அலைமகள் வழிபட்ட ஆலயம் களையிழந்து கிடக்கலாமா?

லயங்கள் நிறைந்த புண்ணியபூமி, பாரதம். குறிப்பாக, தென்தமிழகத்தில் ஆலயங்களுக்குப் பஞ்சமே இல்லை.

ஒருகாலத்தில் நித்திய பூஜைகளுடன் பூரண சாந்நித்யம் கொண்டு, வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை எல்லாம் வாரி வாரி வழங்கி வந்த ஆலயங்கள் பலவும் இன்றைக்குச் சிதிலம் அடைந்து, ஒருவேளை பூஜைக்கும் வழியின்றி இருக்கும் அவல நிலை கண்டு, மனம் வேதனையில் ஆழ்கிறது.

அப்படியான கோயில்களை அடையாளம் கண்டு, நமது வாசகர் களுக்கும் ஆன்மிக அன்பர்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காண்பித்து, அவர்களின் கைங்கர்யத்தால் அந்த ஆலயங்கள் விரைவில் திருப்பணிகள் கண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, பழையபடியே சீரும் சிறப்புமாகத் திகழவும், இந்தப் பெரும் பணியில் பங்கேற்பதன் மூலம் நமது வாசகர்களுக்கும் அதற்கான புண்ணியப் பலனைக் கிடைக்கச் செய்யவுமான நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் இந்த ‘ஆலயம் தேடுவோம்’ பகுதி.

அந்த வகையில், இந்தப் பகுதிக்காகச் சென்ற வாரம் நாம் சென்று பார்த்தது, நாகக்குடி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

அகத்தியர் வழிபட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில், இன்றைக்கு மதில் சுவர்கள் பெருமளவு இடிந்தும், ராஜகோபுரம், சந்நிதிகளின் விமானங்கள் சிதைந்து செடிகொடிகள் மண்டியும் இருக்கும் நிலையைக் கண்டபோது, நமது மனம் பதறித் துடித்தது.
ஆலயங்கள் ஆண்டவனை வழிபடும் தலம் மட்டுமல்ல; அறங்களை வளர்க்கும் அறநிலை யங்களும்கூட! அதனால்தான் ஆலயங்களை நிர்வகிக்கும் துறை ‘அறநிலையத் துறை’ என்றே வழங்கப்படுகிறது. அப்படி, ஆன்மிகமும் அறமும் வளர்த்த ஆலயங்களில் ஒன்றாகவே, இதோ இப்போது நாம் தரிசிக்கும் இந்த அகத்தீஸ்வரர் கோயிலும் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்திருக்கவேண்டும் என்பது ஆலயத்தின் தோற்றத்தைப் பார்க்கும்போதே நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆலயத்தின் மதில்சுவர் சுமார் இரண்டடி அகலத்தில் உள்ளது. ராஜகோபுரம் முதல் அனைத்து சந்நிதிகள் மற்றும் மதில்சுவர் என முழுவதும் செங்கல் பிளாக்குகளைக் கொண்டே கட்டப்பட்டுள்ளது.
‘‘முற்காலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்தப் பகுதி, நாகர்களின் ஆளுகையில் இருந்தது. எனவே, இந்த ஊருக்கு நாகக்குடி என்ற பெயர் ஏற்பட்டது. அகத்தியர் தென் திசைக்கு வந்தபோது, இந்த இடத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால், இங்குள்ள இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, இந்தக் கோயில் இறைவனை மகாலக்ஷ்மி வழிபட்டு வரம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, இந்தக் கோயிலில் மகாலக்ஷ்மிக்கு தனிச் சந்நிதி அமைந்திருக்கிறது’’ என்று சொன்ன பழனியப்பன் என்பவர், சிதிலமடைந்த அந்தச் சந்நிதியை நமக்குக் காட்டினார்.

தொடர்ந்து, ‘‘இந்தப் பகுதியில் முற்காலத்தில் நிறைய நாகங்கள் இருந்ததாகவும், இரவு வேளைகளில் அவை திரண்டு வந்து இங்குள்ள இறைவனை பூஜித்ததாகவும் சொல்கிறார்கள். ஒருகாலத்தில் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு வந்ததாகப் பெரியவர்கள் சொல்லக் கேட்டி ருக்கிறேன். காலப்போக்கில் பக்தர்கள் வருவது நின்றுவிட்டது. கோயிலும் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலம் அடைந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு, எங்களுடைய அகஸ்தியர் வழிபாட்டு மன்றத்தின் சார்பில், பல அன்பர்கள் ஒன்று சேர்ந்து உழவாரப் பணி செய்து, தெய்வ விக்கிரஹங்களை ஒரு சிறிய கட்டடத்தில் வைத்துப் பூஜை செய்து வருகிறோம். கோயிலை ஓரளவுக்கேனும் அதன் பழைமை மாறாமல் கட்டிக் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். சிவபெருமான்தான் அருள்புரிய வேண்டும்’’ என்றார்.

செங்கல்லால் ஆன பிளாக்குகளைக் கொண்டு இந்தக் கோயில் கட்டப்பட்டு இருப்பதைப் பார்க்கும்போது, சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பே இந்தக் கோயில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. வழக்கமான முறையில் செங்கற்களைத் தயாரித்து, அவற்றைத் தேவையான அளவுக்கு உடைத்துப் பயன்படுத்தாமல், எந்த வடிவத்தில் தேவையோ அந்த வடிவத்திலேயே பிளாக்குகளாகச் செய்து, இந்தக் கோயில் கட்டப் பயன்படுத்தி இருக்கின்றனர். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே அந்த அளவுக்குச் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பல கலைஞர்கள் தங்களின் அயராத உழைப்பால், நாம் நாளும் நலம் வாழ எழுப்பிய ஐயனின் திருக்கோயில் இப்படிச் சிதிலம் அடைந்து இருக்கலாமா?
பிரதோஷ காலத்தில் இங்கு வந்து அகத்தீஸ்வரரை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும்; விஷ ஜந்துக்களால் பாதிப்புகள் ஏற்படாது. எல்லாவற்றுக்கும் மேலாக, சிவஞானம் ஸித்திக்கும். அதேபோல், அம்பாள் ஆனந்தவல்லி சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், தடைப்பட்டு வரும் திருமணம் நல்லபடி கூடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நம் முன்னோர்களின் மிகச் சிறந்த கட்டடத் தொழில் நுட்பத்துக்கு நிதர்சனமான சாட்சியாகவும், ஒரு காலத்தில் மிகுந்த சாந்நித்யத்துடன் திகழ்ந்து, வழிபடும் பக்தர்களுக்கு நாளும் நல்லருள் புரிந்ததுமான ஐயனின் திருக்கோயிலை இப்படிச் சிதிலம் அடைந்த நிலையிலேயே இனியும் விட்டுவைத்திருப்பது சரிதானா?

விண்ணும் மண்ணும் வியாபித்திருக்கும் ஐயனின் திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்து, கும்பாபிஷேகம் செய்ய நாம் உடனே நம்மாலானதைச் செய்ய வேண்டாமா? விரைந்து செயல்பட வேண்டாமா?
திருமகளுக்கே அருள்புரிந்த ஐயனின் ஆலயம் இன்னமும் திருவிழந்து பொலிவிழந்து திகழலாமா?

‘கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்தெய்தி

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,

எண் இறந்து எல்லை இலாத’
சிவபெருமானின் திருக்கோயில் மீண்டும் புதுப் பொலிவு பெற, நாமும் நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்வோம்.

ஐயனின் அளப்பரிய கருணையையும், அவனருளால் திருவின் கடாட்சத்தையும் பெற்று நம் சந்ததி வாழ்வாங்கு வாழ, நாகக்குடி நாதனின் திருக்கோயில் திருப்பணியில் நாமும் பங்கு பெறுவோம்.


எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது..?

திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரி என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து மேற்கே சுமார் 1 கி.மீ. நடந்து சென்றால், நாகக்குடி அகத்தீஸ்வரர் கோயிலை அடையலாம்.

Comments