பெரியாண்டவர் கோயிலில் சிவகண பூஜை!

'வரம் கிடைப்பது எவ்வளவு கடினம்! அப்பேர்ப்பட்ட வரம் கிடைத்ததா, அதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தோமா என்று வாழ்ந்துவிட்டால், அதுதான் உண்மையிலேயே பெரிய வரம்! அப்படி இல்லாது, ஆடித்தான் பார்ப்போமே என்று கர்வத்துடன் திரிந்தால், அந்த வரமே சாபமாகும்; அழித்துவிடும்!’ என்பதே உலக நியதி. 
சுந்தரபுத்திரன் என்ற அசுரன், மிகுந்த சிவபக்தன். அவன் செய்த தவவலிமையால் அவன் முன் காட்சி தந்தார் சிவனார். 'மனித உருவெடுத்த பிறகு சிவ-பார்வதி இணைந்து வந்தால் மட்டுமே, என் அழிவு நிகழவேண்டும்’ என அவன் வரம் கேட்க... அப்படியே தந்தருளினார்
சிவபெருமான். கிடைத்த வரத்தைக் கொண்டு வளமாக வாழவேண்டியதுதானே? ஆனால், விதி விடுமா? ஆணவத்துடனும் அகந்தையுடனும் திரிந்த சுந்தரபுத்திரன், இந்திரலோகத்தை அடையும் ஆவல் கொண்டான். மிக மிக எளிதாக இந்திரலோகத்தை அடைந்து ஆக்கிரமித்தவன், அங்கே செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.
அசுரன் எப்படி இந்திரலோகத்தைக் கைப்பற்றினான் என்கிறீர்களா? ரம்பை, ஊர்வசி முதலானோரின் ஆட்டத்தில் இந்திரன் மதிமயங்கிக் கிடந்த வேளையில், சடாமுடி முனிவர் சபைக்கு வந்தார். ஆனால், ஆசை கண்ணையும் புத்தியையும் மறைக்கவே, முனிவரை மரியாதையுடன் உபசரித்து வரவேற்காமல் அலட்சியமாக இருந்துவிட்டான் இந்திரன். விளைவு... கடும் கோபமான முனிவர், 'வேதாளமாகப் பூமியில் பிறக்கக்கடவது’ என இந்திரனுக்குச் சாபமிட்டார். அதன்படி, தன் மொத்த அழகையும் இழந்துவிட்டு வேதாளமாக, அரக்கனாக மாறி, கண்ணில் படுகிறவர்களையெல்லாம் துன்புறுத்தி வந்தான் இந்திரன்.
ஒருகட்டத்தில், பூலோகத்தில் இந்திர பூதத்தின் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போனது. மக்கள் அலறினார்கள்; வாடினார்கள்; கதறிக் கண்ணீர் விட்டார்கள்.
இந்த நிலையில், பார்வதிதேவி சும்மா இல்லாமல், தன் பங்குக்கு ஒரு விளையாட்டை அரங்கேற்றினாள். விளையாட்டு வினையானது! சிவனாரின் முதுகுக்குப் பின்னே வந்தவள், மெள்ள வந்து அவரின் கண்களைப் பொத்தினாள். அவ்வளவுதான்... மொத்த உலகமும் இருளில் மூழ்கியது. உலக மக்கள் அனைவரும் துடிதுடித்துப் போய், பதறினார்கள். இதில் ஆவேசமான சிவனார், 'பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து, பிறகு என்னையே நினைத்துக் கடும் தவம் செய்தால், உன்னை அரவணைப்பேன்’ எனச் சாபமிட்டார்.
அதன்படி, மகத நாட்டு மன்னன் விளாசநாதன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாள் உமையவள். அவளுக்குப் பூங்குழலி எனும் பெயர் சூட்டி வளர்த்தனர், பெற்றோர். ஒருநாள், நாரத முனிவர் பூங்குழலியைப் பார்த்து வணங்கி, 'சிவபஞ்சாட்சரத்தை அனுதினமும் ஜபித்து வாருங்கள்; நல்ல மணாளன் அமைவார்’ எனச் சொல்லிச் சென்றார். அன்று முதல் சிவநாமத்தைச் சொல்லியபடியே தவத்தில் ஈடுபட்டாள் பூங்குழலி.
இந்திரலோகத்து நாயகனான இந்திரன், வேதாளமாக பூலோகத்தில் அசுரத்தனம் செய்ய, அங்கே இந்திரலோகத்தில் சுந்தரபுத்திரன் எனும் அரக்கன், தன் விஷமத்தனங்களால் தேவர்களையும் ரிஷிகளையும் கிடுகிடுக்கச் செய்ய... சிவனாரைப் பிரிந்து பூலோகத்தில் இருக்கும் பார்வதிதேவிக்காக வருந்திய சிவகணங்கள், தங்களை மண்ணாகவே மாற்றிக்கொண்டு பூமியில் கிடந்தனர். இந்திரலோகமும் பூலோகமும் இப்படி வகைதொகை இல்லாமல் சீரழிவை நோக்கிச் செல்கிறதே என அலறிய முனிவர்களும் தேவர்களும் திருமாலை வணங்கி, விஷயத்தைத் தெரிவித்தனர். ''நான் என்ன செய்வது? சிவனார் பூலோகத்தில் அவதாரம் எடுத்தால்தான், சிவ-பார்வதி இரண்டு பேரும் அவதரித்த தாகும். அதன் பிறகுதான் சுந்தரபுத்திர அரக்கனை அழிக்கமுடியும்'' என அருளினார் பெருமாள்.
முதல்கட்டமாக, சிவகணங்கள் அனைத்தும் மண்ணில் இருந்து உருப்பெற்று திருநிலைக்கு அதாவது சிவனாராக வெளிப்பட்டன. பிறகு, ஒருநிலைக்கு- அதாவது மனிதனாக உருவெடுத்தன. பிறகு, வேடனைப்போல் கிளம்பின. நேரே மகத நாட்டு அரண்மனைக்குச் சென்று, 'வேதாள அரக்கனை நான் அழிக்கிறேன். அப்படி அழித்துவிட்டால், எனக்கு என்ன தருவீர்கள்?’ என்று கேட்டான் வேடன். 'என் பெண்ணையே தருகிறேன்’ என வாக்குறுதி கொடுத்தான் மன்னன் விளாசநாதன். அதன் பிறகு, அரக்கனோடு போரிட்டு, அம்பெய்திக் கொன்றான் வேடன். மாமிச மலையென உருக்கொண்டிருந்தவன் கீழே பூமியில் சாய்ந்து மடிந்தான். அந்த உருவத்தில் இருந்து, அழகிய இந்திரன் வெளிப்பட்டான். முதல்கட்டமாக இந்திரனின் சாபம் நீங்கியது. 'அப்பாடா...’ என்று நிம்மதியானார்கள் இந்திராதி தேவர்களும் முனிவர் பெருமக்களும்.
அடுத்து, இந்திரலோகத்தில் அட்டூழியத்தில் ஈடுபட்டு அராஜகம் செய்துகொண்டிருந்த சுந்திரபுத்திரன் அரக்கனை துவம்சம் செய்ய... தமது சூலாயுதத்தை சிவனார் வீச, வேலவனின் வேலாயுதத்தை வீசினாள் பார்வதி தேவி. இப்படி சிவ- பார்வதி இருவரும் சேர்ந்து, அவனை அழித்தொழித்தார்கள்.
சூலம் குத்திய இடத்தில் இருந்து 21 மண் உருண்டைகள் தோன்றின. பிறகு, அவை சிவகணங்களாக அந்த இடத்தில் பரவி நின்றன. அங்கே... திருநிலையில் இருந்து ஒருநிலை பெற்றதன் அடையாளமாக, சிவனார்... பெரியாண்டவராக, நிர்வாணத் திருமேனியராகத் திருக்காட்சி தந்தருளினார். 'நீயும் இங்கேயே இருந்து அனைவருக்கும் அருளை வழங்குவாயாக!’ என ஈசன் அருளி ஆசீர்வதிக்க... அங்காளபரமேஸ்வரியாக இருந்து இன்றைக்கும் காத்தருள்கிறாள் தேவி.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் வழியில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருநிலை கிராமம். இங்கே, வயல்களும் மரங்களும் சூழ்ந்த நிலையில் சுயம்புத் திருமேனியாக, பாணம் மட்டுமே கொண்டு காட்சி தருகிறார் சிவனார்.
பிழைக்க வழியின்றி ஊர் ஊராகத் திரிந்த தம்பதிக்கு, பன்றியின் வடிவில் வந்து இந்த இடத்தைக் காட்டி, கோயிலையும் தன்னையும் வெளிப்படுத்திக்கொண்டு, இன்றைக்கும் இங்கிருந்தபடி அருளாட்சி நடத்தி வருகிறார் பெரியாண்டவர் என்கிறது ஸ்தல வரலாறு.
பன்றியாக வந்து வழிகாட்டும்போது ஓரிடத்தில் நின்ற வேளையில், அங்கே மிகப் பெரிய ஜோதி வெளிப்பட... பன்றி மறைந்துபோனது. அங்கே சுயம்பு மூர்த்தம் ஒன்று தென்பட்டது. இன்றைக்கும் கோயில் பிரமாண்டமான பரப்பளவில் இருந்தாலும் மேற்கூரையின்றி, வெட்ட வெளியில் இருந்தபடி காட்சி தருகிறார் பெரியாண்டவர்.
ஈசனின் பாதம் பட்ட இடத்தைக் காட்டுகிற விதமாக திருப்பாத விக்கிரகம் உள்ளது. குளம் மற்றும் ஏரிக்கு நடுவே அமைந்துள்ளதால், இங்கு வருவோர் மனமும் உடலும் குளிர்ந்து போவார்கள்.
சிவகண பூஜை நடைபெறும் ஆலயங்களில், குறிப்பிடத்தக்க ஆலயம் இது எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத நிலை, கடன் தொல்லை, தம்பதிக்குள் பிரச்னை, நிரந்தர உத்தியோகமின்மை, வீடு - மனை வாங்குவதில் சிக்கல் எனக் கலங்குவோர் இங்கு ஒருமுறை வந்து தரிசித்தால் போதும்... பெரியாண்டவர் துணையிருந்து அருள்பாலிப்பார் என்கின்றனர்.
''பெரியாண்டவர்தான் எங்களுக்குக் குலதெய்வம். தமிழகத்தில் இருக்கிற பெரியாண்டவரைக் குலதெய்வமாகக் கொண்டவங்களுக்கு இப்படியரு கோயில் இருக்கறதே தெரியலை. இப்பத்தான் மெள்ள மெள்ள தெரிய ஆரம்பிச்சு, ஜனங்க எங்கிருந்தெல்லாமோ வர ஆரம்பிச்சிட்டாங்க. குலதெய்வ வழிபாடு
செஞ்சதால, இப்ப எல்லாரும் வளமோட இருக்காங்க'' என்கின்றனர் ஊர்க்காரர்கள்.
இந்தத் தலத்தில் சிவகண பூஜை செய்து, பொங்கல் படையலிட்டு, பெரியாண்டவரைத் தொழுவது விசேஷம். ''நாங்க வேண்டிக்கிட்டதை நிறைவேத்திக் கொடுத்துட்டார் பெரியாண்டவர். அதனால குடும்ப சகிதமா வந்து, சிவகண பூஜை செய்து, கிடா வெட்டிக் கும்பிட வந்திருக்கோம்'' என்று, சென்னை அய்யப்பன் தாங்கலில் இருந்து வந்திருந்த லோகநாதன்- ராஜகுமாரி தம்பதி தெரிவித்தனர்.
அமைதியான சூழலில், சில்லென்று வீசும் காற்றைச் சுவாசித்தபடி, ஸ்ரீபெரியாண்டவரைத் தரிசியுங்கள். உங்கள் மொத்த வாழ்க்கைக்கும் சிவகணங்களுடன் பெரியாண்டவரும் துணை நிற்பார்!

Comments