லண்டன் நகரின் மேற்குப் பகுதியான 'ஈலிங்’ எனும் பகுதியில் அழகுற அமைந்துள்ளது ஸ்ரீதுர்கை ஆலயம். தன்னை நாடி வந்து தரிசிக்கும் அன்பர்களின் இல்லங்களில் சகல ஐஸ்வரியங்களும் நிறைந்திருக்கச் செய்பவள் என்பதால், ஸ்ரீகனக துர்கை எனும் திருநாமம் இவளுக்கு அமைந்தது.
''கடல் கடந்து நம் உறவுகளையும் கலாசாரத்தையும் பக்தி வழிபாட்டு முறைகளையும் விட்டுவிட்டு, இங்கு வந்த வேளையில், இப்படியரு ஆலயம் அமைக்க வேண்டும் என்று தோன்றியது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்பார்கள். கடவுளின் துணை இருந்துவிட்டால், இந்த உலகில் எந்த மூலையில் வேண்டுமானாலும் நிம்மதியாக வாழலாம். எனவே, ஒரு கோயில் எழுப்ப முடிவு செய்து, இங்கே உள்ள தமிழர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் சந்தோஷத்துடன் சம்மதித்தார்கள். அதன்படி உருவான அற்புதமான கோயில் இது!'' என்கிறார் பொன்.தெய்வேந்திரம். இவர்தான் இந்தக் கோயில் உருவாவதற்கான ஆரம்ப கர்த்தா. தர்மகர்த்தாவாகவும் செயல்பட்டு வருகிறார்.
லண்டன் மாநகரின் எல்லாப் பகுதிகளிலுமே தமிழர்கள் வசிக்கிறார்கள். குறிப்பாக, இந்தப் பகுதியில் பக்தியுடன் வாழும் அன்பர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். தவிர, அனைவரும் எளிதாக வந்து செல்லும் வகையில், போக்குவரத்து இடையூறுகள் இல்லாத, முக்கியமான இடத்தில் கோயில் அமைந்துள்ளது என்று தெரிவிக்கின்றனர் லண்டன் தமிழர்கள்.
லண்டனில் முருகனுக்கும் சிவனாருக்கும் பெருமாளுக்கும் கோயில்கள் இருந்தாலும், அம்மனுக்கு ஆலயம் இல்லாத குறை நெடுங்காலமாக இருந்தது. ஸ்ரீகனகதுர்கை கோயில் கட்டப் பட்டதால், அந்தக் குறையும் நிவர்த்தியாகிவிட்டது.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நம்மூரைப் போலவே லண்டன் ஸ்ரீகனக துர்கை கோயிலிலும் கூட்டம் அலைமோது கிறது. இந்த நாட்களில் சிறுவர் சிறுமி களுக்கு வழிபாடு குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும், பஜனைப் பாடல்கள் குறித்தும் பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன.
ஆரம்பத்தில், ஒரு வீட்டில் அம்மனின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டனர். அதன் பிறகு, தமிழகத்தில் இருந்து விக்கிரகம் செய்து கொண்டுவந்து வழிபட்டு வந்தனர். பிறகு, சிறிய அளவில் அதேநேரம் மிக நேர்த்தியாக கட்டப்பட்டது இந்த ஆலயம். கடந்த 91-ஆம் வருடம், சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலின் சாம்பமூர்த்தி சிவாச்சார்யர்தான், லண்டன் ஸ்ரீகனகதுர்கை கோயில் கும்பாபிஷேகத்தைச் சீரும் சிறப்புமாக நடத்திவைத்தார்.
விம்பிள்டன் ரத்தினசிங்கம் எனும் அன்பர், லண்டனில் உள்ள பல கோயில் திருப்பணிகள் பங்கு பெற்றவர். இப்போது அவர் இல்லை என்றாலும், ஸ்ரீகனக துர்கை கோயில் உட்பட பல கோயில்களிலும் இவர் செய்த சேவைகளை இன்றைக்கும் நினைவுகூர்ந்து வருகிறார்கள், கோயில் கமிட்டியினரும் பக்தர்களும்.
அற்புதமான கோயில். அழகிய பிராகாரம். உள்ளே ஸ்ரீவள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீவிநாயகர் ஆகியோர் சந்நிதி கொண்டிருக்க, கருவறையில் அழகும் அன்பும் பொங்கக் காட்சி தருகிறாள் ஸ்ரீகனக துர்கை.
நம்மூரைப் போலவே சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை என பல மாதங்களில் விழாக்களும் விசேஷங்களும் அமர்க்களப்படுகின்றன. தேர்த் திருவிழாவையும் திருவீதியுலா வரும் அம்மனை யும் அவளின் பின்னே வரும் பக்தர்களையும் பார்க்கும்போது, 'இருப்பது லண்டனா... தமிழ்நாடா!’ என்று சந்தேகம் வரும் அளவுக்குப் பாரம்பரியம் மாறாமல், கலாசாரம் மீறாமல், உரிய சடங்கு சாங்கியங்களுடன் விழாக்கள் நடைபெறுகின்றன. அந்த நாளில், சுமார் 20 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்களாம்.
இன்னொரு விஷயம்... நிரந்தர அறங்காவலர் சபை, நிர்வாக சபை என இரண்டாகப் பிரித்து கோயிலை நிர்வகித்து வருகின்றனர். கடந்த 15 வருடங்களாக அம்மன் மீது அளப்பரிய பக்தி கொண்டு வழிபட்டு வரும் செல்லப்பா ராஜேந்திரன், இலங்கை நயினைத் தீவைச் சேர்ந்தவர். கடந்த இரண்டு வருடமாக, நிர்வாகச் சபையின் தலைவராக இருக்கிறார். ''எங்கள் நயினையில் நாகபூசணி எனும் அம்மன் அருளாட்சி செய்கிறாள். அந்தச் சக்தி வடிவத்தை ஸ்ரீகனக துர்கையின் ரூபத்தில் காண்கிறோம். கோயிலின் வருமானத்திலிருந்து குறிப்பிட்ட பகுதியை, இலங்கையில் வாடும் எங்கள் இனத்தவருக்கு அனுப்பி வைக்கிறோம். ஏழைகள், கல்விச் சாலை செல்ல வசதி இல்லாதவர்கள், போரில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு உதவும் விதமாக, இந்த நிதியை அனுப்பி வைக்கிறோம்'' என்கிறார் செல்லப்பா ராஜேந்திரன்.
அம்மனுக்கு உண்டான வாசனாதி அபிஷேகப் பொருட்கள், ஆங்கிலோ ஆசியன் கேஷ் அண்ட் கரி எனும் கடையினர் இறக்குமதி செய்து தருகின்றனர்.
அதேபோல் வேப்பிலை, மாவிலை, வில்வம், மல்லிகை என அனைத்தையும் பக்தர் ஒருவர் தினமும் வழங்கி, பூஜைக்கு உதவுகிறார். ''ஸ்ரீகனக துர்கைதான் எங்களுக்கு எல்லாமே!'' என்று சொல்லும் சிவா செந்தில்நாதன், ஸ்ரீதரன் செந்தில்வேல் ஆகிய இருவரும் கோயிலே கதி என இருந்து, அனைத்துப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள்.
இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பராபரக் குருக்கள், கோயிலில் பூஜை கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகிறார். ''ஸ்ரீகனக துர்கைக்கு பூஜை செய்வது என் இந்த ஜென்மத்துக் கொடுப்பினை! மிகுந்த வரப்பிரசாதி இவள். லண்டன், இங்கிலாந்து என இங்கே வசிக்கும் தமிழர்களும் இந்தியர்களும் அடிக்கடி வந்து, அம்மனைத் தரிசித்துச் செல்கின்றனர்'' என்கிறார் பராபரக் குருக்கள்.
ஸ்ரீகனக துர்கைக்கு நெய் தீபமேற்றி வழிபட்ட விஜயகுமார்- காஞ்சனா தம்பதியிடம் பேசினேன். ''லண்டனில் வசித்து வருகிறோம். ஏழு வருஷமா எங்களுக்குக் கண்கண்ட தெய்வம் ஸ்ரீகனக துர்கைதான். எந்தவொரு சிறு சஞ்சலம் மனசில் எழுந்தாலும் அம்மன்கிட்ட ஓடோடி வந்துடுவோம்'' என்றனர்.
செவ்வாய்க்கிழமைதோறும் வந்து அம்மனை வழிபடும் விஜயலட்சுமி, ''எனக்கு மூன்று முறை ஆபரேஷன் நடந்திருக்கு. ஆனாலும், நான் இன்றைக்குப் பிழைத்து, நடமாடிக் கொண் டிருப்பதற்குக் காரணம் ஸ்ரீகனக துர்கைதான்!'' என்றார் கண்களில் நீர்மல்க!
''பிறந்ததில் இருந்து இன்று வரை நான் அதிகம் வந்து வழிபட்டது, இந்தக் கோயிலில்தான். அப்பா அம்மாவுடனும் சில சமயங்களில் தனியேயும் வந்து அம்மனை வணங்கி, நெய் தீபமேற்றுவேன். கல்வியிலும் நாட்டியக் கலையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே என் வேண்டுதல். அதனை நிச்சயம் நிறைவேற்றித் தருவாள் அன்னை, பாருங்களேன்'' என நம்பிக்கையுடன் தெரிவித்தார் வைஷ்ணவி.
கௌரிகாப்பு விழாவில் ஆயிரம் பெண்கள் கலந்து கொள்வார்களாம். நம்மூரில் நடப்பது போலவே கோயில் திருவிழா, இங்கே 25 நாட்கள் நடைபெறுகிறது. வரலட்சுமி பூஜை, நவராத்திரி ஆகிய காலங்களில், ஸ்ரீகனக துர்கை விசேஷ அலங்காரத்தில் ஜொலிப்பாள்.
பழம்பெரும் நடிகை பத்மினிக்கு மிகவும் பிடித்த கோயில் இது. நித்யஸ்ரீ மகாதேவனும் சுதா ரகுநாதனும் இங்கு வந்து அம்மனைத் தரிசித்துள்ளனர். பித்துக்குளி முருகதாஸ், சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோரும் வந்து அம்மனைக் கண்ணார தரிசித்து, வணங்கிச் சென்றுள்ளனர்.
மலேசிய அம்மன்!
மலேசியாவில், பெராக் மாகாணத்தின் தலைநகர் ஈப்போ நகரில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமுனீஸ்வர அம்மன். துவக்கத்தில், 'அம்மை கொட்டாய்’ என்றும், 'ஆஸ்பிட்டல் கோயில்’ என்றும் அழைக்கப்பட்டதாம் ஆலயம். ஒருமுறை, ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள், ஈப்போவுக்கு வருகை தந்தார். கோயில் நிர்வாகிகள், 'அம்மனுக்கு என்ன பெயர் வைப்பது எனத் தெரியவில்லை சுவாமி’ என அவரிடம் தெரிவித்தனர். அப்போது வெள்ளைத் தாள்களை எடுத்துச் சுருட்டிப் போடும்படி கூறினார் சுவாமிகள். குழப்பத்துடன் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, ஒரு சீட்டை மட்டும் எடுக்கச் சொன்னார். அதைத் திறக்க... 'ஸ்ரீமுனீஸ்வர அம்மன்’ என இருந்தது!
Comments
Post a Comment