‘பித்தா... பிறைசூடி’ என்று பாடியவர்
தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார். திருமணம் நடக்க விடாமல், ‘நீ எம்முடைய அடிமை’ என்று கூறிக்கொண்டு வந்த முதியவரை, ‘பித்தரா நீர்’ என்று ஏசி வசை பாடியவர். திருவெண்ணை நல்லூரில் மூல ஓலை வைத்திருக்கிறேன், என்னுடன் வா" என்று கோயிலினுள் நுழைந்ததும் முதியவர் மறைந்து போனார்.
வந்தவர், தன்னைத் தடுத்தாட்கொண்டவர் அந்த அம்பலவாணர் என்று புரிந்துகொண்டார் நம்பியாரூரன் என்ற சுந்தரர். திகைத்து நின்றவரை, எம்மை
தேவாரப் பண்களால் பாடுக" என்று ஆணை இட்டார் திருவெண்ணை நல்லூர் இறைவன்.
எதை வைத்துப் பாடுவேன்? என்று தடுமாறிய சுந்தரர்க்கு, என்னைப் பித்தா என்று ஏசினாயே, பித்தன் என்றே பாடேன்" என்று இறைவனே அடி எடுத்துக் கொடுக்க, பித்தா... பிறைசூடி... பெருமானே... அருளாளா" என்ற தேவாரம் பிறந்தது.
இது மட்டுமா? அலகிலா விளையாட்டுடைய தில்லைநாயகன் சேக்கிழார் பெருமானுக்கும் ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்’ என்று அடி எடுத்துக் கொடுத்தான்.
சைவமும், வைணவமும் தமிழுக்குச் செய்யாத தொண்டா? எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாமே... சதா ஆடிக்கொண்டே இருக்கும் அம்பலத்தரசனான பொன்னம்பலவாணனுடைய புதல்வன் ஆறுமுகன் என்ன லேசுபட்டவனா? தமிழை மாந்தி மாந்தி அருந்தியவனாயிற்றே!
ஔவையாரின் தமிழை அள்ளிப் பருகியவன்; தன்னைப் பாட மாட்டேன் என்று சொன்ன பொய்யா மொழிப் புலவரைப் பாட வைத்தவன்; வள்ளலார்க்கு கண்ணாடியில் காட்சி தந்தவன்; குன்று இருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்ட கோலக்குமரன்; அகத்தியருக்கு இலக்கணம் கற்பித்தவன்.
அவன் அருணகிரிநாதரின் நாவில் திருப்புகழைக் கேட்க ஆவல் கொண்டு வேலின் நுனியால், ‘ஓம்’ எனும் பிரணவத்தை எழுதினான். வேல் ஞான வேல்; சக்தி வேல். அண்ணாமலை கோபுரத்திலிருந்து விழுந்தவரைத் தாங்கிப் பிடித்து, ‘சொல்லற சும்மா இரு’ என்று ஞான உபதேசம் செய்தவன்.ஞானத்தவத்தில் ஆழ்ந்தவரை எழுப்பி, ‘எம்மை முத்து முத்தாகத் திருப்புகழ் பாடு’ என்று பணித்தான். ‘பாடும் தன்மை அறியேனே’ என்று தவித்தவரின் நாவில், ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை எழுதி ‘முத்தைத் தருபத்தித் திருநகை’ என்று பாடவைத்தான் மயிலேறிய மாணிக்கமாகிய முருகன்.
திருப்புகழ் என்பது ஒரு மலர் அல்ல; பல மலர்கள் அடங்கிய பாமாலை. திருப்புகழை மதாணியாக (பதக்கமாக) மார்பில் சூட்டிக் கொண்டவன் என்பார் கள், திருப்புகழை ஓதும் அன்பர்கள்.
இப்படி அடியெடுத்துக் கொடுத்ததுடன் மட்டும் நிற்கவில்லை; வடமொழியில் எழுதப்பட்ட கந்த
புராணத்தை, தமிழில் எழுதும்படி கச்சியப்ப
சிவாச்சாரியாரின் கனவில் போய்ச் சொல்லி எழுத வைத்தான். அதுமட்டுமா? தானே அவர் எழுதிய ஓலைச்சுவடி பாடலை திருத்தமும் செய்து வைத்தான். தாம் எழுதிய கந்த புராணச் செய்யுள்களை பூஜையறை யில் முருகனின் திருவடிகளில் வைப்பது வழக்கம்.கந்த புராணத்தின் ‘திகடச் சக்கர’ என்ற முதலடியை கந்தனே கச்சியப்பருக்கு எடுத்துக் கொடுத்ததாகவும் ஒரு சொல் வழக்கு உண்டு.
அரங்கேற்றம் செய்ய காஞ்சி குமர கோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. கச்சியப்பரும் ‘திகடச் சக்கர’ என்று ஆரம்பிக்க... திகட என்ற சொல்லுக்குப் பொருளே இல்லை" என்று கூறி மற்ற புலவர்கள் அரங்கேற்றத்தை நிறுத்தி விட்டார்கள்.
கந்தனே சரிபார்த்த அவனுடைய புராணத்தை மற்றவர்கள் சரி இல்லை என்பதா? கச்சியப்பர் அன்ன ஆகாரமின்றி பூஜையறையில் அழுதவண்ணம் உறங்கிப்போனார். கனவில் வந்தான் கந்தன். மறுநாள் சபையைக் கூட்டி அரங்கேற்றத்தை ஆரம்பிக்கும்படி கூறினான்.
மறுநாள் அரங்கேற்றம் நடைபெற சபை கூடியது. ஆட்சேபணை எழுப்பிய புலவர்களே, ‘இன்று எந்தத் துணிவில் இவர் மீண்டும் அரங்கேற்ற பீடத்தில் ஏறி அமர்ந்துள்ளார்?’ என்று கண்களில் பரி காசமும், ஏளனமும் பொங்க உட்கார்ந்து வேடிக்கை பார்த்தனர்.
கந்தனின் கழலடிகளையே தியானித்த வண்ணம் ‘என்ன ஆச்சர்யத்தை நீ காட்டப் போகிறாய்?’ என்று பதைபதைப்புடன் கண்களில் நீர் மல்க உட்கார்ந்தார் கச்சியப்பர்.
சரிகை வேட்டியின் மேல் சிவப்பும் பச்சையுமாக, இடையில் இறுக்கிக் கட்டிய சரிகை அங்க வஸ்திரம், ருத்திராட்ச மாலைகளும், மரகத கண்டிகையும் தெரியும்படி போர்த்திய மேல் சால்வையுடன் வந்தார் ஒரு புலவர்.
‘மால் அயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும்
மூல காரணமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த்தி
அன்றோ?’என்று கந்த புராணத்தில் கச்சியப்பரை எழுதவைத்தவர், அரங்கேற்ற சபை ஏறி வந்து நின்றார். எழுதியவர் கச்சியப்பர், எழுத வைத்தவர் கந்தன் அல்லவா!
திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் தனபதி செட்டியாருக்காக மாமனாக வந்து வழக்காடு மன்றத்தில் நிற்கவில்லையா? அவருடைய மகன் தன் பக்தரை விட்டு விடுவானா?
வந்து நின்ற புலவரை அவையில் முன்தினம் ஆட்சேபணை தெரிவித்த புலவர்கள் அலட்சியமாகப் பார்த்தனர். ‘வந்து விட்டீர். சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போம்’ என்பதுபோல் பார்த்தனர். சிலர் பேசவே பேசினர்.
புலவர் பேசினார், கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவல்லவா! கந்தனின் புராணத்தைப் பாடுவது அவ்வளவு எளிதல்ல. அவனை பாலன் என்று ஏசிய சூரனுக்கே விசுவரூபத்தை எடுத்துக் காட்டியவன். சூரனை சம்ஹாரம் பண்ணாமல் சேவலும், மயிலுமாய் தன்னிடமே வைத்துக் கொண்ட கருணை வள்ளல். அவன் புராணத்தைப் பாடுவது எளிதல்லவே?" என்றவர், மற்றவர்களைப் பார்க்கிறார்.
‘நானென்று மார்தட்டும் பெருமாளே’ என்று அருணகிரிநாதர் பாடி இருக்கிறார் அல்லவா. அருணகிரிநாதர் எழுதிய பாடல்களுக்குத் ‘திருப்புகழ்’ என்று பெயரிட்டவன் அந்த ஆறுமுக வித்தகன்தானே?
புலவர்களே, அரங்கில் ஏறிய ஒருவரை அவமதித்து இறக்கிய செயல் இழிவல்லவா! அச் செயலைச் செய்த உங்களுக்கு, ‘திகட’ என்ற சொல் ‘வீர சொழிய’ நூலில் இருப்பது தெரியவில்லையே? அனைத்தையும் கற்றறியாமலா அவையில் உட்கார்ந்து புலவர் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்ற கந்தப் புலவர், ‘திகட’ என்ற சொல்லுக்கு பதத்தை விளக்கிச் சொல்லச் சொல்ல, புலவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.
நேரிலேயே கந்தனின் கருணை மழையில் நனைந்தார் கச்சியப்பர். கச்சியப்பரே ‘திகடச் சக்கர’ என்று ஆரம்பியுங்கள்" என்று புதுப் புலவர் சொல்ல, கச்சியப்பர் ஆரம்பிக்க, கந்தப் புலவர் அந்தர் தியான
மானார்.‘அழைத்தவர் குரலுக்கு வருவேன்’ என்றார் கீதையின் கண்ணன். கண்ணன் மட்டுமல்ல, கந்தபெருமானும் அழைப்பவர் குரலுக்கு ஓடோடி வருபவன்தான். அழைத்தது நக்கீரன். முருகப்பெருமான் வந்த காரணம்தான் யாதோ?
Comments
Post a Comment