மங்கல நீராடச் செய்தார். அத்துடன், அவனுக்கு உபநயனம், பிரம்மோபதேசம், சிவ தீட்சை ஆகியவற்றைச் செய்து வைத்தார். அன்னையும் மகனும் கிழவருக்கு நன்றி கூறிக் கைகூப்ப, விண்ணதிரச் சிரித்தபடி மறைந்தார்.
அவர்கள் திகைத்து நிற்கும்போதே மற்றொரு அற்புதமும் நிகழ்ந்தது. யானை ஒன்று வந்து, திருமஞ்சனக் குடத்துடன் பாலகனைத் தன் மீது ஏற்றிக்கொண்டு, ஊர்வலமாகக் கொண்டு சென்று கோயில் வாயிலில் நிறுத்த, வாயிற்கதவுகள் தாமாகவே திறந்துகொண்டன.

சிவசர்மனும் பலநாள் கற்றறிந் தவன் போல், ஆகம விதிப்படி சுவர்ண கணபதியை முதலில் ஆராதித்து, பிறகு லிங்கத் திருமேனியாய் வீற்றிருக்கும் சுவாமிக்கும் அபிஷேக ஆராதனைகள்
செய்ய முனைந்தான். ஆனால், மகாலிங்கத் திருமேனி உயரமாக இருந்ததால், ‘எந்தையே! எனக்கு எட்டவில்லை நும்முடி’ என்றான்.
மறுகணம் இறைவனார் திருமுடியை வளைத்துக் கொடுத்தார். சிவனாரின் திருவிளையாடலைப் பார்த்தீர்களா? அன்று திருமுடியைக் கண்டேன் என்று பொய்யுரைத்தான் பிரம்மன். சிவ சாபம் கிடைத்தது. இன்றோ, அதே பிரம்மன் சிவசர்மனாக நின்று, ‘முடி எட்டவில்லை’ என்று வேண்டினான், மனதில் எந்தக் கள்ளம்கபடமும் இன்றி! சிறிதும் தாமதமின்றி சாய்ந்துகொடுத்தது சிவனாரின் திருமுடி. ஆம், உள்ளத்தில் உண்மையும், பக்தியும், தர்மமும் நிரம்பிய அடியவர்க்காக சிவம் தலை சாய்க்கும்; அவர்தம் வேண்டுதலுக்கு செவி சாய்க்கும்!

திருவிரிஞ்சிபுரம் சென்றால், சிவசர்மனுக்காக தலைசாய்த்த கோலத்திலேயே இன்றைக்கும் சிவனாரை நீங்கள் தரிசிக்கலாம். சிறுவனுக்கு சிவனருள் கிடைத்த கார்த்திகை மாதம் கடை ஞாயிறு அன்று பெரும் விழாவாகக் கொண்டாடப் படுகிறது இந்த ஆலயத்தில்.

வேலூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவிரிஞ்சிபுரம். இங்கே பாலாற்றங்கரையில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர். அம்பாளுக்கு மரகதாம்பிகை என்று  திருநாமம். இத்தலத்தின் சிறப்புகளை கௌரி பூஜித்த வரலாறு, விஷ்ணு பூஜித்த வரலாறு, வழித்துணை வந்த வரலாறு எனப் பலவாறு விவரிக்கின்றன புராணங்கள். கார்த்திகை கடைஞாயிறு போன்று, பங்குனிப் பிரம்மோற்ஸவமும் இங்கு பிரசித்தம். பங்குனி மாதத்தில், சிவனாரின் லிங்கத் திருமேனியில் தன் கிரணங்களைப் பதித்து சூரிய பகவான் நிகழ்த்தும் ஆராதனை, கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருமணப் பேறு, குழந்தை பாக்கியம் ஆகிய வரங்களுக்காகவும், தீவினைகள், தீய சக்திகளின் பாதிப்புகள் விலக வேண்டியும் அன்பர்கள் இங்கு வந்து பாலாறு, பிரம்ம தீர்த்தம் மற்றும் சிம்ம தீர்த்தங்களில் நீராடி, இறைவனையும் இறைவியை யும் வழிபட்டுச் சென்றால், விரைவில் வேண்டுதல் நிறைவேறும். இந்தக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், அருகிலுள்ள - முன்னோர்கள் பயன் படுத்திய `நேரம் காட்டும் கல்'லையும் அவசியம்  தரிசித்துவர வேண்டும்.

உள்ளம் நிறைந்த நம்பிக்கையுடன் இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்திக்க, அவர்களின் வேண்டுதலை சிவப்பரம்பொருளே முன்னின்று நிறைவேற்றிவைப்பார் என்பது, பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை!

Comments