வியாச முனிவருக்கு வித்தக கணபதி; காஞ்சி முனிவருக்கு ரா.கணபதி!

டவுளின் அவதாரமாக இந்த நாட்டில் அவதரித்த புனிதர்களைப் பற்றி மட்டுமே எழுதிப் பெரும் புகழ் சேர்த்தவர் ரா.கணபதி. மகா பெரியவரின் அருளுரைகளைத் தொகுத்து, 'தெய்வத்தின் குரல்’ எனும் மாபெரும் பொக்கிஷத்தை உலகுக்குத் தந்த இந்த அருளாளர் பிறந்தது விநாயகர் சதுர்த்தியன்று; முக்தி அடைந்தது, (கடந்த) மகா சிவராத்திரியன்று!
'57-ஆம் வருஷம், பெரியவா ஓரிக்கையில் இருந்த தருணம்... கணபதியின் அம்மாவும் அப்பாவும் (கணபதியின் தந்தை: சி.வி.ராமச்சந்திரய்யர்; தாய்: ஜெயலக்ஷ்மி) சிதம்பரத்தில் இருந்து அவரை அழைத்துக்கொண்டு பெரியவரை தரிசிக்கச் சென்றார்கள். கணபதிக்கு அப்போது 21 அல்லது 22 வயது இருக்கும். அப்போது அவருக்கு இந்த ஜீவாத்மா, பரமாத்மா, உயிர் தத்துவம் என்பதில் எல்லாம் துளிக்கூட நம்பிக்கை கிடையாது. சொல்லப் போனால், கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த அந்த இளைஞருக்கு, ஓரிக்கை வரவே விருப்பம் இல்லை. 'இந்த ஆசார- அனுஷ்டானம், சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் எனக்கு அப்போது கொஞ்சமும் பிடிக்கலே. ஒரே வெறுப்பா இருந்தது! என்று சொல்லியிருக்கிறார் கணபதி'' என அவரைப் பற்றி நினைவுகூர்கிறார் கணேச சர்மா.
தெய்வத்தின் குரலை ஒவ்வொரு சபாவிலும், ஆஸ்திக சமாஜத்திலும் விளக்கி சொற்பொழிவு நிகழ்த்தி வரும் கணேச சர்மா, ரா.கணபதி பற்றிய இன்னும் பல நெகிழ்ச்சியான விஷயங்களை விவரிக்கிறார்...
'அப்பா சொல்லைத் தட்டமுடியாமல் ஓரிக்கைக்கு வந்தார் கணபதி. அங்கே பெரியவா இருந்த சின்ன அறையில் வெளிச்சம் கூட இல்லை. அவரும் ஏதோ காஷாயம் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கணபதிக்கு அங்கே எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்ன இவர்... கோயில் வாசலில் இருக்கும் ஆண்டியைவிட சாதாரணமா இருக்காரே என்ற எண்ணம்!
அறைக்குள் நுழைந்தது முதல், வைத்த கண் எடுக் காமல் கணபதியைப் பார்த்துக்கொண்டிருந்த மகா பெரியவா, சிறிது நேரம் கழித்துப் 'போகலாம்’ என்று உத்தரவு கொடுத் ததும்தான் 'அப்பாடா’ என்றிருந்தது கணபதிக்கு.
இருந்தாலும், வீடு திரும்பிய பின்னரும் கணபதியின் மனசு பூராவும் பெரியவா நினைப்பே சுழன்று சுழன்று வந்தது. எங்கே திரும்பினாலும் பெரியவா இருக்கிற மாதிரி ஒரு பிரமை! 'பெரியவா என்னைத் தடுத்தாட்கொண்டு இருக்கார்னு புரிஞ்சுது. அதன் பிறகு என் வாழ்க்கையே திசை திரும்பிடுச்சு!’ என்று கூறியிருக்கிறார் கணபதி. அதன் பிறகு, 'கல்கி’ பத்திரிகையுடன் தொடர்பு ஏற்பட்டு, சதாசிவம், எம்.எஸ் தம்பதியின் கருணை வட்டத்தில் வந்து விட்டார். சில காலம் கழித்து, மடத்துக்கு மீண்டும் அறிமுகமாகி, பெரியவா சொல்வதைக் குறிப்பு எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பெரியவா ஓரிடத்தில் சொன்ன சமாசாரத்தை இன்னோர் இடத்தில் தொடர்வார். பெரியவா பேச்சில் சயின்ஸ் இருக்கும்; வேதம் இருக்கும். கணபதி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக்கொள்வார். வேத வியாசருக்கு விநாயகர் அமைந்த மாதிரி, மகா பெரியவாளுக்கு ரா.கணபதி கிடைத்தார் னுதான் சொல்லணும். ஆசார நியம நிஷ்டை, தபஸ் எல்லாமே கணபதிக்குப் பழகிப் போச்சு. நைஷ்டிக பிரம்மசாரி. ராமகிருஷ்ண மடத்து 'அண்ணா’தான் அவருக்கு மந்திர குரு;  உபதேசம் செய்து வைத்தவர்.
கணபதி அம்பத்தூரில் தங்கியிருந்த காலத்தில் அவர் அம்பாள் பூஜை செய்வதை பார்க்கணுமே... அவ்வளவு சிலிர்ப்பா இருக்கும். கேரள நம்பூதிரி ஒருவர் இந்த அம்பாள் விக்கிரகத்தைத் தலையிலேயே சுமந்துகொண்டு வந்து, சிதம்பரத்தில் இருந்த இவரது வீட்டில் சேர்ப்பித்தாராம். கேட்டதற்கு, 'இங்கேதான் கொடுக்கணும்னு அம்பாள் சொல்லிட்டா’ என்றாராம்.
கொஞ்ச காலம் புட்டபர்த்தியில் தங்கலாம் என்று அங்கே போனார் கணபதி. ஆனால், ஸ்ரீசாயிபாபா இவரைக் கூப்பிட்டு, 'தெய்வத்தின் குரலை’ எழுதுவதே உங்களின் பிறவிப் பணி. நீங்கள் தொகுக்கும் 'தெய்வத்தின் குரல்’ இந்து மதத்துக்கும் சனாதன தர்மத்துக்கும் பலமாக - உபநிஷத்துக்குச் சமானமாக இருக்கப் போகிறது’ என்று அருளினாராம்.
மகா பெரியவாளை ஸ்ரீராமர் என்றுதான் கணபதி சொல்வார். பெரியவாளுடைய நூற்றாண்டு விழாவின் போது, கணபதியை கௌரவம் பண்ணி சன்மானம் கொடுக்க... அதை அப்படியே ஓரிக்கை கோயிலுக்குக் கொடுத்துவிட்டார் கணபதி.
ஒரு சந்தர்ப்பத்தில், பெரியவா சரிதத்தைக் 'கல்கி’யில் எழுதத் தொடங்கினார். இரண்டு வாரம்தான் வந்திருக்கும். பெரியவா கணபதியைக் கூப்பிட்டனுப்பி, 'போறும் நிறுத்திடு’ன்னு சொல்லிட்டார். 'அதுக்குப் பதிலா, மடத்திலே எனக்காக எத்தனையோ பேர் இரவும் பகலும் உழைக்கறவா இருக்கா. அவாளைப் பத்தி எழுது!’ன்னார். 'அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே’ என கணபதி தயங்கவும், 'தெரிஞ்சதை எழுது; தெரியாததை நான் சொல்றேன். 1907-ல் பைங்காநாடு கணபதி சாஸ்திரி எனக்கு வித்யா குருவா இருந்திருக்கார். அவரைப் பற்றி எழுது. பெரிய புராணம் மாதிரி, இதைத் திருத்தொண்டர் புராணம்னு எழுது’ என்று சொன்னாராம் பெரியவா. ஆனால், கடைசியில், மடத்தைச் சேர்ந்த ஏ.குப்புசாமி ஐயர் என்பவர்தான் அதை எழுதினார்.
'தெய்வத்தின் குரலை’ நான் உபன்யாசம் செய்வது இருக்கட்டும்... அதைப் படித்தவர்கள் யாரேனும் வாழ்க்கையில் சிறிதேனும் தங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார்களா என்பதை அறிய, நானும் நண்பர் சிவராமனும் போகிற இடங்களில் எல்லாம் கவனித்துப் பதிவு செய்வது வழக்கம். அப்படியான சம்பவங்கள் நிறைய! 'தெய்வத்தின் குரல்’ ஏழு பாகங்கள் வெளியாகி இருக்கு. ஏழாவது வால்யூமை பெரியவா பார்க்கலை. கணபதி, இன்னும் இரண்டு வால்யூம்களுக்கு விஷயம் வைத்திருந்தார். 'அதையெல்லாம் எப்போது எழுதப் போகிறீர்கள்?’ என்று கேட்டபோது, கணபதி என்ன சொன்னார் தெரியுமா? 'என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. இனிமே என்னால எழுத முடியாது!’ என்றார் தமாஷாக. மகா பெரியவா மாதிரியே கணபதிக்கும் அசாத்திய ஞாபக சக்தி. பத்து வருஷத்துக்கு முந்தி சந்தித்தவரைக்கூட, நினைவில் வைத்து விசாரிப்பார்.
ரா.கணபதி போதேந்திராள் சரிதத்தையும் 'காம கோடி ராம கோடி’ எனும் தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கார். போதேந்திராள் 59-வது ஆசார்ய பீடம்; அவர் கோபி சந்தனம் இட்டுக் கொண்டிப்பார் எனப் புத்தகத்தில் எழுதியிருந்தார் கணபதி. 'அது தப்பு; திருத்தணும்!’ என்றாராம் பெரியவா. அத்துடன், 'விபூதி, ருத்ராட்சம் தவிர வேறெதுவும் அணிவதில்லை என்ற மடத்து சம்பிரதாயத்தை அவர்கள் (போதேந்திராள்) ரட்சித்துக் கொடுத்தார்கள். அதை ஜனங்க தெரிஞ்சுக் கணும்’ என்றும் அறிவுறுத்தினாராம்.
ஆதிசங்கரர் குறித்த 'ஜெயஜெய சங்கர’, ஸ்ரீரமணரைப் பற்றிய 'ரமணாயனம்’, மீராபாயின் வரலாற்றைச் சொல்லும் 'காற்றினிலே வரும் கீதம்’, பாபாவின் சரிதம் சொல்லும் 'ஸ்வாமி’, ராமகிருஷ்ண பரமஹம்சர்- விவேகானந்தர்- சாரதாமணி அம்மையார் பற்றி 'அறிவுக்கனலே, அருட் புனலே’ ஆகிய அற்புதமான நூல்களும் ரா.கணபதியின் படைப்புகளே! எனினும், 'தெய்வத்தின் குரல்’ ஒன்றுக்காகவே தமிழுலகமும் ஆத்திக உலகும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது'' - நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் கணேச சர்மா.
'ஒருமுறை நானும் பால்யூவும் ரா.கணபதி சாரும் பாபாவை தரிசிச்சுட்டு, புட்டபர்த்தியில் இருந்து ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். மாலை நேரம் ஆனதும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் கணபதி சார். நெற்றி நிறைய விபூதியுடன் அவரைப் பார்த்தபோது ஆதிசங்கரர் மாதிரி இருந்தது.
வழியில் ஓரிடத்தில் பயங்கரச் சத்தம். அசம்பாவிதம் எதுவும் இல்லை என்றாலும், எல்லோரும் பயந்துபோனோம். ஆனால், கணபதி சார் கொஞ்சம்கூட அசையவில்லையே! அப்படியரு யோக நிஷ்டையில் இருந்தார். இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் ஆச்சரியம் அது!'' என்று நெகிழ்கிறார் ஓவியர் மணியம் செல்வன்.
அறிஞர் அண்ணாவின் அன்னையார் மறைந்த தருணம்... மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாராம் பேரறிஞர். அந்த வாரம் கல்கி இதழில் 'ஜெயஜெய சங்கர’ தொடரில்... ஆதிசங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் மரணம் அடைவது பற்றி உருகி எழுதியிருந்தார் கணபதி. 'அதில் தாயை இழந்த சோகத்தை சங்கரர் அனுபவித்த விதம் குறித்து கணபதி எழுதியிருந்த விதத்தைப் படித்து நானும் நெகிழ்ந்துவிட்டேன்’ என அறிஞர் அண்ணா, பாரதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'தன் வரலாறு’ நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆம்... அனைத்துத் தரப்பினரையும் அசைத்துப் பார்க்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர் ரா.கணபதி.

இரண்டு சூரியன்கள்!
ரா.கணபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் அபூர்வமான கட்டுரையின் சுருக்கம் இது!
''இன்று அக்டோபர் 25, 1992. காஞ்சி மகா சுவாமிகளின் நூற்றாண்டைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். மே மாதம் 1994-ல்தான் அவர் நூறாண்டு முடிப்பார் என்ற போதும், நமக்கு இந்தத் தருணத்தில் இரட்டிப்பு பாக்கியம் கிடைத்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன், நூறு ஆண்டுகளைக் கடந்த இன்னொரு பெரிய ஞானியை இன்று நினைக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. இதில் அபூர்வமான விஷயம் என்ன என்றால், இரண்டு ஞானிகளின் பெயர்களும் 'சந்திரசேகர’ என்பதுதான். 
அவர் வேறு யாருமல்ல, சிருங்கேரி சங்கர மடத்தின் சந்திரசேகர பாரதி சுவாமிகள்தான். காஞ்சி சங்கர மடத்தை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிர்வகித்துக்கொண்டிருந்த தருணத்தில், பாரதி
சுவாமிகள் 42 ஆண்டுகள் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். இருவருமே தெய்விகமான அருளாளர்கள். ஒரே தருணத்தில் இரண்டு சந்திரசேகரர்கள் இரு வேறு மடங்களின் தலைமையை ஏற்று நடத்துவது பராசக்தியின் விளையாட்டு அல்லவா? இருவருமே ஒரே விஷயத்தில் பார்வையைச் செலுத்தும் இரண்டு கண்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திரன் போன்ற குளிர்ச்சியான இரண்டு முனிவர்களும், அத்வைத ஞானத்தை சூரியன் போல் வெளிச்சமிட்டு உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இருவருமே ஒப்பிட முடியாதவர்கள்; அதே நேரம் ஒப்பிடக்கூடியவர்களும்கூட!
மனித குலத்தை வாழ்த்தும் தகுதி உடையவர்கள் அவர்கள். நிபுணர்களைத் திகைக்க வைக்கும் அறிவொளி படைத்தவர்கள். வேதாந்தக் கருத்துகளை எளியவருக் கும் புரியும் வகையில் எடுத்துச் சொல்லக்கூடியவர்கள். பெரிய ஞானிகள் மட்டுமே நடந்துகொள்வது போன்று, அடக்கமாக நடந்துகொள்பவர்கள். மாற்றங்களும், சீர்திருத்தங்களும் நிகழும் இந்தக் காலத்தில், பாரம்பரிய கட்டுப்பாடுகளை மீறாமல், எதிர் நீச்சல் போடுபவர்கள். 'ஜகத்குரு’ என்ற பட்டத்தை அவர்களாகத் தேடிப் போகவில்லை. குருவாக அவர்கள் யாருக்கும் பாடம் கற்பிக்க முனையவில்லை. 
இன்னோர் ஒற்றுமையும் இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள காஞ்சி மடத்தின் தலைவரின் தாய்மொழி கன்னடம். கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி மடத்தின் தலைவரின் தாய்மொழி தெலுங்கு. இருவருக்குமே சந்நியாசத்தை ஏற்கும் தருணத்தில் குரு என்று யாருமே இருக்கவில்லை. ஆனால் இருவருமே, 'குரு என்று ஒருவர் தேவை’ என்பதை உலகுக்கு வலியுறுத்தியவர்கள். உள்ளத்தளவில் இருவருமே
ஒரே மாதிரிதான். ஆனால், அவர்கள் வெளியே நடந்துகொள்ளும் முறையையும், செயல்களையும் கண்ட உலகத்தினர், வேறு மாதிரி நினைக்கத் தொடங்கினர்.
முக்கியமான வேறுபாட்டை இங்கே விளக்கியாக வேண்டும். காஞ்சி முனிவர் பிரம்மஞானியாக இருந்தாலும், வெளியுலக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். அவை எல்லாமே சாஸ்திர அடிப்படைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்று செயல் பட்டார். அதை அடைய செயல் திட்டங்கள் தீட்டினார்.
சாஸ்திர முறைகளுக்கு மக்களைத் திருப்பும் ஆர்வம் கொண்டிருந்த சிருங்கேரி ஆசார்யர், பொதுவாகத் தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு, தியானத்தில் ஈடுபட்டார். அவர் நினைத்திருந்தால், அறிவுக்கடலில் நீந்தித் திளைத்திருக்க முடியும். ஆனால்
தெய்விகம், ஆன்மிகம் தவிர, வேறு விஷயங்களில் அவர் கவனம் செலுத்த விரும்பவில்லை. சீடர்களையும் அகடமிக் எனப்படும் அறிவு சார்ந்த விஷயங்களில் அக்கறை காண்பிக்கத் தூண்டவில்லை.
மதம், சரித்திரம் அல்லது இலக்கிய ரீதியான அடிப்படையில், மதத் தலைவர்கள் அல்லது மதம் சம்பந்தப்பட்ட விவாதங்களிலும் ஆர்வம் காட்டமாட்டார். ஆதிசங்கரர் காலம் அல்லது அவரது சில நூல்கள் சார்ந்த பிரச்னைகளிலும், அல்லது வித்யாரண் யருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குருமார்கள் இருந்தார்களா என்பது போன்ற தர்க்கங் களிலும்... 'இதில் உண்மையைக் கண்டு பிடித்து அறிந்துகொள்வதற்கும், உனது சொந்த ஆன்மிக வளர்ச்சிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ?’ என்பதுதான் பாரதி சுவாமிகளின் பதிலாக இருக்கும்.
மாறாக, காஞ்சி முனிவரோ, எல்லாத் துறைகளிலும் ஆய்வு மேற்கொள்வதை வரவேற்பார். அத்துடன், தாமே நவீன அறிவியல் கடலில் தேடித் தேடி முத்து, பவளம், சங்கு என்று கண்டெடுத்து, அறிவு குறித்த பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். இந்த இருவரையுமே சனாதன தர்மத்தின் இரு கண்கள் என்று போற்றினார்கள் பல நிபுணர்கள்.
ஆசார்யர்கள் இருவரும் ஒருவரையருவர் சந்திக்கா விட்டாலும், ஒரே இதயம் படைத்தவர்களாகவே இருந்தனர்.
'தங்கள் திட்டங்களைக் குறித்து பரஸ்பரம் கருத்துப் பரி¢மாற்றங்கள் செய்துகொண்டனர்’ என்று கே.பாலசுப்ர மணிய ஐயர், எல்.எஸ்.பார்த்தசாரதி ஐயர் மற்றும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாசார்யர் போன்றவர்கள் என்னிடம் இந்த விஷயங்கள் குறித்துச் சொன்னது உண்டு.
காஞ்சி மடத்திலிருந்து எவர் வந்தாலும், அவர்களை மிக மரியாதையாக நடத்துவதுடன், மற்ற மடங்களுக்கும் அழைத்துச் செல்லத் தம் தொண்டர்களை அனுப்பிவைப்பார் சிருங்கேரி ஆசார்யர். 'இப்படிப்பட்ட தேஜஸ்வியை வேறு எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அது அவருடைய தபஸின் மகிமை!' என்று அவரைப் பற்றி மகா பெரியவாள் சொல்வதுண்டு. அவருடைய தந்தை மற்றும் பாட்டனார் குறித்தும் பெரியவாள் உயர்வாகச் சொல்வதுண்டு. சிருங்கேரி ஆசார்யரோ காஞ்சிப் பெரியவர் பற்றி, 'அந்த ஞானியின் ஆன்மிக ஒளி அல்லவா உலகின் நன்மைக்குக் காரணமாக இருக்கிறது!' என்று மகிழ்ச்சியுடன் கூறுவார்.
நீதித்துறையில் புகழ் பெற்றவர் டி.எம்.கிருஷ்ணசுவாமி ஐயர். இவர், பெரியவா பாலக்காட்டில் உள்ள பல்லாவூரில் 1927-ல் தங்கியிருந்தபோது, அங்கே சென்று திருப்புகழ் பஜனைகள் செய்தார். பெரியவா இவருக்குத் 'திருப்புகழ் மணி’ என்று பட்டம் கொடுத்தார்.
அதன் பிறகு திருப்புகழ் மணி, கோவைக்குச் சென்று சிருங்கேரி ஆசார்யர் முன்பும் திருப்புகழ் பஜனைகளைச் செய்தார். இவருக்குக் காஞ்சி பெரியவா விருது தந்து கௌரவித்தது பற்றிக் கேள்விப்பட்டதும், 'அவர் அப்படி கௌரவம் செய்திருந்தால், அதை நாங்கள் இருவருமே அளித்ததாக வைத்துக்கொள்ளுங்கள்!' என்றாராம் சிருங்கேரி ஆச்சார்யர். 
இன்னொரு விசேஷம் என்னவென்றால், 1927-ல் பெரியவா கோயமுத்தூருக்கு விஜயம் செய்தபோது, அவர் முகாமிட்டிருந்ததே சிருங்கேரி மடத்தில்தான்!
1935-ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு நவராத்திரி பூஜை செய்யப் போனார் காஞ்சி பெரியவா. அங்கே மந்திரேந்திர சர்மா என்ற சிருங்கேரி மட அபிமானியும் இருந்தார். பூஜையின் 4-வது நாள் வரை அவரால் பொறுக்கமுடியவில்லை. நேராக சிருங்கேரி போய் சுவாமிகள் முன் நின்றார்.
சுவாமிகளுக்கு வந்ததே கோபம். 'உன் மனதில் வேறுபாடு என்கிற கல்மிஷம் புகுந்துவிட்டது. ஏன் பாதி பூஜையில் இங்கே வந்தாய்? மகா பாபம் செய்திருக்கிறாய். ஒரு கணம்கூட என் கண் முன் நில்லாதே. திரும்பிப் போய்விடு!' என்று அவரைக் கடிந்துகொண்டாராம்!
ஆம், இரண்டு சந்திரசேகரர்களும் சங்கரநாராயணன் எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்.

Comments