ராகு தோஷம் நீக்கும் செங்காணி!

ன்று என்னவோ கனத்த அமைதியோடு மெள்ளத் தவழ்ந்துகொண்டிருந்தது தாமிரபரணி. அந்த இளம்பெண், தான் கொண்டுவந்த குடத்தை அதற்குள் அமிழ்த்தியபோது, தண்ணீருடன் சேர்ந்து மாம்பழம் ஒன்றும் குடத்துக்குள் புகுந்தது. அதைக் கவனிக்காமல் குடத்தோடு வீடு வந்து சேர்ந்தாள்.
 அவளின் எளிய வீட்டில் மாம்பழம் பாதுகாப்பாய் இருக்க... அந்த மாம்பழத்தைத் தேடி, அந்தப் பகுதி குறுநில மன்னனின் பெரும் படை அதிரடியாகப் புறப்பட்டது. காணாமல் போனது அபூர்வ மாம்பழம் என்பதால் இந்தப் பரபரப்பு!
வருடத்துக்கு ஒரேயரு பழம்தான் மரத்தில் காய்த்துப் பழமாக மாறும் என்றால், அந்தப் பழம் அபூர்வமானதுதானே?
தாமிரபரணியின் கரையோரம்தான் அந்த மரம் இருந்தது. எந்தவொரு மாம்பழத்துக் கும் இல்லாத அலாதிச் சுவை இந்தப் பழத்தில் இருந்தது. அதனாலேயே, அந்தப் பழம் தனக்கு மாத்திரமே சொந்தம் என்று உரிமை கொண்டாடியதோடு, அதைப் பல வருடங்களாக, தொடர்ந்து தான் ஒருவன் மட்டுமே சாப்பிட்டு வந்தான் அந்தப் பகுதி மன்னன். அதை சாப்பிடுவதால், தனக்கு பகைவர்களை வெல்லும் அசுர சக்தி கிடைப்பதாகவும் நம்பினான். 'மன்னனைத் தவிர, வேறு யாரேனும் பழத்தைத் திருடி உட்கொண்டால் கழுவில் ஏற்றப்படுவார்கள்’ என்னும் மன்னனின் அதிரடி அறிவிப்பு காரணமாக, அந்த மரத்தைக் கண்கொண்டு பார்க்கவும் அஞ்சினர் பொதுமக்கள்.
இந்த நிலையில்தான்... யாருமே எதிர்பாராதவிதமாக அந்த அபூர்வ மாம்பழம் இந்த முறை ஆற்றில் விழுந்து, ஏழைப் பெண்ணின் குடத்துக்குள் ஒளிந்துகொண்டது!
தாமிபரணிக்குத் தண்ணீர் எடுக்க வந்த யாரோ ஒரு பெண்தான் அந்த மாம்பழத்தைத் திருடிச் சென்றிருக்கவேண்டும் என்கிற தகவல் மன்னனிடம் உறுதி செய்யப்பட்டதால், யார் யாரெல்லாம் தண்ணீர் எடுக்க வந்தார்கள் என்பது உடனடியாகக் கணக்கெடுக் கப்பட்டு, அவர்கள் அனைவரது வீடுகளிலும் மாம்பழத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அந்த அதிரடிச் சோதனையில், ஒருவழியாக பழத்தைக் கண்டுபிடித்துவிட்ட வீரர்கள், அதை எடுத்து வந்த பெண்ணைக் குற்றவாளியாக்கி, மன்னன் முன்பு கொண்டுபோய் நிறுத்தினார்கள். விசாரணை ஆரம்பமானது.
'மன்னிக்கவேண்டும் அரசே! அந்த மாம்பழத்தை நான் பறிக்கவும் இல்லை; திருடவும் இல்லை. அது எப்படி, எனது குடத்துக்குள் வந்தது என்பதும் எனக்குத் தெரியாது!'' என்றாள் அந்தப் பெண்.
ஆனால், மன்னன் அவளின் வாதத்தை ஏற்கவில்லை. தகுந்தபல விளக்கங்களைச் சொல்லி அவள் மன்றாடியும் மன்னன் மனம் இரங்கவில்லை. மாறாக, செய்த குற்றத்தை மறைக்க அவள் பொய் சொல்வதாகக் கருதினான்.  முடிவில் அவளை கழுவில் ஏற்ற உத்தரவிட்டான்.
அப்பாவி இளம்பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. உயிர் பிரியும் நிலையில், நிரபராதியான தனக்குத் தண்டனை விதித்த மன்னனையும், அவனுக்கு அறிவுரை சொல்லாமல் தனக்கு நிறைவேற்றப்படும் தண்டனையை வேடிக்கைப் பார்க்கக் குவிந்த மந்திரிகள் மற்றும் மக்கள் கூட்டத்தையும் கண்டு, கோபத்தில் முகம் சிவக்க... 'நான் வாழமுடியாத இந்த இடம் இனி அழியட்டும். பசுக்கள், பெண்கள் தவிர வேறு யாருமே இங்கே வாழ முடியாமல் போகட்டும்!'' என்று சபித்தாள்.
அவளது சாபம் விரைவில் பலித்தது. அந்தப் பகுதியில் பாம்புகள் பல்கிப் பெருகின. மக்கள் ஓட்டம் பிடித்தனர். எஞ்சியிருந்த பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. திருமணத்துக்குக் காத்திருந்த பெண்களை யாரும் மணக்க முன்வரவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், அந்தப் பகுதி மக்கள் அங்கே கோயில்கொண்டிருந்த ஈசனிடம் சரண் புகுந்து, முறையிட்டு அழுதனர். ஈசனும் அவர்களுக்கு அருள் புரியத் திருவுளம் கொண்டார். ஊர் மக்களை அச்சுறுத்திய பாம்புகளைப் பிடித்துத் தன் கழுத்தில் ஆபரணங்களாகப் போட்டுக்கொண்டார். தவறு செய்த மன்னனின் ஆட்சியை அகற்றி, நல்லாட்சி ஏற்பட அருள்புரிந்தார்.
தங்களுக்கு நல்வழி காட்டிய அந்த ஈசனுக்கு நன்றி செலுத்தும் வகையில், அவரின் கோயிலைப் புதுப்பித்தனர் மக்கள். அந்தக் கோயில் சாதாரண கோயில் அல்ல; அகத்தியரின் சீடர்களில் முக்கியமானவரான ரோமச முனிவர் பிரதிஷ்டை செய்த அற்புத சிவலிங்கத் திருமேனி கொண்ட கோயில். தாமிபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள இக்கோயில், நவகயிலாயக் கோயில்களுள் நான்காவது திருத்தலம். திருத்தலத்தின் இன்றைய பெயர் செங்காணி. கோயில் சிறியதுதான் என்றாலும், மகிமைகள் நிரம்பியது.
அன்று, அப்பாவிப் பெண் அநியாயமாகக் கழுவேற்றம் செய்யப்பட்டதால் என்னவோ, இன்றும் இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதியில் மக்கள் யாருமே வசிக்கவில்லை. அப்படியே வசித்தாலும், அங்கே தொடர்ந்து வசிக்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.
செங்காணியில் அருளும் ஈசனின் திருநாமம் கோதபரமேஸ்வரர். இறைவி- ஸ்ரீசிவகாமி அம்பாள். இப்பகுதி செம்மண் நிறைந்த பகுதி என்பதால், இந்த ஊருக்குச் செங்காணி என்ற பெயர் வந்ததாம். 12-ஆம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இங்கே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த ரோமச முனிவர், ராகுவை நினைத்து வழிபாடு செய்ததால், ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் திருத்தலமாவும் இக்கோயில் திகழ்கிறது. ஸ்ரீகோதபரமேஸ்வரர் மட்டுமின்றி, இங்கே எழுந்தருளியுள்ள அனைத்து தெய்வங் களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்கின்றனர். அவர்களின் விக்கிரகத் திருமேனி யில் உள்ள ராகுவே அதற்கு சாட்சி.
'ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் கல்யாணம் தடைபடும். திருமணம் ஆனவர்களுக்குக் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தொந்தரவு தரும். இப்படி, ராகு தோஷங்களால் பல்வேறு வகையில் அவதிப்படுவோர் இங்கு வந்து ஸ்ரீகோதபரமேஸ்வரரை வழிபடுவது நல்லது. இந்தச் சிவனுடைய அம்சத்தில் ராகு இருக்கிறார். தவிர, இங்கே தனித் தனிச் சந்நிதிகளில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர்,
ஸ்ரீஆறுமுகநயினார், ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீநந்தீஸ்வரர் ஆகிய தெய்வங்களின் திருமேனி யிலும் ராகு இருப்பதைக் காண முடியும்...' என்று கூறிய கோயில் அர்ச்சகர் ஆர்.ராஜூ, ராகு தோஷ பரிகாரம் செய்வது எப்படி என்பதையும் விளக்கினார்.
'ராகு தோஷம் உள்ளவர்கள் வெள்ளியால் ஆன சர்ப்பத்தை வாங்கி வந்து தந்தால், சங்கல்பம் பெற்று அதை ஸ்வாமி முன்பு வைப்போம். பிறகு, மூலவருக்கும் பக்தர் தந்த வெள்ளி சர்ப்பத்துக்கும் 18 வகையான அபிஷேகங்கள் செய்வோம். இந்தப் பரிகாரம், ராகு தோஷத்தை உடனடியாக நீக்கும்.
இதேபோல், தொடர்ந்து 11 பிரதோஷ நாட்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், நினைத்த நற்காரியங்கள் சட்டென்று நிறைவேறும். பிரதோஷம் அன்று ஸ்வாமிக்கும் நந்திக்கும் ஒரே நேரத்தில் 38 வகையான அபிஷேகங்கள் நிகழும்!
இங்குள்ள ஸ்ரீபைரவரும் விசேஷமானவர். தேய்பிறை அஷ்டமி அன்று மாலை 5 முதல் 6 மணி வரையிலும் இவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது இவரைத் தரிசித்து வேண்டிக்கொண்டால், பில்லி- சூனியம் முதலான பிரச்னைகள், சனி தோஷம் ஆகியன நீங்கும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்வோர் இவரை வழிபட்டால், தொழிலில் முன்னேற்றம் காணலாம்' என்றார்.
இந்தக் கோயிலின் அம்பாளான ஸ்ரீசிவகாமி அம்மன் தெற்குப் பார்த்த திருக்கோலத்தில் அருள்கிறார். இவரது திருமேனி முழுவதும், ருத்ராட்சம் போன்று அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு. இவரை வழிபட, குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்தப் பாக்கியம் விரைவில் கிடைக்கும்; மாங்கல்ய தோஷம் நீங்கும் என்கிறார்கள்!

Comments