கேட்டேன்; ரசித்தேன்!

காமன்
மன்மதனுக்கு, ‘காமன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. காமன் என்ற பெயர் இவனுக்கு வரக் காரணம், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், இனத்தவர்களுக்கும், வெவ்வேறு மொழி பேசு பவர்களுக்கும் பொது தேவனாக இவன் விளங்குகிறான். இவன் எல்லோருக்கும் பொதுவானவன் என்பதால்தான் இவனை காமன் என்று அழைக்கிறோம்.
- திருமுருக கிருபானந்தவாரியார் சொற்பொழி விலிருந்து...

நிறைகுடம்
குரு ஒருவரிடம் நெடுங்காலம் படித்த சீடர் ஒருவர், இன்னொரு குருவிடம் சென்று மேலும் கற்க விரும்பினார். ஆனால், முதல் குருவோ, மிகவும் கர்வம் கொண்டவர். அதனால், நானே உனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து விட்டேன். இனி, வேறு குரு எதற்கு?" என்று கேட்டார்.
சீடன் அதைப் பொருட்படுத்தாததால், சரி, இதைக் கொண்டுபோய் உன் புதிய குருவிடம் காட்டு" என்று கூறி, ஒரு குடம் நிறையத் தண்ணீர் நிறைத்து அதனை சீடனிடம் கொடுத்து அனுப்பினார்.
இரண்டாவது குரு, குடத்தைப் பார்த்தவுடன் விஷயத்தைப் புரிந்துகொண்டார். ‘நான் என் சீடனுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து, அவனை நிறைகுடமாக ஆக்கி இருக்கிறேன். வேறு எவருடைய உபதேசமும் அவனுக்குத் தேவை இல்லை’ என்று அவர் சொல்வதாக ஊகித்தார்.
உடனே, அவர் அந்தக் குடத்துத் தண்ணீரில் சில கற்கண்டு கட்டிகளைப் போட்டு, உன் பழைய குரு விடம் இதைக் கொடுத்து ருசி பார்க்கச் சொல்" என்று கூறி அனுப்பினார்.
சீடன் கொண்டு வந்த தண்ணீரைப் பழைய குரு ருசி பார்த்தார். அது இனித்தது. விஷயமும் விளங்கியது, கர்வமும் அடங்கியது. ‘ஆம், நான் குடத்தில் நிரப்பிய தண்ணீர் தாகத்தை மட்டுமே தீர்க்கும். ஆனால், அதில் இனிப்பான ருசி இல்லை. நான் என் சீடனுக்கு வெறும் அறிவை மட்டுமே சொல்லிக் கொடுத்தேன். ஆனால், அத் துடன் ‘பக்தி’ என்ற கற்கண்டை போட்டுத் தரவில்லை. அதைச் சுட்டிக் காட்டவே புதிய குரு இப்படிச் செய்திருக்கிறார்’ என்று அறிந்து கொண்டார்.
- ஸ்ரீகிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் சொற்பொழி விலிருந்து

Comments