கல்யாண தோஷம் தீர்க்கும் கெளரி தேவி!

திபராசக்தியின் வழிபாடே உலகில் தோன்றிய முதல் வழிபாடாகும். ஆதியில் அன்னை, பரமசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளிபோல் வெண்மையான வடிவில் தோன்றி, பெண் வடிவில் திகழ்ந்தாள். பேரண்டங்களையும் உலகங்களையும், அவற்றில் உயிர்த் தொகுதி களையும் உண்டாக்கினாள். உயிர்களுக்கு அருள்புரிய மலைகளின் மீது வந்து தங்கினாள். அவள் மெல்லிய பனி போன்ற வெண்மையான வண்ணத்துடன் இருந்ததாலும், மலை(கிரி)களில் வந்து தங்கியதாலும் ‘கெளரி’ என்று அழைக்கப் பட்டாள் (வெண்மை நிறத்தைக் கெளர வர்ணம் என அழைப்பர்).

ஸ்ரீகெளரிதேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற் குச் சமமாகும். அவள் சிவனிடம் உமையாகவும், திருமாலிடம் லட்சுமியாகவும், பிரம்மனிடத்தில் சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். இவ்வாறே வேளாண்மை செய்பவர்களிடம் செளபாக்ய கெளரி; வணிகர்களிடத்தில் சுவர்ண கெளரி; வீரர்களிடத்தில் ஜெயகெளரி, ஞானிகளிடத்தில் ஞானேஸ்வரி, அரசர்களிடத்தில் சாம்ராஜ்ய மஹாகெளரி என்று பல்வேறு வடிவங்கள் தாங்கி உலகெங்கும் நிறைந்திருக்கின்றாள்.

அவளருளால் உலகில் மழை பொழிகிறது. மண் செழிக்கிறது. கள்வர், விலங்குகள், தீ முதலியவற்றிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.

வழிபாட்டு நியதிகள்

ஸ்ரீகெளரி வழிபாடு இல்லறத்தை செழிக்கச்  செய்யும் சிறந்த வழிபாடு. அது வீட்டில் செல்வம், தான்யம், மனமகிழ்ச்சி ஆகியவை நிறையும்படி செய்கிறது. முன்னாளில் பெண்கள் நல்ல கணவனை வேண்டி கெளரி விரதம் நோற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

உலக மக்களுக்குத் தேவையான பதினாறு செல்வங்களையும் அருளும் பதினாறு வடிவங்களாக கெளரிதேவி அருள்புரிகிறாள் என்கின்றன ஞானநூல்கள். தேவியின் பதினாறு திருவடிவங்களையும் தரிசித்து, முறைப்படி வழிபட சகல சம்பத்துகளும் உண்டாகும்.

திருவுருவமாக அமைத்து வழிபட முடியாதபோது பூரண கும்பங்களை நிறுவி அவற்றில் கெளரிதேவியை நிலைப்படுத்தி இயன்ற உபசாரங்களைச் செய்து வழிபடலாம். பதினாறு விளக்குகளை ஏற்றி வைத்து அவற்றுக்கு மாலை சூட்டி அவற்றில் அம்பிகையை நிலைப்படுத்தியும் வழிபடுவர்.

அதேபோல், கெளரி வழிபாட்டின் ஒரு அங்கம், அன்பர்களுக்கு உணவிடுவது ஆகும். அவளுடைய பூஜையில் கலந்துகொண்டு பிரசாதங்களை உண்டு மகிழ்பவர்களைக் கண்டு அவள் மகிழ்கிறாள் என்கின்றன ஞானநூல்கள். காசியில் மகாமங்கள கெளரி அன்னபூரணியாக விளங்குகிறாள் என்பர். ஆக, அன்னையின் வழிபாட்டில் அன்னதானமும் பிரதானம் ஆகும்.


அன்னபூர்ணே ஸதாபூர்ணே

    சங்கர ப்ராண வல்லபே

ஞான வைராக்ய ஸித்யர்த்தம்

    பிக்ஷாம் தேஹிச பார்வதி

                      - ஆதிசங்கரர்
கெளரி வழிபாடு ஒரு கூட்டு வழிபாடு. பெண்கள் இல்லங்களில் தனித்தனியாக விரதமிருந்து இந்த பூஜையைச் செய்தாலும், பூஜை முடிந்தபிறகு அருகிலுள்ள பெண்களை அழைத்து தேங்காய்,
ஆடைகள், பழம், தாம்பூலம், குங்குமம் முதலான செளபாக்கியத் திரவியங்களை அளித்து அவர் களை வணங்கி ஆசிபெற வேண்டும். அவர்கள் கூறும் நல்லாசி மொழிகள் மூலம் கெளரிதேவி வரமளிப்பதாக எண்ண வேண்டும்.

கெளரி வழிபாடு குடும்பங்களுக்குள் பரஸ்பர அன்பை வளர்க்கும். கேதார கெளரி நோன்பு; செளபாக்ய கெளரி நோன்பு; சுவர்ண கெளரி விரதம் முதலியவற்றை காலையில் வீட்டிலும் மாலையில் பொது இடத்தில் கூடியிருந்தும் கொண்டாடுகின்றனர்.

தேவர்கள் சோடச கெளரி பூஜை செய்து சூரபத்மன் முதலிய அசுரர்களால் விளைந்த துன்பங்களைப் போக்கிக் கொண்டனர்.

தேவேந்திரனும் இந்திராணியும் பூஜை செய்து இழந்த இந்திர லோகத்தை முருகன் மூலமாக மீண்டும் அடைந்தனர். அரம்பையர் இவ்வழிபாட்டைச் செய்து வரம் பல பெற்றுள் ளனர் எனப் புராணங்கள் விவரிக்கின்றன.

சகல சம்பத்துகளையும் அருளும் செளபாக்ய கெளரி

கெளரி தேவி பதினாறு வடிவங்களில் திகழ்வது போன்று, அவளுக்கு உரிய விரதங்களும் பல விதங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றன. அவற்றில் பங்குனி மாதம் வளர்பிறை திருதியையில் கடைப்பிடிக்கப்படுவது, ஸ்ரீசெளபாக்கிய கெளரி விரதம்.

ஸ்ரீசெளபாக்கிய கெளரிதேவியை ஸ்ரீசம்பத் கெளரி என்றும் அழைப்பர். வாழ்வில் வளம்பெற உணவு, உடை, அணிமணிகள் உறைவிடம் முதலியவை அவசியமாகும். இவையே சம்பத்துக்கள் எனப்படும்.
ஆதிநாளில் பசுக்களே உயர்ந்த செல்வமாகக் கருதப்பட்டன. நல்ல உணவைப் பெறவும், கால்நடைகள் பெருகவும், வயல் நன்கு விளையவும் அன்னையின் அருள் அவசியமா கிறது. பசுக் கூட்டங்களின் நடுவில் வீற்றிருந்து அவற்றைக் காத்து விருத்தி செய்யும் அம்பிகையை ‘சம்பத் கெளரி’ என்று கொண்டாடுகின்றனர்.
காசி நகரில் வீற்றிருக்கும் அன்னபூரணியையும் மகாமங்கள கெளரி, சம்பத் கெளரி என்று அழைக்கின்றனர். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி என்ற பெயரில்  விநாயகர் வீற்றிருக்கிறார்.

இந்த தேவியின் அருளால் வீட்டில் தான்யம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன. வயதான பெரியோர்கள் சுகமடைகிறார்கள்.

இந்த வருடம் வரும் ஏப்ரல்-9 சனிக்கிழமை, பங்குனி மாதம் வளர்பிறை திருதியை வருகிறது. அன்று வீட்டைச் சுத்தம் செய்து, மாக்கோலம் இட்டு, பூஜையறையில் கலசம் ஸ்தாபித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து, தூப- தீப ஆராதனையுடன் எளிய முறையில் அம்பிகையை வழிபடலாம். அத்துடன், கீழ்க்காணும் மந்திரத்தையும் சொல்லி வழிபட்டால், பலன்கள் பன்மடங்காகக் கிடைக்கும்.

ஸ்ரீகெளரி காயத்ரீ மந்திரம்:

ஓம் ஸுபதாயை வித்மஹே காம மாலின்யை தீமஹி;

தன்னோ கெளரீ: ப்ரசோதயாத்:


கருத்து: சுபத்தைத் தருபவளும், ஆசைகளை நிறைவேற்றுபவளுமான மகாகெளரி தேவியைத் தியானிக்கிறேன்.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், கன்னிப்பெண்களுக்கு கல்யாணத் தடைகள் நீங்கும், சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும். சகல செளபாக்கியங்களையும் பெற்று இனிதாக வாழ்வர். அவளைச் சார்ந்துள்ள குடும்பங்களிலும் மகிழ்ச்சி உண்டாகும்.

 

Comments