மேட்டுப்பாளையத்துக்குக் கிழக்கே 25 கி.மீ. தொலைவிலுள்ளது ஞானமலை எனும் கிராமம். இங்கே மலையடிவாரத்தில் ஸ்ரீகயிலாசநாதர் கோயில் இருக்கிறது. மலை உச்சியில் 180 படி ஏறிச் சென்றல் முருகனை தரிசிக்கலாம். இங்கே இவரது திருநாமம்- குமார சுப்ரமணியம். ஐந்து திருமுகம் எட்டு கைகளுடன் அபூர்வமான கோலம் அவருக்கு! இப்பகுதிக்கு 'இரும்பொறை’ என்றும் பெயர் உண்டு. மலையடிவாரத்தில் போகர் யாக குண்டம் இருக்கிறது. போகரை வழியனுப்ப முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு கைகளும் கொண்டு இறங்கி வந்ததாகவும்.... மீதி முகம் மற்றும் கைகளுடன் மலையில் இருக்கிறார் என்றும் இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
ஸ்ரீமுருகப்பெருமானின் ஆயுதம் வேல்தான் என்றாலும், வில் ஏந்திய நிலையில் அவரை சில கோயில்களில் மட்டுமே தரிசிக்கலாம். திருவண்ணாமலை, பட்டீஸ்வரம், தஞ்சாவூர், திருப்பூந்துருத்தி, ஆவூர் உள்ளிட்ட சில தலங்களில் வில்லேந்திய வேலனாக அருள்கிறார்.
தமிழகத்தில் மட்டுமல்ல, இலங்கையிலும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருக்கின்றன. கதிர்காமம், நல்லூர்கோவில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி, மேலைப்புலோலி ஆகிய இடங்களிலுள்ள கந்தவேளின் கோயில்களே, அங்குள்ள அறுபடை வீடுகளாக போற்றப்படுகின்றன.
திருக்கோவிலூரில் இருந்து திருவெண்ணெய் நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் உள்ள பாடல்பெற்ற ஸ்தலம் இடையாறு. இந்த ஊரை 'டி எடையார்’ என்று அழைக்கின்றனர். இங்குள்ள முருகனுக்கு 'கலியுக ராமப் பிள்ளையார்’ என்ற பெயர் இருப்பதாக குறிப்பிடுகிறது, அந்தக் கோயில் கல்வெட்டு.
உத்திரமேரூரில் சுமார் 6 அடி உயரத்துடன் அருள்கிறார் ஸ்ரீபால சுப்ரமணியர். ருத்திராட்சம் அணிந்து, கையில் நாகாபரணம் பூண்டு, காதுகளில் குண்டலம் தரித்து, சடை முடியுடன் சாய்வாக சிவபூஜை செய்யும் கோலத்தில் இவர் காட்சி தருவது விசேஷம்!
யோக நிலையில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானை மதுராந்தகம் அருகே குமாரவாடி ஸ்ரீஅழகேஸ்வரப் பெருமாள் கோயிலில் தரிசிக்கலாம்.
திருச்சி மாவட்டம்- லால்குடிக்கு அருகிலுள்ள திண்ணியம் திருத்தலத்தில், முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார்.
எண்கண் திருத்தலத்தில் மயில் மீது அமர்ந்து தெற்கு நோக்கி காட்சி தருகிறார்.
சேலம் மாவட்டம் கபிலர்மலை கோயில் கருவறை குடைவரையாக அமைக்கப் பட்டது. இங்கு ஸ்ரீபாலமுருகனாக கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் கந்தவேள். இங்கே உத்ஸவர் நாகாபரணத் துடன் காட்சி தருவது சிறப்பு.
Comments
Post a Comment