சோழ தேசத்திலிருந்து பாண்டிய தேசம் செல்வதற்கு நிறைய குறுக்குப் பாதைகள் அந்தக் காலத்தில் இருந்தன. இன்னும் 100 கல் தொலைவைக் கடந்துவிட்டால் பாண்டிய தேசத்தின் எல்லை தொடங்கிவிடும் என்பது போன்ற இடத்தில், சோழப் படையினர் மிகப் பெரிய அரண் அமைத்து, காவல் காத்து வந்தனர். அதேபோல், பாண்டிய தேசத்து எல்லையிலும் அந்த நாட்டு வீரர்கள், அல்லும் பகலும் காவலில் ஈடுபட்டு வந்தார்கள்.
பரந்துபட்டு விரிந்திருந்த சோழ தேசத்தில், ஆன்மிகமும் தழைத்துச் செழித்திருந்தது. எங்கு பார்த்தாலும் கோயில்கள் கட்டப்பட்டு, குளங்கள் வெட்டப்பட்டு, அந்தக் கோயிலுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டிருந்தன. கோயிலைப் பராமரிப்பவர்களுக்கும், கோயில் மாடுகள், மரங்களை வளர்ப்பவர்களுக்கும், பூஜை செய்கிற அந்தணர்களுக்கும், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை உழுது பயிர் செய்கிற விவசாயிகளுக்கும் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன.
பாண்டிய தேசத்துக்குச் செல்லும் வழிகளில் மிக முக்கியமான, ரகசியமான பாதையில் திருச்சி, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் ஆகிய ஊர்கள் இருந்தன. இந்தப் பகுதிகளில் மாறுவேடத்தில் சோழ வீரர்களும் ஒற்றர்களும் மக்களோடு மக்களாகக் கலந்து வேவு பார்ப்பது வழக்கம்.
இன்றைக்கு இலுப்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஊர்களில் ஒன்றாகத் திகழும் கீழக்குறிச்சி கிராமம், அந்தக் காலத்தில் முக்கியமான ஊராக இருந்தது. அங்கே நெல்லும் வாழையும் செழித்து வளர்ந்தன. மக்கள் திருட்டு பயமின்றி, கொள்ளைக்காரர்களின் அட்டகாசம் ஏதுமின்றி நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
கீழக்குறிச்சி மக்களுக்கு இருந்த ஒரே கவலை... 'நம்மூர்ல கும்பிடுறதுக்கு ஒரு கோயில் இல்லியே’ என்பதுதான். நல்ல நாள் பெரிய நாள் என்றால், மாட்டுவண்டிகளைப் பூட்டிக்கொண்டு, குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு, அந்தப் பக்கம் நார்த்தாமலைக் கோயிலுக்கும், இந்தப் பக்கம் அன்ன வாசல் மற்றும் சித்தன்னவாசல் கோயிலுக்கும், இங்கே குளத்தூர் கோயிலுக்குமாகச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். 'கும்பிடுறதுக்கும், நாமெல்லாம் ஒண்ணாக் கூடிப் பேசிக்கறதுக்கும் நம்மூர்ல ஒரு கோயில் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்’ என்று ஏங்கினார்கள். சந்தித்துப் பேசுகிற இடங்களில் எல்லாம், நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அதைப் பற்றியே சொல்லிப் புலம்பினார்கள்.
அந்தப் புலம்பலையும் ஏக்கத்தையும் ஒற்றர்கள் குறித்து வைத்துக்கொண்டார்கள். ஓலை நறுக்குகளில் தகவல்கள் எழுதி அனுப்பும்போது, கிராமத்து மக்களின் ஏக்கத்தையும், கோயில் இல்லாத குறையின் ஆதங்கத்தையும் தெரியப் படுத்தினார்கள்.
அமைச்சர் பெருமக்கள் அந்த ஓலையைப் படித்துவிட்டு, மன்னரிடம் விஷயத்தைத் தெரிவித் தனர். 'ஊருக்குள் கோயில் இல்லாததால், வீட்டில் நடக்கிற நல்ல காரியங்களின்போதும், பண்டிகை, திருநாள் முதலான நாட்களிலும் வெளியூர் கோயில்களுக்கு வண்டி கட்டிக்கொண்டு குடும்பத் தாரும் அக்கம்பக்கத்தாருமாகச் செல்கிறார்கள். அப்படியான நாட்களில் ஊரே வெறிச்சோடிப் போகிறது. இதனைப் பாண்டிய தேசத்து வீரர்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வார்களோ என்று பயமாக இருக்கிறது. வெறிச்சோடியிருக்கும் ஊருக்குள் புகுந்து நெல்மணிகளையும் வாழை களையும், வீடுகளுக்குள் புகுந்து ஆடை- ஆபரணங்களையும் கொள்ளையர்கள் களவாடிச் சென்றுவிடுவார்களோ என்று கவலையாக இருக்கிறது. எனவே, அந்த ஊரில் கோயில் கட்டிக் கொடுத்தால், ஊருக்குள் இறை சாந்நித்தியமும் நிறைந்திருக்கும்; மக்களும் ஒட்டுமொத்தமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளாமல் இருப்பார் கள்’ என்று மன்னரிடம் கோரிக்கையாக தங்கள் எண்ணத்தை முன்வைத்தார்கள் அமைச்சர்கள்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மூன்றாம் குலோத்துங்க சோழன், இன்னும் குழப்பத்தில் ஆழ்ந்தான். 'கடந்த ஆறேழு மாதங்க ளாகவே, எல்லைகளில் பாதுகாப்பு சரிவர இருப்பதில்லை என்று மனதளவில் தளர்ந்து போயி ருக்கிறேன். இந்த வேளையில், அந்தச் சிந்தனைக்கு வலு சேர்க்கும் விதமாக இவர்களும் இப்படிச் சொல்கிறார்களே...’ என்று பரிதவித்தான்.
மன்னனின் எண்ணத்தை அறியாமலா இருப்பார்கள், அமைச்சர்கள்?!
''மன்னா, புத்தியில் தெளிவு இருந்தால், உடலிலும் வலு இருக்கும். வலுவான உடலுடன் இருக்கும்போதுதான் பயிற்சிகளும் மேற்கொள்ளமுடியும்; பாதுகாப்புப் பணியையும் செய்யமுடியும். எனவே, புத்தியில் தெளிவைத் தருவதற்கு, மனத்தில் பலம் பெறுவதற்குச் சந்திர பலம் அவசியம். எனவே, அந்த ஊரில் சிவாலயம் ஒன்று எழுப்பி, அங்கே கருவறையில் குடி கொள்ளும் சிவனாருக்கு சோமநாதன், சோமசுந்தரன் எனத் திருநாமம் சூட்டி வணங்குவோம்'' என்று அமைச்சர்கள் சொன்ன யோசனையைக் கேட்டு முகம் மலர்ந்தான் மன்னன்.
அங்கே... கீழக்குறிச்சி கிராமத்தில், மிகப் பிரமாண்டமான கோயில் எழுப்பப்பட்டது. முழுக்க முழுக்கக் கற்றளிக் கோயிலாக அமைக்கப்பட்டது. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீபைரவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை என பரிவார தெய்வங்களின் திருவிக்கிரகங்கள் மிகுந்த அழகுடனும் கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டன. சிவனாரின் லிங்கத் திருமேனியில் வழக்கத் தைவிட பொலிவும் அழகும் கூடியிருந்தது கண்டு மன்னரும் அமைச்சர்களும் வியந்து போனார்கள். ஆகவே, ஸ்வாமிக்கு ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் எனத் திருநாமம் சூட்டினான் மன்னன்.
அதேபோல், நின்ற திருக்கோலத்தில், கண்களிலும் உதட்டிலும் புன்னகையுமாக, அம்பாளின் திருமேனி அமையவே, அவளுக்கு ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் எனத் திருநாமம் சூட்டப்பட்டது. அன்று முதல், தன்னை நாடி வருவோர்க்கு மனோபலத்தைத் தந்தருள்கிறார் சிவனார். வாழ்வில் ஆனந்தத்தை அள்ளி வழங்குகிறாள் அம்பிகை.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா பகுதிக்கு உட்பட்டது கீழக்குறிச்சி கிராமம். இங்குதான் ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் சமேதராக ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் குடிகொண்டிருக்கிறார். வைகாசியில் பத்து நாட்கள் திருவிழாவும், பங்குனி உத்திரப் பெருவிழாவும் பிரமாண்டமாக நடைபெற்ற ஆலயம்தான் இது! ஆனால், இன்றைக்குத் திருவிழா இருக்கட்டும்... நித்தியப்படி பூஜைக்கே வழியின்றி இருக்கிறது கோயில். ஆறு கால பூஜையும் அபிஷேகங்களும் நைவேத்தியமும் என அமர்க்களப்பட்ட ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயிலில், தற்போது ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.
சுமார் 200 வருடங்களாகக் கும்பாபிஷேகம் நடைபெறாமல், வழிபாடுகளின்றி, சிதிலம் அடைந்து காணப்பட்ட கோயிலை அறிந்த கந்தசாமி எனும் சிவனடியார் தன் நண்பர்களுடன் சென்று, கோயிலில் தினமும் விளக்கெரிவதற்கு எண்ணெய் மற்றும் திரி ஆகியவற்றை வழங்கினார். உள்ளூர் அன்பர் வீரசிங்கம் மற்றும் ஊர்க்காரர்களின் முயற்சியால் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருப்பணி செய்வதற்குத்தான் நிதியின்றித் தவிக்கிறார்கள், உள்ளூர் அன்பர்கள்.
புத்தியில் தெளிவையும் மனத்துக்கு பலத்தையும் தரக்கூடிய சோமசுந்தரேஸ்வரர் ஆலயம், இருள் படர்ந்த நிலையில் இருந்து மாறி, சுபிட்சமுடனும் வெளிச்சத்துடனும் இருக்கவேண்டாமா? இல்லங்களில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்து நம்மை ஆனந்த மாக வாழச் செய்யும் ஸ்ரீஆனந்தவல்லி அம்பாளின் ஆலயம், அழகு மிளிரக் காட்சி தரவேண்டாமா?
ஆயிரம் வருடங்களைக் கடந்த ஆலயத்தைக் காக்கிற பொறுப்பு நமக்கு உண்டு. ஆண்டவன் குடிகொண்டிருக்கும் ஆலயத்தை சீர்செய்தால்தான், அவனின் அருளால் நாமும் ஆனந்தமாக இருக்கமுடியும். நாம் நிம்மதியுடன் வாழ்ந்தால்தான் நம் சந்ததியினர் குழப்பமின்றி குதூகலமும் நிறைவுமாக வாழ்வர். குழப்பமில்லாத நிலையைத் தர, மனோபலம் பெருக... மகேசனின் கோயிலுக்கு நிதி தாருங்கள்; ஆனந்தமாக வாழலாம்!
Comments
Post a Comment