குரு தோ௸ம் போக்கும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்

பிரம்ம தேவனுக்கென தனிச்சன்னிதி கொண்ட கோயில்களை தரிசிப்பது மிக அரிது. சிவபெருமான் அருள்புரிய பிரம்மதேவனின் சாபம் நீங்கி, நலம் பெற்ற திருத்தலமாகத் திகழ்கிறது சிறுகனூருக்கு அருகில் உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.
சிவபெருமானைப் போன்றே பிரம்மாவுக்கும் ஐந்து தலை இருந்தமையால், பிரம்மன் மிகவும் கர்வம் கொண்டார். ஒரு தலையைக் கொய்து, பிரம்மனின் அகம்பாவத்தை அழித்தார் ஈசன். அதுமுதல், பிரம்மன் நான்முகன் ஆனார். ஆனால், பழையபடி தனது தேஜஸ் மற்றும் படைப்புத்திறனைப் பெறுவதற்காக, திருப்பட்டூரில் பன்னிரெண்டு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான், ‘விதி இருப்பின் கூட்டி அருள்க’ என வரம் அளித்தார். நான் உனது தலையெழுத்தை மாற்றியதுபோல் , நீயும் உன்னை வந்து வணங்குபவர்களுடைய விதியை மாற்றி மங்கலம் அருள்வாய்’ என வரம் அளித்தார். குருவுக்கு அதி
தேவதையாக விளங்கும் பிரம்மனின் அருட்பார்வை பட்டாலே, சகல தோஷங்களும் நீங்கி வாழ்வு மலரும்.
கோயில், ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரத்துடன்
கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் கொடிமரம். அதனைத் தொடர்ந்து நந்தி யெம்பெருமான் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சியளிக்கிறார். இதற்கு, ‘வேத மண்டபம்’ என்று பெயர். அதனைத் தொடர்ந்து, நாத மண்டபத்தில், சப்த ஸ்வரத் தூண்களைக் கடந்து உள்ளே சென்றால் , துவார பாலர்களை வணங்கி, கருணைக் கடலான
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரரைத் தரிசிக்கலாம். ஈசன் சுயம்பு மூர்த்தி. மேலே தாரா பாத்திரம், நாகாபரணத்துடன்கூடிய சதுர ஆவுடையார். பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி அமைத்ததால் ‘ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்’ என்று இறைவனுக்குப் பெயர். பிரம்மன் வழிபட்ட ஷோடச லிங்கம் பதினாறு பட்டைகளுடன் தனிச் சன்னிதியில் உள்ளது.
நாத மண்டபத்தின் தென்புறம் பிரம்மாவுக்கு கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதி. நான்கு முகங்களிலும் சந்தனக் காப்பில் ஜொலிக்கிறார். ‘கவலைப் படாதே, உன் விதியையே மாற்றுகிறேன். இனி, உனக்கு அனைத்தும் மங்களமே’ என்று கூறுவது போல் மிகப்பெரிய விழிகளுடன், முகத்தில் புன்னகை பொலிய காட்சி தருகிறார். இவரை தரிசித்த கணத்தில், நமது வினைகள் பறந்தோடி விட்டது போன்ற உணர்வு. திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் ஆகிய நாட்கள் ஸ்ரீபிரம்மதேவரை வழிபட உகந்த தினங்கள். இது ஒரு சர்வதோஷ பரிகாரத் தலம்.
‘ஓம் வேதாத்மகாய வித்மஹே,
ஹிரண்ய கர்பாய தீமஹி,
தன்னோ பிரஹ்ம ப்ரசொய்தயாத்’
- இது பிரம்ம காயத்ரி மந்திரம்.
கொடி மரத்தின் வடக்கில், பிரம்மனுக்கு
தேஜஸை வழங்கிய அம்பிகை தனிச் சன்னிதியில், ‘ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி’ என்ற பெயருடன் தரிசனம் தருகிறாள். மகாவிஷ்ணு, முருகன்,
வள்ளி - தெய்வானை, கஜ லட்சுமி, துர்கை என மற்ற கடவுளருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் உள்ளன.
தல விருட்சம் மகிழ மரம். தீர்த்தம் பிரம்ம
தீர்த்தம், பகுலி தீர்த்தம், சண்முக நதி. பிரம்மன் சன்னிதிக்குத் தென்புறம் யோகத்தை வழங்கும் ஸ்ரீபதஞ்சலி முனிவர் தரிசனம் தருகின்றார். சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்திக்கும் சன்னிதிகள் உண்டு.
ஆலயத்தின் உள்ளேயும், பின்புறமும் ஒரு திறந்த வெளியில் சில சன்னிதிகள் அமைந்துள்ளன. இவற்றையும் பிரதட்சணம் செய்து தரிசித்து மகிழலாம். ஆண்டின் எல்லா மாதங்களிலும் விமரிசையாக உற்ஸவங்கள் நடக்கின்றன.
கந்தபெருமான் அசுரர்களை அழிக்கச் செல்லும் முன் இத்தலத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன் பிறகே போருக்குப் படை திரட்டிச் சென்றாராம். இதனால், திருப்படையூர் என அழைக்கப் பட்ட இத்தலம், நாளடைவில் திருப்பட்டூர் என மருவியதாகவும் சொல்வர். முருகப்பெருமான் வழி பட்ட ஈசன், கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
குரு பகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்ப தால் குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும் திங்கட்கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜன்ம நட்சத் திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவதால் விசேஷ பலன்களைப் பெறலாம்.
திருமணத்தடை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்தல், தொழில் வியாபார விருத்திக்காக, புத்திர பேற்றுக்காக என பக்தர்கள் இவரைப் பிரார்த்திக்கிறார்கள். பிரார்த் தனை நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்து வணங்குகிறார்கள்.
அமைவிடம்: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் வழியாகச் சென்றால் 30 கி.மீ. தொலைவில் உள்ள சிறுகனூரில் இறங்கி அங்கிருந்து மேற்கே 4 கி.மீ. ஆட்டோ வசதி உள்ளது.
தரிசன நேரம்: காலை 7.30 மணி முதல் 12 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.

Comments