அரங்கன் உரைத்த அந்தரங்கம்

திருவரங்கம் - பூலோக வைகுண்டம் எனும் பெருமை வாய்ந்தது. 108 வைணவ திருத்தலங்களுக்குத் தலைமை அலுவலகம். ஆழ்வார்கள் மட்டுமின்றி நாதமுனிகள், ஆளவந்தார் தொடங்கி இதோ... இன்று ராமானுஜர் வரையில் ஆசார்ய வள்ளல்கள் வாழ்ந்து வைணவம் வளர்க்கின் றனர். அவர்களுக்கு அரங்கனே கதி. அழகிய மணவாளனே மணாளன்.
ஆராத காதலில் ஆழ்வார்களும், ஆசார்யர்களும் அரங்கனை ஆட் கொண்டனரா! அல்லது அழகிய மணவாளன் இவர்களை ஆட்கொண்டானா! என்பது தனிப்பட்ட முறையில் விவாதத்துக்குரிய ரசமான தலைப்பு.
தற்போது பகவத் ராமானுஜர் தலைமைப் பொறுப்பினை ஏற்று தன்னலமற்ற தொண்டாற்றி வருகின்றார். சுமார் எண்ணாயிரம் சந்யாசிகள் அவருடன் இருந்தனராம். அது தவிர இல்லறத்தில் இருந்து கொண்டே எம்பெருமான் தவிர ஏனைய வற்றில் ஈடுபாடற்ற பரமைகாந்திகள் கணக்கற்றவர் வசித்து வருகின்றனர். கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் எம்பெரு மானார், கிடாம்பியாச்சான், மிளகாழ்வான், திருக்குருகைப்பிரான் பிள்ளான் என எதிராஜரின் சீர்மிகு சீடர்கள் அரங்கத்தின் வைணவத்துக்கு அரண்களாக உள்ளனர்.
ஸ்ரீரங்கநாதனும் ஸ்ரீ ரங்கநாயகியும் நித்யோத்ஸவம், பகே்ஷாத்ஸவம், மாஸோத்ஸவம் என்று, தினமும் திருவிழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர். பொலிக, பொலிக, பொலிக என ஆழ்வார் பாடியது இன்று அரங் கத்தில் திருவாகத் திகழ்கிறது. எதிராஜராம் ராமானுஜரின் அருள் மொழிகளைக் கேட்டு லட்சக் கணக்கில் மக்கள் நல்வாழ்வு அடைகின்றனர். ராமானுஜன் சொல்வன்மைக்குயாது காரணம்?" என திருக்குறுங்குடி நம்பி சந்தேகம் கொண்டு பின்னர் சிஷ்யனாகி அதனை அறிந்தமையை முன்னமேயே கண்டோமன்றோ. இதோ இத்திருவரங்கத்தில் அதன் பெருமை தொடர்கின்றது.
பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் ராமானுசன்’ என்கிறார் திருவரங்கத்து அமுதனார். ரங்கநாதன் மீது மையல் கொண்டவர் ராமானுஜர். அவர் மூலமாகத்தானே தன் உபதேசங்களை ரங்கநாதன் உலகறியச் செய்கிறான்.
முக்கியமாக சரணாகதி சாஸ்த்ரம் (அடைக்கலமே ஆன்மாவைக் காப்பாற்றும்) உலகில் செழித்து எல்லோரையும் வைகுண்டத்தை அடைவிக்க வேண்டும் என்பதில் ரங்கநாதன் உறுதியாக இருந்தான். ராமானுஜனாக (பலராமன் தம்பியாக) தான் உரைத்த கீதையின் பொருளை - குறிப்பாக சரம ச்லோகத்தின் பெருமையை இந்த ராமானுஜரைக் கொண்டு பிரசாரம் செய்ய தீர்மானித்தான்.
அவதாரங்களில் உயர்ந்தது அர்ச்சாவதாரம். அதாவது ‘தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம்’ என்பதாக நாம் எப்படியெல்லாம் விரும்புகிறோமோ அப்படியெல்லாம் அலங்காரங்கள், உற்ஸவங்கள் செய்து பெருமாளை ரசிக்கலாம்.
ஒருசமயம் பங்குனி உத்திரத் திருநன்னாள். வைணவ திருக்கோயில்களுக்கு இந்நாள் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அன்றுதான் பிராட்டியின் திருவவதாரம். ஆம் ராமனாக, கிருஷ்ணனாக, நரஸிம்ஹனாக அவதரித்த பெருமாள் அந்தந்த அவதாரங்களில் ஜயந்தி (பிறந்த நாள்) கொண்டாடுகிறான். ஆனால் சீதையோ, ருக்மிணியோ என்று பிறந்தார்கள் என்பது தெரியுமா? அவர்களின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோமா?
அதாவது பெருமானுக்குக்கூட அவதாரங்களில் கர்ப்பவாஸம் உண்டு. ஆனால், பிராட்டி என்றுமே அயோ நிஜை. தானாக ஆவிர்பவிப்பவள். அதில் குறிப்பாக, துர்வாஸ முனிவரின் சாபத்தினால் மூவுலகிலும் மஹாலக்ஷ்மி மறைந்தாள். பின்னர் தேவர்களும் அசுரர்களும் அமுதத்துக்காகப் பாற்கடலைக் கடைந்தனர். அமுதில் வரும் பெண்ண முதமாக மஹாலக்ஷ்மி அதில் ஆவிர்பவித்தாள். கடற்கரையிலேயே அவளின் திருமணம் அன்றைய தினத்திலேயே நடந்தேறியது.
இப்படி அவள் அவதரித்து அழகிய மணவாளனாம் எம்பெருமானை மணம் புரிந்த திருநன்னாள் பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திர திருநாள். அதனால்தான் எல்லா விஷ்ணு கோயில்களிலும் விமரிசையாக பெருமாள், தாயார் கல்யாண உத்ஸவம்
அன்று நடைபெறும். ‘சேர்த்தி உத்வஸம்’ என்று ஒரே ஆஸனத்தில் பெருமாளையும், தாயாரையும் எழுந்தருளப் பண்ண வைத்து பக்தர்கள் சேவித்து மகிழ்வார்கள்.
எல்லாக் கோயில்களிலும் இது விமரிசையாக நடந்தாலும் திருவரங்கத்துக்குப் பெருமை சேர்க்கத் தான் ராமானுஜர் இருக்கிறாரே! ரங்கநாதனும் அதற்காகத்தானே அவரை எங்கும் செல்ல விடாமல், ஒருவேளை சென்றாலும் உடனேயே திரும்பி வரும் படியாகச் செய்து விடுகிறானே.
இந்த சமயம் பங்குனி உத்திர நன்னாள். ஸ்ரீரங்கன் ரங்கநாயகியின் சன்னிதிக்கு எழுந்தருளி அங்கே
சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருநாளன்று ரங்கநாயகி மண்டபத்தில் ஜே! ஜே என்று கூட்டம் அலைமோதுகிறது. ஒரே சமயத்தில் தன் குழந்தைகள் அனைவரையும் உடன் சேர்த்து தாய், தந்தையர் களிப்பது போன்று ரங்கனும், அவன் நாயகியும் மகிழ்ந்துறைகின்றனர்.
சிஷ்யர்கள், பக்தர்கள் புடைசூழ ராமானுஜர் அவ்விடத்துக்கு பெருமாளைச் சேவிக்க வருகிறார். மக்கள் வெள்ளத்தினூடே அவரின் வருகையை திவ்ய தம்பதிகள் மகிழ்வுடன் பார்க்கின்றனர். இதுவரை இருந்த சலசலப்பு ஒரே நொடியில் அமைதியாகி விட்டது. மக்கள் ராமானுஜர் மீது கொண்ட மதிப்பு அத்தகையது. எங்கும் நிசப்தம். எல்லோருடைய கவனமும் ராமனுஜர் மீதே நிலைத்து நின்றன. தன்னை
சேவிக்க மறந்து ராமானுஜரையே வைத்த கண் வாங்காமல் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருப்பதை திவ்ய தம்பதிகளும் ரசித்தனர்.
மெதுவாக மண்டபத்தின் படிக்கட்டுகளில் ஏறி பெருமாளையும், தாயாரையும் சேவித்தார் ராமானுஜர். இவன் அழகிய மணவாளன். அவனழகைச் சேவிக்க இரண்டு கண்கள் போதாது. ஆனால், ராமாநுஜரால் அத்தனை அழகையும் அள்ளிப் பருக முடிந்தது. ஏனெனில் அவர்தான் ஆதிசேஷன் அவதாரமாயிற்றே. இமையோர் தலைவனை இமைக்க மறந்து சேவித் தார். ராமானுஜரின் உள்ளத்தில் பக்தி வெள்ளம். திவ்ய தம்பதிகள் நெஞ்சத்தில் அன்பு வெள்ளம். இரண்டும் எதிரெதிரே பொங்கிப் பிரவகிக்கின்றது.
நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறது எதிரே உள்ள கூட்டம். திருவடி முதல் திருமுடி வரையிலும் நிதானமாக சேவிக்கிறார் எதிராஜர். ‘காதல் கணவனை அன்பு ததும்ப ஆசை மனைவி அனுபவிக்கும் நிலையிது’ என்று நாம் புரிந்து கொள்ள பெரியோர்கள் உதாரணம் காட்டுகின்றனர்.
ஒருபுறம் அரங்கம் நிறைந்த மக்கள் வெள்ளம். மறுபுறம் அரங்கநாயகன். நடுவினில் தனிப்பெரும் தலைவனாகிய ராமானுஜர். அரங்கனின் அழகிய முகத்தில் மெலியதான புன்னகை தவழ்ந்தது. என்றுமே அவன் திருமுகம் மந்தகாசத்துடன் கூடியது என்றாலும், இன்றைய புன்னகையில் ‘ஏதோ திருவுள்ளம்’ உறைந்துள்ளது போலும். அருகிருந்த அன்னையான ரங்கநாயகியும் ஆமோதிப்பது போன்று மெதுவாகத் தலை அசைத்தாள்.
எம்பெருமான் திருவுள்ளத்தில் என்ன உள்ளது என்பதை அறியும் வன்மை யாருக்கு உள்ளது? அவன் அடியார்களே அதை அறிபவர்கள். இன்று அரங்கனின் அந்தரங்கத்தை ராமாநுஜர் நன்கு உணர்ந்தார். அந்த ரங்கன் அவரிடம் அந்தரங்கமாக ஏதோ சொல்லியுள்ளான் போலும். கிடைத்த வாய்ப்பை வீணாக் காதவன்தானே செயல்வீரன்.
முன்பொரு நாள் குருகே்ஷத்ர யுத்தத்தில் சொகத்தினால் கலங்கிய அர்ஜூனனின் கலக்கம் தெளிய ‘கீதை’ எனும் பெரும் தத்துவத்தை உபதேசித்தவன் இதே ரங்கன். அரங்கம் என்றால் மேடை என்பது தானே பொருள். அன்று யுத்தரங்கத்தில் இவனின் பிரசங்கத்தை கேட்பவருமில்லை. போற்றினவரும் இல்லை. அர்ஜூனன் ஒருவனே கிடைத்தான். ஒரு வழியாக மனது இசைந்து யுத்தம் செய்தான். இருப் பினும் உயரிய அக்கீதையின் உள் பொருளை உலகம் உணர வேண்டாமா? அதே அரங்கன் இன்று அரங் கத்தில் குழுமியுள்ள மக்கள் திரளைக் கண்டான். ராமானுஜரின் அந்தரங்கத்தில் புகுந்து பேச வைத்தான். கணீரென்று அவர் அக்கூட்டத்தில் பேசியது, அரங்கத்தின் திருமதிள்களில் இன்றும் எதிரொலிக்கிறது.
கவலை போக வழி!
ஒரு முறை மகாபெரியவரிடம் ஒரு பெண்மணி, ‘நான் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனா பிரச்னைகள் தீரலை. பகவான் கண்திறந்து பார்க்கலை’ என்று வருத்தப் பட்டார்.ஸ்லோகம் சொல்லும்போது சுவாமி முன் உட்கார்ந்து, சுவாமியை மனசிலே நிறுத்திதானே பாராயணம் பண்றேள்?" கேட்டார் மகா பெரியவர்.வேற வேலை பார்த்துக் கொண்டே தான் சொல்றேன். மனப்பாடம் பண்ணினது" என்றார் அவர். அதற்கு மகா பெரியவர் சொன்னார்: கா நறுக் கணும்னா அரிவாமணை, கத்தியை கிட்டே வெச்சுக் கறோம். சமைக்கணும்னா அடுப்புகிட்டேபோகணும். குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினாதான் ஓடறது. ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமி கிட்டே போக வேண்டாமா? ஸர்வ அந்தர்யாமி அவன். ஆனாலும் பிரச்னை பெரிசுன்னா, பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா சொல்லுங்கோ. நிச்சயம் கேட்பான்...கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே. நம் கவலைகள் கல் மாதிரி. பகவான் தெப்பம் மாதிரி. மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பம் ஆக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள்தான் பூஜை மந்திரங்கள் எல்லாம். அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சார சாகரத்தில் மூழ்கடிக்கப் படாமல் கரை சேர்ந்து விடலாம்".

Comments