ஒருக்காமலை சாமி!

வானளாவிய பிரம்மாண்டமான ஒற்றைக்கல், இக்கல்லின் கீழே அமைந்த ஸ்வயம்பு பெருமாள், மலையில் வாழும் பலநூறு வானரங்கள் இங்கு வழங்கப்படும் திருக்கோடி பிரசாதத்துக்காக அமைதியாகக் காத்திருக்கும் அதிசயம்... இவை அனைத்தும் ஒருங்கே கொண்ட அதிசய ஆலயம், சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை வரதராஜ பெருமாள் திருக்கோயில்.
ஒருக்காமலை, ஒரு கல்லால் ஆனதால் மட்டும் இத்தலத்துக்கு இப்பெயர் வந்து விடவில்லை. இங்கு இருக்கும் சக்தி வாந்த சுயம்பு பெருமாளிடம் வைக்கும் நியாயமான கோரிக்கைகள் ஒருபொழுதும் பலிக்காமல் போனதில்லை. அவ்வாறு பலித்தவுடன் பிரார்த்தனை செய்த பக்தர்கள், தாங்கள் வேண்டியவாறு இங்கு திருக்கோடி வைக்க வேண்டும். அப்படிச் செயத் தவறினால் ஒருக்கா (பொறுக்காத) மலை என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். இவ்விறைவன் இங்கிருப்பது எவ்வாறு உலகுக்குத் தெரிய வந்தது?
ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன், இங்கு
சிறுவர்கள் மலை அடிவாரத்தில் மாடு மேத்து வந்தனர். அச்சமயம், ஒரு மாடு மட்டும் மலை ஏறி ஒரு குகையின் வாசலில் படுத்துக்கொண்டது. மாட்டைக் காணாமல் தேடிக்கொண்டு வந்த சிறுவன், குகையின் வெளியே மாடு படுத்திருப்பதையும் குகைக்குள் சுயம்புவான இறைவன் சங்கு, சக்கர, நாம சின்னங்களுடன் இருப்பதையும் கண்டான். அருகிலிருந்த பாறையில் ஆஞ்சநேய சுவாமியின் திரு உருவமும் இருந்தது. இவற்றைக் கண்ட சிறுவன் அதிசயத்துடன் தனது சகாக்களை அழைத்தான். அனைவரும் இறை வனை வழிபட்டு மகிழ்ந்தனர். சிறுவன் பசுவினை எழுப்ப முயன்றான். ஆனால், அதுவோ அசைந்தே கொடுக்கவில்லை.
வியப்படைந்த சிறுவன், பசுவைத் தட்டியும், தார்க் கோலால் குத்தியும் பலவாறு முயன்றான். எந்த பிரயோஜனமும் இல்லை. முகத்தை இறைவனை நோக்கி படுத்திருந்தது பசு. சிறுவனுக்கு வேறு வழி தெரிய வில்லை. தனது பசு நல்லபடியாக எழுந்து வந்தால் இறைவனுக்கு ஒரு காசு கொடுப்பதாக வேண்டுதல் வைத்தான். மந்திரம் போட்டாற்போல் பசு எழுந்து அவனின் பின்னால் சென்றது.
சிறுவனுக்கு ஒரே குஷி. ஆனால், வைத்த பிரார்த் தனையை மறந்தே போனான். ஒரு நாள், இரண்டு நாள்... இப்படியே ஒரு வாரம் போயிற்று. சிறுவன் வழக்கம்போல் மலை அடிவாரத்தில் மாடு மேப்பதும், வீடு திரும்புவதுமாக இருந்தான். சரியாக ஒரு வாரம் கழித்து மறுபடியும் அந்தப் பசு மலையின் மேலே சென்று குகை வாயிலில் படுத்துக் கொண்டது. இது என்ன சோதனை என்று மலை மேலே ஓடினான்.
பசு குகையின் வாயிலில் படுத்திருந்தது. சிறுவன் மீண்டும் தட்டி எழுப்பியும், தார்க்கோலால் குத்தியும் எந்தப் பலனும் இல்லை. அப்போதுதான் அவனுக்கு தான் வைத்த பிரார்த்தனை நினைவுக்கு வந்தது. உடனே, மடியிலிருந்து ஒரு காசை எடுத்து இறைவனிடம் வைத்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான். மறுபடியும் மந்திரம் போட்டது போல் பசு எழுந்து அடிவாரத்தை நோக்கி நடந்தது.
‘ஒரு காசைக்கூட பொறுக்காத ஒருக்காமலை
சாமி’ என்று சிறுவன் தனது கூட்டத்தாரிடம் சோல்ல, பலரும் இறைவனை நாடி வந்தனர். பக்தர்கள் கேட்ட வரங்களைத் தந்ததால் இறைவன், ‘வரதராஜ சாமி’ என்று வழங்கப்படலானார். சில வருடங்களுக்கு முன்பு வரை மலை ஏறிச் செல்ல சரியான பாதைகிடையாது. தற்சமயம் கோயிலுக்கு சிறிது தூரம் முன்புவரை வண்டிகள் செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் திருக்கோடி கொடுப்பதாக வேண்டிக்கொள்கின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் இக்கோயில் பூசாரி, தனது வாயைக் கட்டிக் கொண்டு பக்தி சிரத்தையுடன் பிரசாதத்தை சமைக்கிறார். பொங்கல், பஞ்சாமிர்தம் மற்றும் தேங்கா முதலியவை பெரிய புது துணியில் (கோடி துணி) கொட்டி இறைவனுக்குப் படைக்கப்படுகிறது.
இம்மலை மேல் உள்ள நூற்றுக்கணக்கான குரங்குகள் கோயிலின் எல்லாபக்கமும் அணிவகுக்கின்றன. ஆனால், கீழே இறங்குவதில்லை, யாரையும் தொந்தரவு செய்வதில்லை. பூசாரி, மணி அடித்து இறைவனுக்கு உணவு படைத்த பின், ஒரு பெரிய அகண்ட விளக்கை அங்கிருக்கும் கல் தூண் மீது ஏற்றி வைக்கிறார். பின்னர் சாத உருண்டைகளை வாழைப்பழ பஞ்சாமிர்தத்துடன் சேர்த்து உருண்டைகளாக்கி ‘ஆஞ்சநேயா’ என்று குரல் கொடுக்கிறார். உடனே வரிசையாக வானரங்கள் கீழே இறங்கி வந்து தங்கள் உருண்டை களை சண்டை, போட்டி இன்றி எடுத்துச் செல்கின்றன. பக்தர்கள் தரும் வாழைப்பழம், பொரி போன்ற வற்றைக்கூட குரங்குகள் மிக நிதானமாக எடுத்துக் கொள்கின்றன. புரட்டாசி மாதம், சனிக்கிழமை போன்ற நாட்களில் நாள் முழுவதும் பக்தர்கள் திருக்கோடி செலுத்திவிட்டுச் செல்கின்றனர். பிற நாட்களில் காலையில் கோயில் திறக்கப்படுகிறது.
மூலஸ்தானத்தில் வரதராஜபெருமாளுடன் ராம லக்ஷ்மணரும் காணப்படுகின்றனர். ஸ்வயம்பு இறை வனைத் தவிர, ராம லக்ஷ்மணர் ஏன் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளனர். அப்படியானால், சீதா தேவி எங்கே என்பது தெரியவில்லை. கருவறை வெளியே வரிசையாக சிலைகள். அவற்றுள் இப்பகுதி மக்கள் தெய்வமாக வணங்கும் ‘அண்ணன்மார்’ எனப்படும் பொன்னர் சங்கரும் அடக்கம். கருவறைக்கு வெளியே உள்ள குழிகளில் அபிஷேகப் பால் ஊற்றப்படுகிறது. இதைக் குரங்குகள் வந்து குடித்துச் செல்கின்றன.
கோயில் மிக ரம்யமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது மட்டுமல்லாமல், கேட்ட வரம் தரும் பரிகாரத் தலமாகவும், வாயில்லா ஜீவன்களுக்கு உணவு தரும் ஓர் அற்புத ஆலயமாகவும் விளங்குகிறது.
செல்லும் வழி: சேலம் - ஈரோடு தேசிய நெடுஞ் சாலையில், சங்ககிரி கடந்தவுடன் அசோக் லேலண்ட் மற்றும் எம்.ஆர்.எப். ரீத்ரெட்ஸ் கட்டடங்கள் காணப்படும். இங்கிருந்து இடதுபுறம் திரும்பி குறுகிய சாலை வழி சென்றால் மலையின் அடிவாரத்தை அடையலாம். அங்கிருந்து கோயில் வரை செல்ல பாதை உள்ளது.

 

Comments