பொதுவாக, நடராஜப் பெருமானின் காலடியில்தான் முயலகன் என்னும் அசுரன் காணப்படுவான். திருவானைக்காவல் திருத்தலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில், ஆங்கார கோலத்தில் இருக்கும் முருகப்பெருமானின் காலடியிலும் முயலகன் காணப்படுகிறான். காமனை அசுரனாக்கி, அவனைக் காலின் அடியில் அடக்கிய நிலையில் முருகப் பெருமான் காட்சி தருவது அபூர்வ வடிவமாகும்.
தாம்பரம்- வேளச்சேரி சாலையில் உள்ள ராஜகீழ்ப்பாக்கத்தில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு, 2 கோடி ராமநாமாக்கள் எழுதி, அதை ஒரு பெட்டகத்தில் வைத்து, அதன் மீது கைகூப்பியபடி நின்ற நிலையில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் அருளும் ஸ்ரீநரசிம்ம பெருமாள், சிறிய குழந்தை வடிவில் சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
பொன்னேரி அருகே உள்ள மேலூர் திருத்தலத்தில், பிரம்மாவின் திருக்கோலம் அரிதானது. இவரது மூன்று முகங்களிலும் தாடி உள்ளது. ஞானத்தை வெளிப்படுத்தும் வகையில், இவரது திருமேனியை வடித்த சிற்பி கையாண்ட யுக்தி இது.
மதுரை அருகே உள்ள திருவேடகத்துக்கு சட்டைநாத சித்தர் வந்தபோது, நீராகாரத்தில் திருநீறை இட்டு மக்களின் வயிற்று நோயைப் போக்கினார் என்பது வரலாறு. இப்போதும், நீராகாரம் கொண்டுவந்து, இங்குள்ள சித்தர் அதிஷ்டானத்தின் மேல் உள்ள லிங்கத்தின் முன்பு அதை வைத்து, பிறகு அதனுடன் திருநீறிட்டு அருந்தினால் வயிற்றுவலி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வம்சத்தை வாழவைப்பாள்... வாளாடி நாயகி!
'வாளாடிக்கு வந்து உலகாயி அம்மனை ஒரேயரு முறை தரிசனம் பண்ணினாப் போதும்... அதுவரை நாம பட்ட கஷ்டமெல்லாம் ஓடிடும்; எல்லாக் கெட்டதுகளும் மறைஞ்சு, நல்ல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சிடும்'' என்று மனநிறைவுடன் சொல்கிறார்கள், அம்மனின் பக்தர்கள்.
''எங்களுக்கு எல்லாமே உலகாயி அம்மன்தான்! வாளாடில பிறந்து வளர்ந்து, இன்னிக்குக் கடல் கடந்து எங்கேயோ போயிட்டாலும், சின்னதா ஒரு துக்கம்னாலும், 'அம்மா உலகாயி... நீதாம்மா காப்பாத்தணும்’னு ஒரு நிமிஷம் கண்ணை மூடி பிரார்த்தனை பண்ணினாப் போதும்; மனசுல இருந்த சங்கடங்களும் சஞ்சலங்களும் சட்டுனு விலகிடும். எங்க ஊர்ல இருக்கிற உலகாயி அம்மன் பத்தி சக்திவிகடன்ல எழுதுங்க'' என்று கேட்டிருந்தார், கென்யா- நைரோபியில் வசிக்கும் காஞ்சனா மோகன். சக்தி விகடனின் ஃபேஸ்புக் தோழி இவர்!
திருச்சி- லால்குடி சாலையில், சமயபுரம் டோல்கேட் பகுதிக்கு அருகில் உள்ளது வாளாடி. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில்தான், கருணையும் கனிவும் பொங்கக் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறாள் உலகாயி அம்மன்.
கொல்லிமலையில் இருந்து சூட்சும சக்தியாக காவிரி பாய்ந்தோடும் பூமிக்கு வந்த அம்மன், நெல்லும் வாழையும் கரும்பும் விளைகிற இடத்தைப் பார்த்ததும் மகிழ்ந்து போனாள். வயல் சூழ்ந்த பகுதியில் இருந்தபடி, உலக மக்களின் பசியையும் பிணியையும் போக்கத் திருவுளம் கொண்டாள்.
அந்த ஊரில் இருந்த ஸ்தபதி ஒருவரின் குழந்தை திடீரென்று நோய்வாய்ப் பட்டது. ஏதோ விஷப்பூச்சி கடித்துவிட்டது என்று நினைத்துப் பதறிப்போன ஸ்தபதி, குழந்தையை தூக்கிக்கொண்டு வைத்தியரிடம் ஓடினார். அந்த வைத்தியர் குழந்தையைப் பார்த்துவிட்டு, 'இந்தக் குழந்தைக்கு எதனால் இந்த நோய் வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. என்ன மருந்து தருவது என்றும் விளங்கவில்லை’ என வருந்தினார்.
'கடவுளே... லோகமாதாவே! என் குழந்தையைக் காப்பாற்று’ என்று பிரார்த்தனையும் கண்ணீருமாக வீட்டுக்குத் திரும்பினார் ஸ்தபதி. அன்றிரவு, அவரின் கனவில் வந்த அம்மன், 'உன் குழந்தைக்கு ஒன்றுமில்லை. சப்த மாதர்களில் ஒருத்தி நான். கொல்லிமலையில் இருந்து நான் இங்கே வந்திருப்பதையும், என் தேவையை இந்த ஊருக்குத் தெரிவிக்கவுமே இதை நிகழ்த்தினேன். விபூதியை எடுத்துக் குழந்தையின் உடலெங்கும் பூசு! குழந்தை குணமாகிவிடுவாள். அதேபோல், என் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ, இந்தப் பகுதியில் எப்போதும் விளைச்சல் செழிக்க... எனக்கு ஒரு கோயில் எழுப்புங்கள்!’ என்று சொல்லி, கோயில் கட்டுவதற்கான இடத்தையும் தெரிவித்தாள்.
விடிந்தும் வாளாடியில் உள்ள சேஷய்யர் என்பவரிடம் விஷயம் மொத்தத்தையும் தெரிவித்தார் ஸ்தபதி. அதைக் கேட்டுப் பூரித்துப் போன சேஷய்யர், ஊர்மக்களிடம் விவரத்தைச் சொல்லி, 'எல்லோரும் திருப்பணிக்கு உதவுங்கள்’ என்று கோரிக்கையும் வைக்க... மக்களிடம் இருந்து மளமளவென நன்கொடைகள் திரண்டன. விரைவில் கோயில் எழும்பியது.
உலகத்து மக்களை ரட்சிக்க, தானே விரும்பிக் கோயில்கொண்டதால், அம்மனுக்கு 'உலகாயி அம்மன்’ எனும் திருநாமத்தைச் சூட்டி வழிபடத் துவங்கினர், வாளாடி மக்கள். கீலக வருடத்தில் (1908) இங்கே அம்மன் கோயில்கொண்ட நாள் முதல், நெல்மணிகள் இடுப்பு உயரத்துக்குச் செழித்து வளர்ந்தன; வாழையும் கரும்பும் ஓராள் உயரத்துக்கு எழுந்து நின்றன.
'நெல்லுல பலமும், வாழைல குளிர்ச்சியும், கரும்புல இனிப்புமா இருந்து உலகாயி அம்மன் ஊர்மக்களைக் காப்பாத்தறதா ஐதீகம்! ஒரு கற்பூரம் போதும் அம்மனுக்கு... குளிர்ந்துபோய், நம்ம சந்ததிக்கே துணைக்கு வருவா, உலகாயி அம்மன்!'' என்று பெருமை பொங்கத் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
''பிரபல வயலின் வித்வான் லால்குடி ஜெயராமனின் பாட்டி, அதாவது அவர் தந்தை
கோபாலய்யரின் அம்மா, உலகாயி அம்மனின் தீவிர பக்தைனு சொல்லுவாங்க. கொல்லி மலைலேருந்து வாளாடிக்கு வந்த சப்தமாதர்களில்
ஒருவரான ஸ்ரீவைஷ்ணவி இங்கே உலகாயி அம்மனா கோயில்கொண்ட கதையை அவங்க கும்மிப்பாட்டா பாடியிருக்காங்க. அந்தப் பாட்டால லால்குடி, பூவாளூர், வாளாடின்னு சுற்றுவட்டாரத்துலேருந்து அம்மனின் பக்தர்கள் அதிக அளவுல இங்கே வரத் தொடங்கினாங்க'' என்கிறார் ஊர்ப் பெரியவர் ஒருவர். உலகாயி அம்மன் எனத் திருநாமம் கொண்டிருந்தாலும், கருவறையில் சப்த
மாதர்களாகவே காட்சி தருகிறாள் தேவி. கருப்பண்ணசாமி, காத்தவராயன், சேவுகப் பெருமாள், மதுரைவீரன் ஆகியோர் சுதைச் சிற்பங்களாகத் தரிசனம் தருகின்றனர்.
தை மாத அறுவடைகள் முடிந்து, மாசி மாதத்தில் அடுத்து என்ன பயிரிட லாம், எப்போது பயிரிடலாம் என்று காத்திருந்துவிட்டு, பங்குனி மாதத்தில் விதைப்பதற்காக அம்மனிடம் வேண்டுதல் வைப்பார்களாம். பிறகு காலப்போக்கில், பங்குனி மாதத்தில் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, ஐந்து நாள் விழாவாக அமர்க்களப்படத் துவங்கிவிட்டது வாளாடி கிராமம்.
பங்குனியில் முதல் புதன்கிழமை, காப்புக் கட்டுவர். அடுத்து, 2-வது புதன்கிழமை மற்றொரு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதையடுத்து திங்கள் துவங்கி வெள்ளி வரை ஐந்து நாளும் பல்லக்கு, சப்பரம், திருத்தேர் எனத் தினமும் திருவீதியுலா வருவாள் அம்மன். உலகெங்கிலும் உள்ள வாளாடியைப் பூர்வீகமாகக் கொண்ட அன்பர்கள், குடும்ப சகிதமாக வந்து இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். அப்போது பொங்கல் படையலிடுதல், புடவை சார்த்துதல், முடி காணிக்கை என பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள் பக்தர்கள்.
உலகாயி அம்மன் கோயிலுக்கு ஒருமுறை வந்து, புடவை சார்த்தி, விளக்கேற்றி வழிபட்டால்... திருமணத் தடை அகலும்; சந்ததி சிறக்கும்; கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
Comments
Post a Comment