மண்ணியாற்றங்கரைக்கு அருகில்

மண்ணியாற்றங்கரைக்கு அருகில் இருந்த அந்த வனப்பகுதியை யாருக்குத்தான் பிடிக்காது! முழுவதும் வேப்ப மரங்களால் சூழ்ந்த அந்த வனம், பச்சைக் குடைகள் நிறைந்த பிரதேசமெனக் காட்சி தந்தது. வேம்பின் நறுமணம் தெய்விக உணர்வைத் தூண்டிற்று. பச்சை நிறத்தில் காயாக இருந்து, மெள்ள மெள்ள மஞ்சள் நிறத்துக்கு மாறிய வேப்பம் பழங்கள், ஆற்றங்கரையில் இருந்து குளுமையும் வேகமுமாக வருகிற காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், பொலபொலவென தரையெங்கும் சிதறிக் கிடந்தன.

சோழ தேசத்து மன்னர்கள் பலரும் சிவத்தொண்டில் ஈடுபட்டு வந்தார்கள். அதேபோல், அந்த மன்னனும் சதாசர்வ காலமும் சதாசிவத்தையே தொழுது, நமசிவாய நாமத்தையே நினைத்துக் கொண்டிருந்தான். ஒருநாள்... மண்ணி ஆற்றங்கரையில் உள்ள வேம்ப வனத்துக்கு வந்தான். அந்த நறுமணம், மன்னனுக்குள் தெய்விக அதிர்வலைகளை உண்டு பண்ணியது. ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து, இளைப்பாறினான். கண்கள் மூடி, சிவனாரை நினைத்து, 'இந்தத் தேசம் செழிப்பதற்கு என் சிவனே நீதான் காரணம்’ என்று மெய்யுருகிப் பேசினான்.
அந்த இடம் இன்னும் ரம்மியமாயிற்று. கண்கள் திறந்து, வேம்ப வனத்தைப் பார்த்தான். வானத்தைப் பார்த்துக் கைகூப்பினான். மண் தரையைப் பார்த்தான். பரவசத்தில் திக்குமுக்காடிப் போனான். அங்கே, மரத்தில் இருந்து விழுந்திருந்த வேப்பம் பழங்கள் யாவும் சின்னச் சின்ன சிவலிங்கங்களாகத் தோன்றின. சந்தோஷத்தில் திளைத்துப் போனான் மன்னன்.
பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்த அந்தப் பரம்பொருள், அங்கே மன்னனுக்கு வேப்பம் பழ உருவில் வெளிப்பட்டு சிவலிங்கங்களாகக் காட்சி கொடுத்தன போலும்! இதைக் கண்டு திளைத்தவன், சட்டென்று நடுநடுங்கி, 'சிவனாரின் லிங்கத் திருமேனிகள் இப்படியா மண்ணில் கிடப்பது?’ என்று கதறினான்.
அந்த வேப்பம் பழங்கள் சிவலிங்கங்களாகத் தெரிய... வேப்ப மரமே சிவாலயமாகத் தோன்ற... அங்கே மரத்துக்கு விதானம் போல் கூரை அமைத்து தன் பக்தியை நிலைநாட்டினான் மன்னன் என்கிறது கோயிலின் ஸ்தல புராணம்.
மண்ணியாற்றங்கரைக்கு அருகில் இருந்த பகுதிகள் யாவும் மண்ணிவளநாடு எனப்பட்டது. அந்த மண்ணி வளநாட்டில் உள்ள வேப்ப மரங்கள் சூழ்ந்த அந்தப் பகுதியில், பின்னாளில் கோயில் எழுப்பப்பட்டது. வேப்பம் பழங்கள் சிவலிங்கத் திருமேனிகளாகக் காட்சி தந்த திருவிடத்தில், அற்புதமாகக் கோயில் ஒன்றை எழுப்பி, அருகில் அந்தணர்கள் குடியேறுவதற்காக இடங்களை ஒதுக்கித் தந்தான் மன்னன். அவர்களுக்கு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன. வேப்ப மரங்கள் நிறைந்த அந்தப் பகுதி வேம்பத்தூர் எனப்பட்டு, பின்னாளில் வேப்பத்தூர் என மருவியதாம்.
கும்பகோணம் மற்றும் சூரியனார் கோயிலுக்கு அருகில் உள்ளது வேப்பத்தூர். மிகச் சிறிய ஊரில், மிகப் பெரிய அக்ரஹாரத்துடன், எந்நேரமும் வேத பாராயணம் ஒலித்துக்கொண்டிருந்த அற்புதமான கிராம மாகத் திகழ்ந்த வேப்பத்தூரில், நினைத்தாலே நெஞ்சினிக்கும் சிவப்பரம்பொருள், ஸ்ரீகயிலாசநாதர் எனும் திருநாமத்துடன் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகாமாட்சி அம்பாள்.
அகத்திய மாமுனி, இந்தத் திருவிடத்தில்தான் லோபாமுத்திரையை மணம் புரிந்தார் என்கிறது கோயிலின் ஸ்தல புராணம். அகத்தியருக்குத் திருமணம் நிகழ்ந்ததும், அந்தத் தம்பதிக்கு தம்பதி சமேதராகக் காட்சி தந்தருளினாராம் சிவனார். ஆகவே, வாழ்வில் ஒருமுறையேனும் ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீகயிலாசநாதரைக் கண்ணாரத் தரிசித்தால்... இல்லறம் சிறக்க இனிமையாக வாழலாம் என்பது ஐதீகம்!
நம் வாழ்க்கையை இனிக்கச் செய்யும் அருமை யான தலம் இது! தன்னை நாடி வருவோரின் பிணிகளையெல்லாம் களைவதற்குக் காத்திருக்கிறார் ஸ்ரீகயிலாசநாதர் என்பது சத்தியம்தான். ஆனால், கோயிலின் இன்றைய நிலையைப் பார்த்தால், நம் வாழ்க்கையே கசந்து போகும்! பிணிகளைத் தீர்த் தருளும் சிவனாரின் ஆலயம் இருக்கும் இருப்பைக் கண்டால், நம் உடலின் நாடி நரம்புகள் அத்தனையும் துவண்டு போகும்.
பன்னெடுங்காலமாக, கும்பாபிஷேகமோ திருப்பணி களோ ஏதுமின்றி, தன் மொத்தக் களையையும் இழந்து காணப்படுகிறது திருக்கோயில்.
கோயிலும் அருகில் குளமும் என அழகுடன் இருந்தாலும், ஆலயத்தின் மதில், சந்நிதி, பிராகாரம் என அனைத்துமே விரிசலுற்று, சிதிலமுற்று, புல்- பூண்டுகள் முளைத்துக் காட்சி தருகின்றன.
வேப்பத்தூருக்கு அருகில் திருவிசநல்லூர், கோவிந்தபுரம், மருதாநல்லூர் ஆகிய தலங்கள் உள்ளன. திருவிசநல்லூரில் ஸ்ரீதர ஐயாவாள், கோவிந்தபுரத்தில் ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், மருதாநல்லூரில் ஸ்ரீசத்குரு சுவாமிகள் ஆகியோர் வாழ்ந்தனர். அந்த மகான்களின் அதிஷ்டானங்கள் அந்தந்த ஊர்களில் இருக்கின்றன.
இந்த மூன்று மகான்களும் வேப்பத்தூர் தலத்துக்கு வந்து, ஸ்ரீகாமாட்சி அம்பாளையும் ஸ்ரீகயிலாசநாதரையும் தரிசித்துச் சென்றுள்ளனர் எனப் பெருமையுடன் தெரிவிக்கிறார்கள் ஸ்ரீவேங்கடாசலபதி டிரஸ்ட் அன்பர்கள். 
குறிப்பாக, காஞ்சி மகா பெரியவா, 1950-களில் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீகாமாட்சி அம்பாள் சந்நிதியில் வெகு நேரம் நின்று தரிசித்தாராம். ஸ்ரீகயிலாசநாதரின் சந்நிதிக்கு வந்தவர், 'இந்தக் கோயில் ஒருநாள் மிகப்பெரிய புண்ணிய க்ஷேத்திரமாகத் திகழப் போகிறது. சிறியதொரு நந்தியைப் பிரதிஷ்டை செய்து, அந்த நந்திக்கும் பிரதோஷ காலங்களில் பூஜை செய்யுங்கோ’ என அருளினாராம் மகா பெரியவா.
அதன்படி, சிறிய நந்தியைப் பிரதிஷ்டை செய்து, அன்று துவங்கி இன்றளவும் பிரதோஷ பூஜையை கஷ்டப்பட்டேனும் எப்படியோ நடத்திவிடுகிறார்கள் வேப்பத்தூர் ஸ்ரீவேங்கடாசலபதி டிரஸ்ட்டைச் சேர்ந்த அன்பர்கள்.
மன்னனின் கண்களுக்கு வேப்பம் பழங்கள் சிவலிங்கங்களாகக் காட்சி தந்த பூமியில் இப்படி வழிபாடுகள் குறைந்து, பொலிவிழந்தபடி கோயில் இருப்பது தகுமா? மகான்கள் வழிபட்ட சிவாலயம் இப்படிக் களையிழந்து காணப்படலாமா?
காஞ்சி மகான் நந்தி பிரதிஷ்டை செய்து வழிபடச் சொன்ன ஆலயத்தில், பிரதோஷமும் மகா சிவராத்திரியும், அன்னாபிஷேகமும் திருவாதிரைத் திருவிழாவும் கோலாகலமாக நடைபெற வேண்டாமா?
அகத்தியருக்கும் லோபாமுத்திரைக்கும் திருமணம் நிகழ்ந்த திருத்தலம், கல்யாணக் களையுடன் காட்சி தரவேண்டாமா? ஸ்ரீகாமாட்சி அம்பாளுக்கும் ஸ்ரீகயிலாசநாதருக்கும் புது வஸ்திரங்களும் நைவேத்தியமுமாக, பூமாலையும் அர்ச்சனைகளுமாக, விழாக்களும் விசேஷங்களுமாக, சந்நிதியும் விமானங்களுமாக, மண்டபங்களும் பக்தர்களுமாக... கலகலவென கூட்டத்துடன் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டாமா?
ஒருகாலத்தில் எப்போதும் வேதகோஷங்கள் ஒலித்துக் கொண்டிருந்த வேப்பத்தூர் கிராமத்தில், ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீகயிலாசநாதர் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று, கும்பாபிஷேக நாளில் வேத கோஷங்கள் முழங்கட்டும். அந்த தெய்விக அதிர்வு, அந்த ஊரை மட்டுமின்றி, அந்த வைபவத்துக்குத் துணை நின்ற நம் எல்லோரையும், நம் சந்ததிகள் அனைவரையும் வாழவைக்கும்!

Comments