திருவாதிரை நன்னாள். வடசென்னை- முத்தியால்பேட்டை தம்புச்செட்டித் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயில் முன், பக்தர்கள் வெள்ளமாய்த் திரண்டிருந்தனர். ஒரே நாளில் ஒன்பது ஸ்ரீநடராஜமூர்த்திகளின் தரிசனம் கிடைக்கப் போகிறது என்றால், அங்கே கூடும் பக்தர்கள் கூட்டத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்காகத் தில்லை சிதம்பரத்தில் இறைவன் சிவபெருமான் திருநடனம் புரிந்த அற்புதத் திருநாளாம் இந்தத் திருவாதிரை நன்னாளில் ஆருத்ரா தரிசனம் காண தில்லைக்குச் சென்றால், ஒரு ஸ்ரீநடராஜரின் திருநடனக் கோலத்தைதான் தரிசிக்க முடியும்.
அதே வேளையில், முத்தியால்பேட்டையில் ஒன்பது ஸ்ரீநடராஜர்களை தரிசனம் செய்தபோது, பக்தர்கள் எல்லோருமே மெய்ம்மறந்து, அந்த ஆடல்வல்லானின் திருமேனிப் பேரழகில் பார்வை அம்புகளைப் பொழிந்து, பக்திப் பரவசத்தில் நனைந்து இன்புறும் பெரும்பேறு பெற்றார்கள்.
இந்த 'நவநடராஜர் சந்திப்பு’க்காக முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள மண்ணடி ஸ்ரீமல்லிகேஸ்வரர், ஸ்ரீகச்சாலீஸ்வரர், ஸ்ரீகாளத்தீஸ்வரர், மண்ணடி ஸ்ரீசெல்வ விநாயகர், மூக்கர் நல்லமுத்து ஸ்ரீபிரசன்ன விநாயகர், லிங்கிச் செட்டித்தெரு ஸ்ரீசிதம்பரேஸ்வரர், ஸ்ரீசண்முக செல்வவிநாயகர், ஸ்ரீசெங்கழுநீர்ப் பிள்ளையார், நைனியப்பன் தெரு ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமி ஆகிய ஒன்பது கோயில்களில் இருந்து ஸ்ரீநடராஜ மூர்த்திகள் சிவகாமி அம்மை சமேதராக எழுந்தருளினார்கள். அவர்களுக்குப் பஞ்ச தீபாராதனை காண்பித்து மரியாதை தரப்பட்டதும், பக்தர்கள் அனைவரும் நடராஜர் திருமேனிகளின் மீது பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர்.
'சென்னையில் ஒரு திருக்கயிலை’ என்று போற்றப்படும் இந்த வைபவம் ஆண்டுக்கு
ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த முறை நடந்தது ஐந்தாவது ஆண்டு! இந்த விழாவுக்கான முழு ஏற்பாடுகளையும் செய்த சிவனடியார் சேவா சங்கத்தின் செயலாளர் ஏ.என்.சுரேஷ்குமாரிடம் பேசினோம்.
'இந்த முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள கோயில்களில், பத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் ஸ்ரீநடராஜ மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். திருவாதிரை நன்னாள் அன்று ஆருத்ரா தரிசனம் காண இந்தக் கோயில்களுக்குப் பக்தர்கள் செல்வதுதான் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த வழக்கம். இந்த நடராஜர் திருமேனிகளை ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் எல்லோரும் தரிசனம் செய்தால் எப்படி இருக்கும் என்ற எங்கள் சிவனடியார் சேவா சங்கத்தின் எண்ணமே, இப்படியரு வைபவம் இன்று சீரோடும் சிறப்போடும் நடைபெறக் காரணம்...' என்றவர், இந்த விழாவுக்காக 'மாணிக்கவாசகர் அழைப்பு விடுக்கும் வைபவம்’ பற்றியும் சொன்னார்.
'இந்த நவநடராஜர் சந்திப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே இந்த அழைப்பு விடுக்கும் வைபவம் நடைபெறும். இதற்காக லிங்கிச் செட்டித் தெருவில் உள்ள ஸ்ரீசண்முக செல்வ விநாயகர் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் விக்கிரகம், ஸ்ரீநடராஜர் அருளும் ஒன்பது கோயில்களுக்கும் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டு, அழைப்பு விடுக்கப்படும். அந்த அழைப்பை ஏற்று, திருவாதிரை அன்று ஒன்பது கோயில்களுக்கும் பொதுவான இடமான மண்ணடி கிருஷ்ணன் கோயில் சந்திப்புத் தெருவில் ஒன்பது நடராஜ மூர்த்திகளும் ஒரே நேரத்தில் எழுந்தருளி, நவநடராஜர் சந்திப்பு நடைபெறும்' என்றார்.
ஒரே இடத்தில்- ஒரே நேரத்தில் ஒன்பது நடராஜர்களின் தரிசனம், உன்னதமான அனுபவம்!
Comments
Post a Comment