ஸ்ரீபைரவர் தரிசனம்! - தாடிக்கொம்பு

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு. இங்கே சிற்ப நயத்துடன் அழகுறத் திகழ்கிறது ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில். விஜய நகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, கலை நுட்பத்துடன் கூடிய அற்புதமான கோயில் இது!
ஸ்ரீவிஷ்வக்சேனர், நம்மாழ்வார், ஸ்ரீரெட்டைவிநாயகர், ஸ்ரீஹயக்ரீவர், தசாவதார மூர்த்திகள், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி, ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் அருள்கின்றனர். தாயாரின் திருநாமம்- ஸ்ரீகல்யாண சௌந்தரவல்லி.
அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷம்! இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்!
தாடிக்கொம்பு ஆலயத்தில், இரவில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் கோயிலின் நடை சார்த்துகிறபோது, கோயில் சாவியை பைரவரின் திருப்பாதத்தில் வைத்து வணங்கிவிட்டுப் பின்பே நடைசார்த்துவது வழக்கம். பைரவர்தான் கோயிலையும் கோயில் சொத்துக்களையும் பாதுகாத்து வருகிறார் என்பது நம்பிக்கை. இன்றைக்கு பைரவரின் திருப்பாதத்தில் கோயில் சாவியை வைத்து வழிபடும் வழக்கம் இல்லை என்றாலும், அவரே இன்றளவும் காத்து வருகிறார் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் மக்கள்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால வேளையிலும் தேய்பிறை அஷ்டமியிலும் சிறப்பு பூஜைகளும், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனை களும் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டு வழிபட திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை, வாடிப்பட்டி எனப் பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
அந்த நாளில் பால், இளநீர், பன்னீர், பச்சரிசி மாவு, தேன் ஆகியவற்றால் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, செவ்வரளி மாலை சார்த்தி, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், சனிக் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம்; தொல்லைகள் நீங்கி, வாழ்வில் முன்னேறலாம் என்கின்றனர் பக்தர்கள். தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது ஆயிரம் லிட்டர் அளவில் பாலபிஷேகம் சிறப்புற நடைபெறும். அந்த நாளில், தீபமேற்றி அவரை வழிபட்டால், சொத்துப் பிரச்னைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
பெருமாளையும் தாயாரையும் மற்றும் உள்ள தெய்வங்களையும் வணங்கிவிட்டு, ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை மனதார வணங்குங்கள். வளமுடன் வாழ்வீர்கள்!

Comments