சிக்கல் தீர்க்கும் சிங்கவரம் தீர்த்தவாரி!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ளது சிங்கவரம். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் உள்ளது செஞ்சி. செஞ்சியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கவரத் துக்கு பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு! இங்கே... மலைக்கோயிலில், குடைவரைச் சந்நிதியில் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத பெருமாள் எழுந்தருளி, சேவை சாதிக்கிறார்.

ராஜா தேசிங்கு வழிபட்ட ஆலயம், மலையடிவாரத்தில் ஸ்ரீஅனுமன், புடைப்புச் சிற்பமாகக் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணு துர்கை என இந்தத் தலத்தின் சிறப்புகள் ஏராளம். 
பள்ளி கொண்ட ஸ்ரீரங்கநாதரை, தரிசித்துக் கொண்டே இருக்கலாம். அப்படியரு அழகு. போருக்குச் செல்ல வேண்டாம் என்று ராஜா தேசிங்கிடம் சொல்லியும் அவர் கேட்காததால், கோபத் துடன் தெற்கு நோக்கி முகம் திருப்பிக் கொண்டு காட்சி தருகிறார் என்பது ஐதீகம்! தவிர, நீண்ட ஆயுளுக்கான திசை பார்த்து தரிசனம் தருகிறார் ரங்கநாதபெருமாள் என்றும் சொல்வர்!
இந்தத் தலத்தில், மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மக நாளில் செஞ்சியில் தீர்த்தவாரியில் பங்கேற்று தரிசனம் தரும் உத்ஸவர், மறுநாள் புதுச்சேரியில் நடை பெறும் தீர்த்தவாரியிலும் கலந்துகொள்வாராம்!
சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள வசந்த மண்டபத் தில், சர்வ அலங்காரத்துடன் வந்து காட்சி தரும் உத்ஸவரைத் தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நிற்பார்கள். பிறகு 'ரங்கா... ரங்கா...’ எனும் கோஷங்கள் விண்ணைத் தொட... தீர்த்தவாரி நடைபெறும். 
அரங்கனுக்கு தீர்த்தவாரி நடைபெறும்போது, அருகில் உள்ள சிவாலயத்தில் இருந்து ஸ்வாமியும் அம்பாளும் கலந்து கொள்வது சைவ-வைணவ ஒற்றுமைக்குச் சான்று!
சிங்கவரம் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு ஸ்ரீரங்கனைத் தரிசியுங்கள்; நம் சிக்கல்கள் யாவும் விலகும்! 

குறை தீர்ப்பாள் கோலாரம்மா!

பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூருவில் இருந்து சுமார் 68 கி.மீ. தொலைவில் உள்ளது கோலார் நகர். இந்த நகரத்தை தலைநகரமாகக் கொண்டு, 3-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள், கங்க மன்னர்கள். பிறகு, அந்த நகரத்தை சோழர்கள் கைப்பற்றினார்கள். அடுத்து ஹொய்சாளர்கள், விஜயநகரப் பேரரசு மன்னர்கள் எனப் பலரும் ஆட்சி செய்துள்ளனர்.
தங்கச் சுரங்கம் உள்ள  கோலார் தங்கவயலுக்கும் கோலார் நகருக்கும் 27 கி.மீ. தூரம். இது ஆலயங்களுக்கும் பெயர் பெற்ற நகரம்.
கோலார் நகரின் பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் அமைந்துள்ளது கோலாரம்மா கோயில். 11-ஆம் நூற்றாண்டில், சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம், தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மண்டபம் போன்ற நுழைவாயில். உள்ளே சென்றால், வெளிப் பிராகாரம், உட்பிராகாரம் இரண்டுமே உள்ளன. உட்பிராகாரத்தில் நுழையும் வாசலுக்கு வலது பக்கத்தில், சுவரில் ஐந்து அடி சதுரக் கல்லில் யுத்தக் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மிக நுணுக்கமான, அரியதொரு சிற்பம்!
கருவறையின் வெளிச் சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள். அவற்றில் பெரும்பாலானவை தமிழில் அமைந்தவை. 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழ மன்னர் (1012-1045) காலத்துக் கல்வெட்டுக்களாம் இவை!  பிறகு, 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில், சில கல்வெட்டுக்கள் கன்னட மொழி எழுத்துக்களைக் கொண்டு இங்கே அமைக்கப்பட்டுள்ளன.
கருவறையில், நேரே பார்க்கும் பக்தர்களுக்கு சப்த மாதா சிற்பமே தெரிகிறது. உள்ளே, சப்த மாதாவுக்கு இடப்புறம் மகிஷாசுரமர்த்தினி (துர்க்கா) எட்டுக் கைகளுடன், ஒரு கையில் உள்ள திரிசூலத்தால் காலடியில் உள்ள அசுரனைக் கொல்லத் தயாராகும் கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்கைதான் 'கோலாரம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறாள்!
கோலாரம்மா உக்கிரமாகக் காட்சி தருவதால், நேரடியாக பக்தர்கள் காண முடியாதபடி, ஒரு மூலையில் அமைக்கப்பட்டு, சப்த மாதாவுக்கு வலது பக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலைக் கண்ணாடி மூலமாக தரிசிக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
மிகவும் சக்தி வாய்ந்தவள் இவள் எனப் பூரிக்கின்றனர் ஊர் மக்கள். இவளின் சந்நிதியில் வந்து தங்களது குறைகளைச் சொன்னால் போதும்... விரைவில் கவலைகளில் இருந்து விடுபட்டு விடலாம் என்கின்றனர் பக்தர்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் அதிகம். ஆனால், காலை 9 மணிக்குப் பிறகு, கோயில் நடை சார்த்தி இருப்பதுதான் வேதனை. இது தெரியாமல் 9 மணிக்குமேல் வரும் வெளியூர் பக்தர்கள் பலரும், ''கோலாரம்மாவைத் தரிசனம் செய்தால் கோடிப் புண்ணியம் கிடைக்கும்னு கேள்விப்பட்டு வந்தோம். இங்கு கருவறை சாத்திக் கிடக்குதே! வெளியிலிருந்துகூட அம்மாவைப் பார்க்க முடியாதபடி, கனமான மரக்கதவு போட்டுப் பூட்டி வெச்சிருக்காங்களே'' என்று  புலம்பித் தவிக்கின்றனர்.
காலை 9 மணிக்குள் பூஜைகளை முடித்துவிட்டுச் சென்றால், மாலை 6 மணிக்குத்தான் வருகிறார் அர்ச்சகர். அதன் பிறகுதான் கோலாரம்மனையும் சப்த மாதாவையும் தரிசிக்க முடியும்! செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பகலிலும் ஆலயம் திறந்திருக்குமாம்.
ஆவலுடன் கோலாரம்மாவைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் செவ்வாய், வெள்ளி தவிர மற்ற நாட்களில் செல்வதானால், காலை 9 மணிக்கு உள்ளேயும், மாலை 6 மணிக்கு மேலும் செல்வது உத்தமம். இரவு 8 மணிக்கு ஆலயம் நடைசாத்தப்பட்டுவிடும்.

Comments